எஸ்.ஐ தம்பதியினர் காப்பாற்றப்படுவதின் பின்னணி என்ன?
அறம் இணைய இதழ்

சாதிமயமாக செயல்படும் காவல்துறை, சாதியைச் சார்ந்த ஓட்டு அரசியல், துணிச்சல் இல்லாத ஆட்சியாளர்கள், ஊனப்பட்டுள்ள அரசு நிர்வாகம் ஆகிய சேர்க்கைகள் எப்படி இந்த சாதி ஆதிக்கப் படுகொலைகள் தொடர்வதற்கும், நீதி கிடைக்காமல் போவதற்கு பின்னணியில் இயங்குகின்றன என்பதை பார்க்க வேண்டும்;
அறிவியல் தளத்தில் உயர்ந்தோங்கிய போதிலும், மானுட சமூகத்தின் மனம் பக்குபவப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தமிழ்நாட்டில் அதிகாரபூர்வமாக பதிவாகியுள்ள ஆணவக் கொலைகள் 45. ஆண்டுதோறும் இப்படி அடுகொலைகள் நடக்கும் போது நாம் அதிர்கிறோம். ஆனால், ஏன் தடுக்க முடியவில்லை?
”ராமானுஜர், வள்ளலார், பாரதியார், பெரியார், அண்ணா பிறந்த மண்” என்கிறோம், ”காந்தியம் தழைத்தோங்கிய பூமி” என்கிறோம். வார்த்தைக்கு வார்த்தை ஆட்சியாளர்கள், ”இது சமூக நீதி ஆட்சி” என்கிறார்கள்.
திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளி சுஜித் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரது தந்தை சரவணக்குமார் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகிய இரண்டு உதவி காவல் ஆய்வாளர்களின் பெயர்கள குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும், வழக்கு தொடர்பாக மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் பாதிக்கப்பட்ட தரப்பை தற்காலிகமாக சமாதானப்படுத்துவது என்ற தந்திரோபாயம் மட்டும் தானா?
காவல்துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தம்பதிகளுக்கு ஆணவப் படுகொலைக்கு என்ன வழக்கு பதியப்படும், என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தெரியாதா? தெரிந்தும் செய்ய முடிகிறது என்றால், எப்படி தப்பித்துக் கொள்வது என்பதையும் அவர்களுக்கு அவர்கள் காவல் பணி அனுபவங்களே வழிகாட்டி இருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாமா?
”நெல்லையில் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில் 52 படுகொலைகள் அரங்கேறி உள்ளன. அவற்றில் மூன்று கொலைகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனைகள் பெற்றுள்ளனர்…’’ என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன்.
இந்த ஆணவப் படுகொலை சம்பவத்திற்கு கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர்த்து எந்த பெரிய அரசியல் கட்சி தலைமையும் கண்டணம் தெரிவிக்கவில்லை.
பெரியார், அண்ணா வழி அரசியலில் வந்த திமுக தலைவர்கள் பதறி துடித்திருக்க வேண்டாமா? அதிமுக தலைவர்கள் அலறி ஓடி ஆறுதல் கூறி இருக்க வேண்டாமா? மதிமுக தலைவர்கள் மனம் உருகி, மருகி இருக்க வேண்டாமா? காந்தி, காமராஜ் வழி வந்த காங்கிரஸ் கதறி நீதி கேட்க வேண்டாமா? (பாஜகவை இந்த விவகாரத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் சிந்தாந்தத்தை கொண்டவர்கள் அவர்கள்)
இந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டும் தான் களத்தில் நிற்கிறார்கள்.
மேற்படி கட்சியின் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் எல்லோருமே நெல்லையில் தேவர் சமூகத்தவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சமூகத்தின் சாதி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தன் கட்சிக்கு பெற்றுத் தருவதற்கு இந்த அநீதியை தட்டிக் கேட்பது ஆபத்தாக போய்விடும் என நினைக்கிறார்கள். அந்தக் கட்சிகளின் தலைமைகளும் எந்த நோக்கத்திற்காக அவர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டதோ, அதற்கான நியாயத்தில் நாமும் இருந்து கொள்வோம் என கணக்கு போடுகிறார்கள். இப்படி சிந்திப்பதே பிழையல்லவா?
திராவிட அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பிற்கு வருபவர்களிடம், ”சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பாரபட்சமின்றி, பொதுச் சமூகத்தின் நலன்களுக்கு செயல்படுவேன்” என உறுதி மொழி வாங்கித் தான் பதவிகளையே தர வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்கக் கூடாதா?
தேவர் சமூகத்திலும் மனிதாபிமானமுள்ளவர்கள், நியாயஸ்தர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக எந்த சாதியில் உள்ள மக்களும் படுகொலையை ஆதரிக்கமாட்டார்கள். அரசியல் சட்டத்தின்படி ஆட்சி செய்யத்தானே பதவி ஏற்பில் உறுதி மொழி எடுக்கிறீர்கள். அதை செய்ய வேண்டாமா? சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு என்று காவல்துறையில் ‘கண்காணிப்பு கமிட்டி’ மாவட்டம் தோறும் உள்ளது. அவை செயல்படாமல் முடங்கி கிடப்பது ஏன்?
அவ்வளவு ஏன்? தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டது? அதன் பொறுப்பில் பதவி பெற்று லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்கள் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை நடத்தி இருக்க வேண்டாமா? அவர்களின் கால்களைக் கட்டிப் போட்டிருப்பவர்கள் யார்?
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் அரங்கேறி நான்கு நாட்களாகிறது.
இன்னும், இந்த ஆணவக் கொலைக்கு காரணமான எஸ்.ஐ தம்பதியான சரவணனையும், கிருஷ்ணகுமாரியையும் விசாராணை வளையத்திற்குள் கூட கொண்டு வரவில்லை.
அவர்கள் தலைமறைவாகிவிட்டார்களாம். அப்படி தலைமறைவாவதே குற்றத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதற்கான முகாந்திரமாய் விடுகிறதே!
கொலை சம்பவம் நடந்த 20 நிமிஷத்தில் ஸ்பாட்டிற்கு வந்த கொலையாளி சுஜித்தின் தாயையும், தகப்பனையும் காவல் துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கத் தவறியதா? அல்லது ‘தப்பித்துக் கொள்ளச் சொல்லி அனுப்பி வைத்ததா?’ என்ற மக்கள் சந்தேகத்திற்கு பதில் வேண்டும். எந்த பதில் வந்தாலும், இதுவே ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.
கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி காதலித்துள்ளது பெண்ணின் பெற்றொர்களுக்கு தெரியும். இருவருமே 26 வயது கடந்து கொண்டிருக்கும் நிலையிலும் அவசரப்படாமல், ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும் வரை கண்ணியமாக பொறுத்திருத்திருந்ததையும் அறிவார்கள். அந்த நம்பிக்கையில் தான், ”அப்பாவும், அம்மாவும் உன்னோடு பேச வேண்டும்” என சுஜித் கூறியவுடன் கவின் உடன் செல்லக் காரணமானது.
தங்களோடு 25 ஆண்டுகளாக உடன் பணியாற்றியவர்களின் நடமாட்டம், தொடர்புகள் எல்லாமே காவல் துறைக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தின் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வராமலே இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என லோக்கல் காவல்துறை நம்புகிறதா?
அப்படி நம்பி செயல்படுவதும் குற்றவாளிகளை காப்பாற்றும் குற்றத்தில் வருமே. முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்த எஸ்.ஐ தம்பதிகளை பாதுகாக்கும் காவல்துறையினர் மீது தான்.
ஏனென்றால், அந்தப் பெண் கவின் யாரென்றெ தனக்கு தெரியாது எனக் கூறியதாக காவல் துறையினர் செய்தியை கசியவிட்டனர்.
”எஸ்.ஐ தம்பதியினரை கைது செய்தால் தான் மகனின் உடலை பெறுவோம்” என்று கொலையான கவினின் பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய போது, ’’24 மணி நேரத்தில் கைது செய்துவிடுவோம்’’ என என்ற உறுதிமொழியை இரண்டு நாட்கள் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது போராடும் மக்களிடமே, ”எஸ். ஐ தம்பதியினர் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான எவிடென்ஸ்சை காட்டுங்க, கைது செய்கிறோம்” என காவல்துறை வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறது.
அவங்க இரண்டு பேரையும் விசாரணை வளையத்திக்ற்குள் கொண்டு வந்தால், அந்த எவிடென்ஸ் உங்களுக்கு கிடைத்துவிடும். அவர்களை மறைத்து வைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடமே பந்தை தள்ளி விடுகிறது, காவல்துறை. இது சாமார்த்தியம் என அவர்கள் கருதலாம். ஆனால், இது சதிக்கு உடந்தை என்பதாகவே புரிந்து கொள்ளப்படும்.
”ஆணவப் படுகொலைக்கு மாவட்ட எஸ்.பியை பொறுப்பாக்கி சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
”ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும்” எனச் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தது திமுக அரசு. இந்த நான்கு ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகள், சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அந்த சட்டத்தைக் கொண்டு வரவில்லை ஸ்டாலின்.
சமூக நிதி என்பது வெற்று ஆரவாரப் பேச்சுக்கானதல்ல. உண்மையிலேயே அதை உளமாற விரும்பிய உன்னத தலைவர்கள் பெரியார், அண்ணா வழி வந்த கட்சி தான் திமுக. எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக இந்த ஆட்சியின் சமூக நீதிப் பார்வையை வெளிப்படுத்தி அறிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். அதுவே நெல்லை காவல்துறையை நேரிய வழியில் செயலாற்ற நிர்பந்தம் தந்திருக்கும்.
ஒரு ஆணவப் படுகொலையை கண்டித்து பேசி, ‘நேர்மையாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்’ என உத்திரவாதத்தை வழங்க முடியாமல் இன்னும் ஊமையாய் இருப்பது சமூக நீதி பேசும் திராவிட மாடல் முதல்வருக்கு அழகல்ல. அவமானமாகும்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட அமைச்சர் ஆகியோர் ஆணவப் படுகொலைக்கு ஆளான குடும்பத்தை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.
இன்னும் நான்கு நாட்களாகியும் இந்த விவகாரத்தில் எஸ்.ஐ தம்பதியினரை காவல்துறை காப்பாற்றி வருவதற்கு அந்த துறைக்கு தலைமை தங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும்.
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/22306/nellai-kavin-kolai-dmk-govt/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு