ஐபீரிய தீபகற்பத்தில் நியாண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வு

தமிழில்: வெண்பா

ஐபீரிய தீபகற்பத்தில் நியாண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வு

ஐபீரிய தீபகற்பத்தில் நியாண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களுக்கு இடையிலான சந்திப்பு வடமேற்கு பகுதியில் நிகழ்ந்தது. கொலோன் பல்கலைக்கழகத்தில் (University of Cologne) உருவாக்கப்பட்ட ஒரு எண்ணியல் உருவகப்படுத்துதல் மாதிரி (numerical simulation model), பழங்கற்காலத்தின் (Paleolithic) முக்கியமானதொரு கட்டத்தில் ஐபீரிய தீபகற்பத்தில் இருந்த நியாண்டர்தால்களுக்கும் நவீன மனிதர்களுக்கும் (anatomically modern humans) இடையே நிலவிய தொடர்புகளை முதன்முறையாக இயக்கவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்வதை சாத்தியமாக்கியுள்ளது. PLOS One இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சுமார் 50,000 முதல் 38,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை மையமாகக் கொண்டுள்ளது; இது ஐரோப்பாவிற்கு ஹோமோ சேபியன்களின் (Homo sapiens) படிப்படியான வருகை, நியாண்டர்தால்களின் வாழ்க்கை, வீழ்ச்சி மற்றும் இறுதியில் மறைந்து போன காலத்தைக் குறிக்கும் காலக்கட்டமாகும். புவி இயற்பியல் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் யாப்பிங் ஷாவோ (Professor Dr. Yaping Shao) இந்த ஆய்வை வழிநடத்தினார், இது கொலோன் பல்கலைக்கழகத்தின் HESCOR திட்டத்தின் பகுதியாகும்; தொல்பொருள் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் கெர்ட்-கிறிஸ்டியன் வெனிகர் (Professor Dr. Gerd-Christian Weniger) –ம் இதற்கு ஒத்துழைப்பு செய்துள்ளார்.

தென்மேற்கு ஐரோப்பாவில் இந்த இரு குழுக்களுக்கும் இடையிலான சந்திப்பை எளிதாக்கிய அல்லது தடுத்த சூழல்களை உருவகப்படுத்தும் ஒரு தேடல் சார்ந்த எண்ணியல் மாதிரி இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியானது காலநிலை மாறிகள் (climatic variables), மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை தரவு மற்றும் இடப்பெயர்வு முறைகளை ஒருங்கிணைத்து, இரு தரப்புக்கிடையேயான இணைப்பு மற்றும் தொடர்புகளின் இயக்கத்தை கொணர்கிறது. வெவ்வேறு அளவுருக்களின் (parameters) கீழ் பல உருவகப்படுத்துதல்களை (simulations) இயக்கும் அதன் திறன், பாரம்பரிய தொல்பொருள் மற்றும் மரபணு முறைகளிலிருந்து இதனை வேறுபடுத்தி, வெவ்வேறு கருதுகோள்களைச் சோதிப்பதற்கான விரிவான மற்றும் நெகிழ்வான விளக்கக் கட்டமைப்பை வழங்குகிறது. காலநிலை, மக்கள்தொகை, கலாச்சாரம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம், இந்த மாறும் மாதிரி விரிவானதொரு விளக்கக் கட்டமைப்பை வழங்குகிறது, இது தொல்பொருள் மற்றும் மரபணு தரவுகளை சிறப்பாக விளக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் வெனிகர் கூறுகிறார்.

கடைசி நியாண்டர்தால் (NEA) புகலிடங்கள் பிரதானமாக கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன, அவை நீல நிற புள்ளியிட்ட வட்டத்தால் குறிக்கப்பட்டுள்ளன. AUR-P1 உடன் தொடர்புடைய நவீன மனிதர்களின் (AMHs) ஆரம்ப பரவல் பாதைகள் தடித்த சிவப்பு அம்புக்குறிகளால் காட்டப்பட்டுள்ளன. காண்டாப்ரியாவிலிருந்து (Cantabria) உள்நாட்டு ஐபீரியாவிற்கு நீண்டு செல்லும் அடுத்தடுத்த டுயெரோ (Duero) பாதை, தடித்த சிவப்பு புள்ளியிட்ட அம்புக்குறிகளால் குறிக்கப்பட்டுள்ளது. AUR-P2 உடன் இணைக்கப்பட்ட AMH-களின் பரவல் பாதைகள் மெல்லிய சிவப்பு புள்ளியிட்ட அம்புக்குறிகளால் குறிக்கப்பட்டுள்ளன. நியாண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களுக்கு இடையிலான இனக்கலப்பு (admixture) ஏற்பட வாய்ப்புள்ள ஒரு மண்டலம் வட ஐபீரியக் கடற்கரையை ஒட்டி அடையாளம் காணப்பட்டு, வெள்ளை நிற புள்ளியிட்ட வட்டத்தால் சூழப்பட்டுள்ளது. ஆதாரம்: ஒய். ஷாவோ மற்றும் பலர் 2025.

ஐரோப்பாவில், குறிப்பாக ஐபீரிய தீபகற்பத்தில் பழங்கற்காலத்தின் மத்தியிலிருந்து பழங்கற்காலத்தின் இறுதிக்கு மாறிய சூழல் இரண்டு இணையான செயல்முறைகளால் வரையறுக்கப்படுகிறது: நவீன மனிதர்களின் படிப்படியான பரவல் மற்றும் நியாண்டர்தால்கள் எண்ணிக்கையின் தொடர்ச்சியான வீழ்ச்சி, இது அவர்களின் அழிவில் முடிந்தது. இக்காலம் காலநிலை ரீதியாக நிலையானதாக இருக்கவில்லை, மாறாக டான்ஸ்கார்ட்-ஓய்ச்கர் (Dansgaard–Oeschger) நிகழ்வுகள் எனப்படும் திடீர் மாற்றங்களால் குறிக்கப்பட்டது; இவை பல நூற்றாண்டுகள் நீடிக்கும் விரைவான வெப்பமயமாதல் நிகழ்வுகளையும் அதைத் தொடர்ந்து படிப்படியான குளிர்ச்சியையும் கொண்டிருந்தன, மேலும் ஹென்றிச் (Heinrich) நிகழ்வுகள் எனப்படும் வட அட்லாண்டிக்கில் பாரிய பனிப்பாறைகள் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் அதீத குளிர்ச்சியான காலங்களையும் கொண்டிருந்தன.

குறிப்பிட்ட பிராந்தியங்களில் நியாண்டர்தால் அழிவு மற்றும் ஹோமோ சேபியன்களின் வருகையின் துல்லியமான காலவரிசை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இது ஒரு குறிப்பிட்ட அளவு தொடர்புக்கு சாத்தியமான தற்காலிக மற்றும் இடஞ்சார்ந்த இணைப்புக்கான (temporal and spatial overlap) வாய்ப்புகளை முன்வைக்கிறது. எலும்பு எச்சங்களிலிருந்து பெறப்பட்ட மரபணு சான்றுகள், கிழக்கு ஐரோப்பாவில் நவீன மனித இடப்பெயர்வின் ஆரம்ப கட்டங்களில் இரு குழுக்களுக்கும் இடையே இனக்கலப்பு (interbreeding) நடந்ததை தெளிவாகக் காட்டுகின்றன. இருப்பினும், ஐபீரிய தீபகற்பத்தைப் பொறுத்தவரை, தொல்பொருள் தளங்களின் காலக்கணிப்பில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் பிற்கால கட்டத்தில் இதே போன்ற ஒன்றை உறுதிப்படுத்துவதைத் தடுக்கின்றன, இருப்பினும் அவை அத்தகைய வாய்ப்பை முற்றிலும் நிராகரிக்கவில்லை.

இந்த ஐபீரியச் சூழலில் வெவ்வேறு காட்சிகளின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்காகவே கொலோன் மாதிரி துல்லியமாக வடிவமைக்கப்பட்டது. வெவ்வேறு அளவுருக்களுடன் மாதிரியை மீண்டும் மீண்டும் செயல்படுத்துவது வெவ்வேறு காட்சிகளின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதை சாத்தியமாக்குகிறது: நியாண்டர்தால்களின் ஆரம்பகால அழிவு, காணாமல் போகும் அதிக அபாயம் கொண்ட சிறிய மக்கள் தொகை அளவு அல்லது இனக்கலப்பை அனுமதிக்கும் நீடித்த உயிர்வாழ்வு என்று இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ஷாவோ விளக்குகிறார். உருவகப்படுத்துதல்களின் முடிவுகள் ஒட்டுமொத்தமாக வெளிப்படையான உண்மைகளைத் தருகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவுருக்களின் கீழ் ஐபீரிய தீபகற்பத்திற்குள் பெரும்பாலான மாதிரிகளில், இரு குழுக்களும் இடத்திலும் காலத்திலும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. முன்மொழியப்பட்ட மூன்று மக்கள்தொகை காட்சிகளிலும், மக்கள் தொகையானது காலநிலை ஏற்ற இறக்கங்களுக்கு அதிக உணர்திறனை வெளிப்படுத்தியது, இது முக்கியமானதொரு காரணியாகச் செயல்பட்டது.

நியாண்டர்தால்களின் எண்ணிக்கை அதன் வீழ்ச்சிக்கு முன்பாக போதுமான காலம் நிலையாக இருந்தது, நவீன மனிதர்கள் அந்தப் பகுதியை வந்தடைந்த சந்தர்ப்பங்கள் ஒன்று மட்டுமே இனக்கலப்புக்கான சாத்தியத்தை அளித்தது. மாதிரிகளின் படி, இந்த சாத்தியம் சுமார் ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்ற நிகழ்தகவுடனே அமைந்துள்ளது. அந்த விதிவிலக்கான சூழல்களில், உருவகப்படுத்துதலின் முடிவில், மொத்த உருவகப்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் ஒரு சிறிய விகிதத்தினர்—இரண்டு முதல் ஆறு சதவீதம் வரை—இரு குழுக்களின் மரபணுக்களையும் சுமந்து காணப்பட்டனர். உருவகப்படுத்துதல்களில் இந்த சந்திப்பு மற்றும் மரபணு பரிமாற்றம் மிகவும் நம்பத்தகுந்ததாக நிரூபிக்கப்பட்ட பகுதி ஐபீரிய தீபகற்பத்தின் வடமேற்குப் பகுதியாகும். இன்னும் முழுமையாக மறைந்துவிடாத நியாண்டர்தால் மக்கள்தொகையுடன் ஒன்றுடன் ஒன்று சேரும் அளவிற்கு நவீன மனிதர்கள் முன்கூட்டியே வந்திருக்கக்கூடியதொரு மண்டலமாக இந்த பகுதி மாதிரியில் தோன்றுகிறது.

இந்த ஆய்வு இன்னும் விரிவான விசாரணைகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் எண்ணியல் மாதிரி மற்றும் அதை பயன்படுத்தும் 'சாத்தியமான புலம்' (potential field) ஆகிய இரண்டையும் செம்மைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். பிராந்தியப் பொருத்தத்தை உருவகப்படுத்த காலநிலை மற்றும் புவியியல் தரவுகளிலிருந்து தற்போது கணக்கிடப்படும் இந்தப் புலம், எதிர்காலத்தில் மனித மாறிகளை மட்டுமல்லாமல், இரு குழுக்களுக்கும் முக்கிய இரையாக இருந்திருக்கக்கூடிய விலங்குகளின் பரவலையும் சேர்ப்பதன் மூலம் வளப்படுத்தப்படும். கூடுதலாக, கணக்கீடு மற்றும் பகுப்பாய்வின் இந்த செயல்முறையை மேம்படுத்த சிறப்பு இயந்திரக் கற்றல் (machine learning) அல்காரிதம்களைப் பயன்படுத்துவதை குழு ஆராய்ந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சி HESCOR திட்டத்தின் (Human & Earth System Coupled Research) ஒரு தூணாகும், இது வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா அரசின் கலாச்சாரம் மற்றும் அறிவியல் அமைச்சகத்தின் 'Profilbildung' திட்டத்தால் நிதியளிக்கப்பட்டதொரு திட்டமாகும். இயற்கை அமைப்புகளுக்கும் மனித அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் வரலாற்றின் போக்கை எவ்வாறு வடிவமைத்தன என்பதை ஆராய்வதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு காலநிலை அறிவியல், தொல்பொருள், கணிதம் மற்றும் மனிதநேய வல்லுநர்களை HESCOR ஒன்றிணைக்கிறது. இது பின்தொடரும் பிரச்சனைகள் ஆழமானவை: காலநிலை மாற்றங்கள் மனித கலாச்சார பரிணாமத்தை எவ்வாறு பாதித்தன? மனித முடிவுகளும் சமூக மாற்றங்களும் புவி அமைப்பை எந்த அளவிற்கு பாதித்தன? நவீன கணக்கீட்டுக் கருவிகள் நமது கடந்த காலத்தின் ரகசியங்களைத் திறக்க முடியுமா? ஐபீரியாவில் நியாண்டர்தால்-நவீன மனித மாற்றத்திற்கான மாதிரி, இந்த அடிப்படை கேள்விகளில் முதலாவது கேள்விக்கு அளவு மற்றும் மாறும் தன்மையுள்ள பதில்களை வழங்குவதற்கான முதல் மற்றும் உறுதியான முயற்சியாகும்.

SOURCES

Universität zu Köln

Shao Y, Klein K, Wegener C, Weniger G-C (2025) Pathways at the Iberian crossroads: Dynamic modeling of the middle–upper paleolithic transition. PLoS One 20(12): e0339184. doi.org/10.1371/journal.pone.0339184

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.labrujulaverde.com/en/2025/12/the-encounter-between-neanderthals-and-modern-humans-in-the-iberian-peninsula-occurred-in-the-northwest/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு