மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி-4

அ.கா. ஈஸ்வரன்

மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி-4

விஞ்ஞானக் கம்யூனிசம்

லெனின்:- “மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரக் கொள்கை ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது. ..தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது, முதலாளித்துவச் சமூகத்திற்குரிய சார்புக் கருத்துக்களினின்று தன்னை விடுவித்துக் கொண்டுவருகிறது, தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது, தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது, தன் சக்திகளை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது, தன் சக்திகளை எஃகுபோல் திடப்படுத்தி வருகிறது, தடை செய்ய முடியாதபடி வளர்ந்து வருகிறது.”

முந்தைய பகுதிகளை படிக்க

மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -3

110) கம்யூனிசம் என்றால் என்ன?

பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைமைகளைப் பற்றிய போதனையே கம்யூனிசம் என்று இதற்கு ஒரே வரியில் எங்கெல்ஸ் பதிலளித்துள்ளார். அந்தப் போதனையே விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகும்.

 

111) சமூகத்தில் காணப்படும் உழைப்பாளிகள் அனைவரையும் இந்தப் பாட்டாளி வர்க்கம் என்ற சொல் குறிக்கிறதா?

       இல்லை. இது தொழிற்சாலையில் உழைக்கிற உழைப்பாளிகளையே குறிக்கிறது. விவசாயிகள் முதற்கொண்டு மற்ற தொழிலாளர்களை உழைப்பாளிகள் என்றும் ஆலைத் தொழிலாளர்களைப் பாட்டாளிகள் என்று மார்க்சியம் பெயரிட்டு அழைக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து இந்தப் பாட்டாளி என்ற புதிய வர்க்கம் பிறந்தது.

 

112) கம்யூனிசம் என்பது பாட்டாளி வாக்கத்தின் விடுதலைக்கான போதனை என்றால் மற்ற தொழிலாளர்களின் விடுதலையில் அது அக்கறை செலுத்தவில்லையா?

       இதனை அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது. மற்ற சமூக அறிஞர்களைப் போல் மக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை என்று மார்க்சியம் கூறவில்லை. பாட்டாளிகளின் விடுதலை சமூக வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கிறது. இந்தப் பாட்டாளி வர்க்க விடுதலையைத் தொடர்ந்து மற்ற தொழிலாளர்களின் விடுதலையும் நடைபெறும். பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் விடுவித்துக் கொண்டு மற்றவர்களையும் விடுவிக்கிறது. முதலாளித்துவத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இந்தப் பாட்டாளி வர்க்கத்தின வாழ்வோடு தொடர்புடையதாக இருப்பதால் பாட்டாளிகளின் விடுதலை முதலில் இடம்பெறுகிறது. பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொண்டு மற்ற தொழிலாளர்களையும் படிப்படியாக விடுவிக்கிறது. இதனையே விஞ்ஞானக் கம்யூனிசம் சுட்டிக்காட்டுகிறது.

 

113) விஞ்ஞானக் கம்யூனிசம் என்றால் என்ன?

இதற்கு முன்பு கற்பனாவாத சோஷலிசத்தை அறிந்த கொள்வது நல்லது.

 

114) கற்பனாவாத சோஷலிசத்தைப் பற்றிக் கூறுங்கள்?

ஆதிபொதுவுடைமை சமூகம் சிதைந்தது முதலே சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வை போக்குவதற்குப் பல்வேறு வழிகளில் பல அறிஞர்கள் முயற்சித்தனர். அம் முயற்சிகள் ஏதும் பயனற்று போனதற்குக் காரணம் இருக்கிறது. அவர்கள் ஏற்றத் தாழ்விற்கான காரணம் புறநிலையில் இருப்பதை அறிந்திடாமல் மனிதனது மனங்களிலேயே தேடிக் கொண்டிருந்தனர். இந்த மனங்களினால் தோற்றுவிக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்த முடியாமல் போயிற்று. அதனால் தான் இதற்குக் கற்பனாவாத சோஷலிசம் என்று பெயர் பெற்றது. இறுதியில் மூன்று மேதைகள் கற்பனாவாதிகளாகத் தோன்றினர்.

 

115) கற்பனாவாதத்தில் மேதைகளா? யார் அந்த மூன்று மேதைகள்?

சான் சிமோன், ஃபூரியே, ஓவன் ஆகியோர் ஆவர். முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றுவரும் நாட்டில் இம்மூவரும் தோன்றினர். இவர்கள் தமது கருத்துக்களை வழங்கிய காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான பகைமை அரைகுறை வளர்ச்சியில் இருந்தது. அப்போதே அவர்கள் முதலாளித்துவ அமைப்பில் காணப்படும் சிக்கல்களைப் புரிந்து கொண்டனர். முதலாளித்துவச் சமூக அமைப்பு முறையைக் கண்டித்தனர், அதன் மறைவைப் பற்றிக் கனவு கண்டனர், அதற்கு மாற்றாகப் புதிய ஒரு சமூக அமைப்பை வடிவமைத்துக் கொண்டனர். சுரண்டல் என்பது அநியாயமானது என்பதை ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் புரிய வைத்தால் போதும் சமூகத்தில் அமைதியும் நல்வாழ்வும் கிட்டும் என்று அவர்கள் நம்பினர். இருந்தாலும் இவர்களின் கருத்தில், விஞ்ஞானச் சோஷலிசத்தின் வேர்கள் கருக்கொண்டிருந்ததால் இவர்கள் மாமேதைகள் என்று அழைக்கப்பட்டனர்.

 

116) அப்படியா? கற்பனாவாதிகளிடம் விஞ்ஞானச் சோஷலிசத்தின் வேர்களா?

ஆமாம். சான்சிமோன் அரசியல், பொருளுற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என்று பறைசாற்றுகிறார், அரசியல் முழு அளவுக்குப் பொருளாதாரத்தால் உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறியிருக்கிறார். பொருளாதார நிலைமைகள் அரசியல் நிறுவனங்களுக்கான அடிப்படையாகும் என்ற அறிவு, அதாவது பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களை நிர்ணயிக்கிறது என்பதை இங்குக் கருவடிவில் காணமுடிகிறது. அதே போல் ஃபூரியே நாகரீக கட்டத்தில் மிகையாகக் குவிந்துகிடக்கும் வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது என்று கூறியுள்ளார். இது போன்ற கருத்துக்கள் விஞ்ஞானச் சோஷலிச சித்தாந்தவாதிகளான மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் எங்கெல்ஸ் இவர்களைப் பற்றிக் கூறும்போது எச்சரித்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அது என்னவென்றால், இந்த முன்னோடிகள் கற்பனாவாதி என்ற காரணத்தை வெளிப்படுத்தி நிராகரிக்க முடியாது, ஆனால் அவர்கள் செய்த தவறுகளை மறுபடியும் செய்வதையாவது நாம் குறைந்தபட்சமாகத் தவிர்க்க முடியும், அப்படிப்பட்ட தவறுகளை நாம் செய்வது மன்னிக்க முடியாததாகும் என்றார்.

 

117) கற்பனாவாதிகளைப் பற்றிய மார்க்சிய விமர்சனத்தைச் சற்று விரிவாகக் கூறுங்கள்?

முதலாளித்துவம் ஒரளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், மார்க்சும் எங்கெல்சும் தமது விஞ்ஞானக் கருத்துக்களை உருவாக்கினர். கற்பனாவாத சோஷலிசத்தில் உள்ள குறைபாடாக, மூலதனத்தின் ஆதிக்கம், சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை அறிந்து கொள்ளாமை என்று கருதினர். முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர். சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் புதையுண்டு, இன்னும் மறைந்தே கிடந்தது. இந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் தமது மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்.

 

118) மார்க்சின் விஞ்ஞானச் சோஷலிசம் எப்படிப்பட்டது?

மார்க்சிய விஞ்ஞானச் சோஷலிசம் என்பது வரலாற்று வழியில் வளர்ச்சியுற்ற முதலாளிக்கும், பாட்டாளிக்கும் இடையே நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இருந்து தோன்றிய அவசியமான விளைவே தவிர எந்த மேதாவிகளின் மூளையில் உதித்த கருத்தல்ல. கற்பனாவாதிகளைப் போல் சமூக விடுதலைக்கான கருத்தை மூளையில் இருந்தோ, வெற்றுத் தத்துவத்தில் இருந்தோ மார்க்சியம் உருவாக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியின் தொடர்ச்சியில் ஏற்படும் முற்றிய முரணே தவிர்க்க முடியாத வகையில் சோஷலிச சமூகம் ஏற்படுகிறது என்று மார்க்ஸ் கண்டறிந்தார்.

 

119) முதலாளித்துவச் சமூகம் எவ்வாறு மறையும்?

முன்பே சொன்னது போல் சமூக வளர்ச்சியின் விதிகள், மக்களின் வழியே செயற்படுகிறது. புரட்சி ஏற்படுவதற்கான சமூக வளர்ச்சி புறக்காரணமாகும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்சியும், மக்களும் அகக்காரணமாகும். புறமும் அகமும் இணையும் போது சமூக மாற்றம் நடைபெறுகிறது. புரட்சி ஏற்படுத்துவதற்குப் புறச்சூழ்நிலை காரணம் மட்டுமே, அதுவே புரட்சியை முடித்துவிடுவதில்லை, புரட்சி என்னும் காரியத்தை நடத்தி முடிப்பதற்குத் தலைமை அவசியம், அந்தத் தலைமை கம்யூனிஸ்ட் கட்சி என்னும் முன்னணிப் படையாகும்.

 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண்பாடு, வளர்ச்சிக் கட்டத்தில் முற்றி நெருக்கடிக்கு உள்ளாகிறது, இந்த நெருக்கடி புரட்சிக்கான புறநிலைமைகளாகும், இதனை உணர்ந்து தொழிலாளர்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடிக்கு உள்ளான அனைத்து உழைக்கும் மக்களையும் இணைத்து, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதன் மூலம் முதலாளித்துவச் சமூகம் மறையும், இது அகநிலைகளாகும்.

 

சமூக மாற்றம் இவ்வகையான புறநிலை விதிகளால் ஏற்படுவதன் காரணமாகவே தவிர்க்க முடியாதவகையில்” என்ற வார்த்தையை மார்க்சியம் பயன்படுத்துகிறது..

 

120) கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?

ஆம். இது சரியான கேள்வி. கம்யூனிஸ்ட் கட்சியை, கம்யூனிஸ்டுகளும் தொழிலாளர்களும் இவர்களின் தலைவர்களும் நடத்து கின்றனர். இந்தக் கம்யூனிஸ்டுகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவைப் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்?

 

இதனைப் பற்றிக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” தெளிவாகவே சொல்லியிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு மாறாக ஒரு தனிக் கட்சியாகக் செயற்படவில்லை. ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிரக் கம்யூனிஸ்டுகளுக்கு வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.

 

121) அப்படி என்றால் தொழிலாளர்களே கட்சியை நடத்திக் கொள்ளலாமே கம்யூனிஸ்டுகள் எதற்கு?

இதற்கும் “அறிக்கை பதில் அளிக்கிறது. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்: (1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசிய போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர். (2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர். எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.

 

கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவையே ஆகும்.

 

122) அரசியல் அதிகாரத்தை எவ்வாறு வென்றெடுப்பது?

கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதிகுறிக்கோள் (strategy) சோஷலிச சமூகத்தை அமைப்பதேயாகும். அதனை நோக்கி பயணிப்பதற்குச் செயற்தந்திரத்தை (tactic) அமைத்துக் கொள்கிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் அதற்கான செயற்பாட்டை அமைத்துக் கொள்கிறது.

 

123) அப்படி என்றால் உடனே பாட்டாளிகள் அதிகாரத்தைக் கையிலெடுக்க முடியாதா?

மார்க்சியம் சமூக வளர்ச்சியின் நியதியைப் பற்றிப் பேசுகிறது என்பதை வரலாற்றியல் பொருள்முதல்வாத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள். அதுபடி, சமூகம் அதற்கான வளர்ச்சி அடைவதற்கு முன்பே, சோஷலிச அரசை அமைக்க முடியாது.

 

124) இன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை அமைக்க முடியாதா?

முடியும் அதற்கான சூழ்நிலையைப் பற்றி லெனினும், மாசேதுங்கும் கூறியிருக்கின்றனர். புதிய ஜனநாயகப் புரட்சி அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி. இந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை முழுமையாக நடத்தி முடிக்க, முதலாளித்துவம் தயங்கும் போது அல்லது இயலாத போது தவிர்க்க முடியாமல் பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்று அதனை நடத்த வேண்டி வருகிறது. அப்போது பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது.

 

125) இந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்துவது முதலாளிக்குத் தானே நன்மை அதற்கு ஏன் பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்கவேண்டும்?

முதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, மிகவும் உறுதியாகத் துடைத்தெறிந்து விட்டு, முதலாளித்துவத்தின் மிகவும் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்கிற புரட்சி ஆகும். எனவே, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி பாட்டாளி வார்க்கத்துக்கு மிக உயர்ந்த அளவிலே அனுகூலமானதாகும். பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு முதலாளித்துவப் புரட்சி முற்றிலும் அவசியமாகும். எவ்வளவுக்கு எவ்வளவு முழுமையானதாகவும் உறுதியானதாகவும் முரணற்றதாகவும் முதலாளித்துவப் புரட்சி இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும், சோஷலிசத்துக்காகவும் நடத்துகிற போராட்டம் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கும். அதனால் தான் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை விரைவில் கடந்துசெல்ல பாட்டாளி வர்க்கம் விரும்புகிறது.

 

126) இது ஒருவகைச் சீர்திருத்த போராட்டம் தானே?

       ஆம். நீங்கள் குறிப்பிடுவது போல் ஒருவகைச் சீர்திருத்தமே. பாட்டாளி வர்க்கம் துணை சக்தியோடு ஆட்சியைப் பிடித்துச் சமூகத்தை விரைவுபடுத்துவதால், இதனைச் சீர்திருத்தவழி என்று கூறாமல் புரட்சிகரவழி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜனநாகப் புரட்சி, முதலாளித்துவ வர்க்கத்தைப் போல் தாமதப்படுத்தாமல், தள்ளிப்போடாமல் அதாவது நிதானப்படுத்தாமல் புரட்சிகர அரசின் மூலம் விரைவுபடுத்துவதால் இதனைப் புரட்சிகரவழி என்று அழைக்கப்படுகிறது.

 

127) இந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியைச் சீர்திருத்தத்திற்கு அப்பாற்பாட்டு, புரட்சிகர வழியில் நிகழ்த்துவதற்கு உரிய திறம் பெற்றதாகக் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும் அப்படித்தானே?

ஒர் அரசை அமைப்பதற்கான கட்சி என்பது கண்டிப்பாகத் திறம் பெற்றதாகவே இருக்க வேண்டும். புரட்சிகரமான கோட்பாடில்லாமல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறுவார். தொழிலாளர்களின் கட்சிக்கு மார்க்சியமே புரட்சிகரக் கோட்பாட்டை அமைக்க உதவிடுகிறது.

 

முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற கட்சி, சில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளைத் தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. சித்தாந்த தெளிவும், பாட்டாளி வர்க்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டியதின் அவசியத்தையே இந்நிகழ்வுகள் உணர்த்துகிறது. மார்க்சியத்தில் உறுதியாய் ஊன்றி நிற்கின்ற கட்சியே வெற்றியை எட்டும்.

 

128) வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து மற்ற போராட்டத்தைக் கம்யூனிசம் இரண்டாம் நிலைக்கு அல்லது பின்னுக்குத் தள்ளுகிறது என்பது உண்மையா?

       மற்ற போராட்டங்களைக் கம்யூனிசம் பின்னுக்குத் தள்ளுகிறது என்ற வார்த்தையே தவறானது. பிற போராட்டங்களை வர்க்கப் போராட்டத்திற்கு உள்ளடங்கி நடத்துகிறது என்பது தான் சரியானது. தேசிய இனப்பிரச்சினை முன்னுக்கு வரும் போது தேசியஇன விடுதலைக்குக் கம்யூனிசம் முதன்மை இடத்தையே தருகிறது.

 

129) அப்படி என்றால் வர்க்கப் போராட்டத்துக்கு அப்பாற்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு முதன்மை இடம் கம்யூனிசம் தருகிறதா?

       அப்படியில்லை. தேசிய இனப்பிரச்சினை எழுந்துள்ள இடத்தில், பிரச்சினைக்குரிய இரண்டு இனங்களில் உள்ள உழைப்பாளர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவது சாத்தியம் அற்றது. ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதே இங்கே முதலும் முதன்மையானதுமான அரசியல் பிரச்சினையாகிறது. இச்சூழ்நிலையில் ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனம், தமது தேசியத்தின் சுயநிர்ண உரிமை நிலைநிறுத்தும் வகையில் பிரிந்து செல்வதைக் கம்யூனிசம் ஏற்கிறது. இந்தப் பிரிவினை என்பது வர்க்க போராட்டத்திற்கு அப்பாற்பட்டதாகக் கம்யூனிசம் கருதவில்லை. பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் உள்ளடங்கிய வகையில்தான் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையைக் கம்யூனிசம் அங்கீகரிக்கிறது. சோஷலிச அரசு வந்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தட்டையாகக் கம்யூனிசம் பேசவில்லை. முதலாளித்துவ ஜனநாயகத்திற்குள் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளைச் சோஷலிச அரசு ஏற்படும்வரை காத்திருக்கும்படி கம்யூனிசம் கூறவில்லை. ஆனால் சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைவாதமாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதைக் கம்யூனிசம் எச்சரிக்கிறது.

 

130) சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும் வேறுவேறா?

ஆம். கம்யூனிசம் பிரிவினையை எதிர்க்கிறது. முதலாளித்துவ தேசிய வெறி பலநேரங்களில் தேசத்தைத் துண்டாடும் நோக்கிலேயே செயல்படுகிறது. இதனையும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமான பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் ஒன்றெனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பிரிவினை வாதம் தேசத்தைத் துண்டாட வேண்டும் தனித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றுவது. பாட்டாளிகளின் சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு தேசங்களில் உள்ள தொழிலாளர்கள் எதிர்காலத்தில் நெருக்கமாக ஒன்றிணைத்து முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான வழியாகப் பிரிந்து செல்லுதலை ஆதரிக்கிறது.

 

131) பிரிவினைவாதத்தின் அடிப்படை என்ன?

யாருடனும் ஒன்றாத தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கேட்கப்படுகின்ற பிரிவை கம்யூனிசம் பிரிவினைவாதம் என்கிறது. பிரிவினைவாதிகள் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையைக் கோருகின்றனர், அதாவது இன வேறுபாட்டால் உருவான மனவேறுபாட்டை முன்னிறுத்து கின்றனர். க்கான ஒரு நாட்டை, அதாவது யாருடனும் நெருங்காத வகையில் தனித்திருக்க விரும்புதல். மற்றும் தனது மொழிக்கென ஒரு நாட்டைக் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருதலை மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது.

 

132) கம்யூனிசம் இன்றைக்குப் பழைமைப்பட்டு விட்டது, எல்லாக் காலத்திற்கும் சர்வரோக நிவாரணியாகக் கம்யூனிசம் செயற்பட முடியாது என்று விமர்சனம் வைக்கப்படுகிறதே?

       கம்யூனிசம் வறட்டுச் சூத்திரவாதம் அல்ல. எதிர்வரும் எல்லாப் புதுப்புது பிரச்சினைகளுக்கும் தீர்வை தயாராகக் கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை, மாறிக் கொண்டே இருக்கும் உலகின் நிலைமைகளைப் பார்த்து அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி செயற்படுவதற்குக் கம்யூனிசம் ஒரு வழிகாட்டி ஆகும். முதலாளித்துவச் சுரண்டலுக்கு முடிவு ஏற்படும்வரை கண்டிப்பாகக் கம்யூனிசம் தேவைப்படும். கம்யூனிசம் சரி என்பதை இன்றைய பொருளாதார நெருக்கடி உறுதிப்படுத்துகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு கம்யூனிசமே தீர்வாகும்.

 

133) இந்த விஞ்ஞானக் கம்யூனிசத்தை எவ்வாறு கற்பது?

எந்த ஒரு கோட்பாட்டையும் (theory) அதன் செய்முறையோடே கற்கவேண்டும். ஏன் என்றால் முந்தைய செயற்பாட்டின் அடிப்படையில் தான் அக் கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது. அதே போல் விஞ்ஞானக் கம்யூனிசத்தை நாம் காணும் சமூக நடைமுறையோடு இணைத்துக் கற்க வேண்டும். வெறும் ட்டறிவாகக் கற்கக்கூடாது. கம்யூனிசத்தைப் பற்றிய ஏட்டு அறிவை ஏற்றுக் கொள்வதுடன் நின்று விடுவது பெரும் தவறாகும் என்கிறார் லெனின். மேலும் கூறுகிறார், வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் கம்யூனிச நூல்களில் இருந்து பெறப்பட்ட ஏட்டறிவு சிறிதும் பயனற்றதாகும். அதேபோல் கம்யூனிச போதனைக்குக் கம்யூனிச நூல்கள் மட்டும் போதுமானது என்று நினைப்பதும் தவறானதாகும். மனிதகுலம் படைத்தளித்து இருக்கும் அறிவுக் கருவூலங்கள்  யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று, உங்கள்  சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட்டாக முடியும் என்று லெனின் வலியுறுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

       கோட்பாடற்ற நடைமுறையும், நடைமுறையற்ற கோட்பாடும் விஞ்ஞானத் தன்மையற்றது.

 

134) கோட்பாடு - நடைமுறை இதில் எது முக்கியமானது?

       இரண்டும் இணைந்தது என்ற வகையில் இருண்டும் முக்கியமானதே. உலகத் தொழிலாளி வர்க்க இயக்கங்களினுடைய அனுபவங்களின் பொதுமைபடுத்தலே கோட்பாடாகும். ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார், புரட்சிகர நடைமுறையுடன் இணைக்கப்பட்டவில்லை என்றால் கோட்பாடு இலக்கற்றதாகி விடும், அதேபோல் புரட்சிகரக் கோட்பாட்டினால் ஒளியூட்டப்பட்டவில்லை என்றால் நடைமுறையானது இருளில் தடுமாறிவிடும், இது உறுதி.

 

135) விஞ்ஞானக் கம்யூனிசத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய நூல்கள் யாவை?

       எங்கெல்ஸ் எழுதிய நூல், கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானச் சோஷலிசமும். லெனின் எழுதிய நூல் கிராமப்புற ஏழைகளுக்கு. ஸ்டாலின் எழுதிய நூல் லெனினியத்தின் அடிப்படைக்கோட்பாடுகள். மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மார்க்சியத்தை அறிவதற்கு உதவிடும் தொடக்க நூல்கள்

 

மார்க்ஸ் எங்கெல்ஸ்:-

1. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - எங்கெல்ஸ் (பாரதி புத்தகாலயம்)

2. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - மார்க்ஸ் - எங்கெல்ஸ் (என்.சி.பி.எச்)

3. கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானச் சோஷலிசமும் - எங்கெல்ஸ் (பாரதி புத்தகாலயம்)

4. லுத்விக் ஃபாயர்பாகும் சென்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் - எங்கெல்ஸ்

5. காரல் மார்க்ஸ் – எங்கெல்ஸ்

6. அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு- முன்னுரை - மார்க்ஸ்(என்.சி.பி.எச்)

7. காரல் மார்க்ஸ் "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு" - எங்கெல்ஸ்

8. கூலியுழைப்பும் மூலதனமும் - மார்க்ஸ் (பாரதி புத்தகாலயம்)

9. கூலி விலை லாபம் – மார்க்ஸ் (பாரதி புத்தகாலயம்)

10. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்தரம் – எங்கெல்ஸ் (பாரதி புத்தகாலயம்)

 

லெனின்:-

1. மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (கீழைக்காற்று வெளியீட்டகம்)

2. மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம் (அலைகள் வெளியீட்டகம்)

3. பிரெடெரிக் எங்கெல்ஸ் (கீழைக்காற்று வெளியீட்டகம்)

4. வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம். (கீழைக்காற்று வெளியீட்டகம்)

5, மார்க்சியமும் திருத்தல்வாதமும்

6. மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்

7. நமது வேலைத்திட்டம்

8. எங்கிருந்து தொடங்குவது?

9. அரசு (கீழைக்காற்று வெளியீட்டகம்)

10. ருஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தேசியஇனச் செயல்திட்டம்

11. தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்.

12.சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்

13.சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு

14.சோஷலிசமும் மதமும் (அலைகள் வெளியீட்டகம்)

15.மதத்தைப் பற்றித் தொழிலாளர்க கட்சியின் அணுகுமுறை (அலைகள் வெளியீட்டகம்)

 

ஸ்டாலின்:-

1. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் (கீழைக்காற்று வெளியீட்டகம்)

2. லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் (கீழைக்காற்று வெளியீட்டகம்)

3. அராஜகவாதமா? சோசலிசமா? (கீழைக்காற்று வெளியீட்டகம்)

 

மா.சே.துங்:-

1, முரண்பாடு பற்றி (கீழைக்காற்று வெளியீட்டகம்)

2, நடைமுறை பற்றி

3, மக்கள் மத்தியில் முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி

4, மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன?

 

பிற நூல்கள்:-

1. மார்க்சிய மெய்ஞ்ஞானம்- ஜார்ஜ் பொலிட்சர் (என்.சி.பி.எச்)

2. முரண்தர்க்கப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஓ.யாக்கோத் (என்.சி.கி.எச்)

3. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வி.கெல்லி, எம்.கவல்ஸோன் (என்.சி.பி.எச்)

4. இயக்கவியல் பொருள்முதல்வாதம் – மாரீஸ்கான்போத் (பாரதி புத்தகாலயம்)

5. இந்தியத் தத்துவமரபும் மார்க்சிய இயக்கவியலும்- நா.வானமாமலை

(அலைகள் வெளியீட்டகம்)

6. மார்க்சிய சமூகவியல் கொள்கை- நா.வானமாமலை (அலைகள் வெளியீட்டகம்)

7. மதத்தைப் பற்றி மார்க்சியம் (செந்தழல் வெளியீட்டகம்)

- அ.கா. ஈஸ்வரன்

முற்றும்...

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரை தோழர். அ.கா.ஈஸ்வரன் எழுதிய ’மார்க்சியம் என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. மார்க்சியத்தின் ஆரம்ப அடிப்படை கல்விக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் கேள்வி பதில் வடிவில் மிக எளிமையாக கொடுத்துள்ளார். இது ஆரம்பநிலை மார்க்சியம் பயில்வோருக்கு மிகவும் பயனளிக்கும் என்ற விதத்தில் இந்த தளத்தில் வெளியிடுகிறோம்.
 
– செந்தளம் செய்திப் பிரிவு