ரஷ்ய - அமெரிக்க ஏகாதிபத்திய முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா

தமிழில்: விஜயன்

ரஷ்ய - அமெரிக்க ஏகாதிபத்திய முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா

ரஷ்யவோடு இந்தியா கொண்டுள்ள உறவுகளை குறைப்பது தொடர்பாக இந்தியாவிற்கு அழுத்தம் தருவதா வேண்டாமா என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டணியை உக்ரைன் போர் அசைத்துப் பார்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். சர்வதேச அரசியல் உறவுகளில் ஏற்பட்ட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக இது கருதப்படுகிறது. ரஷ்யாவோடு இந்தியா கொண்டுள்ள உறவுகளை குறைப்பது தொடர்பாக இந்தியாவிற்கு அழுத்தம் தருவதற்கான வழிமுறைகளை உபயோகிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக CRS அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

பகை நாடுகளிடமிருந்து கடுமையான தடைகள் விதிக்கப்பட்டாலும், அவையனைத்தையும் எதிர்கொள்ளும் ரஷ்யாவின் தாங்குத்திறனை குறைக்கும் வகையிலும், ரஷ்யாவை ராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் தனிமைப்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையிலும், இந்தியாவிற்கு அழுத்தம் தருவதற்கான வழிமுறைகளை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்நாட்டு அரசியல்வாதிகளும் பரிசீலித்து வருகின்றனர். ரஷ்யாவை, இந்தியா அதிகமாக சார்ந்திருப்பதை உடைப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். எனினும், இந்த நடவடிக்கை ரஷ்யாவையும் சீனாவையும் ஒன்றோடு ஒன்று நெருக்கத்தில் சென்று சேர்த்துவிடாமல் தடுக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முக்கிய சிக்கல்கள் குறித்து ஆலோசனை வழங்கும் (Congressional Research Service) நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருகட்சி உறுப்பினர்களும் பங்குபெறக்கூடிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் சுதந்திரமான ஆராய்ச்சி பிரிவாக CRS விளங்குகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு பிரச்சினைகள் குறித்தும் தெளிவாக முடிவெடுப்பதற்கு உதவும் வகையில் இந்த CRS அமைப்பு அவ்வப்போது தேவையான ஆய்வறிக்கைகளை தயார் செய்து வெளியிடுகிறது.

“இந்திய – ரஷ்ய உறவுகளும், அமெரிக்க நலன்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும்” என்று தலைப்பிட்ட ஆய்வறிக்கையில் CRS அமைப்பு இவ்வாறு கூறியிருந்தது:-

வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் பிற துறைகள் தங்களுக்குரிய நீண்ட கால இருதரப்பு மற்றும் பிராந்திய ரீதியிலான பொதுத் திட்டங்களை நோக்கித்தான் செயல்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்த தனது தொலைதூர பிரதேசங்களை கட்டுப்படுத்தும் பணியை முடுக்கிவிடலாமா வேண்டாமா என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும். ரஷ்யாவுடனான உறவுகளை குறைப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் அதே வேளையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை திட்டமிடலில் இந்தியா தனது தன்னாட்சியை (Strategic autonomy) பேணும் வகையில் இந்த தொலைதூர காண்காணிப்பு பணி அமைந்திருக்க வேண்டும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதற்கான நோக்கங்களை பைடன் ஆட்சியும் அதன் அதிகார வர்க்கத்தினரும் இந்நாள் வரை தொடர்ச்சியாக கவனித்தே வந்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் விரிவான/பரந்த நலன்களை அடையும் நோக்கில் தற்போதுள்ள இந்திய - ரஷ்ய உறவுகளை சகித்துக்கொள்ள விரும்புவதாகவே தெரிகிறது.

உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நிலவும் சூழலை மாற்றியமைப்பதற்கு தேவையான கொள்கை முடிவுகளை எடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பைடன் அரசாங்கமும், நாடாளுமன்றமும் கலந்தாலோசனை மேற்கொள்ளலாம் என்று CRS அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரஷ்ய நாட்டின் இராணுவத் துறையுடனோ அல்லது அதன் உளவுத்துறையுடனோ “முக்ககியத்துவம் வாய்ந்த பரிவர்த்தனைகளில்” பங்கெடுத்துக்கொள்ளகூடிய எந்த ஒரு நாட்டின்/நபரின் மீதும் அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அமெரிக்க பொதுச் சட்டம் (PL.115-44) வழிவகை செய்கிறது.

இந்திய – ரஷ்ய உறவுகள் குறித்து பைடன் அரசாங்கம் இன்னும் கூட எந்தெவொரு தீர்மானகரமான முடிவுகளையும் எடுக்கவில்லை. என்றாலும் கூட பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான S-400 ஏவுகனையை வான்வெளிப் பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கியதோடு சென்ற ஆண்டு (2021) இந்திய இராணுவத்தில் இணைத்துக் கொண்டு பயன்படுத்தத் துவங்கியது. இதைத் தொடர்ந்து இந்திய – ரஷ்ய உறவுகள் தொடர்பான பிரச்சினை முதன்மை நிலைக்கு வந்துள்ளது. 

உக்ரைன் போர் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டணியை அசைத்துப் பார்த்துவிட்டது. 21-ம் நுற்றாண்டில் உலகளவில், பிரதான அரசியல் அணிசேர்க்கையில் நடந்த மிக முக்கியமான மாற்றமாக விளங்குகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரை முன்னணி மேற்குலக நாடுகள் விமர்சித்ததை போன்று இந்தியா கடுமையாக விமர்சிக்கவில்லை. ரஷ்ய ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்துவிட்டது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை கண்டிப்பதற்காக நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்ததற்காக ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்களும் இந்தியாவை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர். இந்தியா ரஷ்யாவோடு வலுவான இராணுவ உறவுகளை கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்தியா தனது வான் பாதுகாப்பு அரண்களை பலப்படுத்துவதற்கு ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஐந்து S-400 டிரையம்ஃப் (Truimf) ஏவுகனைகளை வாங்குவதற்கு ரஷ்யாவுடன் அக்டோபர் 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அப்போது ஆட்சியிலிருந்த டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததையும் மீறியே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அதிக அளவில் வாங்கி குவித்த துருக்கி நாட்டின் மீது CAATSA சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

தற்சமயம், பைடன் அரசாங்கம் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்து வருகிறது. அமெரிக்காவின் கடுமையான ஆட்சேபணை இருந்தபோதிலும் ஏவுகனை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதாக திட்டமிட்டுள்ள தனது முடிவை மாற்றப்போவதில்லை என இந்தியா கூறியுள்ளது.

இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் நாடாகும். தனது தேசப் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டே தனக்கு தேவையான இராணுவம் சார்ந்த சரக்குகளையும், சேவைகளையும் வாங்கிக் கொள்கிறது என்று சென்ற ஆண்டு (2021) நவம்பர்  மாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருந்தது.

ரஷ்ய தயாரிப்பு இராணுவ சாதனங்கள் வாங்குவதை இனி மேற்கொண்டு குறைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா நீண்ட காலமாகவே இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தே வந்துள்ளது. மேலும் தனது இராணுவத்துக்கு தேவையான பொருட்களை பலதரப்பட்ட நாடுகளிடமிருந்து கொள்முதல் செய்வதோடு அவ்வாறு வாங்குவதை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் ‘பிரதான இராணுவக் கூட்டாளி’யாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை இராணுவ ரீதியில் பலப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது. பைடன் அரசால் பரிசீலிக்கப்பட்டு வரும் புதிய புதிய இராணுவ ரீதியிலான முன்னெடுப்புகள் உள்ளிட்ட அமெரிக்காவுடனான தனது இராணுவ பங்கெடுப்பை அதிகப்படுத்துவதற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் சட்டத்திட்டத்தில் கூடுதலாக மாற்றங்கள் கொண்டு வந்து அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இராணுவ உறவுகளையும், ஆயுத விற்பனை விவகாரங்களையும் சரிசெய்துக்கொள்வதோடு நின்றுவிடாமல் ரஷ்யாவுடன் கொண்டுள்ள தொடர்புகளை குறைப்பதற்கு இந்தியா(மற்றும் பிற அமெரிக்க கூட்டாளிகள்)விற்கு அழுத்தம் தருவதற்கான பல்வேறு வழிகளையும் நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா ஒருபக்கச் சார்பு எடுக்காமால் நடுநிலை வகித்ததற்கு மூன்று மையமான காரணங்கள் (சர்வதேச போர்தந்திரம்/இராஜதந்திரம், ஆயுத வர்த்தகம், எரிசக்தி வர்த்தகம்)  இருக்கிறது. மேலும் இதன் காரணமாகவே ரஷ்யாவிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ எதிரான நிலை எடுக்க விரும்பாமல் நடுநிலை வகித்துள்ளதாக CRS அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல் காரணத்தைப் பொறுத்தவரை, தெற்காசியாவில் இந்திய நலன்களுக்கு மிக முக்கியமான அச்சுறுத்தலாக சீனா உருவெடுத்துள்ளது. மேலும், பிராந்திய அளவில் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானின் முக்கியமான கூட்டாளியாகவும் சீனா இருந்து வருகிறது.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கம் அல்லது ஒத்துழைப்பு அதிகரித்துக்கொண்டே வருவதை இந்திய ஆட்சியாளர்கள் எச்சரிக்கையோடு கவனித்து வருகின்றனர். பிராந்திய அளவிலான மேலாதிக்கத்திற்கு சீனா கடுமையாக முயற்சித்து வருகிறது என்று பல அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ‘ஆசியாவில் சீன மேலாதிக்க’த்திற்கான கனவை எளிதாக அடைவதற்கான விசயமாகவே இந்த ரஷ்ய-சீன ஒத்துழைப்பை பார்க்கின்றனர்.

இரண்டாவதாக, இந்தியாவிற்கு ஆயுத விற்பனை செய்யும் முதன்மையான நாடாக ரஷ்யா நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மேலும் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களும், உதிரி பாகங்களும் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு கிடைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே இந்திய இராணுவத்தால் சீராகவும், சிறப்பாகவும் செயல்பட முடியும்.

இறுதியாக, இந்தியாவின் ஆற்றல் இறக்குமதிக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆற்றல் துறையில் முதலீடு செய்யவும், இந்திய அரசாங்கத்திற்கு அவசியப்படும் கச்சா எண்ணெய், நிலக்கரி போன்றவற்றை மலிவு விலையில் வழங்குவதற்கும் ஏற்ற நாடாக ரஷ்யா இருந்து வருகிறதென்று இந்தியா நம்புகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் மற்றும் இரசாயன உரங்கள் போன்றவற்றை ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இதுவும் ஒரு வகையில் இந்திய நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியப் பங்காற்றுவதால் இந்த விவகாரத்தை இந்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசப் பாதுகாப்புத் திட்டமிடலில் (சீனாவின் தெற்காசிய பிராந்திய மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த கேடயமாக - அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படுவதில்) இந்தியா முக்கியமான பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் கிடைக்கின்ற தகவலின் படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரில் இந்தியா வகிக்கும் நடுநிலைமையை அமெரிக்க அதிகார வர்க்கத்தினர் ஏற்றுக்கொண்டதற்கு (அல்லது குறைந்தபட்சம் சகித்துக்கொண்டதற்கு) இந்த முக்கியத்துவமே வழிவகுத்திருக்க வேண்டுமென்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துவக்கத்தில் அமெரிக்க அதிகார வர்க்கத்தினர் ரஷ்யா குறித்தான இந்தியாவின் நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தனர். என்றாலும் கூட அதன் பிறகு தங்களது வீம்புப் பேச்சுகளை குறைத்துக் கொண்டனர். ஏப்ரல் மாதத்தில் வாஷிங்டன் நகரில் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை நடந்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் டோக்கியோ நகரில் குவாட் (QUAD) உச்சி மாநாடும் நடந்து முடிந்தது. இந்தோ – பசிபிக் போர்த்தந்திரம் என்ற ஒற்றை இலக்கை முதன்மைப்படுத்த விரும்புவதாகவும், ஆசியா மீதான கவனம் உக்ரைன் போரால் திசைத்திருப்பப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இரண்டு சந்திப்புக்களின் அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில் கூறப்பட்டள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிகாட்டுகிறது.

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் நாட்டிற்குள் இராணுவத்தை அனுப்பியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் கடுமையான விமர்சனங்களை மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை உயர்த்தியுள்ளதோடு, ரஷ்யாவுடனான தொடர் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது.

மே மாதம், சவுதி அரேபியாவை முந்திக்கொண்டு ஈராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கும் இரண்டாவது நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. உக்ரைனில் நடந்த போர் காரணமாக ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கூடுதல் தள்ளுபடி விலையில் விற்க தொடங்கின.

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மே மாதத்தில் மட்டும் சுமார் 25 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை ஆதரித்து பேசியிருந்தார். நியாயமற்ற முறையில் அதிகவிலைக்கு கச்சா எண்ணெய் விற்கப்பட்டு வருகின்ற காலக்கட்டத்தில் இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய தார்மீக கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்று கூறியிருந்தார்.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை : indiatoday.in