சீனாவின் நடுநிலைவாதம் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் நன்மை விளைவிக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா?

தமிழில்: விஜயன்

சீனாவின் நடுநிலைவாதம் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் நன்மை விளைவிக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா?

“இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்த சீனாவின் நிலைப்பாடு, படிப்படியாக மாற்றம் அடைந்து வந்துள்ளது. காலப்போக்கில், அது இஸ்ரேலிய அரசிற்கு துணைபோகும் விதமாக, தனது நிலைப்பாட்டை மேலும் நெருக்கமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது எனலாம்.”

சுமார் 23 இலட்சம் மக்கள் வாழும் காசா பகுதியை மையமாகக் கொண்டு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நடக்கும் போர், உலக வல்லரசு நாடுகளிடையே ஒரு புதிய அதிகாரப் போட்டிக் களமாக மாறியுள்ளது. ஓர் அணியாகத் திரண்டு சீனாவும் ரஷ்யாவும் செயல்படுகிறது என்றால், மறுபுறம் அமெரிக்கா இஸ்ரேலுக்குப் பெரும் பலமாகத் துணை நிற்கிறது. இந்த வல்லரசு நாடுகள் கொஞ்சமும் தயங்காமல் பரஸ்பரம் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன.

சீனாவின் தெளிவற்ற நிலைப்பாடு குறித்து இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளன, குறிப்பாக ஹமாஸை சீனா நேரடியாகக் கண்டிக்காதது அவர்களுக்கு ‘ஏமாற்றத்தை’ ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள அமெரிக்க தூதர், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை ஹமாஸுக்கு எதிராகத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அமெரிக்கா இஸ்ரேலுக்குத் தனது முழு ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்திய பின்னரே இந்த வலியுறுத்தல் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றும் ரஃபி ஹார்பாஸ், சீனாவின் பதில் தனக்கு ‘கடும் ஏமாற்றத்தை’ அளித்ததாகத் தெரிவித்தார். ஹமாஸின் அதிர்ச்சியூட்டும், கொடூரமான தாக்குதலுக்கு எதிராக சீனா தனது கண்டனத்தைத் தெளிவாகப் பதிவு செய்யவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும், காசாவுக்குக் கடத்தப்பட்ட பலரையும் சீனா கடுமையாகக் கண்டிக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். இந்த மோதல் குறித்து சீனா வெளியிட்ட முதல் அறிக்கையில், சமாதானப் பேச்சுவார்த்தையை நீண்ட நாள்களாக ஒத்திவைத்திருந்ததே இந்த வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நிக்ழ்ந்ததற்கு காரணம் என்பதால் கூடியவிரைவில் சமாதானப் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இப்பிரச்சினைக்கு ஒரே நிரந்தரத் தீர்வு, இரு தேசத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தனி நாட்டை உருவாக்குவதே ஆகும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் - பாலஸ்தீன முரண்பாடு குறித்து சீனா காலம்காலமாகப் பேணிவரும் அதே நிலைப்பாட்டின் தொடர்ச்சியே இது. இந்த நிலைப்பாட்டினைச் சீனா தற்போது மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதலாவதாக, உலக ஒழுங்குமுறை குறித்து மேற்கத்திய நாடுகளின் பார்வையிலிருந்து சீனா முற்றிலும் மாறுபட்டதொரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் கூட்டணிகளையும் கூட்டமைப்புகளையும் உருவாக்குவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏனெனில், இவை உலகை அமைதியற்றதாக்கி, பெரும் ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்குகின்றன என்பதே அதன் வாதம்.

இரண்டாவதாக, பாலஸ்தீனத்தில் உள்ள நிலவரம் உக்ரைனில் உள்ளதைப் போன்றதல்ல. இருப்பினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில், ஹமாஸும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே தன்மையைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டார். ஏனெனில், அவருடைய கூற்றுப்படி, இருவருமே அருகமைந்த ஒரு ஜனநாயக நாட்டை அழித்தொழிக்க முயலுகிறார்கள். ஆனால், பலரும் இந்த ஒப்பீட்டினை ஏற்பதில்லை. மேற்கத்திய நாடுகள் ஒன்றுபட்டு, இன்னும் நெருக்கமாகச் செயல்படுவதற்கு உக்ரைன், பாலஸ்தீனப் போர்கள் வழிவகுத்துள்ளன. இதே வேளையில், மேற்கத்திய சக்திகளின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் குறைக்க சீனா முனைவதால், இப்போர்கள் உலக அரங்கில் சீனாவின் நிலைப்பாட்டிற்குச் சவாலாக அமைந்துள்ளன.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த இராணுவத் தாக்குதலைக் கண்டிப்பதற்கு சீனா மறுத்துவிட்டது. மாறாக, அமெரிக்காவையும் நேட்டோவையும் கடுமையாக விமர்சித்தது. அவை இன்னமும் பனிப்போர் காலச் சிந்தனைகளிலேயே உழன்று, அதற்கேற்பவே செயல்படுகின்றன என்று சாடியது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதன் மூலம் அமெரிக்கா போரை மேலும் தீவிரப்படுத்தியதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.

இருந்தபோதிலும், ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரண்ட அதே நாடுகள் தற்போது மத்திய கிழக்கு யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், இம்முறை சீனா அவர்களுக்கு எதிராகப் படுதீவிரமான சொற்களைப் பயன்படுத்தவில்லை. ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தை அமெரிக்கா தடுத்ததால், தாம் ‘ஆழ்ந்த ஏமாற்றமடைந்ததாக’ சீனா வெளிப்படையாகக் கூறியது மட்டுமே, இதுவரை அதன் ஒரே விமர்சனமாக அமைந்திருக்கிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைச் செயல்களையும் எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தீர்மானத்தையே அமெரிக்கா நிறைவேற்றவிடாமல் தடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, சீனா பொதுவாகப் பன்னாட்டுப் பிரச்சினைகளுக்குத் தன்னிச்சையாகச் செயல்பட்டுத் தீர்வு காண முற்படுவதில்லை. உலகளாவிய முரண்பாடுகளைத் தீர்க்கும் முழுப் பொறுப்பையும் அது ஒருபோதும் தனித்துப் எடுத்துக் கொள்வதில்லை. தனது பெரும்பாலான அதிகாரப்பூர்வ அறிக்கைகளில், பன்னாட்டுப் பிரச்சினைகள் கூட்டு முயற்சிகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும் என சீனா உறுதியாக வலியுறுத்தி வருகிறது. உலகச் நாடுகள் வலுவான, முன்னோடியான பங்கினை ஆற்ற முன்வர வேண்டும் என்றும் சீனா எடுத்துரைக்கிறது. காசாவில் தற்போது மூண்டிருக்கும் போரைக் குறித்து, அனைத்து நாடுகளும் விரைந்து செயலாற்ற வேண்டும் என்றும், பாலஸ்தீனப் பிரச்சனைக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், நிரந்தர அமைதியை நிலைநிறுத்த ஒரு வழியைக் கண்டறியத் துணை நிற்க வேண்டும் என்றும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. சபைக்கு தலையிட வேண்டிய கடப்பாடு உண்டு எனவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

நான்காவதாக, இம்மோதலில் சீனா நடுநிலை வகிப்பதாகவே திட்டவட்டமாக உரைக்கிறது. நடைமுறையில், இது இரு தரப்பினரையும் பாரபட்சமின்றி விமர்சிப்பதில் சென்று முடிகிறது.

காசாப் போர் குறித்துக் கருத்துத் தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், "வன்முறைக்கு வன்முறையே பதிலாக அமையுமானால், அது ஒரு முடிவற்ற சுழற்சியாகத் தொடர் தாக்குதல்களுக்கே வழிவகுக்கும்" என்று கூறியிருந்தது. மேலும், "இத்தருணத்தில், மோதல்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு, தாக்குதல்கள் முற்றிலுமாய் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதே அவசர அவசியமானது" என்றும் சீனா வலியுறுத்தியிருந்தது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மாவ் நிங், பொதுமக்களுக்குத் துயரிழைக்கும் எந்தவொரு செயலையும் சீனா வன்மையாக எதிர்ப்பதாகத் கூறினார். அத்துடன், மோதலைத் தீவிரப்படுத்தி அல்லது பிராந்தியத்தில் புதிய சிக்கல்களை விளைவிக்கும் எச்செயலையும் சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். இந்த அறிக்கையில், ஹமாஸ் இயக்கத்தை சீனா வெளிப்படையாகப் பெயரிட்டுக் குறிப்பிடவில்லை. மேலும், அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதையும் சீனா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. தனித்ததோர் அறிக்கையில், "காசாவில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலை சீனா மிக வன்மையாகக் கண்டிக்கிறது; அத்தாக்குதல் எண்ணற்ற உயிரிழப்புகளையும் பெரும் சேதாரங்களையும் ஏற்படுத்தியது" என்று மட்டுமே குறிப்பிட்டது. அத்துடன், "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்ததுடன், சண்டைகள் அனைத்தும் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

கடும் விளைவுகள் 

எந்தப் பக்கமும் சாராமல், வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டாமல், நடுநிலை வகிக்கும் சீனாவின் முடிவு, பாலஸ்தீனியர்களுக்குப் பெரும் சிக்கல்களையும், சொல்லப்போனால், ஆறாத துயரங்களையுமே விளைவித்துள்ளது. ஆதரவு வழங்காததன் மூலம், சீனாவின் இந்த நிலைப்பாடு பாலஸ்தீனியர்களின் நியாயமான போராட்டத்தை வெகுவாகப் பலவீனப்படுத்துகிறது. ஏனெனில், இது பாலஸ்தீனப் போராளிகளின் செயல்களையும், இஸ்ரேலிய இராணுவத்தின் மிகக் கடுமையான நடவடிக்கைகளையும் ஒரே தட்டில் வைத்துச் சமப்படுத்துகிறது. உண்மையில், இவை இரண்டும் பலத்திலும் விளைவிலும் முற்றிலும் வேறுபட்டவை என்பது தெளிவு. இந்தச் சூழலில், சீனா ஒரு வலுவான அறநெறிப் பாடத்தை மனதில் கொள்ள வேண்டும். இத்தாலிய எழுத்தாளர் தாந்தே ஒருமுறை குறிப்பிட்டது போல, "அநீதி இழைக்கப்படும் வேளையில் நடுநிலை என்ற பெயரில் மெளனம் சாதிப்பவர்கள் நரகத்திற்கே செல்வார்கள்".

இதன் பொருள் என்னவென்றால், சரியும் பிழையும் தெளிவாகத் தெரியும் ஒரு சூழலில், நடுநிலை வகிப்பதும் கூடப் பெரும் தீங்கை விளைவிக்கும் செயலாகும். மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சீனாவின் நடுநிலைவாதம், நடைமுறை எதார்த்தத்தில் உண்மைக்கு நேரெதிராக உள்ளது. சீனா எந்தப் தரப்பையும் ஆதரிப்பதில்லை என்று வெறும் வாயளவில் சொன்னாலும், அதன் செயல்பாடுகள் இஸ்ரேலுக்கு அதிக ஆதரவாக இருப்பதையே தெளிவாகக் காட்டுகின்றன. 

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சில முக்கிய அம்சங்களில், சீனா சர்வதேச விதிகளையும், சட்டங்களையும் பின்பற்றவில்லை என்பது உலகறிந்த உண்மை. உதாரணமாக, சீனா இஸ்ரேலை ஒரு யூத நாடாக அங்கீகரித்துள்ளது. மேலும், இஸ்ரேலியக் குடியேற்றப் பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் போன்ற பகுதிகளில்தான் இந்தக் குடியேற்றப் பகுதிகள் அமைந்துள்ளன.

இத்தகைய முதலீடுகள், இந்தப் பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலியக் குடியேற்றவாசிகளின் பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சிரமங்களை உருவாக்கியபோதும், இஸ்ரேலுடனான உறவுகளை மேம்படுத்த அரபு நாடுகளைச் சீனா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே, இந்த மோதல் குறித்த சீனாவின் நிலைப்பாடு மெதுவாக, படிப்படியாக மாறி வந்திருக்கிறது. படிப்படியாக, அது இஸ்ரேலுக்கு ஆதரவாக நகர்ந்து, அதனுடன் நெருக்கத்தை வளர்த்துள்ளது. இஸ்ரேலை ஒரு காலத்தில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் மையமாகக் கருதிய மா சேதுங்கின் பார்வையையும், அவரது சிந்தனையையும் சீனா இன்று பின்பற்றுவதில்லை. சீனா அந்தப் பழைய கண்ணோட்டத்திற்குத் திரும்ப வேண்டியதில்லைதான். ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலிய அரசாங்கம் தனது செயல்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தும் வாதங்களை – சியோனிசக் கதை என்று பெரும்பாலும் அழைக்கப்படும் அந்த வாதங்களையும் – மீண்டும் மீண்டும் எடுத்துரைப்பதையும், ஆதரிப்பதையும் சீனா நிறுத்த வேண்டும்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.middleeasteye.net/opinion/israel-palestine-war-china-neutrality-helpful-harmful