தி கேரளா ஸ்டோரி என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இந்துமதவெறி பிரச்சாரப் படம்

பேராசிரியர் த.செயராமன்

தி கேரளா ஸ்டோரி என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இந்துமதவெறி பிரச்சாரப் படம்

* தி கேரளா ஸ்டோரி என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இந்துமதவெறி பிரச்சாரப் படம்

* அனைத்து மாநில அரசுகளும் தடை செய்ய வேண்டும்!

"காஷ்மீர் ஃபைல்ஸ்" வரிசையில் "தி கேரளா ஸ்டோரி" என்ற திரைப்படம் குஜராத்தி ஆர்.எஸ்.எஸ்  தயாரிப்பாளர் விப்புள் ஷா தயாரிப்பில், சுதிப்டோ சென் இயக்கத்தில் மத்திய தணிக்கை குழுவின், தடையில்லா அனுமதியோடு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பேராதரவோடு கேரள உயர் நீதிமன்றம் இந்திய உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் ஒப்புதலோடு திரைக்கு வந்திருக்கிறது. சனாதன கட்டமைப்பை புத்துருவாக்கம் செய்து அமைக்கப்படும் இந்துராஷ்டிரம் என்ற இலக்கை நோக்கி, நாலுகால் பாய்க்கலில் நாட்டை கொண்டு செல்லுகிறார்கள்.  இந்தியா முழுவதும் இஸ்லாமிய-கிறிஸ்தவர் மீது வெறுப்புணர்வை வளர்த்து மதக்கலவரங்களை உருவாக்கி இந்துமதவெறி சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் இலக்கை நோக்கி திட்டமிட்டபடியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இதற்கு ஒன்றிய அரசு நிர்வாகமும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும்,  நீதிமன்றங்களும் ஆதரவாக நிற்கின்றன. இந்திராஷ்டிர உருவாக்கம் என்பதை சாதித்துவிட அவரவர் தங்கள் பங்களிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதை ஏதோ சாதாரணமாக ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதாக கருதி விடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமிய வெறுப்பை வளர்ப்பதற்காகவே வெவ்வேறு திரைப்படங்களை, கிட்டத்தட்ட 20 திரைப்படங்கள் வரை தயாரித்திருப்பதாகத் தெரிகிறது.

 தி கேரளா ஸ்டோரி - திரைப்படத்தை தடை செய்ய முடியாது என்று ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் அடாவடியாகப் பேசுகிறார். அவர்களுடைய நோக்கம் என்னவென்று நமக்குத் தெரிகிறது. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

 சில நாட்களுக்கு முன்னர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ட்ரைலரில் 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகின்றனர். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். 

ஹிஜாப் அணியவைத்து, அந்தப் பெண்களை  மதம்மாற்றம் செய்த பின்னர், அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு, ISIS அமைப்பில் இணைத்து விடுகின்றனர். அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சீரழிக்கப்படுகின்றனர். இதுதான் கதை. இது ஏதோ திரைக்கதை தானே என்று கருதி விட முடியாது. 

இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைக்கப்பட்டதாகவும் வெளியான  ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது. "உண்மை கதைகளால் உந்தப்பட்டு" எழுதப்பட்டதாக திரைப்படத்திற்கு முன் ஒரு வாசகம் காட்டப்படுகிறது. 

இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த படத்துக்கு தடை விதிக்கமுடியாது என்றும், மாறாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 32000 பாதிக்கப்பட்ட பெண்களை திரும்ப மாற்ற வேண்டும் என்றும் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் புரிதல் என்ன? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உண்மையில் யாராக இருக்கிறார்கள்? 32 ஆயிரம் பெண்கள் கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளாக ஆப்கானிஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாற்றப்பட்டுள்ளார்கள் என்று உச்சநீதிமன்றம் நம்புகிறதா? அவ்வாறெனில் இதற்கு மோடி அரசு பதில் கூற வேண்டும் அல்லவா? 32,000 பெண்களின் அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் அல்லவா? 

இந்து மதவாதிகள், இந்திராஷ்டிர கனவில் இருப்பவர்கள், இஸ்லாமியர் மீது வெறுப்பைக் கட்டமைக்கின்ற கருத்தை தங்களால் இயன்ற அளவிற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். இது இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் இந்து பெண்கள் இஸ்லாமியராக மாற்றப்பட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக வந்த பொய் -வதந்தி பரப்பல் நடந்தது. கேரளாவில் மற்றும் பல இடங்களில் இக்கதை உண்மை என்று வலிந்து பரப்பப்பட்டது.

2018 -இல் கேரளாவில் ஹதியா  என்ற பெண்ணுடைய காதல் திருமணம் பிரச்சனை ஆக்கப்பட்டது மதம் மாறி திருமணம் செய்த ஹதியா தன் முழு விருப்பத்துடன்  காதல் திருமணம் செய்து கொண்டதாக திரும்பத் திரும்பக் கூறினார். ஆனால் மேல்சாதி உணர்வு இந்து மதவெறி உணர்வும் கொண்ட அவருடைய தந்தையார் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார். கேரள உயர் நீதிமன்றம் ஹதியாவின் திருமணம் செல்லாது என்றது.  ஆனால் உச்ச நீதிமன்றம் திருமணம் செல்லுபடியாகும் என்றது. இந்து பெண்கள் இஸ்லாமியரை திருமணம் செய்வதும், இஸ்லாமிய பெண்கள் இந்துக்களை திருமணம் செய்வதும் அவர்களுடைய சொந்த விவகாரம். காதல் வயப்பட்டு திருமணத்திற்காக மதம் மாறிக்கொள்வது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.  ஆனால் இதை பெரும் பிரச்சனையாகவும், தீவிரவாதமாகவும் பூதாகரமாக ஊதிக் காட்டி, இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை இந்தியா முழுவதும் வளர்ப்பதற்கு ஆர்.எஸ். எஸ் சங்பரிவார் அமைப்புகளும் மேல் சாதி வெறியர்களும் முனைந்து நிற்கிறார்கள். 

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு முன்னோட்டமாக ட்டீசர் வெளியிடப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியாக மாற்றப்பட்டவராகக் காட்டி,  ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்பவர் பேசுகிற ஒரு வீடியோவை திட்டமிட்டு உருவாக்கி வெளியிட்டார்கள்.

இந்த வீடியோ இந்தியிலும், சப் டைட்டில்கள் ஆங்கிலத்திலும் என வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வீடியோ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

தீவிரவாதி ஆன பிறகு ஷாலினி உன்னிகிருஷ்ணனின் பெயர் ஃபாத்திமா பாபு என்றும், இது கேரளாவில் நடந்தது என்றும் அதில்  அப்பெண் பேசுகிறார். ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற பெயரில் பேசுபவர் நடிகை அடா ஷர்மா. இது தி கேரளா ஸ்டோரியில் திரைப்படத்தின் டீசர் ஆக வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடித்துள்ளவர் அடா சர்மா. இந்த டீசரை சன்ஷைன் பிக்சர்ஸ் வெளியிட்டது. கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னிகிருஷ்ணன் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளதாக கதை கட்டினார்கள். சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை விஷமத்தனமாக பரப்பினார்கள். 

இத்திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் சென்றபோது, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.  உச்ச நீதிமன்றம் இப்படி கேள்வி எழுப்பியது: "இந்து சாதுக்களை கடத்தல்காரர்களாகவும் பாலியல் குற்றவாளிகளாகவும் காட்டும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை; இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியது. "இது கற்பனை கதை, வரலாறு கிடையாது, இந்தத் திரைப்படத்தால் மதவாதம்- பிரிவினைவாதம் தூண்டப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று உச்ச நீதி மன்றம் கூறிவிட்டது. தவறாக சித்தரித்துப் பரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி சமூகத்தில் பேரழிவை உண்டாக்கும் என்பதை அறியாதவர்களா நீதிபதிகள்? 

இப்படத்தின் டீசரில் "இது உண்மை கதை" என்று கூறப்பட்டது. ஆனால் இயக்குனர் அளித்த பேட்டியில் இது கற்பனை கதை என்று பதிவு செய்தார். 

தடை செய்யப்பட வேண்டிய இப்படத்திற்கு காவல்துறையின் மறைமுக ஆதரவு இருக்கிறது. தமிழ்நாடு அரசு  இப்படத்தை தடை செய்வதை தொடக்கத்திலிருந்தே பரிசீலத்ததாகத் தெரிகிறது. மே 7ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இத்திரைப்படம் நடைபெறும் அரங்குகளுக்கு  உச்சபட்ச பாதுகாப்பை வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. அகில இந்திய பணியாகிய காவல் துறையின் உயரதிகாரிகளுக்கு தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் இருந்து கட்டளைகள் வருகின்றன.

இந்தப் படத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்குகின்ற மனிதர்கள், கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக இவர்கள் குறிப்பிடும் பெண்களின் அடையாளத்தை காட்ட வேண்டும் அல்லவா? இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது? இந்திய அரசு என்ன செய்கிறது? இந்திய உள்துறை என்ன செய்கிறது? பிரதமர்தான் என்ன செய்கிறார்?

32,000 பெண்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்ற செய்தி மிகப் பெரிய செய்தி. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க பொய் தகவல்.  இந்துராஷ்டிர உருவாக்கத்திற்கான அடுத்த கட்ட வேலை இது. 

நல்லவர்கள் போல, நேர்மையாளர்கள் போல, பாரபட்சமில்லாமல் பேசுகிறவர்கள்போல, பலர் இஸ்லாமிய வெறுப்பை விதைத்துக் கொண்டே இருப்பார்கள். நாம் அவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். சனாதன கட்டமைப்பை மீள கட்டுமானம் செய்ய அனுமதிக்கவே கூடாது. 

-- பேராசிரியர் த.செயராமன் நெறியாளர்,

தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் 07.05.2023

(முகநூலில்) 

https://www.facebook.com/100044112903885/posts/pfbid05Qv8tbE7atqaSvxvd2W5ai1c5jCLKoEbjVXXksBjwWncBKcCjxyfmDXd65uC77wyl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு