அமெரிக்க - நேட்டோ முகாமுக்குள்ளேயே அதிகரிக்கும் முரண்பாடுகள்

புதினின் ஆலோசகர் பேச்சு

அமெரிக்க - நேட்டோ முகாமுக்குள்ளேயே அதிகரிக்கும் முரண்பாடுகள்

புதினின் ஆலோசகர்: பொருளாதாரத் தடைகள் ஐரோப்பாவை அதிகமாக பாதிக்கிறது ஏனெனில் அமெரிக்கா அதை பலவீனப்படுத்தவே விரும்புகிறது 

- சயீத் நக்வி

"உக்ரைன் இராணுவம் முழுமையாக சரணடைவதே அமைதிக்கான ஒரே வழி" என்று அதிபர் புதினின் ஆலோசகர் வலேரி ஃபதேவ் ஒரு மணி நேர ஜூம் உரையாடலில் பேசியுள்ளார்.

"ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உங்களை இரத்தம் சிந்தச் செய்தது போல் உக்ரேனியர்கள் ரஷ்யாவை இரத்தம் சிந்தச் செய்யும் வகையில், நவீன ஆயுதங்களையும் பணத்தையும் அந்நாட்டிற்கு வழங்கிக்கொண்டே இருக்க மேற்குலகிற்கு அழைப்பு விடுப்பது போல இந்தப் போர் இருக்கிறதல்லவா?" என்று நிருபர் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுவது தவறானது என்று எண்ணினார். அதாவது ஃபதேவ், “ஆப்கானிஸ்தானில் சோவியத் போர் 10 ஆண்டுகள் நீடித்தது. இறுதியில், சோவியத் இராணுவத்தின் அனைத்து முக்கிய கருவிகளும் ஆயுதங்களும் மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லப்பட்டன. அது இராணுவ முடிவு அல்ல; அது ஒரு அரசியல் முடிவு." சிறு அமைதிக்கு பிறகு: "இது தவறான முடிவு என்று நான் நினைக்கிறேன்." என்று பேசினார்.

உக்ரைனியப் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று நீங்கள் கூற வருகிறீர்களா?

ஃபதேவ்: "இந்த மோதல் பல ஆண்டுகளாக நீடிக்கும் என்று நான் கூறவில்லை. மேற்குலக நாடுகளுடனான மோதல் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றாலும் உக்ரைனில் நடக்கும் இந்த சிறப்பு தாக்குதல் நடவடிக்கை விரைவில் முடிவடையும்.”

ஃபதேவ் கூறினார்: புதின் தனது ‘போர் வெற்றி தின விழா’ உரையின் போது திட்டமிட்டே குறிப்பிட்ட நோக்கத்துடன் உயர்த்தி பேசினார். இருபத்தி ஆறு மில்லியன் ரஷ்யர்கள் செய்த தியாகத்தின் நினைவை மேற்குலக நாடுகள் சிறுமைப்படுத்தவும் அழிக்கவும் முயற்சிக்கும் விதத்தைக் கண்டு புதினும் ரஷ்ய ஆளும் வர்க்கத்தினரும் ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாகினர். அவர்களது தியாகம் இல்லையெனில் ஹிட்லருடனான போர் தோல்வியையே சந்தித்திருக்கும்.

உண்மையில் சொல்லப்போனால், அவர்கள் நாசிசத்தை முன்னாள் சோவியத் யூனியனுடன் ஒப்பிடுகிறார்கள் என்று ஃபதேவ் கூறினார். "மேற்குலக நாடுகளின் மிகவும் ஆபத்தான நச்சு கருத்து இதில் அடங்கியுள்ளது: இது ஹிட்லரின் ஜெர்மனியை சோவியத் ரஷ்யாவுடன் ஒப்பிடுகிறது." ஃபதேவ் மேலும் கூறினார், "மேற்குலகின் இந்த நச்சுக் கருத்துகளை செயல்படுத்திப் பார்ப்தற்கான சோதனைக் கூடமாக உக்ரைனை எப்படி கண்டுபிடித்துள்ளன என்பது இப்போது தெரிந்திருக்கும்." அவர் சொல்லவரும் விசயம் என்னவென்றால், "உக்ரேனிய மக்களில் ஒரு பகுதியினர் மனதில் ஏற்கனவே இந்த நச்சுக் கருத்தினை திணித்துள்ளனர். மற்ற பகுதி மக்கள், சோவியத் யூனியனைத் புறந்தள்ளிவிட்டு, தங்களது வரலாற்றைப் பற்றி முழுவதும் மறந்துவிட துணிந்துள்ளனர். ரஷ்ய மக்களும் உக்ரைனிய மக்களும் இணைந்து பாசிச ஜெர்மனிக்கு எதிராக போராடினார்கள். ஒரு யூதராக இருக்கும் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி தலைமையிலான நாஜி தேசியவெறி ஆட்சியின் குழப்பமான கலவை இந்தக் கருத்தை உடனடியாக நம்புவதற்கு தடையாக இருக்கிறது. மரியுபோல் நகர மற்றும் அசோவ் எஃகு ஆலையில் இருக்கும் நாஜி தேசியவெறியர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இஸ்ரேலிய கூலிப்படையினர் சண்டையிடுகிறார்கள் என்பதும் இதே அளவுக்கு குழப்பதையே ஏற்படுத்தும்.

எஃகு ஆலையில் சிக்கியவர்களில் ஒரு கனடா நாட்டு இராணுவ தளபதியும், பிரெஞ்சு அதிகாரிகளும் இருக்கிறார்களா என்று கேட்டபோது, ஃபதேவ் , "இந்த கேள்வியின் முக்கியத்துவத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது."  என்று கூறிவிட்டார். கடந்த சில நாட்களாக அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதினுடன் அடிக்கடி பேசி வருகிறார். போரில் பிரெஞ்சு இராணுவத்தின் பங்கு பற்றி மறைத்து வைத்திருந்த இரகசியம் அம்பலப்படுவதென்பது ஜூன் மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று மக்ரோன் பதட்டமடைகிறாரோ? என்ற கேள்விக்கும் பிரான்சில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ளன. அவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்றுவிட்டால், மக்ரோன் ஒரு நொண்டி வாத்து ஜனாதிபதியாகவே இருப்பார். இதில் புதின் மக்ரோனுக்கு எப்படி உதவ முடியும்? என்று கூறியுள்ளார்.

மரியுபோல் நகரில் உள்ள அசோவ் எஃகு ஆலையின் மர்மம் என்ன?

“இதற்குப் பின்னால் பெரிய ரகசியம் இருப்பதாக எதுவும் எனக்குத் தெரியவில்லை. நாஜி தேசியவெறி சக்திகள் பெருமளவில் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள், முக்கியமாக அசோவ் படைப்பிரிவு எஃகு ஆலையில் சோவியத் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்ட சுரங்கங்களில் மறைந்துள்ளது. இந்த படைப்பிரிவுகள் தீவிரமாக தூண்டப்பட்டுள்ளனர். அவர்கள் நாஜி கருத்துக்களை கொண்ட வெளியீடுகளைப் படிக்கிறார்கள், பாசிச சித்தாந்தத்தைப் பின்பற்றுவதோடு ஹிட்லரை பெரிதும் மதித்துப் போற்றுகிறார்கள்.

அசோவ் படைப்பிரிவும் அதன் சில மேற்குலக ஆலோசகர்களும் எஃகு ஆலையிலிருந்து வெளியே வராமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: முதலாவதாக, மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் தங்களுக்கு உதவுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும், இராணுவ போர்க்குற்ற நீதிமன்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இந்த படைப்பிரிவு அஞ்சுகிறது.

பாதுகாப்புச் செயலரான தளபதி லாயிட் ஆஸ்டின் இறுதியாக அமெரிக்கப் போர் இலக்குகளை (ரஷ்யாவைப் பலவீனப்படுத்த விரும்புகிறோம்.) அறிவித்ததற்குப் பதிலளிக்குமாறு கேட்டதற்கு, ஃபதேவ், “பிப்ரவரி 10 , 2007 அன்று முனிச்சில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் புதின் இதைப் குறிப்பிட்டே பேசினார். ரஷ்யாவை பலவீனப்படுத்த மேற்குலகம் விரும்புவதாக அவர் கூறியிருந்தார். ஆஸ்டினின் அறிவிப்பு இதைத்தவிர வேறு எதையும் வெளிப்படுத்தப்படவில்லை. உண்மையில் புதினின் மனம் வேறு பாதையில் நகர்ந்தது. "90கள் மற்றும் 2000 ஆண்டுகளில், ஐரோப்பாவுடன் ஒத்துப்போகவும் ஒருங்கிணையவும் தயாராக இருப்பதாக புதின் வெளிப்படையாக அறிவித்தார். அவர் பல தொலைநோக்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார். நேட்டோவில் உறுப்பினராவதற்கு ரஷ்யாவின் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். எங்களின் அனைத்து திட்டங்களுக்கும் மேற்குலக நாடுகளிடமிருந்து மறுப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது. ரஷ்யாவிற்கு உண்மையில் பாதுகாப்பு குறித்தான கவலைகள் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

தானே பிரத்யேக ராக்கெட் படைப்பிரிவில் பணியாற்றியதாக ஃபதேவ் கூறினார். “கார்கிவில் இருந்து மாஸ்கோவிற்கு ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Ballistic missile) வந்து சேர நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும். இன்று மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் கொடுக்கின்றன. அமெரிக்க இராணுவ தொழிற்சாலைகள் ரஷ்ய எதிரியை தோற்கடிக்கும் நோக்கில் வெறித்தனமாக ஆயுத உற்பத்தில் இறங்கியுள்ளதாக எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்: ஆனால் உண்மையில் சொல்லப்போனால் ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் வர்க்கமுமே எங்களை எதிரியாகத்தான் பார்க்கிறது.

நீண்ட காலப் போரின் விளைவுகள் பற்றி கேட்டபோது, ஃபதேவ் வாதத்தின் பொருளையே தலைகீழாக திருப்பினார். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உண்மையில் ஐரோப்பாவையே அதிகம் பாதிக்கின்றன என்றார். "ஐரோப்பாவை பலவீனப்படுத்துவது அமெரிக்காவிற்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது." நேட்டோவிற்கு வெளியே ஒரு ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்குவதற்கான ஐரோப்பிய நாடுகளின் முன்மொழிவுகளுக்கு அமெரிக்கர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், ரஷ்யா தனது வல்லாதிக்க நிலையை இழந்துவிடும் என்று மேற்குலக நாடுகள் நம்பின. மேற்குலக நாடுகளின் மேலாதிக்கத்தை விரும்பாத நட்பு நாடுகளின் உதவியுடன் ரஷ்யா மீண்டெழுந்து வந்ததை மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த புவிசார் அரசியல் மோதலில், ரஷ்யாவின் பங்கு இருப்பதென்பது எங்களது கூட்டாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும்." இதன் காரணமாகவே உக்ரைன் போரைத் தூண்டி ரஷ்யாவை அடக்க அமெரிக்கா விரும்புகிறது.

போர் முடிவுக்கு வந்தவுடன், புதிய சர்வதேச ஒழுங்கில் அதன் விளைவு என்னவாக இருக்கும்?

“மேற்குலக நாடுகளிடமிருந்தும், அமெரிக்காவிடமிருந்தும் வந்த கடுமையான அழுத்தங்கள் இருந்தபோதிலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை கொண்ட நாடுகள் ஆதரிக்கவில்லை என்பதை எண்ணிப் பாருங்கள். இதுவே மேற்கத்திய நாடுகளுக்கும் உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கும், அந்நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே உள்ள மிகத் தெளிவான வேறுபாடாகும். காலனியாதிக்க காலத்து நினைவுகளை சுமந்துகொண்டு வருகிற அந்நாடுகளின் தலைவர்களுக்கு மேற்குலக நாடுகள் எவ்வாறு தங்களை சுரண்டினார்கள் என்பது நன்கு தெரியும். இது உக்ரைன் போருக்குப் பிந்தைய காலத்தில்  புதிய புதிய மாறுபாடுகளை / நட்பு முறிவுகளை மறைமுகமாக தோற்றுவிக்கலாம்.

ஜனாதிபதி புதினின் உடல்நிலை குறித்த கேட்டபோது அவையனைத்தும "மோசமான வதந்திகள் " என்று அவர் பூசி மொழுகினார்.

அசோவ் எஃகு ஆலையில் உள்ள மூத்த மேற்கத்திய அதிகாரிகள், படைத்தளபதிகள் மற்றும் கூலிப்படை குழுக்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் வெளிப்படுத்தப்பட்டவுடன் உக்ரைன் கதை நிச்சயமாக ஒரு திருப்பத்தை சந்திக்கும். இரண்டாம் உலகப் போர் நிறைய புறமுதுகு காட்டி ஓடிய கதைகளை வழங்கியது. இஸ்ரேலியர்களின் Entebbe தீவரவாத ஒழிப்பு நடவடிக்கை இன்றும் எதிரொலித்த வண்ணமே இருக்கிறது. எஃகு ஆலையில் இருந்து அருமதிப்புடைய உக்ரைனிய சொத்துக்களை (உக்ரைன் போருக்கு துணை செய்பவர்கள்) மீட்க என்னவென்ன சதிகள் தீட்டப்படுகின்றன என்று தெரியவில்லை? திரைக்கதை எழுதுபவர்கள் தொடர்ந்து கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை : theaidem.com