ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை

தமிழில் : விஜயன்

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை

தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டிலும் ஜெர்மனியின் ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளதால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது

சுருக்கம்

ஜெர்மனியின் பொருளாதார உற்பத்தி பல மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வருவதால் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை நெருக்கடியினால் கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 0.5 சதவீதமும், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 0.3 சதவீதமும் எதிர்மறை வளர்ச்சியடைந்துள்ளது. கோவிட் தொற்றுக்கு பிறகு பனிப்பொழிவு மிகுதியாக இல்லை; விநியோக சங்கிலித் தொடரில் இருந்து வந்த சிக்கலும் தளர்த்தப்பட்டிருந்தது. இவையாவும், இருந்தபோதும், “பொருளாதார பின்னடைவிலிருந்து” ஜெர்மனியால் மீண்டெழுந்து வரமுடியவில்லை.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இருந்து வரும் ஜெர்மனியின் ஜிடிபி தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டிலும் சரிவை சந்தித்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய புள்ளிவிவரத் துறை அலுவலகம் கடந்த வியாழன் அன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஜெர்மனி எரிசக்தி தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்கொண்டு வந்தது. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் ஜிடிபி -0.5 சதவீதம் சரிந்தது. அதைத்தொடர்ந்து, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், விலையேற்றம் மற்றும் வேலை நாட்கள் மாறுபாடுகளை கழித்தப் பிறகும் கூட இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜிடிபி -0.3 சதவீதம் சரிந்துள்ளது என்று புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாடு பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வருவைதையே இது குறிக்கிறது.

பொதுவாக அடுத்தடுத்த இரண்டு காலாண்டிலும் ஜிடிபி சரிவைத் சந்திக்கிறது என்றால் அது பொருளாதார மந்தநிலையையே உணர்த்துகிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும் என்று ஜெர்மனியின் மத்திய புள்ளிவிவரத் துறை அலுவலகம் உத்தேசமாக கணித்திருந்த நிலையில் எதிர்மறையாக 0.3 சதவீதமளவிற்கு ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது.

உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில் எரிசக்தி கிடைப்பது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதால் விலைவாசி உயர்ந்து பணவீக்கமும் கடுமையாகியுள்ளது. விலையேற்றம், பருவகால மாறுபாடுகள், வேலை நாட்கள் மாறுபாடுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும் போது ஒவ்வொரு காலாண்டிலும் 1.2 சதவீதம் என்றளவிற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் நுகர்வு குறைந்துள்ளது.

துவக்கத்தில் சிலர் உத்தேசித்தது போல மந்தநிலை கடுமையானதாக இல்லை என்றாலும் கோவிட் தொற்றுக்கு பிறகு எளிமைப்படுத்தப்பட்ட விநியோக சங்கிலித் தொடர், குறைந்த பனிப் பொழிவு போன்ற சாதகமான நிலைமைகள் இருந்தபோதிலும் “பொருளாதார பின்னடைவிலிருந்து” ஜெர்மனி தப்பிப்பதற்கு பயன்படவில்லை என்று ING வங்கியின் பெரும பொருளாதாரக் கொள்கைப் பிரிவின் தலைவர் கார்ஸ்டன் பிரஜெஸ்கி என்பவர் பிரான்சு நாட்டு செய்திப் பிரிவான AFPயிடம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டை பொறுத்தமட்டில், ஜூலை முதல் டிசம்பர் வரை முதலீடுகளும் குறைவாக இருந்து வந்த்து. இதற்கு மாறாக இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் முதலீடு அதிகரித்துள்ளது. வர்த்தகமும் ஜிடிபி வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பெருந்தொற்று ஐரோப்பா முழுவதும் மிக வேகமாக பரவி வந்த சமயத்தில், அரசுகள் உடனடியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து தொழில்நிறுவனங்களின் செயல்பாடுகளை பெருமளவு முடக்கிய போதுதான் கடைசியாக ஜெர்மனியில் மந்தநிலை ஏற்ப்பட்டது.

ராய்ட்டர்ஸ் மற்றும் AFP செய்தித்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை : https://m.economictimes.com/news/international/business/germany-enters-recession-after-gdp-falls-for-second-successive-quarter/articleshow/100494115.cms