அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களுக்கும் சிஐஏவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது

தமிழில் : விஜயன்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களுக்கும் சிஐஏவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது

நோபல் பரிசு பெறும் நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு தனிக் குழு இருக்கிறது. நார்வே நாட்டின் நாடாளுமன்றம் இக்குழுவிற்கான ஐந்து நடுவர்களை நியமனம் செய்கிறது.

ஒரு வேளை ஆறாவதாக ஒரு நடுவர் நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படுவதற்கு மாறாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவால் நியமிக்கப்படுகிறார்களோ என சந்தேகத்தை கிளப்பும் அளவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் மூலம் அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் இரகசியத் திட்டங்களை சிரமேற்கொண்டு செயல்படுத்தப்படுவதை இந்த சிஐஏ அமைப்பு உறுதிசெய்து வருகிறது.

இக்கருத்து மிகைப்டுத்தப்பட்ட ஒன்றாகத் தோன்றலாம் எனினும், இந்த ஆண்டு பரிசு பெற்றவர்கள் அனைவரும் சிஐஏவின் கிளை அமைப்பான  ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (NED) உடன் தொடர்புகள் கொண்டுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் ஜிம் ரிஷ் (R-ID) சென்ற ஆண்டிற்கான(2022) NED ஜனநாயக விருதை சிவில்(அரசியல்) உரிமைகளுக்கான சங்கம்(CCL) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒலெக்சாண்ட்ரா மட்விச்சுவுக்கு வழங்குகிறார். இதே அமைப்புதான் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளது. [ஆதாரம்: ned.org ]

உதாரணமாக, டிசம்பர் 10 அன்று உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சிவில் (அரசியல்) உரிமைகளுக்கான மையம் (CCL) சார்பாக சென்ற ஆண்டு(2022) அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட ஒலெக்சாண்ட்ரா மட்விச்சு என்பவர்தான், ஆறு மாதங்களுக்கு முன்னர்  இதே அமைப்பின்(CCL) சார்பாக ஆண்டுதோறும் NED அமைப்பால் ஜனநாயக சேவையை பாராட்டி வழங்கப்படும் பதக்கத்தையும் பெற்றிருந்தார்.

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளையும், பிரச்சாரப் பணிகளையும் ஊக்குவிப்பதற்காக 1980 களில் NED அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையை(NED) உருவாக்குவதற்கு பரிந்துரைத்த ஆய்வுக் குழுவின் இயக்குநர் ஆலன் வெய்ன்ஸ்டீன் 1991 இல் இவ்வாறு குறிப்பிட்டார் :

“இன்று நாம் செய்யும் பல செயல்களை 25 ஆண்டுகளுக்கு முன்பு CIA திருட்டுத்தனமாகச் செய்து கொண்டிருந்தது.”

சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெலாரஷ் அரசை எதிர்த்து வந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் மெமோரியல் என்ற மனித உரிமை அமைப்பும் NED பதக்கத்துடன் நிதியுதவிகளையும் பெற்றுள்ளது. வெளிநாட்டவர்களுக்கான ரஷ்ய சட்டத்தை மீறியதற்காக அந்நாட்டிலிருந்து இந்த மனித உரிமை அமைப்பு வெளியேற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக தியோடர் ரூஸ்வெல்ட், ஹென்றி கிஸ்ஸின்ஜர், பராக் ஒபாமா போன்ற போர் வெறியர்களுக்கு அமைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்த போதிலும் அரசியல் சதிச்செயல்களிலும், கருத்தியல் முனைப் போரிலும் கைத்தேர்ந்த அந்நிய அளவு அமைப்புடன் மிக நெருக்கமான தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்யாவிற்கு எதிரான கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கும் உக்ரைனில் நடக்கும் தொடர் ஆக்கிரமிப்பு போருக்கு வேண்டிய ஆதரவை திரட்டும் நோக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஒரு பிரச்சார மேடை போலவே சென்ற ஆண்டு அமைதிகக்கான நோபல் பரிசு வழங்கும் விழா நடந்து முடிந்து.

பரிசு பெற்ற விழாவில் பேசியபோது, சொல்லிவைத்தது போல அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவருமே ரஷ்யாவின் போர்க் குற்றங்களையும், ஆக்கிரமிப்பையும் கண்டித்துப் பேசியதோடு, உக்ரைன் நாட்டின் போர் முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை வழங்குவதாகவும் பேசியிருந்தனர். உக்ரைனுக்கு வேண்டிய வான்படை சாதனங்களும், இன்னப்பிற வகையான ஆயுதங்களும் கூடுதலாக வழங்குவதற்கு நார்வே நாட்டு அரசாங்கம் முன்வர வேண்டும் என நேரடியாக ஒலெக்சாண்ட்ரா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கள நிலவரத்தை கட்டுகதைகளாக காட்டுதல்

பகிரங்கமான ரஷ்ய வெறுப்பு பேச்சுக்களும், மானி சமயத்தவர்கள் முன்வைத்த தர்ம-அதர்ம(துவைத) உலகப் பார்வை மூலம் மேற்கத்திய அரசுகளை அடிப்படையில் சூதுவாது தெரியாத அப்பாவிகள் என்று சித்தரிப்பது போலமைந்த ஒலெக்சாண்ட்ராவின் உரை கவனத்தை ஈர்த்தது.

கடந்த பத்தாண்டுகளாகவே, “பல்வேறு நாடுகளில் ரஷ்யப் படைகள் நாசகர கொலைக் குற்றங்களை செய்து வருகிறது, ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான தொண்டு நிறுவனங்களைக் கூட ஒழித்து வருவதை மேற்கத்திய அரசுகள் கண்டும் காணாதது போல இருப்பதோடு ரஷ்யத் தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்து எரிவாயு குழாய்களை பதித்து வருவதோடு வழக்கமாக செய்யும் தொழிலையும் நடத்தி வருகின்றனர் என்று ஒலெக்சாண்ட்ரா பேசினார்.

உண்மையில் அமெரிக்க படைகளும் அதன் பொம்மை அரசுகளும் மத்திய கிழக்கு நாடுகளில் பேரழிவையும், சொல்லொன்னா போர்க் குற்றங்களையும் கடந்த சில பத்தாண்டுகளாகவே நிகழ்த்தி வருகிறது. ஆனால், அப்பாவி மேற்குலக நாடுகள் ஏதோ ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்கே போரில் பங்கேற்கின்றன என்று ஒலெக்காண்ட்ரா தனது உரையில் சொல்லிச் சென்றார்.

எப்படிப்பார்த்தாலும், அநேக வேளைகளில் அமெரிக்க - நேட்டோ படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் நோக்கிலே இராணுவ ரீதியில் ரஷ்யா தலையிட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு ஜார்ஜியாவிலோ அல்லது ரஷ்யாவின் கூட்டாளியான சிரியாவிலோ அல்லது சிரியா வேண்டிக்கொண்டதற்கு இணங்க 2011-ஆம் ஆண்டு அமெரிக்க-நேட்டோ படைகளால் வேட்டையாடப்பட்டு வந்த லிபியாவை அழிவிலிருந்து காப்பாற்றியது முதற்கொண்டு அநேக வேளைகளில் தற்காத்துக்கொள்ளும் நோக்கிலே இராணுவத்தை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் நடக்கும் போர் என்பது “இரண்டு அரசுகளுக்கு இடையிலான போரல்ல மாறாக சர்வாதிகார ஆட்சிமுறைக்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் இடையில் நடக்கும் போர்” என்று தனது உரையில் ஒலெக்சாண்ட்ரா வலியுறுத்தி பேசியிருந்தார்.

அவர் கூறுவது தான் உண்மை என்றால் ஒலெக்சாண்ட்ரா யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிபடுத்தவில்லை. ஏனெனில், ரஷ்யாவில் சட்டப்பூர்வமக அங்கீகரிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பதினொரு எதிர்கட்சியை ஜெலன்ஸ்கி அரசு தடை செய்துள்ளதோடு, பீனிக்ஸ் படுகொலைத் திட்ட பானியில் (Phoenix style operation) அரசை எதிர்த்து போராடுபர்களின் குரலை நசுக்கும் வகையில் அரச அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு ஐரோப்பாவில் முதல்முறையாக கிரிமியாவை ஆக்கிரமிப்பு போரின் மூலம் ரஷ்யா கைப்பற்றிக்கொண்டதற்கு எதிராக உலக நாடுகள் தகுந்த பதிலடி கொடுக்கத் தவறிவிட்டனர் என தனது உரையின் துவக்கத்தில் சூசனமாக சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

அவர் சொல்வது போலல்லாமல் கிரிமியா காலங்காலமாக ரஷ்யாவின் பகுதியாகவே இருந்து வந்துள்ளதே தவிர ஒருபோதும் ஆக்கிரமிக்கப்பட்டதில்லை. ரஷ்யாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கும் வகையில் ஒரு வலதுசாரி ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் அமெரிக்காவும், ஜரோப்பிய ஒன்றியமும் உக்ரைனில் ஈடுபட்டு வந்த சமயத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி கிரிமியா நாட்டு மக்கள் மீண்டும் ரஷ்யாவோடு இணைந்து கொண்டனர்.

“ரஷ்ய மக்கள் பலவந்தமாக தங்களது பழைய ரஷ்யப் பேரரசை மீட்டெடுக்க விரும்புவதற்கும், அவர்களது வரலாற்றின் கருப்பு பக்கங்களில் உக்ரைன் போர் இடம்பெறுவதற்கும் ரஷ்ய மக்களே பொறுப்பாவார்கள்” என்று மிகவும் தவறான வரலாற்றை ஒலெக்சாண்ட்ரா தனது பேச்சின் மூலம் சித்தரிக்க முயன்றார்.

உக்ரைனில் ஏற்பட்ட வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பின் விளைவாகவும், நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையில் அத்துமீறியதனால் ரஷ்யா எதிர்கொண்ட நியாயமான தேசப் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே தனது சிறப்பு இராணுவத் தாக்குதலை தொடுத்ததே ஒழிய, அவர்கள் சொல்வது போல் ரஷ்யப் பேரரசை மீட்டுருவாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

உக்ரேனிய ராணுவத்தின் இனச் சுத்திரிப்பு தாக்குதல்கள் மூலம் 14,000 மக்களை கொண்று குவித்துள்ளது. ரஷ்யா கிழக்கு உக்ரேனிய பகுதியில் வாழும் மக்களை பாதுகாப்பதற்காக உண்மையான மனிதநேய உணர்வுடன் உதவிகள் செய்து வருவதை ஒலெக்சாண்ட்ரா மூடிமறைத்து பேசியுள்ளார்.

ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருடன் நார்வே நாட்டு பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர்(இடது புறம்) என்பவருடன் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசியபோது. இந்த நபரிடம் தான் ஒலெக்சாண்ட்ரா கூடுதல் ஆயுதங்கள் வழங்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

“உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் மக்களை விட உக்ரைனியர்கள் உடனடியாக அமைதியை வேண்டி நிற்கிறார்கள். தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு நாடு ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைவதன் மூலம் அமைதியை அடைய இயலாது. இது ஒரு போதும் அமைதியல்ல, ஆக்கிரமிப்பே ஆகும். புச்சா நகரம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, பெரும் எண்ணிக்கையிலன சாமானியர்கள் தெருக்களிலும், அவர்களது வீட்டின் வாசற்பகுதியிலும் படுகொலை செய்யப்பட்டு சடலாமாக கிடந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் எந்தவொரு ஆயுதமும் காணப்படவில்லை. தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் எல்லாம் “அரசியல் சமரசங்கள்” என்ற பெயரில் நாடகமாடுவதை நாம் கட்டாயமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். சர்வாதிகார அரசுகளுக்கு சலுகைகள் வழங்கியே பழகிவிட்ட உலக ஜனநாயக அரசுகளின் எணிணிக்கை தற்பொழுது அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாகவே உக்ரைனிய மக்கள் ரஷ்ய ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அணிதிரள வேண்டியது மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதியில் வாழும் மக்கள் துன்புறுத்தப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. “அரசியல் சமரசங்களுக்காக மக்களின் உயிர்கள் காவுகொடுக்கப்படக் கூடாது. ஆக்கிரமிப்பாளனின் அடாவடித்தனத்திற்கு அடங்கிப்போவது ஒரு போதும் அமைதியை காப்பது ஆகாது; மாறாக மக்களின் உயிரையும் உடைமையைம் இரத்தவெறி பிடித்த தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதே அமைதியை கட்டிக்காப்பதற்கான வழியாகும்.” என்று தனது உரையில் இறுதியில் ஒலெக்சாண்ட்ரா பேசி முடித்தார்.

வெளிநாட்டுச் சதிகாரர்களின் துணையுடன் உக்ரைனில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு கூடுதலான தன்னாட்சி உரிமை கோரி வாக்களித்த கிழக்கு உக்ரைனிய மக்கள் மீது 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் போதும், ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு அமைந்த பொம்மை அரசாங்கம் கொடூரமான மொழிச் சட்டங்களை திணித்ததைத் தொடர்ந்து போரைத் தொடங்கிய தனது நாட்டின் பக்கம் நின்றுகொண்டு தவறேதுமில்லையென நியாயப்படுத்திப் பேசுவதற்கு பெரிதும் கவனிக்கத்தக்க உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் மேடையக் கூட ஒருவரால் பயன்படுத்த முடியும் என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய நிகழ்வாகவே இருக்கிறது.

ரஷ்யாவுடனான பெரும் போரையே தடுக்கவல்ல மின்ஸ்க் ஒப்பந்தத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற நோக்கமே உக்ரைன் நாட்டிற்கு இருக்கவில்லை என்று அதன் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதற்கு மாற்றாக ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்கு ஏற்ப தனது நிலையை பலப்படுத்திக் கொண்டு அமெரிக்காவிடமிருந்து அதிக ஆயுதங்களுடன் இன்னப் பிற உதவிகளையும் சேர்த்துப் பெறுவதற்கும், இராணுவ பலத்தை பெருக்கிக் கொள்வதற்கும் கூடுதலான கால அவகாசம் கிடைக்கச் செய்யும் வகையில் மோதலைத் தள்ளிப்போதுவதற்கான செயல்தந்திரமாகவே உக்ரைன் அரசு மின்ஸ்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதே உண்மை.

ரஷ்ய படைகள் புச்சா நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அங்கிருந்த சாமானிய மக்களை உக்ரைனிய,இராணுவமே படுகொலை செய்துள்ளது என்பது தீவிர விசாரனைக்கு பிறகு தெரிய வந்துள்ளது. ஆனால் அந்நகரில் உள்ள அனைத்து மக்களையும் ரஷ்யாவே கொன்று குவித்தது என்பது போல தவறான தகவல்களை  ஒலெக்சாண்ட்ரா பரப்பி வருகிறார்.

“ஈரானிய மக்கள் சுதந்திரத்திற்காக தெருவில் இறங்கி போராடுவதையும்”, “டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கு” எதிராக சீன மக்கள் போராடுவதையும் தனது உரையின் இறுதியல் வெகுவாக பாராட்டிப் பேசியதைப் பார்க்கும் போது அவரது உண்மையான அரசியல் கொள்கை என்னவென்பது தெளிவாக தெரிகிறது. தங்களது சொந்த நாட்டையே அமெரிக்காவிற்கு காட்டி கொடுக்கும் போராட்டக்காரர்களின் வீரசாகசத்தை புகழ்ந்து பாடும் உரைநிரல் முதல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவால் குறிவைக்கப்படும் சுதந்திராமன நாடுகளில் மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடும் தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிநிரல் வரையிலான அனைத்து வேலைத்திட்டங்களையும் ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை(NED) என்ற அமைப்பே வகுத்துத் தருகிறது.

ஒபாமாவின் மறுபக்கங்கள்-2009

முதன்முதலாக 2009 ஆம் ஆண்டு போர் வெறியன் பராக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற போது போரை ஊக்குவிப்பதற்கான மேடையாக அவ்விழாவை பயன்படுத்தினார். அதை அடியொட்டியே ஒலெக்சாண்ட்ராவும் தற்போது பயன்படுத்தி பேசியுள்ளார்.

ஏதோ தாங்கொணாத் துயரத்தை தாங்கிக்கொண்டுதான் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா யுத்தங்களை தொடுத்தது என்பது போல அமைதிக்கான நோபல் பரிசை பெற்றபோது நிகழ்த்திய உரையில் போரை நியாயப்படுத்தி பேசியிருந்தார்.

“நாம் வாழுங்காலங்களில் நம்மால் போரை ஒழிக்க முடியாது என்ற கசப்பான உண்மையை நாம் அவசியம் ஒப்புக் கொள்ளத் துவங்க வேண்டும். தனியாகவோ அல்லது நாடுகள் கூட்டாக சேர்ந்தோ அவசியத்தின் காரணமாக மட்டுமல்லாமல் நியாய தர்மத்தின் அடிப்படையிலும் வன்முறை வழியில் செல்ல வேண்டிய தருணங்களும் வரவே செய்கிறது” என்று கூறினார்.

ஒபாமா மேலும் கூறியதாவது:

‘வன்முறை நிச்சயமாக நிலையான அமைதியை தராது. அது எந்த சமூகப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. அது மென்மேலும் புதிய புதிய சிக்கலான பிரச்சினைகளையே உருவாக்கிக் கொண்டிருக்கும்’ என்று இதே போன்றதொரு நோபல் பரிசு பெறும் விழாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு மார்ட்டின் லூதர் கிங் கூறியதை கருத்தில் கொண்டு தான் நான் இவ்வாறு கூறினேன் என்றார்.

அகிம்சையின் ஆன்ம சக்திக்கு என் வாழ்வே நிகழ்கால சான்றாகும். மார்ட்டின் லூதர் கிங் தன் வாழ்நாள் முழுக்க யாருடைய நலனுக்காக உழைத்தாரோ அதன் விளைபயனாகவே  நான் இப்போது இம்மேடையில் நிற்கிறேன். காந்தி, லூதர் கிங் போன்றோர்களின் சிந்தையிலும் வாழ்விலும் பலமின்மையோ, செயலின்மையோ, பேதைமையோ எப்போதும் இருந்ததில்லை என்பது எனக்கு தெரியும். எனினும் என் நாட்டை பேணிப் துகாப்பேன் என்று கூறி அதிபராக பொறுப்பேற்றுள்ள காரணத்தால், அவர்கள் சென்ற பாதையை மட்டுமே வழிகாட்டுதல்களாக எடுத்துக் கொண்டு செயல்பட முடியாது. இவ்வுலகம் என்னிடம் கோரியதை மட்டுமே நான் செய்கிறேன். மேலும் அமெரிக்க மக்களுக்கு தீங்கு நேர்வதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க முடியாது. நம்மை அழிக்க நினைப்பவர்களும் இவ்வுலகத்தில் தான் இருக்கிறார்கள் என்ற சொல்வது மிகையாகாது. ஹிட்லரின் படையெடுப்பை ஓர் அகிம்சை வழி போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தடுத்த நிறுத்தியிருக்க முடியாது. அல்கய்தா அமைப்பின் தலைவர்களை சரணடையச் செயவ்தற்கு பேச்சுவார்த்தைகள் நிச்சயமாக உதவியிருக்காது. சில வேளைகளில் வன்முறை அவசியமானது என்று சொல்வது அழிவுப் பாதைக்கு அறைகூவல் விடுவதல்ல. மாறாக வரலாறு உணர்த்தும் பாடத்தையும், குறைகள் நிறைந்த மனிதர்களின் இயல்பையும் அங்கீகரித்து ஏற்க முயலுவதாகும்.

ஒரு போர் பிரச்சார அமைப்பிற்கு பரிசளித்து பாராட்டு வழங்குவதன் மூலம் மூன்றாம் உலகப் போர் வெடிப்பதற்கும் வழிவகுக்கலாம்

தாங்கொணாத் துயரத்தை தாங்கிக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மீது ஆக்கிரமிப்பு போர்களிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபட்ட அமெரிக்காவை நியாயப்படுத்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றபோது நிகழ்த்திய உரையில் தான் ஒரு போர் வெறியன் என்றும், கொடூரமான கொலைகாரன் என்று அவரே ஒப்புக்கொள்ளும் வகையில் பராக் ஒபாமாவின் பேச்சு அமைந்திருந்தது.

மெய்யாகவே அமைதி வேண்டி போராடுபவர்களுக்கு என்றும் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து கௌரவிக்கப்படுவதில்லை. ஆனால் மூன்றாம் உலகப் போரை துவக்க துடிக்கும் அமைப்பிற்கு அப்பரிசை கொடுத்து கௌரவிப்பதன் மூலம் உண்மையில் அபாயச் சங்கையே ஊதுகிறார்கள்.

2014-ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணையுடன் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு தொடங்கிய போரிலிருந்து அங்கு நடக்கும் பெரும்பான்மையான மனித உரிமை குற்றங்களுக்கு உக்ரைன் நாடே பொறுப்பாகும். இருப்பினும், சிவில் உரிமைகளுக்கான மையம்(CCL) 2014 முதல், தற்போது டான்பாஸ் மாகாணத்திலும் கூட ரஷ்யாவின் போர்க் குற்றங்களை ஆவணங்களாக புனைவதையே தனது வேலைதிட்டத்தின் மிக முக்கிய இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. 

கடந்த எட்டு ஆண்டுகளாகவே குடியிருப்புப் பகுதிகளை குண்டு வைத்து தகர்ப்பதும், குண்டு மழைகள் பொழிவதன் மூலம் நாசம் செய்வதோடு சிறைபிடித்தவர்களை சித்திரவதைக்கும், வல்லுறவுக்கும் உட்படுத்துவதே எங்கு காணினும் நடந்தது என்று கிழக்கு உக்ரைன் மாகாணத்தை சேர்ந்த நகரவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ரஷ்யப் படைகளால் பெண்கள் கடத்தப்பட்டு, ரஷ்யாவில் பரத்தையர்களாக மாற்றப்பட்ட கதைகள் பற்றியும், உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் பற்றியும் - நடந்ததா நடக்கவில்லையா என்பதை ஆராயாமால் – இதுபோன்றவற்றின் மீது அனைவரின் கவனத்தை திசைத்திருப்புவதற்கே பெருமுயற்சி எடுக்கிறதே ஒழிய அம்மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை கண்டுகொள்வதில்லை.

இந்த CCL அமைப்பு ஒரு படி மேலே சென்று ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் அரசியல் ரீதியிலான சித்திரவதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் சர்வதேச அளவில் ஒரு பிரச்சார இயக்கத்தையும் தொடங்கியுள்ளது. ஆனால் அவர்கள் சொல்வது போல கிரிமியா “ஆக்கிரிமிக்கப்படவில்லை”. ஒரு பொதுஜென வாக்கெடுப்பு மூலம் கிரிமியா மக்கள் ரஷ்யாவுடன் மீண்டும் இணைந்து கொண்டனர் என்பதே உண்மையாகும்.

பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக இனக்கலவரங்களை தூண்டுவது, ரஷ்யாவை சிர்குலைக்க முயலும் அயல்நாட்டுச் சதிகாரர்களுக்கு நீண்ட காலங்களாக துணைபோனது, மட்டுமல்லாது இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் நாஜிக்களுடன கூட்டு சேர்ந்தது என கிரிமிய நாட்டு தாதார்களின் சிவில் உரிமைகளுக்காக பாடுபட்டோம் என்பதையே CCL அமைப்பு தங்களது சாதனையாக அறிவித்துக் கொள்கிறது.

ரஷ்யாவின் போர்க் குற்றங்களை கள ஆய்வு செய்வதற்காக மஞ்சள் நிற அரை மேற்சட்டை அணிந்துள்ள CCL அமைப்பு ஊழியர்கள்.

முஸ்தபா டிஜெமிலேவ் என்பவர் தாதார் மக்களின் உரிமைக்கு போராடுபவராக அறியப்படுகிறார். இவர் மார்ச் 2014-ல் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்துக் கொண்ட போது நேட்டோ தலைநகரான பிரசல்ஸ் நகருக்கே பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கிரிமியாவை மீண்டும் உக்ரைன் நாட்டிடமே ஒப்படைக்கும் வகையில் ஐ.நா இராணுவ ரீதியில் உதவி புரிய வேண்டும் என்று போர்க் கொடித் தூக்கியுள்ளார். ஜனநாயகத்துக்கு இவர் ஆற்றிய இந்த சேவைக்குத்தான் NED அமைப்பு 2018-ம் ஆண்டு பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும், இவர் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என மிகத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.

“திகில் தீபகற்பம்: கிரிமியா ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள் பற்றிய சரித்திரத் தொகுப்பு” என்று தலைப்பிட்ட ஆய்வறிக்கையின் இணை ஆசிரியராக ஒலெக்சாண்ட்ரா இருந்துள்ளார். கிரிமியா மக்களின் விருப்பத்திற்கு மாறாக மீண்டும் உக்ரைனுடன் இணைத்துக் கொள்ளும் முயற்சிக்கு மக்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் ஒரு பக்க சார்பான இந்த பிரச்சார சிற்றேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற பெலாரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்க்கும் NED அமைப்புடன் தொடர்புள்ளது

ஒலெக்காண்ட்ராவுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துக்கொண்ட பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி என்பவரையும் தேர்வு செய்துள்ளதை பார்க்கும் போது சென்ற ஆண்டிற்கான(2022) நோபல் பரிசு வழங்கும் விழாவின் அரசியல் சார்புத் தன்மை வெளிப்படையாக தெரிகிறது. 

ஜனநாயகத்திற்காக சேவையாற்றியதை பாராட்டும் வகையில் முஸ்தபா டிஜிமிலேவ் என்பவருக்கு NED அமைப்பின் இயக்குநரான கார்ல் கெர்ஷ்மேன் பதக்கம் வழங்குகிறார்.

மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட தனியார்மயமாக்கலையும், அதிர்ச்சி வைத்திய(shock treatment) திட்டங்களையும் ஏற்க மறுத்ததோடு, உறுதியான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை தக்கவைத்ததன் மூலம் 1990களில் தனது நாட்டை காப்பாற்றிய அலெக்சாண்டர் லுகாஷென்கோ என்ற பெலாரஷ்ய நாட்டு சோசலிச தலைவரின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக NED அமைப்பின் துணையுடன் நடந்த எழுச்சியும், நிறப் புரட்சியும் 2020-21ல் தோல்வியடைந்தது. இந்த சதித்திட்டத்தில் பங்கேற்ற பியலியாட்ஸ்கி என்பவர் தற்போது “பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவித்த கும்பலுக்கு நிதியுதவி” செய்ததற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு வலுவான ஐக்கிய முன்னணியை கட்டியமைக்கு வகையில் பிராந்திய அளவிலான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு மாற்றாக அந்தந்த நாடுகளின் செலாவணியில் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக யூரேசிய (ஐரோப்பா – ஆசிய) நாடுகள் ஒன்று சேர்ந்து யூரேசிய பொருளாதார ஒன்றியத்தை புதின் உருவாக்கினர். இதை பலப்படுத்துவதற்கான புதினின் முயற்சிகளுக்கு துணை நின்றதோடு மிக நெருங்கிய கூட்டாளியாகவும் லுகாஷென்கோ இருந்து வருகிறார்.

பியாலியாட்ஸ்கிக்கு பதிலாக அமைதிக்கான நோபல் பரிசை அவரது மனைவி நடாலியா பிஞ்சுக் பெற்றுகொண்டார். சர்வாதிகார பொம்மை அரசை நடத்தி வருவதாக லுகாஷென்கோ மீது போலியான குற்றச்சாட்டை சுமத்துவதற்கு விழாமேடையை நாடாலியா பயன்படுத்திக்கொண்டார். பெலாரஷ்யாவைப் போன்று உக்ரைனையும் ஒரு சர்வாதிகார பொம்மை அரசாக மாற்ற வேண்டும் என்பதே புதினின் விருப்பம் என்று சாடினார். “எறிகுண்டுகள், மின் அதிர்வு தாக்கிகள்(Stun guns), தொடர் கைதுகள், சித்திரவதைகள் எனத் தொண்டு நிறுவனங்களை எதிர்கொள்வதற்கு வன்முறையை மட்டுமே ஒரே வழிமுறையாக தெரிவு செய்த” லுகாஷென்கோவை கண்டித்து உரையாற்றினார்.

ரஷ்யாவை சீர்குலைப்பதற்கான தாக்குதல் தளமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமெரிக்க-நேட்டோ நாடுகளின் இன்னொரு பொம்மை அரசாக பெலாரஷ் நாட்டை மாற்றுவதோடு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் சோசலிசக் கொள்கையை ஒழிப்பதையே முதன்மையான நோக்கமாக கொண்ட வெளிநாட்டுச் சதிகாரர்களின் துணையுடன் தூண்டிவிடப்பட்ட கலகத்தை வன்முறை வழியில் எதிர்கொள்ளும் லுகாஷென்கோவைப் பார்த்து நடாலியா மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்களும் கூட இப்படித்தான் பேசுவார்கள். இப்படிப்பட்டவர்களை எதிர்கொள்வதற்கு வன்முறையை நாடுவதில் என்ன தவறு இருந்துவிடப்போகிறது.

2014-ல் NED அமைப்பின் ஆய்வு மன்றத்தில் முக்கிய உறுப்பினராக பியாலியாட்ஸ்கி இருந்தபோது, நீண்ட காலத்திற்கு NED அமைப்பின் இயக்குநராகவும், நவீன பழைமைவாதக் கருத்தியலைக் கொண்ட கார்ல் கெர்ஷ்மேன் என்பவரின் கருத்தை ஆதரித்தும் பேசியிருந்தார்.

லுகாஷென்கோ ஆட்சியில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதையும், ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களுக்கு துணை நிற்பதையும் நோக்கமாக கொண்டு பியாலியாட்ஸ்கி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘வியாஸ்னா’ அமைப்பிற்கு NED அமைப்பே நிதியுதவி செய்கிறது என்பதற்கு இவர்களின் கடந்தகால தொடர்பே சான்றாக அமைகிறது.

அரசியல் நோக்கங்களுக்காக லுகாஷென்கோ ஆட்சியில் நடக்கும் அடக்குமுறைகளை ஆவணப்படுத்துவதிலும், மனித உரிமை விவகாரங்களில் தனிக் கவனம் செலுத்தும் தொண்டு நிறுவனங்கள் உட்பட பெலாரஷ் நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு 2.5 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக நிதியுதவியை 2021 ஆம் ஆண்டில் NED அமைப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் விளாதிமிர் புதின் ஆகிய இருவரின் ஆட்சியை கவிழ்ப்பதில் குறியாக இருக்கும் அமெரிக்கா.

தேசிய ஊடகங்களிலும், சர்வதேசிய ஊடகங்களிலும் லுகாஷென்கோவை கொடுங்கோலனாக சித்தரிக்க முயலுவதன் மூலம் ஐரோப்பியாவில் கடைசியாக நீடிக்கும் ஓர் உண்மையான சோசலிச அரசை கவிழ்ப்பதற்கு மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு பியாலியாட்ஸ்கியின் அமைப்பும் அதையொத்த வகையறாக்களும் உதவி வருகிறார்கள். இதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவை செய்கிறார்கள்.

மனித உரிமை அமைப்பிற்கும் NED அமைப்புடன் தொடர்பு உள்ளது

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட மனித உரிமைகள் அமைப்பான மெமோரியில் சென்ற ஆண்டு(2022) அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளது. ஜோசப் ஸ்டாலின் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவையும், அரசியல் கைதிகளை வதைப்பதற்கு வடிவமைக்கப்ட்டிருந்த சிறை முகாம்களால்(Gulags) பாதிக்கப்பட்டவர்களின் நினைவையும் உயர்த்திப் பிடிப்பது, ரஷ்யாவில் நடந்த மனித உரிமை மீறல்களையும், அரசியல் அடக்குமுறைகளையும் ஆவணங்களாக புனைவது உள்ளிட்ட பணிகளை இந்த மெமோரியல் தொண்டு நிறுவனம் செய்து வந்தது. இதன் இயக்குநர் ஆர்சனி நோகின்ஸ்கி என்பவருக்கு NED அமைப்பு 2004ஆம் ஆண்டில் ஜனநாயகத்திற்கு சேவையாற்றியதாக பாராட்டி பதக்கம் அளித்துள்ளது.

1980களில் பெரஸ்ட்ரோயிகா(கட்டமைப்பு மாற்றம்) கொள்கை அமல்படுத்தப்பட்டு வந்த காலத்தில் சோவியத் யூனியனை எதிர்த்து வந்த ஆண்ட்ரி சகாரோவ் என்பவரால் மெமோரியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. NED அமைப்பிடமிருந்து நிதியுதவி பெற்றிருப்பதை 2004-ல் மெமோரியல் அமைப்பிற்கு வழங்கப்பட்ட பதக்கம் அம்பலப்படுத்துகிறது. இவ்வமைப்பிற்கு மட்டுமல்லாது போரிஸ் யெல்ட்ஸின் ஆட்சி காலத்தில் மேற்கத்திய அரசுகள் ரஷ்யாவிடமிருந்து கிடைத்தவற்றையெல்லாம் பறித்திக்கொண்டு சூறையாடிச் சென்றனர்; அதன் பிறகு ரஷ்யாவின் தேசியப் பொருளாதாரத்தை மீண்டெழச் செய்வதற்கு துணை நின்ற புதினை வீழ்த்துவதையும், சோவியத் ஆட்சி முறை மீது அவதூறு பரப்புவதையுமே தங்களது வேலைத்திட்டமாக வைத்துள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் NED அமைப்பு நிதிகளை வாரி வழங்கியுள்ளது.

2014-ஆம் ஆண்டு Forum 2000 என்ற தொண்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் NED அமைப்பின் நிறுவனரும், தலைவருமான கார்ல் கெர்ஷ்மென் (இடதுபுறம் கடைசியில்) அவர்களின் ஆய்வுக் குழுவில் அலெஸ் பியாலியாட்ஸ்கி (வலதுபுறம் கடைசியில்) பங்கேற்றுள்ளார்.

உண்மையில் சொல்லப்போனால் 2014-ஆம் ஆண்டில், மெமோரியல் அமைப்பு வெளிநாட்டு நிதியுதவி பெறுவது தொடர்பான சந்தேகம் வலுத்ததால், அவ்வமைப்பை வெளிநாட்டு ஏஜென்டுகள் பட்டியலில் சேர்த்து ரஷ்ய அரசாங்கம் தடை செய்தது.

போருக்கான’ நோபல் பரிசு என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்டால் என்ன?

கடந்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட பலரையும் பார்க்கும் போது அதன் மதிப்பின் மீது கறைபடிந்து விட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் சென்றாண்டு (2022) நோபல் பரிசு வழங்கும் விழா மேடையை ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தூண்டுவதற்கு பயன்படுத்தியதன் மூலம் மிக மோசமான அளவில் களங்கம் ஏற்பட்டுள்ளது.

இனிவருங்காலங்களில், அனைத்து வெளிவேஷங்களையும் கலைத்தெறிந்துவிட்டு, போருக்கான நோபல் பரிசு என்று பெயரை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் எமிலி கிரீன் பால்ச், லினஸ் பாலிங் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் போன்று உண்மையாக அமைதி வேண்டி போராடியவர்களுக்கே நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்வா சாவா என்ற மரண விளையாட்டில் எல்லோருக்கும் தோல்வியே என்ற போதும் வெளிநாட்டு எஜமானர்கள் வீசும் எலும்புத் துண்டை கவ்விக்கொண்டு அவர்களக்கு கைப்பாவையாக இருந்து சேவையாற்றும் போர் பிரச்சார பீரங்கிகளுக்கும், தேச துரோகிகளுக்கும் தான் இன்று நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

(ஜெர்மி குஸ்மரோவ்)

- விஜயன்

(தமிழில்) 

மூலக்கட்டுரை : https://mronline.org/2022/12/27/nobel-peace-prize-winners-have-deep-cia-ties/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. கட்டுரையில் ரஷ்ய சார்பு நிலை இருந்தாலும்  செய்தி தகவல்களுக்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு