ஈரான் மீதான ஐ.நா. தடைகள்: ஐரோப்பிய நாடுகளின் தீர்க்கமான நடவடிக்கை
தமிழில்: விஜயன்

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த சர்ச்சைகள் வேகமெடுத்து வலுத்து வரும் இச்சூழலில், அதன் மீது ஐ.நா. சபையின் பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தும் முக்கியமான முடிவை பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. 'ஸ்னாப்பேக்' தடைகள் என அறியப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைக்கு, வியாழக்கிழமை அன்று அமெரிக்கா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. ஈரானின் நாளுக்கு நாள் விரிவடையும் அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெஹ்ரான் இந்தத் தீர்மானத்தை மிகக் கடுமையாகச் சாடியதுடன், தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டால் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.
E3 எனப் பரவலாக அழைக்கப்படும் இம்மூன்று ஐரோப்பிய நாடுகளும், மீண்டும் அமலாக்க நடைமுறையை (snapback process) தொடங்குவதாக வியாழக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தன. கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPoA) என்று குறிப்பிடப்படும் 2015ஆம் ஆண்டு ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்டிருந்த அனைத்து ஐ.நா. தடைகளையும் இந்த நடவடிக்கை மீண்டும் அமலுக்குக் கொண்டுவரும். 2018ஆம் ஆண்டில் அப்போதும் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொண்டதிலிருந்து, ஈரான் இவ்வொப்பந்த விதிமுறைகளைத் தொடர்ந்து மீறிச் செயல்பட்டு வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “JCPoA ஒப்பந்தத்தை ஈரான் வேண்டுமென்றே மீறி வருகிறது என்பது தற்போது சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகியுள்ளது. மேலும், ஈரானில் அணுசக்தி தொடர்பான அதிகம் கவலைக்குரிய ஆய்வு மையங்கள் இனி IAEA (சர்வதேச அணுசக்தி நிறுவனம்) கண்காணிப்பில் இல்லை,” என்று குறிப்பிட்டனர். “இவ்வளவு பெரிய அளவிலான அதிசெறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை வைத்திருக்க ஈரானுக்கு எந்தவொரு பொது நோக்கமும் இல்லை,” என்றும் அவர்கள் மேலும் தெளிவுபடுத்தினர்.
“ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நீடித்த அச்சுறுத்தலாகவே திகழ்கிறது,” என்று அந்தக் கூட்டறிக்கை மேலும் வலியுறுத்தியது.
ஈரானின் எதிர்வினை
இந்த மீள் அமலாக்க நடவடிக்கையை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்ததுடன், இதை "தூண்டிவிடும் செயல்" என்றும் "அநாவசியமாக பதற்றத்தை அதிகரிக்கும் செயல்" என்றும் தீவிரமாகச் சாடியதுடன், “பொருத்தமான பதிலடி” வழங்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்தது. E3 நாடுகளின் இந்த நடவடிக்கை, “IAEA உடனான ஈரானின் ஒத்துழைப்பைக் கடுமையாகப் பாதிக்கும்” என்றும் அமைச்சகம் எச்சரித்தது. பல பத்தாண்டுகளாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை வளர்த்து வருகிறது. இது எரிசக்தி உற்பத்தி போன்ற அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று விடாப்பிடியாகக் கூறி வருகிறது. உள்நாட்டு எரிசக்தித் தேவைகளை நிறைவேற்றவும், வெளிநாடுகளுக்கு அதிக எண்ணெய் விற்கவும், கூடுதலாக பல அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டத்தில் உள்ளதாக தெஹ்ரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணுமின் நிலையங்களுக்கு யுரேனியம் அவசியமானது. இருப்பினும், அணு ஆயுதத் திட்டம் இல்லாத எந்த நாட்டிலும் ஈரானிடம் இருக்கும் அளவுக்கு யுரேனியம் இருப்பு வேறெந்த நாட்டிலும் இல்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி, ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டது: அது தனது மையவிலக்கு இயந்திரங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது, யுரேனியக் கையிருப்பை குறைத்துக் கொண்டதுடன், யுரேனிய செறிவூட்டல் அளவை 3.67% ஆக (சுமார் 20% இலிருந்து) பராமரிக்க ஒப்புக்கொண்டது. அத்துடன், சர்வதேச கண்காணிப்புகளுக்கும் ஈரான் சம்மதித்தது. இதற்குப் பதிலாக, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெற்றது.
ஆனால், 2018இல் அமெரிக்கா அந்த உடன்படிக்கையிலிருந்து விலகியதும், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தீவிரப்படுத்தத் தொடங்கியது. அச்சமயத்தில், தெஹ்ரான் 3.6% செறிவூட்டப்பட்ட சுமார் 150 கிலோ யுரேனியத்தை வைத்திருந்தது – இது அமைதியான எரிசக்தி பயன்பாட்டிற்குப் போதுமானது தற்போது, இந்த அளவை விட 50 மடங்கு அதிகமாக ஈரான் வைத்துள்ளது.
இந்த மீள் அமலாக்கத் தடைகள் 30 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது ஈரானுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, தடைகள் மீண்டும் விதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. மீள் அமலாக்கத் தடைகளைப் பயன்படுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 2025 இல் முடிவடைய இருப்பதால், E3 நாடுகள் காலத்தின் தேவையை உணர்ந்து இப்போதே இந்த செயல்முறையைத் தொடங்கியுள்ளன.
“இந்த முடிவு சாதாரணமாக எடுக்கப்படவில்லை,” என ஒரு பிரிட்டிஷ் அதிகாரி வியாழக்கிழமை கூறினார். ஆனால் ஈரான் ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவதாலும், பெரும் அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குவித்து வைத்திருப்பதாலும், இராஜதந்திர ரீதியிலான ஒப்பந்த முயற்சிகளுக்குப் போதுமான ஒத்துழைப்பு வழங்காததாலும் இம்முடிவு எட்டப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், அமைதியான தீர்வுக்கான வழிகளுக்கு நாடுகள் இன்னும் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் அந்த அதிகாரி உறுதிபடக் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அனுப்பிய கடிதத்தில், E3 வெளியுறவு அமைச்சர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தொடர்ந்து முயல்வோம் என்றும், 30 நாட்களுக்குள் ஈரான் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாதுகாப்புச் சபைக்கு மீண்டும் தெரியப்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டனர். ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கவலைகளை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு E3 வெளியுறவு அமைச்சர்கள் ஈரானை வலியுறுத்தினர்.
தங்களது கூட்டறிக்கையில், இந்தத் தடைகள் புதியவை அல்ல என்பதை E3 நாடுகள் வலியுறுத்தின. இவை முன்னரே ஐ.நா. பாதுகாப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைப் பின்பற்ற ஈரான் ஒப்புக்கொண்டபோது நீக்கப்பட்டிருந்தன. “எனினும், ஈரான் அந்த உறுதிமொழிகளை மதிக்கப்பட வேண்டியதில்லை என்று தேர்ந்தெடுத்துள்ளது,” என்று கூட்டு அறிக்கை சுட்டிக்காட்டியது.
வியாழக்கிழமை, IAEA தலைவர் ரஃபேல் க்ரோஸி, ஆய்வுகள் விரைவில் மீண்டும் தொடங்கலாம் என்று தான் நம்புவதாகக் கூறினார். “பரந்த அளவிலான தடைகளைத் தவிர்க்க உதவும் நேர்மறையான நடவடிக்கைகள் சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் CNN பத்திரிகையிடம் குறிப்பிட்டார்.
“இப்போது நமக்கு ஒரு மாத கால அவகாசம் உள்ளது. அதனை நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்... தளங்களுக்கு மீண்டும் சென்று, குறிப்பாக 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் நிலை என்ன என்பதைச் சரிபார்க்க IAEA ஒரு நல்ல வழிமுறையை உருவாக்க முடியும்,” என்று க்ரோஸி விளக்கினார்.
ஜூன் மாதத்தில் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசித் தாக்கிய பின்னர், இந்த வாரம் முதல் முறையாக IAEA ஆய்வாளர்கள் ஈரானுக்குத் திரும்பினர். ஆய்வாளர்களுக்கு நிபந்தனையற்ற வருகையை அனுமதிக்க இன்னும் முழுமையான உடன்பாடு எட்டப்படவில்லை என்பதையும் க்ரோஸி உறுதி செய்தார்.
ஸ்னாப்பேக் தடைகளைத் முடுக்கிவிடும் E3 நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றதுடன், பேச்சுவார்த்தைகளுக்கு புதிய கதவுகள் திறந்திருப்பதாகவும் கூறியது. “ஈரானியத் தலைவர்கள் ஒருபோதும் அணு ஆயுதத்தை பெறாமல் இருப்பதை அமெரிக்கா உறுதிசெய்யவும்; அமைதியைத் தேர்ந்தெடுக்கவும்; ஈரானிய மக்களுக்கு செழிப்பைக் கொண்டுவரவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.
ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன், 'ஸ்னாப்பேக்' நடவடிக்கையைப் பாராட்டி பேசினார். ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தவும், தெஹ்ரான் அரசு மீது அழுத்தத்தை அதிகரிக்கவும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஜூன் மாதத்தின் முற்பகுதியில், இஸ்ரேல் ஈரானின் செறிவூட்டல் மையங்களுக்கு எதிராக அதிரடியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன், ஈரானின் இராணுவத் தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்த பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த செய்திக்குறிப்பு CNN செய்தியாளர்களான அல்ரஜ்ஜால், முஸ்தபா சலீம், ஹெலன் ரீகன், கிறிஸ்டியன் எட்வர்ட்ஸ் மற்றும் யூஜெனியா யோசெப் ஆகியோரின் பங்களிப்புடன் தொகுக்கப்பட்டது.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.cnn.com/2025/08/28/middleeast/france-germany-uk-iran-nuclear-sanctions
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு