நேற்று அமெரிக்கா இன்று சுவிஸ்.. வீழ்ந்தது கிரெடிட் சூயிஸ் வங்கி! கைப்பற்றியது UBS!

புதிய தலைமுறை

நேற்று அமெரிக்கா இன்று சுவிஸ்.. வீழ்ந்தது கிரெடிட் சூயிஸ் வங்கி! கைப்பற்றியது UBS!

பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை, அந்நாட்டின் போட்டி நிறுவனமான UBS வங்கி வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.

கிரெடிட் சூயிஸ் வங்கியின் வீழ்ந்த பங்குகள்

உலகளவில் முக்கியமான மதிப்புமிகுந்த வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியும் ஒன்று. 1856ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய வங்கியாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி (silicon valley bank) மற்றும் சிக்னேச்சர் (signature bank) ஆகிய இரு வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள நிலையில், கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியது.

image

இதனால், கிரெடிட் சூயிஸ் வங்கி பணப்புழக்க பிரச்சினையில் சிக்கியது. இதைச் சமாளிக்கும்விதமாக சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank-இல் இருந்து 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் (54 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான தொகையை கடனாகப் பெற்றது. இதை திருப்பித் தர முடியாத நிலையில், கிரெடிட் சூயிஸை போட்டி நிறுவனமான UBS வாங்க வேண்டும் என்று சுவிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். அதன்படி, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

கிரெடிட் சூயிஸை வாங்க UBS ஒப்புதல்

இதுதொடர்பாக, கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரு வங்கிகளும் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும் என்பதால், UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாக வாங்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அனைத்துப் பங்குகளையும் 3.25 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக்கொள்ள UBS வங்கி ஒப்புக்கொண்டது.

image

9,000 பேர்களை நீக்க UBS முடிவு

கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தை UBS வாங்க ஒப்புக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான இழப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. கிரெடிட் சூயிஸ் தனது 2007ஆம் ஆண்டு உச்ச விலையில் இருந்து 99 சதவீதம் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன்மூலம் சுவிஸ் நாட்டின் 2 முன்னணி வங்கிகளான UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகள் ஒன்றாக இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கிரெடிட் சூயிஸ் வங்கியைக் கைப்பற்றியிருக்கும் UBS, சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வருடாந்திர செலவுத்தொகையான $8 பில்லியனைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், 9,000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கிரெடிட் சூயிஸ் வங்கியின் சரிவுக்குக் காரணம்

கடந்த ஆண்டு சவுதி நேஷனல் பேங்க், கிரெடிட் சூயிஸ் வங்கியின் 9.88 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. இந்த நிலையில், உலகமெங்கும் வங்கிகளின் நிதிநிலை சார்ந்து அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேற்கொண்டு கிரெடிட் சூயிஸ் வங்கியில் முதலீடு செய்யும் சூழலில் இல்லை என்று சவுதி நேஷனல் பேங்க் அறிவித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி, வர்த்தகத்தில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் யாரும் எதிர்பார்க்காமல் 2 சுவிஸ் பிராங்க் என்ற பென்ச்மார்க் விலையில் இருந்து வரலாற்றில் முதல்முறையாக 30 சதவீதம் சரிந்து 1.55 சுவிஸ் பிராங்க் வரையில் குறைந்தது. இந்த சூழ்நிலையில்தான் கிரெடிட் சூயிஸை UBS வாங்க ஒப்புக்கொண்டது.

- ஜெ.பிரகாஷ்

www.puthiyathalaimurai.com /newsview/157189/Credit-Suisse-taken-over-by-UBS---what-s-next-