ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான தொழில் விதிமுறைக் குறிப்பில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது
விஜயன் (தமிழில்)

2025, ஆகஸ்ட் 20 அன்று, புதன்கிழமை, இந்தியாவும், யுரேஷிய பொருளாதார ஒன்றியமும் (EAEU - ரஷ்யா, ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளை உள்ளடக்கியது) ஆகிய இரு தரப்பினரும், 'தொழில் விதிமுறை குறிப்பில்' (ToR) கையெழுத்திட்டுள்ளன. இந்த நடவடிக்கை, ஒரு தடையற்ற வர்த்தக உடன்பாடு (FTA) குறித்த முறையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முதல் படியாகும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான தனது வர்த்தக உறவுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா இந்தியா மீது அழுத்தம் கொடுத்து வரும் சூழ்நிலையில், இக்கையெழுத்து நிகழ்ந்துள்ளது. இந்த அழுத்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா ஏற்கெனவே இந்திய ஏற்றுமதிகள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
இந்தக் குறிப்பு விதிமுறைகளில், இந்திய அரசின் வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் அஜய் பதுவும், யுரேஷிய பொருளாதார ஆணையத்தின் (EEC) வர்த்தகக் கொள்கைத் துறையின் துணை இயக்குநர் மிகைல் செரெகாயேவும் கையெழுத்திட்டனர்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, “இந்தியாவுக்கும் EAEU-க்கும் இடையேயான வர்த்தகம் 2024ஆம் ஆண்டில் 69 பில்லியன் டாலரை எட்டியுள்ளது; இது 2023ஆம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகமாகும்” என்று இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
மேலும், அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “EAEU-இன் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 டிரில்லியன் டாலராக இருப்பதால், திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கணிசமான புதிய வாய்ப்புகளை வழங்கும்; இதன் மூலம் புதிய துறைகளிலும், புதிய பிராந்தியங்களிலும் இந்திய வர்த்தகம் விரிவடைய உதவும்; சந்தை சாராத பொருளாதாரங்களை கொண்டு நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும்; அத்துடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEகள்) மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை “விரைவாகச் செயல்படுத்துவதன்” அவசியத்தையும், “நீண்டகால வர்த்தக ஒத்துழைப்பிற்கான ஒரு வலுவான கட்டமைப்பை” உருவாக்குவதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://share.google/Iexb2hS62D5vC7o8z
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு