நெருக்கடியின் விளிம்பில் இஸ்ரேல்: ஊடகங்கள் உங்களிடம் மறைப்பது என்ன ?
தமிழில்: விஜயன்

முன்னுரை
போரின் இறுதியான முடிவு இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையிலும், தெளிவான ஒரு உண்மை வெளிப்படுகிறது: இஸ்ரேலை இனி எவராலும் வெல்ல முடியாது என்ற நிலை மாறிவிட்டது, மேலும் எதிர்ப்பியக்கங்களின் படிப்படியாக அதிகரித்து வரும் ஆற்றல் இஸ்ரேலைத் தொடர்ந்து நிலைகுலையச் செய்து கொண்டிருக்கிறது.
போர் தொடங்கிய நாள் முதல், இஸ்ரேல் முன் எப்போதும் சந்திக்காத ஒரு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடி அதன் பொருளாதாரம், சமூகம், மனோநிலை மட்டுமல்லாது அரசியல் கட்டமைப்பு என வாழ்வின் அனைத்துப் பரப்புகளிலும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பெரிய செய்தி ஊடகங்கள் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை மறைக்க முயல்கின்றன. ஆனால், உண்மையான தரவுகளும் புள்ளிவிவரங்களும் இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தகவலை அளிக்கின்றன. ஒரு காலத்தில் தன்னை எவராலும் தோற்கடிக்க முடியாது என்று இறுமாப்புடன் கூறிக்கொண்ட நாடு, தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்பதையே அந்தத் தகவல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி வரை கிடைக்கப்பெற்ற மிகச் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் படிப்படியாக வலுவிழந்து வருவதைக் காட்டும் மிக முக்கியமான அறிகுறிகளைப் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
வரலாறு காணாத பொருளாதார இழப்புகள்
1. 1948ஆம் ஆண்டு தனிநாடாக உருவானது முதல் இஸ்ரேல் தற்போது மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
2. இராணுவ மோதல்களால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
3. ஒட்டுமொத்த பொருளாதார இழப்புகள் 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
4. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது இஸ்ரேலின் வரலாற்றிலேயே காணப்படாத மிகப்பெரும் நிதிப் பற்றாக்குறையாகும்.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மிக மிகக் கடுமையாக வெளிப்பட்டுள்ளது.
1. சுமார் 60 நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
2. நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 70% வரை வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது.
3. கட்டுமானத் துறை 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பைச் சந்தித்தது. எழுபதுக்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் திவாலாயின.
இந்தத் தகவல்கள் இஸ்ரேலின் பொருளாதாரம் முற்றிலுமாகச் சரிவடையும் அபாயத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிலை நீடித்தால், போரைத் தொடர்வதற்குத் தேவையான நிதியோ அல்லது வளங்களோ அந்நாட்டிற்கு இல்லாமல் போகலாம்.
நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட இஸ்ரேலியர்கள்
தொடர்ச்சியான போர்ச் சூழல் நிலவுவதாலும், எதிர்ப்புப் படைகளின் தாக்குதல்கள் குறித்த அச்சம் காரணமாகவும், 143 இஸ்ரேலியர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் காசா முனை மற்றும் வடக்கு எல்லையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்தனர். சண்டையில் அவ்வப்போது குறுகிய கால இடைவெளிகள் (தற்காலிக போர் நிறுத்தங்கள்) ஏற்பட்டபோதிலும், பலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கே அஞ்சுகின்றனர். மோதல் மீண்டும் துவங்கி மேலும் தீவிரமடைந்துவிடுமோ என்று பீதியடைந்தனர்.
இது வெறுமனே நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம்பெயரும் பிரச்சினையல்ல; தற்போது ஏராளமான இஸ்ரேலியர்கள் நாட்டை விட்டே வெளியேறிச் செல்கின்றனர். இந்தப் பெருந்திரளான மக்கள் இடப்பெயர்வு இஸ்ரேலின் மக்கள் தொகைக் கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
முன் எப்போதும் கண்டிராத ஒரு மனநல நெருக்கடி
நீண்ட காலமாக நீடிக்கும் போர் மற்றும் போராளிக் குழுக்களின் எதிர்பாராத, திடீர் தாக்குதல்கள் குறித்த அச்சம் காரணமாக இஸ்ரேல் மக்கள் கடுமையான மனநலச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
•900 இஸ்ரேலியர்கள் அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தக் குறைபாட்டினால் (Post-Traumatic Stress Disorder - PTSD) பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே இதுவரை பதிவாகியுள்ளதைவிட மிக அதிக எண்ணிக்கையாகும்.
•மூன்று இஸ்ரேலியர்களில் ஒருவர் மனச்சோர்வு அல்லது வேறு ஏதேனும் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
•மதுப் பயன்பாடு 25% அதிகரித்துள்ளது. இது, அதிகமானோர் மன அழுத்தத்தையும், உணர்வு ரீதியான வேதனையையும் சமாளிக்க மது அல்லது போதைப்பொருட்களை நாடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
•தூக்க மாத்திரைகளின் விற்பனை 180% உயர்ந்துள்ளது. இதன் பொருள், பல இஸ்ரேலியர்களுக்கு இனி மருந்து இல்லாமல் சரியாக உறங்குவது கடினமாகிவிட்டது என்பது தெரிகிறது.
•2024-ஆம் ஆண்டில், இஸ்ரேலிய இராணுவத்தில் 21 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
•இந்த புள்ளிவிவரங்கள் இஸ்ரேலில் உள்ள மக்களின் பொதுவான மனநிலையும், மன உறுதியும் மிகவும் குறைந்திருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இந்த மனச்சோர்வு இராணுவத்திற்கு வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும், அவர்களை ஒழுங்கமைப்பதிலும் நேரடியாக தாக்கம் செலுத்துகிறது; மேலும், இது நாட்டின் உள்நாட்டு அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும்கூட அச்சுறுத்தலாக உள்ளது.
வாழ்விடங்களை விட்டு பெரும் திரளான யூதர்கள் வெளியேறுகிறார்கள்
கணிசமான எண்ணிக்கையிலான யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் இஸ்ரேலில் தற்போது நிகழும் மிகவும் கவலைக்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.
•2024 ஆம் ஆண்டில், 82,700 யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளனர். இது பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச இடப்பெயர்வு நடந்துள்ளதை காட்டுகிறது.
•இதற்கு முந்தைய காலங்களில், இஸ்ரேல் ஆண்டுதோறும் சுமார் 70,000 யூதர்களை உலகின் பிற பகுதிகளிலிருந்து வரவேற்று குடியமர்த்தியது. ஆனால், இன்று இந்த நிலை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. யூதர்கள் இஸ்ரேலுக்குள் வருவதை விட, பெரும்பான்மையினர் வெளியேறுகின்றனர்.
இந்த மாற்றம், இஸ்ரேல் தொடர்ந்து பாதுகாப்பான, நிலையான நாடாக நீடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகமானோர் இழந்து வருவதை உணர்த்துகிறது. பெருகி வரும் இந்த அச்சமும், உறுதியற்ற நிலையும் நாட்டின் எதிர்கால இருப்புக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அரசியல் ரீதியாக மட்டுமல்லாது தார்மீக அடிப்படையிலும் வீழ்ச்சி
இஸ்ரேல் போர் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளில் மட்டுமல்லாது, அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் போன்ற முக்கியமான துறைகளிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
சர்வதேச அரங்கில் அந்நாட்டின் நன்மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. இஸ்ரேல் வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரித்து, கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அதிகமான மக்களும், நாடுகளும் இப்போது வெளிப்படையாகக் கண்டிக்கின்றனர்.
பல நாடுகள் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொண்டோ அல்லது குறைத்தோ வருகின்றன. இதன் விளைவாக, இஸ்ரேலுக்கு அந்நாடுகளின் அரசுகளுடனான அதிகாரப்பூர்வ தொடர்புகள் முடிவுக்கு வருகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், உலக நாடுகளின் விமர்சனங்களும் கண்டனங்களும் மேலும் வலுவடைந்து வருகின்றன.
இஸ்ரேல் ஒரு அமைதியான, ஜனநாயக நாடு என்றிருந்த முந்தைய நம்பிக்கை தகர்ந்துவிட்டது. தற்போது, பலரும் அது இனப்பாகுபாடு (அபார்தைட்) முறையைப் பின்பற்றி வருவதாகக் கருதுகின்றனர்.
இவையனைத்தின் காரணமாகவும், இஸ்ரேல் தனது சர்வதேச நிலையில் முன்னெப்போதையும் விட மிகவும் பலவீனமாக உள்ளது. சர்வதேச அளவில் அது தனிமைப்படுத்தப்படுவதோடு, பிற நாடுகளின் ஆதரவைப் பெறுவது முன்பை விட மிகவும் கடினமாக உள்ளது.
நாட்டின் உயர்மட்டத் தலைவர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பும் கருத்து வேறுபாடுகளுமே இஸ்ரேலில் தற்போது நிலவும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகவும், ஊடகங்களில் பெரும்பாலும் வெளிக்காட்டப்படாமலும் இருக்கிறது.
முன்னாள் மொசாட் தலைவர் மட்டுமல்லாது முன்னாள் காவல்துறைத் தலைவர் உட்பட சில முக்கிய அதிகாரிகள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர்.
கைதிகளாகவோ அல்லது பிணைக்கைதிகளாகவோ சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய வீரர்கள், பொதுமக்களின் குடும்பங்கள் நீதி அமைச்சகத்தின் வெளியே நிரந்தரப் போராட்டக் கூடாரங்களை அமைத்து, போரை உடனடியாக நிறுத்தக் கோரி போராடி வருகின்றனர்.
போரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இஸ்ரேலின் உயர்மட்ட அரசியல்வாதிகளிடையே வலுவான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்த உள்நாட்டுப் பூசல் தீவிரமடைந்துள்ளதால் அரசாங்கம் கவிழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சுருங்கக் கூறின், புறநிலையில் இஸ்ரேல் போரில் பின்னடைவைச் சந்திப்பது மட்டுமல்லாமல், அதன் குடிமக்கள் மற்றும் தலைவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக உள்நாட்டிலும் பலவீனமடைந்து வருகிறது.
இறுதிக் கேள்வி: இஸ்ரேல் வீழ்ச்சியின் தொடக்கத்தை நாம் காண்கிறோமா?
சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட இன்று இஸ்ரேலின் நிலை மிகவும் வேறுபட்டிருக்கிறது. அதன் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, அதன் குடிமக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள், அதன் அரசியல் நிலைமை குழப்பங்களாலும் முரண்பாடுகளாலும் நிரம்பியுள்ளது மட்டுமல்லாது உள்நாட்டுப் போராட்டங்களும் கருத்து வேறுபாடுகளும் பெருகி வருகின்றன.
இந்த அறிகுறிகள் அனைத்தும் இஸ்ரேல் ஒரு முக்கியமான, அபாயகரமான கட்டத்தை அடைந்துள்ளது என்பதைக் சுட்டிக்காட்டுகின்றன. இதன் விளைவாக, சியோனிசத் திட்ட அழிவின் ஆரம்பத்தை நாம் காணத் தொடங்குகிறோமா? என்று பலரும் தற்போது கேட்கத் துவங்குகின்றனர்.
எதிர்காலம் எவ்வாறு அமையும் என்று நாம் இன்னும் அறியவில்லை என்றாலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: இஸ்ரேலை இனி வெல்ல முடியாது என்று எவரும் கூற முடியாது, மேலும் வளர்ந்து வரும் எதிர்ப்பியக்கத்தின் வலிமை இஸ்ரேலை மெல்ல மெல்ல வீழ்ச்சியை நோக்கித் தள்ளுகிறது என்பது மட்டும் தெளிவு.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: Lead news 24