தொழிலாளர், விவசாயிகள் முன்னணியை அமைப்பது பாட்டாளி வர்க்க கட்சியின் உடனடி கடமையாகும்

ஏஎம்கே

தொழிலாளர், விவசாயிகள் முன்னணியை அமைப்பது பாட்டாளி வர்க்க கட்சியின் உடனடி கடமையாகும்

எளிய நிலமற்ற விவசாயிகளுக்கு சங்கங்கள் அமைத்து கூலி உயர்வுக்காக நில உடமைகாரர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்துவதும்; எளிய, நடுத்தர பணக்கார விவசாயிகளைக் கொண்ட சங்கங்களை அமைத்து குத்தகை குறைப்புக்காகவும் நிலவெளியேற்றத்தை தடுத்து நிறுத்தவும், வரிகுறைப்புக்காகவும், கடன் நிவாரணத்திற்காகவும், கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் பெறுவதற்காகவும், வேறு சில பொருளாதார நலன்களுக்காகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்  திரிபுவாதிகள்  விவசாயிகளுக்காக மேற்கொண்டுள்ள பணியாக அமைந்துள்ளது, இத்துடன் இவைப் போன்ற பிற பொருளாதார சலுகைகள் விவசாயிகளுக்கு கிட்டும் பொருட்டு அதற்கு அவசியமான சட்ட, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காகவும் திரிபுவாதிகள் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் செய்யும் அரிய பெரிய காரியம் நில உடமைக்கு உச்சவரம்புச் சட்டங்களை நிறைவேற்றி அதன் மூலம் நிலப்பிரபுக்களிடம் "மிகுதியாக உள்ள" நிலங்களை எடுத்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்யக்கோரி அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் "பேர் இயக்கங்கள்" ஆகும்.

இவ்வாறு நிலப்பிரபுக்களை எதிர்த்து விவசாயிகள் சில பொருளாதார சலுகைகள் பெறும் நோக்கத்துடன் விவசாயிகள் இயக்கத்தை குறுக்கி விடுவதையும் இந்த அரசு இயந்திரத்தைக் கொண்டே விவசாயிகளின் நலன்களுக்கு உகந்த முறையில் நில உடமை உறவுகளில் மாற்றம் ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் பொருளாதாரவாதம் என கூறலாம். இத்தகைய பொருளாதாரவாதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் திரிபுவாதிகள் தங்களின் வெகுஜன இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வெகுஜன இயக்கங்களைத்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் EMS அவர்கள் "காந்தியத்திற்கு மாறுபட்டதும், எதிரானதுமான ஒரு வெகுஜன இயக்கம்" என்று வருணிக்கிறார்.

மிகப் பிற்போக்காளர்களான ஆளும் வர்க்க கட்சிகள்கூட விவசாயிகளின் வாழ்நிலைமைகளை உயர்த்தப் பாடுபடுவதாகவும். நில உடமைக்கு உச்சவரம்பை கட்டும் சட்டங்களைக் கொண்டுவந்து சாதித்து விட முடியும் என்றும் கூறுகிறார்கள். இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டங்கள் எந்த அளவிற்கு நில உடமை உறவுகளில் மாற்றம் கொண்டு வந்தது என்பதும், உழுபவர்களுக்கு நிலம் கிடைக்கச் செய்தது என்பதும் அனைவரும் அறிந்த இரகசியம் தான்.

பாராளுமன்ற பாதையாளர்களான இந்த திரிபுவாதிகள் எதிர்கட்சியினராக இருக்கும் போது "நில உடமைக்கு உச்சவரம்பு" கோரி இயக்கம் நடத்துகிறார்கள். இந்த அதிகார வர்க்க அரசு இயந்திரத்தை கொண்டு நில உடமை உறவுகளில் மாற்றம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி மக்களிடம் வாக்குகள் பெற்று அமைச்சர் அவைகளில் அமர்கிறார்கள். இவர்கள்-அமைச்சரவைகளில் அமர்கின்றபொழுது விவசாயிகளின் நலன்களுக்கு உகந்த முறையில் நில உடமை உறவுகளில் இவர்களால் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல, இவர்களே விவசாயிகள் நடத்தும் அத்தகைய இயக்கத்தை ஒடுக்குவோர்களாக மாறிவிடுகிறார்கள். இவை அனைத்தும் இன்றைய அரசு அமைப்புக்குள் நில உடமை உறவுகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வழி அடைக்கப் பட்டிருக்கிறது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

விவசாயிகளுக்கு அரசியல் உணர்வை ஊட்டவேண்டும்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான மாற்றங்கள் என்ன என்பதை ஒரு தெளிவற்ற முறையிலேதான் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விவசாயிகள் தங்களின் விருப்பங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் இன்று நமது நாட்டில் உள்ள முழுமையான அரசியல் அமைப்பிற்கும் உள்ள உறவைப்பற்றி தெட்ட தெளிவாக அறியாமல் இருக்கிறார்கள்.

இதையே வேறு வார்த்தைகளில் கூறினால் இன்று நமது நாட்டில் உள்ள அரசியல் அமைப்பு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு உகந்தது அல்ல என்பதை இன்னும் தெட்ட தெளிவாக அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

எனவே தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் பொருளாதாரத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது என்பதை அறியாமல், அரசியல் மாற்றங்கள் குறித்த பிரச்சனையை பொருளாதார நிலையில் அபிவிருத்தி செய்யும் பிரச்சனையாக குறுக்கிவிடும் ஆளும் வர்க்க கட்சிகளும் திருத்தல்வாதிகளும் செய்கின்ற அரசியல் விளையாட்டுகளுக்கு விவசாயிகள் இரையாகி விடுகிறார்கள். ஆகையால் விவசாயிகள் இயக்கத்திற்கு அரசியல் உணர்வை புகட்டுவது பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களான மார்க்ஸிய-லெனினியவாதிகளின் முதன்மையான கடமையாக இருக்கிறது.

நிலப்பிரபுத்துவத்தின் மூன்றுவகை ஆதிக்கங்கள்

இன்று நமது நாட்டில் விவசாயிகள் நிலப் பிரபுத்துவத்தின் ஆதிக்கங்களான 1)அரசியல் ஆதிக்கம் 2) பொருளாதார ஆதிக்கம் 3) சமூக ஆதிக்கம் அல்லது ஜாதி ஆதிக்கம் ஆகிய மூன்று வகையான ஆதிக்கங்களுக்கும், பெண்கள் இம்மூன்றுடன் நான்காவது ஆதிக்கமான ஆண் ஆதிக்கம் அல்லது கணவனின் ஆதிக்கம் ஆகிய நான்கு ஆதிக்கங்களுக்கு அடிமைப் பட்டிருக்கிறார்கள்.

அரசியல் ஆதிக்கமே அடிப்படை

இம்மூவகையான நிலப்பிரபுத்துவ ஆதிக்கங்களை தூக்கி எறியாமல் கிராமங்களில் விவசாயிகள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்த முடியாது. கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களின் அரசியல் ஆதிக்கம் வீழ்த்தப்படாமல் மற்ற ஆதிக்கங்களை வீழத்துவது இயலாது.

எனவே நிலப்பிரபுத்துவத்தின் அரசியல் ஆதிக்கத்தை வீழ்த்துவதைத் தொடர்ந்த மற்ற ஆதிக்கங்களை வீழ்த்துவதற்கான அரசியல் இயக்கத்தை நடத்துவதற்காக பரந்து பட்ட விவசாயிகளை திரட்டுவது அவசியமாகிறது. பரந்துபட்ட விவசாயிகளைத் திரட்டுவதற்கு தேவையான வெகுஜன அமைப்புக்களையும் போராட்ட வடிவங்களையும் பாட்டாளிவர்க்க கட்சி மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. ஆனால் பரந்துபட்ட விவசாயிகளின் இயக்கம் உண்மையாகவே வெகுஜனத் தன்மை அடைந்ததும் சட்ட விரோதமாக்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவ வன்முறையாளர்களும், அரசும் தொடுக்கின்ற எதிர்புரட்சிகர வன்முறையை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே எச்சூழ்நிலைமையிலும் இயங்குவதற்குத் தகுந்த அமைப்புகளையும் தற்காப்பு அமைப்புகளையும் பெற்றிருக்காவிட்டால் விவசாயிகள் தங்களின் விடுதலையை அடைய முடியாது.

இந்தியப் புரட்சியின் அடிப்படை பிரச்சினை

இந்தக் காலாவதியான அரை நிலப்பிரபுத்துவ சமுதாயம் அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் சமுதாய அடிப்படையாக இயங்குகிறது. மேலும் அதிகார வர்க்க முதலாளித்துவம் நமது மக்களை கொள்ளையடிக்கவும் இது உதவுகின்றது. ஆகையால் விவசாயிகள் பிரச்சனையே இந்திய புரட்சியின் அடிப்படை பிரச்சனையாகிறது.

அமெரிக்க, சோவியத் சமூக ஏகாதிபத்தியங்களால் ஊட்டி வளர்க்கப்படும் இந்திய அரசு இயந்திரத்தால் இந்த அரைநிலப்பிரபுத்துவ அமைப்பு பாதுகாக்கப்படுகிறது, இந்த அரசு இயந்திரத்தைக் கொண்டுதான் தரகு முதலாளிததுவம் தொழிலாளர்களை ஒடுக்கி சுரண்டுகிறது.

இந்த அரசியல் இயந்திரத்தைக் கொண்டுதான் தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகிய இருவர்க்கத்தினரும், இவற்றுடன் பிறஆதிக்க மற்ற வர்க்கங்களும் ஒடுக்கப்படுகின்றனர். இவ்வொடுக்கு முறையை எதிர்த்துதான் தொழிலாளர் விவசாயிகளின் முன்னணியை உருவாக்க இயலும்.

நகர்புற தொழிலாளர் இயக்கத்தில் திரிபுவாதிகள் தொழிற்சங்கவாதத்தையும், பொருளாதாரவாதத்தையும் எப்படி அரியணையில் ஏற்றி வைத்திருக்கிறார்களோ அதேபோல்தான் விவசாயிகள் இயக்கத்திலும் பொருளாதார வாதத்தையும் அரியணையில் ஏற்றி வைத்துப் போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.

இத்தகைய பொருளாதாரவாத இயக்கங்களால் தொழிலாளர் விவசாயிகள் முன்னணியை உருவாக்க இயலாது, ஏன் எனில் பொருளாதாரவாதத்தை அடிப்படையாக கொண்ட இயக்கங்கள் இவ்விருவர்க்கங்களுக்கு அரசியல் உணர்வை ஏற்படுத்துவதுமில்லை இவற்றிற்கும் மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும், இடையிலுள்ள பொது நலன்களை அடிப்படையாக கொண்டதுமல்ல.

தொழிலாளர் விவசாயிகள் முன்னணிக்கு அடிப்படை

தொழிலாளர் விவசாயிகளின் முன்னணியை அமைப்பதற்கு முன்னிபந்தனை எதுவென்பதை லெனின் தனது "அரசும் புரட்சியும்" என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார் :

"ஐரோப்பாவில் 1871இல் கண்டத்து நாடு, எதிலும் பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பாண்மையாய் இருக்கவில்லை. "மக்கள்" புரட்சியானது, பெரும்பான்மையோரை மெய்யாகவே தன் போக்கிலே இழுத்துச் செல்லும் புரட்சியானது, பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் ஆகிய இருபகுதியினரையும் தன்னுள் கொண்டதாய் இருந்தால்தான் இவ்வாறு "மக்கள்" புரட்சியாய் இருந்திருக்க முடியும். இவ்விரு வர்க்கங்களும்தான் அன்று மக்கள் என்போர். "அதிகாரவர்க்க இராணுவ அரசு இயந்திரம்" இவ்விரு வர்க்கங்களையும் ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டியும் வருகிறது என்பதால் இரண்டும் ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்த இயந்திரத்தை நொறுக்குவது இதைத் தகர்த்திடுவது மெய்யாகவே "மக்களுக்கு" அவர்களில் பெரும்பாண்மையோருக்கு, தொழிலாளர்களுக்கும் பெரும் பகுதி விவசாயிகளுக்கும் நலம் பயக்கிறது என்பது தான், ஏழை விவசாயிகள் பாட்டாளிகளின் சுதந்திரமான கூட்டணிக்கு "முன்னிபந்தனையாகும்'' இதுபோன்ற கூட்டணி இல்லாத வரை ஜனநாயகம் நிலையற்றதாகவே இருக்கும், சோஷலிச மாற்றம் ஏற்படுவது சாத்தியமல்ல."

[பக். 57, 58, அரசும் புரட்சியும், முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ 1971]

தோழர் லெனினின் அறிவுரையை கணக்கில் கொண்டு, இன்று நமது நாட்டில் தொழிலாளி-விவசாயி முன்னணியைக் கட்டும் பணியில் ஈடுபடுவதின் மூலம்தான் மக்கள் ஜனநாயகப் புரட்சியையும், அதையடுத்து சோசலிசப் புரட்சியையும் வெற்றி நோக்கி இட்டுச்செல்ல முடியும்.

சமரன் மாத இதழ்

ஏப்ரல் 2021