மீயுயர் வேகத் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தி நிற்கும் சீனா

தமிழில்: விஜயன்

மீயுயர் வேகத் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தி நிற்கும் சீனா

மீயுயர் வேகத் தொழில்நுட்பத்தின் எல்லைகளைத் தகர்த்து, சீனா இன்று அமெரிக்காவை முந்தி நிற்கிறது! அதிநவீன இயந்திர ஆற்றல் பொருந்திய புதிய மீயுயர் வேக வானூர்தியை அறிமுகப்படுத்தி சீனா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது

மீயுயர் சீர்வேக ஏவுகணைகளையும், மிதந்து செல்லும் மீயுயர் வேக வானூர்திகளையும் வெற்றிகரமாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்திருந்த நிலையில், ஃபீட்டியன் 2 மீயுயர் வேக வாகனத்தின் வெற்றிகரமான வான் சோதனை ஓட்டத்தை சீனா நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், மீயுயர் வேக வானூர்தி தொழில்நுட்பத்தில் சீனா அசுர வளர்ச்சி கண்டுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ரகசியப் பிராந்தியத்தில், வடமேற்கு பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தால் (NPU) இந்தச் வான் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த சுழற்சி (RBCC) திறன் கொண்ட புதிய ரக இயந்திரத்தை உருவாக்குவதில் இந்த வான் சோதனை ஓட்டம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

சிறப்பு வகை மண்ணெண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு எரிபொருள் கலவையைப் பயன்படுத்தும் ஒரு RBCC இயந்திரத்திலிருந்து, நிகழ்நேரப் வான் ஓட்டத் தரவுகளைச் சேகரித்த முதல் சோதனையாக இது திகழ்கிறது என்று NPU பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு விளக்கமளித்துள்ளது. இச்சோதனையின் போது, வாகனமானது பல்வேறு அரிய ஆற்றல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. அவற்றில், இயந்திரத்தின் காற்று உட்கவரும் அமைப்பின் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறன், அதன் உந்துவிசையைத் தேவைக்கேற்ப சரிசெய்யும் ஆற்றல் மட்டுமல்லாது வானில் தனது கோணத்தை மாற்றிக்கொண்டே, வாகனத்தைத் தானாகவே பறக்கவிடும் தானியக்குத் திறன் ஆகிய அசாதாரண ஆற்றல்கள் வெளிப்பட்டது. இத்தகவல், பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கையிலிருந்து பெறப்பட்டதாகத் SCMP செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

RBCC இயந்திரம் எதிர்காலத்திற்கான ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது சிறப்பு வகை மண்ணெண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு எரிபொருள் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம், வாகனங்களை இலகுவாகவும், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டவையாகவும் மாற்ற உதவும். இந்த வான்சோதனை ஓட்டம், எதிர்காலத்தில் மீயுயர் வேகப் பறக்கும் வாகனங்களை மேம்படுத்திட ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ள அரிய தகவல்களைப் வழங்கியுள்ளது. மீயுயர் வேக எஞ்சீனையும் (RBCC), பறக்கும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதென்ற முதன்மையான நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய, பரிசோதனை நோக்கம் கொண்ட ஒரு சோதனை வாகனமே ஃபீட்டியன் 2.

எவ்வாறாயினும், இது முழுமையாக உருவாக்கப்பட்டுவிட்டால், இந்தத் தொழில்நுட்பம் பொதுமக்கள் தேவைக்கும், இராணுவ நோக்கங்களுக்காக எனப் பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். RBCC தொழில்நுட்பம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய அதிவேக இராணுவ ட்ரோன்கள், அதிவேக உளவு வாகனங்கள் அல்லது பொதுமக்களுக்கான பயணிகள் போக்குவரத்து உருவாவதற்குக்கூட வழிவகுக்கக்கூடும். இந்த முக்கியமான தொழில்நுட்பம் இராணுவத்திற்கான அதிவேக தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மேம்படுத்தக்கூடும். குறிப்பிடத்தக்க விதமாக, டிஎஃப்-100(DF-100), ஸ்டாரி ஸ்கை-2(Starry Sky-2), ஒய்ஜே-21 (YJ-21 – போர்க்கப்பலை தாக்கி அழிப்பதற்கான பாலிஸ்டிக் ஏவுகணை) லிங்யூன்-1(Lingyun-1) போன்ற மீயுயர் சீர்வேக ஏவுகணைகளை சீனா ஏற்கனவே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

டிஎஃப்-இசட்எஃப்(DF-ZF) உட்பட அதிவேக மிதவை வானூர்திகளையும் சீனா உருவாக்கியுள்ளது; இதில் டிஎஃப்-17 பாலிஸ்டிக் ஏவுகணை பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பூமியின் தாழ்வட்டப் பாதையில் ஏவுகணையை செலுத்தி, அது அரை சுற்று பூமியைச் சுற்றி வரச் செய்வதோடு, எதிர்பாராத திசையிலிருந்து எந்தவொரு இடத்தையும் குறிவைத்து தாக்கும் திறனுடைய அமைப்பே FOBS எனப்படுகிறது. 2021 இல் FOBS சோதனைகள் நடத்தப்படும் போது, டிஎஃப்-41 போன்ற நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ICBM) ஏந்தியிருந்த இந்த மிதவை வானூர்திகளையும் சீனா சோதித்துள்ளது. ஷான்சி மாகாண விண்வெளி மற்றும் வானூர்தி உந்துவிசை ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் வடமேற்கு பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் (என்.பி.யூ) இந்தத் சோதனைத் திட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தது. மேலும், சீனா ஃபிடியன் 1 முன்மாதிரியை ஜூலை 2022 இல் சோதித்தது. எஞ்சின் சீராக வேகத்தை மாற்ற முடியும் என்பதோடு நிலையாக செயல்பட முடியும் என்பதையும் அந்த சோதனை எடுத்துக்காட்டியது.

வாகனம் வெவ்வேறான பறக்கும் முறைகளுக்கு இடையில் சீராக மாற முடியும் என்பதை ஃபிடியன் 2 வானூர்தி சோதனை வெளிக்காட்டியது; இது அதிவேக தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காற்று உட்கொள்ளும் வடிவத்தை மாற்றுவது, எஞ்சினின் சக்தியை மாற்றுவது மட்டுமல்லாது வெளிப்புறக் கட்டுப்பாடு இல்லாமல் தானாகவே பறப்பது போன்ற முக்கியமான அம்சங்களையும் இந்த சோதனை வெளிக்காட்டியது.

இந்த அதிவேக தொழில்நுட்பங்களின் இராணுவப் பயன்பாடு, இராணுவம் சாராத பொதுப் பயன்பாடுகளின் முழுமையான நீண்டகால தாக்கங்கள் குறித்த மேலதிக தகவல்களை ஆராய்வோம்.

Feitian 2-ன் புற வடிவமைப்பில், ஆராய்ச்சிக் குழுவினர் சில முக்கியமான மாற்றங்களை செய்திருந்தனர். ராக்கெட்டின் முன்புறத்தில் இறக்கைகளையும், அதன் பின்பகுதியில் பெரிதும் நீளமான துடுப்புகளையும் அவர்கள் இணைத்தனர். பறக்கும்போது வாகனம் நிலைத்தன்மையுடன் திகழவும், எளிதாகக் கட்டுப்படுத்தவும் இம்மாற்றங்கள் அவசியமாயின. மிக உயர்ந்த வேகத்திலும், அதிக உயரத்திலும் பறக்கும்போது இது மிகவும் இன்றியமையாதது.

மீயொலி வேகத்தில் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் மிக உயர்ந்த வளிமண்டல அடுக்குகளில் பறக்கின்றன. சில வேளைகளில், அவை பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் அல்லது காற்று மிகவும் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் பயணிக்கக்கூடும். இதன் விளைவாக, இயந்திரம் சீராகச் செயல்பட, வாகனம் தன் எரிபொருளுடன் அதற்கான ஆக்ஸிஜனேற்றியையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது.

வழக்கமாக, மண்ணெண்ணெய் அல்லது திரவ ஹைட்ரஜன் போன்ற எரிபொருட்கள் திரவ ஆக்ஸிஜனுடன் இணைந்தே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், Feitian 2 ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் கையாள்கிறது; இது சிறப்பு வகை மண்ணெண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கலவையைத் தனது எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. இது வழக்கமான முறையிலிருந்து ஒரு பெரும் மாறுபாடு ஆகும். மண்ணெண்ணெய் ஓர் இயந்திர எரிபொருளாகச் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பதை ஏற்கனவே Feitian 1 நிரூபித்திருந்தது. மண்ணெண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு இரண்டையும் ஒருசேரப் பயன்படுத்துவதன் மூலம் இந்த முன்னேற்றத்தை மேலும் ஒரு படி எடுத்துச் செல்லும் வகையில் Feitian 2 சோதனை அமைந்திருந்தது. திரவ ஹைட்ரஜனைப் போல் மண்ணெண்ணெய் சக்தி வாய்ந்தது இல்லையெனினும், சிக்கலான குளிரூட்டும் கட்டமைப்புகள் தேவைப்படாததால் இதற்குப் பெரிய அளவிலான பலன்கள் கிடைக்கிறது.

Feitian 2 ராக்கட்டில் பயன்படுத்தப்படும் RBCC இயந்திரம், இருவேறு எஞ்சின் கோட்பாடுளை ஒருங்கே இணைக்கும் ஒரு புதிய வகையிலான இயந்திரமாகும். இது ஒரு வழக்கமான ராக்கெட் இயந்திரத்தைப் போலவும், அதேவேளையில் வளிமண்டலக் காற்றைப் பயன்படுத்தும் ரேம்ஜெட் இயந்திரத்தைப் போலவும் இயங்கக்கூடியது. இவ்விரு இயந்திரங்களும் ஒரே அமைப்பிற்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரேம்ஜெட் பகுதியின் தனிச்சிறப்பு யாதெனில், அது வாகனத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால், வாகனம் அதிக எடை கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்புத் தொட்டிகளைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்ட வடிவமைப்பின் பிரதான நோக்கம், வாகனம் வானில் பறக்கும்போது இயன்ற அளவு வளிமண்டலக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பயன்படுத்திக்கொள்வதே ஆகும். அவ்வகையில் வாகனத்தால் அதிக பொருட்களைச் சுமந்து செல்வதோடு, எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கிறது.

Feitian 2 விண்கலம் தனது பயணத்தைத் தொடங்கும்போது, அது முதலில் தனது ராக்கெட் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. இச்செயல்பாட்டு முறை "எஜெக்டர் முறைமை" எனப்படுகிறது. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு, வாகனம் வேகமெடுத்து உயரப் பயணிக்கத் தொடங்கும்போது, ராக்கெட் இயந்திரம் படிப்படியாக தனது உந்துசக்தியைக் குறைத்துக்கொண்டு, ரேம்ஜெட் இயந்திரம் இயங்க ஆரம்பித்து அதிக உந்துசக்தியை வழங்கத் தொடங்குகிறது.

ராக்கெட் உந்துசக்தியிலிருந்து ரேம்ஜெட் உந்துசக்திக்கு மாறும் நிகழ்வு, எவ்விதமான திடீர் வேகக் குறைவோ அல்லது கட்டுப்பாட்டு இழப்போ இன்றி, சீராக நடைபெறுவதை உறுதி செய்வதே இத்தகைய கலப்பின இயந்திரங்களில் காணப்படும் ஒரு முக்கிய சவாலாகும்.

இருப்பினும், தற்போது, NPU நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மாற்றத்தை எவ்வித தடுமாற்றமும், இடர்ப்பாடுமின்றியும் நிகழ்த்த ஒரு வழிமுறையைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் பொருள், ராக்கெட் இயந்திரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து ரேம்ஜெட் இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு மாறும் போதும், வாகனம் தொடர்ந்து சீராக வேகமெடுக்க முடியும்.

எஞ்சினுக்குள் வாயு உள்நுழைவுப் பகுதியின் வடிவமைப்பை அது நெகிழ்வாக மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்பதைத் வான் ஓட்டப் பரிசோதனைகள் தெளிவாக வெளிப்படுத்தின. இதன் வாயிலாக, பல்வேறு செயல்பாட்டுச் சூழ்நிலைகளிலும் எஞ்சின் தனது பாகங்களை, சிறந்த செயல்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, தகவமைத்துக் கொள்ள இயலும். இதன் விளைவாக, வேக மாறுபாடுகளின் போதும் எஞ்சின் நிலைத்தன்மையுடன் இயங்கி, எரிபொருள் பயன்பாட்டைச் செம்மைப்படுத்த முடியும்.

மேலும், இச்சோதனையில், வாகனம் தானியங்கியாகப் பறக்கும் வல்லமை கொண்டிருப்பதும், வானில் தனது கோணத்தைத் தேவைகேற்ப சரிசெய்துக்கொள்ளும் என்பதையும் நிரூபித்துள்ளது. அதாவது, வாகனத்தின் பறக்கும் முறை மட்டுமல்லாது அதன் தாக்குதல் தேவைகளுக்கு ஏற்ப, அது தானாகவே மேலும் கீழும் சாய்ந்து இயங்கும் ஆற்றல் படைத்திருக்கிறது.

ஃபீடியன் 1 இலிருந்து ஃபீடியன் 2-க்கான பரிணாம வளர்ச்சி என்பது RBCC எஞ்சின் பொருத்தப்பட்ட சீனாவின் இந்த புதிய சோதனை விமானம் தனது அடுத்தகட்டப் வளர்ச்சிக்கு முழுமையாகத் தயார்படுத்தப்பட்டு வருகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய வெற்றிகரமான விமானப் பரிசோதனை, அதிவேக விமானங்களையும் ராக்கெட்டுகளையும் மனித குலம் உருவாக்கும் முறைகளிலும், பயன்படுத்தும் முறைகளிலும் ஒரு வரலாறு காணாத புரட்சியை ஏற்படுத்தவல்லது. விரைவிலேயே, அதிவேகப் பயணம் என்பது திரைப்படக் கற்பனையோ அல்லது கதைகளில் வரும் மாயமோ அல்லாமல், ஒரு நிதர்சனமாக உருவெடுக்கக்கூடும் என்பதை இது பறைசாற்றுகிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செய்தித் துறையில் அனுபவம் வாய்ந்தவர் சுமித் அஹ்லாவத். இவர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நவ், ஜீ நியூஸ், எகனாமிக் டைம்ஸ், மைக்ரோசாஃப்ட் நியூஸ் உள்ளிட்டப் பல முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊடகம் மற்றும் நவீன வரலாறு ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.eurasiantimes.com/china-outguns-the-u-s-in-hypersonic-tech-beijin/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு