"மீண்டும் அவர்கள் நம்மை நேசிப்பார்கள்": வர்த்தக ஒப்பந்த ஒப்புதலுக்கு பிறகு இந்தியாவின் மீதான வரிகளை (Tariffs) குறைப்பதாக டிரம்ப் அறிவிப்பு

இந்தியா டுடே - தமிழில்: வெண்பா

"மீண்டும் அவர்கள் நம்மை நேசிப்பார்கள்": வர்த்தக ஒப்பந்த ஒப்புதலுக்கு பிறகு இந்தியாவின் மீதான வரிகளை (Tariffs) குறைப்பதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவுடன் சாத்தியமான வர்த்தக முன்னேற்றம் (trade breakthrough) குறித்த செய்திகள் திங்களன்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்தன. அமெரிக்காவும் இந்தியாவும் புதியதொரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கி நெருங்கி வருவதாக டிரம்ப் தெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா இந்தியாவின் மீதான வரிகளைக் குறைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க இந்தியத் தூதராக (Ambassador) பதவியேற்ற செர்ஜியோ கோர்-இன் பதவியேற்பு விழா ஓவல் அலுவலகத்தில் நடைபெற்றபோது, டிரம்பின் இந்த கருத்துக்கள் வெளிவந்தன.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இரு தரப்பினரும் சமச்சீர் ஒப்பந்தத்தை நோக்கி நெருங்கி வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

"நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இது முன்பு நாம்செய்திருந்ததைவிட முற்றிலும் வேறுபட்டது. இப்போதைக்கு அவர்கள் என்னை நேசிக்கவில்லை, ஆனால் அவர்கள் மீண்டும் நம்மை நேசிப்பார்கள். நாம் ஒரு நியாயமான ஒப்பந்தத்தைப் பெறுவோம். அவர்கள் பேரம் நடத்துவார்கள் (negotiators), செர்ஜியோ, நீங்கள்தான் அதை சமாளிக்க வேண்டும். எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஒரு ஒப்பந்தத்தை நாம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக நான் நினைக்கிறேன்," என்று ட்ரம்ப் அந்த விழாவின்போது பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய இறக்குமதிகளின் மீதான வரிகளை அமெரிக்கா குறைக்குமா என்பது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். "இப்போதைக்கு, ரஷ்ய எண்ணெயின் காரணமாக இந்தியாவின் மீதான வரிகள் மிக அதிகமாக உள்ளனதான், அவர்கள் ரஷ்ய எண்ணெயை நிறுத்திவிட்டனர். அதனால் (வரிகள்) கணிசமாகக் குறைக்கப்படவுள்ளது. ஆம், நாங்கள் வரிகளைக் குறைக்கப் போகிறோம். அடுத்த கட்டத்தில், நாங்கள் அவற்றை இன்னும் குறைப்போம்," என்று அவர் கூறினார். 

"இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களின் தொட்டிலாகும், அது உலகின் மிகப்பெரிய நாடு, மேலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு அற்புதமான உறவு உள்ளது, செர்ஜியோ மோடியுடன் நட்பு பாரட்டியதன் மூலம் ஏற்கனவே உறவை மேம்படுத்தியுள்ளார்," என்றும் டிரம்ப் கூறினார்.

மாதக்கணக்கிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வர்த்தகப் பேச்சுக்கள் உத்வேகம் பெறுகின்றன

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் டிரம்பின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. நவம்பர் 5 ஆம் தேதி, இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (Bilateral Trade Agreement) குறித்த பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக நடந்து வருகின்றன" என்று கூறினார். இருப்பினும், “சில பிரச்சினைகள் இன்னும் விவாதத்தில் உள்ளன. அதனால் இயற்கையாகவே இதற்குச் சிறிது காலம் எடுக்கும்," என்றும் கூறினார்.

இரு அரசுகளின் வழிகாட்டுதலின் கீழ் பிப்ரவரி 2025 இல் முதன்முதலில் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம், தற்போதுள்ள 191 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வர்த்தக அளவை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு தரப்பும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கையெழுத்திட எதிர்பார்க்கப்படும் முதல் கட்ட ஒப்பந்தத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்றி வருவதால், மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் 23 அன்று நடந்த ஒரு இணையவழி கூட்டம் உட்பட இதுவரை ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

செப்டம்பர் மாதம், விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல மூத்த அமைச்சக அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவுடன் (delegation) கோயல் வாஷிங்டனுக்கு சென்றார். அக்குழுவில், சிறப்புச் செயலாளரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ராஜேஷ் அகர்வால் இடம்பெற்றிருந்தார். அவர் அமெரிக்க வர்த்தக அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டங்களில் பங்கேற்றார்.

அதே நேரத்தில், தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான வர்த்தகப் பிரதிநிதியின் உதவியாளர் பிரெண்டன் லின்ச் தலைமையிலான ஒரு அமெரிக்கக் குழு, புது டெல்லியில் உள்ள இந்திய வர்த்தகத் துறை அதிகாரிகளுடன் "சாதகமான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய" விவாதங்களை நடத்தியதாக கூறப்பட்டது. விரிவான பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.indiatoday.in/world/us-news/story/us-india-trade-deal-progress-tariff-cuts-expected-glbs-2817073-2025-11-11

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு