வெனிசுலாவுக்கு போர்க்கப்பல் அனுப்பும் ட்ரம்பின் நடவடிக்கை: “உளவியல் ரீதியான அச்சுறுத்தலா” அல்லது “உண்மையான ஆக்கிரமிப்புக்கான போர் நடவடிக்கையா”?
தமிழில்: விஜயன்

வெனிசுலாவுக்கு மிக நெருக்கமாக, கரீபியன் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வந்த தகவல், ஒரு தீவிரமான ஆக்கிரமிப்புத் திட்டத்தை விட, வெனிசுலாவை நெருக்குதலுக்கு உள்ளாக்கி அச்சுறுத்திப் பார்ப்பதற்கான முயற்சியாகவே பெரும்பாலும் தோன்றுகிறது. இருப்பினும், ஆளும் இடதுசாரிப் பொலிவேரியன் அரசாங்கத்திற்கெதிராக சதி வேலையில் ஈடுபடுவதற்காக தீவிர வலதுசாரி ஆயுதக் குழுக்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் என்ற வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இலத்தீன் அமெரிக்கச் சுதந்திரம், ஒற்றுமை, சமூக சமத்துவம் மட்டுமல்லாது அன்னிய மேலாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட சைமன் பொலிவாரின் கொள்கைகளை இந்த அரசாங்கம் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நகர்வு, வெனிசுலாவுக்கு எதிராகப் பொதுக் கருத்தை வடிவமைப்பதை இலக்காகக் கொண்ட ஒரு ஊடக உத்தியின் — அதாவது, ஒரு உளவியல் போர் நடவடிக்கையின் — அங்கமாகத் தெரிகிறது. இது அரசாங்கத்தைக் குற்றவாளியாக்க முற்படுகிறது, கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயல்கிறது, மேலும் இரகசிய சதி வேலைகளுக்கான வழியைத் திறந்துவிடவும் முயல்கிறது.
ஆகஸ்ட் 18 அன்று, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், மூன்று அமெரிக்க அழிப்புக் கப்பல்கள் — யு.எஸ்.எஸ். கிரேவ்லி (DDG-107), யு.எஸ்.எஸ். ஜேசன் டன்ஹாம் (DDG-109), மற்றும் யு.எஸ்.எஸ். சாம்சன் (DDG-102) — 36 மணி நேரத்திற்குள் வெனிசுலாவின் கடல் எல்லைப் பகுதிக்கு அண்மையில் வந்ததாகத் தெரிவித்தது. போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் சண்டையிடுவதற்காக வந்துள்ளோம் என்று காரணங்காட்டியுள்ளது. இந்தச் செய்தி அமெரிக்கப் இராணுவத் துறையிடமிருந்து கிடைத்துள்ளதாக கூறி, சி.என்.என்., எஸ்பானோல்(ஆங்கில), மியாமி-யைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் மட்டுமல்லாது வெனிசுலா எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்குகள் மூலமாக வெகு வேகமாகப் பரவியது. பிரதானச் செய்தித் தலைப்புகள், கரீபியன் பகுதியில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கை தொடங்கவிருப்பதைப் போலச் சித்திரித்தன. அதே சமயம், வெனிசுலா அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்ற அமெரிக்காவின் வாதத்தையும் அவை மீண்டும் வலியுறுத்தின.
வெனிசுலா மீது மீண்டும் குவிக்கப்பட்ட இந்த கவனத்தின் விளைவாக, வாஷிங்டன் பல போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பசிபிக்கில் இருந்து கரிபியனுக்கு மாற்றியமைத்துள்ளது. இந்த இடமாற்றம், அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை போதைப்பொருள் சந்தையில் அல்பேனிய மாஃபியா கும்பல் மேலும் ஆழமாக வேரூன்ற இடமளித்தது. ஈக்வடாரில், அல்பேனிய மாஃபியா ஏற்கெனவே 12 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்பட்டு வருகிறது.
போதைப்பொருட்கள் தங்களுக்கெனத் தனியான உலகளாவிய சந்தை விநியோகத்தைக் கொண்டுள்ளன: கொக்கெயின் பிரதானமாக ஆண்டியன்-கரிபியன் பகுதியிலிருந்தும், கஞ்சா (மரிஜுவானா) அதிகளவில் அமெரிக்காவுடனேயே தொடர்புடையதாகவும், மேலும் அபின் (ஓபியம்) ஆசியா மற்றும் மத்திய கிழக்கிலிருந்தும் வருகின்றன. சமீபத்தில், கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ ஒரு பிராந்திய “போதைப்பொருள் கடத்தல் சபை” செயல்படுவதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார், இது இந்த வலைப்பின்னல்களைப் பற்றி ஆழமான புரிதலை வழங்குகிறது.
வெனிசுலாவின் சூலியா மாநிலத்திற்கு அருகிலுள்ள கொலம்பியாவின் கடாடும்பொ பிராந்தியம், போதைப்பொருள் வர்த்தகத்திற்கான ஒரு முதன்மையான உற்பத்தியிடமாகத் திகழ்கிறது. அங்கிருந்து, போதைப்பொருட்கள் ஹைட்டி, பஹாமாஸ், மற்றும் புளோரிடாவுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றன. இதற்கு ஈடாக, கொலம்பியக் குழுக்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பெறுகின்றன. கொலம்பியாவில் எண்ணற்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, அவற்றில் பல சூலியா மாநிலத்தில் செயல்படும் கூரியர் சேவைகள் மூலமாகவே கொண்டு வரப்பட்டவை ஆகும்.
வெனிசுலாவின் உள்துறை, நீதித்துறை மற்றும் அமைதிக்கான அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் பிரதான எதிரிகளான தீவிர வலதுசாரி எதிர்க்கட்சியினர், செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் சீர்குலைவை ஏற்படுத்த முயலலாம் என்று தெரிவித்தார்.
இதற்குப் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில், மதுரோ ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தேசியப் படைவீரர் திரட்டல் செயல்முறையை (military enlistment) அறிவித்தார். பொலிவேரியன் குடிப்படையை (Militia) வலுப்படுத்துவதும், இராணுவத்திற்கம், மக்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
"நமது தாய்நாட்டின் முழுமையான பாதுகாப்பைப் பலப்படுத்தவும் தேசிய அமைதியைக் காக்கவும், ஒவ்வொரு வெனிசுலா குடிமகனும் பொலிவேரியன் தேசியக் காவல் படையில் சேர்வதற்கு நான் அறைகூவி அழைக்கிறேன்," என்று தொலைக்காட்சி உரையில், மதுரோ கூறினார்.
மதுரோ மேலும் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு படைகளுடன் ஒரு பணிக்குழு கூட்டத்தை நடத்தினார். இதில் தேசிய ஆயுதப் படைகள் (FANB), குடிப்படை, பொலிபேரியன் தேசியக் காவல்துறை, ஊர்க் காவல் படை, மற்றும் தீயணைப்பு படையைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசிய இறையாண்மை மற்றும் அமைதித் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதிலும் இக்கூட்டம் கவனம் செலுத்தியது.
மற்றொரு நிகழ்வில், மதுரோ தேசப்பற்றுடன் கூடிய ஒருமைப்பாட்டிற்கு அறைகூவல் விடுத்தார்:
வெனிசுலா நாடாளுமன்றத்தில், வெனிசுலா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியனின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாப்பது குறித்த அமர்வில் அவர் பேசுகையில், "நாம் அனைவரும் ஒரே கொடியின் கீழ் — மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு — நிற்கிறோம், எனவே இது அரசியல் வேறுபாடுகளைப் பார்ப்பதற்கோ அல்லது கட்சிக் கொடிகளைப் பார்ப்பதற்கோ உரிய தருணம் அல்ல," என்று தெரிவித்தார்.
"நம் தாய்நாட்டை வீழ்த்திவிட முடியாது. வெனிசுலாவை எவரும் தீண்ட முடியாது. ஒருவர் மீது தாக்குதல் தொடுத்தால், அது நம் அனைவர் மீதும் தொடுக்கப்பட்டதாகவே கருதப்படும்,"என்று அவர் மேலும் அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.
சிறு பிணக்குகளைக் கடந்து ஒதுக்கி வைத்துவிட்டு, துணிச்சலுடனும் ஒற்றுமையுடனும், தாய்நாட்டின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, ட்ரம்ப் உண்மையில் வெனிசுலாவை ஆக்கிரமிக்கக் கடற்படையைப் பயன்படுத்த வாய்ப்பில்லை; ஏனெனில் அவர் தனது பிம்பத்தை மேம்படுத்துவதிலும், அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதிலும் குறியாக உள்ளார். ஆயினும், இரகசியச் செயல்பாடுகளில் அவர் தீவிர வலதுசாரி ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்ற வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது. லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கா இதற்கு முன்னர் இது போன்ற சதிவேலைகளைச் செய்துள்ளது. மேலும், வெனிசுலா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவது என்பதையும் முழுமையாக நிராகரிக்கப்பட முடியாது. ஜூன் 22 அன்று ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டபோது, ஏவுகனைத் தாக்குதல்களைப் பயன்படுத்தத் தயார் என்பதை ட்ரம்ப் ஏற்கனவே வெளிப்படுத்தினார்.
இருப்பினும், ஏவுகணைகள் மூலமாகவோ அல்லது இரகசிய ஆயுதக் குழுக்கள் மூலமாகவோ நிகழ்த்தப்பட்டாலும், இந்தச் செயல்பாடுகள் பொலிவேரியன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் வெற்றி பெறப் போவதில்லை. மேலும், இது அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்புக்கு இட்டுச் செல்லாது. எனவே, கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்துவது பிரதானமாக அழுத்தம் கொடுப்பதற்கும், அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் மட்டுமே — இது ஒரு மனோவியல் உத்தியே அன்றி, உண்மையான படையெடுப்புத் திட்டம் அல்ல.
அஹ்மத் அடெல்: கெய்ரோவைத் (Cairo) தளமாகக் கொண்ட ஒரு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளராவார், மேலும் குளோபல் ரிசர்ச் (Global Research) இதழுக்குத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.globalresearch.ca/trump-sending-warships-venezuela-psychological-operation/5898740
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு