பிரிட்டன் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவைத் திறந்துவிடும் மோடி அரசு!

வினவு இணைய தளம்

பிரிட்டன் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவைத் திறந்துவிடும் மோடி அரசு!

பி.சி.ஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா “இந்திய சட்ட சந்தையை பிரிட்டனுக்குத் திறக்க பி.சி.ஐ திறந்த மனதுடன் வந்துள்ளது” என்று லண்டனில் மோடி அரசின் சார்பாகப் பேசியுள்ளார்.

பிரிட்டன் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்திய சட்ட சந்தையில் நுழைவதற்கான அனுமதியை பாசிச மோடி அரசு வழங்கவுள்ளது. அனுமதி வழங்குவதற்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) இம்மாத (ஜூலை மாத) இறுதிக்குள் அறிவிக்க உள்ளது. இந்த முடிவானது இந்தியாவின் சட்டத் துறை தாராளமயமாக்கப்படுவதை அறிவிக்கிறது.

ஜூன் 27 அன்று லண்டனில் உள்ள லா சொசைட்டி ஹாலில் (Law Society’s Hall), “லா சொசைட்டி” (Law Society) மற்றும் “இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பார் கவுன்சில்” (Bar Council of England and Wales) ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும், இந்திய பார் கவுன்சிலின் (பி.சி.ஐ – BCI) பிரதிநிதிகளுக்கும் இடையிலான கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்திய சட்டத் துறையை தாராளமயமாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் பி.சி.ஐ-ஆல் வெளியிடப்பட்ட “இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான இந்திய பார் கவுன்சில் விதிகள், 2022” (Bar Council of India Rules for Registration and Regulation of Foreign Lawyers and Foreign Law Firms in India, 2022) என்ற அறிவிப்பு தாராளமயமாக்கல் செயல்முறையின் துவக்கத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பு, வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு சட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கு இந்தியாவில் அலுவலகங்களை அமைக்க அனுமதி அளித்தது. இருப்பினும், இந்திய சட்ட நிறுவனங்களின் சங்கம் (Society of Indian Law Firms – SILF) ஆட்சேபனை தெரிவித்ததாலும், லா சொசைட்டி மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பார் கவுன்சில் கூடுதல் சலுகைகளைக் கோரியதாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த சட்ட விதிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டதாலும் இவ்விதிகள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.

“லண்டனை தலைமையிடமாகக் கொண்ட (பிரிட்டன் அல்லாத மற்ற நாடுகளைச் சேர்ந்த) சர்வதேச சட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்துவிடுமோ என்று பி.சி.ஐ கவலை கொள்கிறது. இப்போது, பி.சி.ஐ இந்திய சந்தையை பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே திறக்க விரும்புகிறது; பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அல்ல. பிரிட்டன் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ‘ஃப்ளை-இன், ஃப்ளை-அவுட்’ (fly-in, fly-out) அடிப்படையில் மட்டுமே செயல்பட முடியும்” என்று பி.சி.ஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா (Manan Kumar Mishra) கூறினார். (ஃப்ளை-இன், ஃப்ளை-அவுட் என்பது தற்காலிகமாக வந்துவிட்டுச் செல்வதாகும்).

மார்ச் 2023 அன்று இந்திய பார் கவுன்சிலால் வெளியிடப்பட்ட விதிகளில் பல்வேறு தளர்வுகளை அளிக்க பி.சி.ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

“வெளிநாட்டு சட்ட நிறுவனங்களில் பணிபுரியும் அல்லது பங்குகளை வைத்திருக்கும் இந்திய வழக்கறிஞர்கள் வழக்கு அல்லாத விஷயங்களில் (non-litigious matters) மட்டுமே வாதாட முடியும்; இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளின் சட்டங்கள் குறித்து ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்” என்று பி.சி.ஐ விதிகளில் உள்ளது. இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு லா சொசைட்டியின் சர்வதேச தலைவரான (Law Society’s Head of International) மைக்கேல் லாரன்ஸ் (Mickael Laurans) கேட்டுக்கொண்டார். இந்திய பார் கவுன்சில் இதை அங்கீகரித்து சட்ட விதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளது.

“வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை வழங்க நாங்கள் ஏன் இந்தியாவில் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்? இந்திய வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்க வேண்டும்” என்று லா சொசைட்டி கேட்டுக் கொண்டது. இதற்கும் இந்திய பார் கவுன்சில் ஒப்புக் கொண்டது.

முன்னதாக வெளியிடப்பட்ட விதிகளின்படி, ‘ஃப்ளை-இன், ஃப்ளை-அவுட்’ முறைப்படி 60 நாட்கள் மட்டுமே தொடர்ந்து இந்தியாவுக்குள் இருக்க சட்ட விதிகள் அனுமதி அளித்திருந்தது. அதை 90 நாட்களாக உயர்த்த பி.சி.ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

அதேபோல், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்ய சட்ட விதிகளில் அதிகமாக விதிக்கப்பட்ட கட்டணத்தையும் குறைப்பதாக பி.சி.ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

“சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (எஃப்.டி.ஏ) ஏற்றாற்போல் எங்கள் விதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்வோம். உங்கள் ஒத்துழைப்புடன், ஜூலை மாத இறுதிக்குள் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்” என்று பி.சி.ஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா உறுதியளித்துள்ளார்.

“இந்திய பார் கவுன்சிலுடன் நாங்கள் மிகவும் பயனுள்ள விவாதத்தை நடத்தினோம். இந்த ஆண்டு அக்டோபரில் எனது அடுத்த பயணத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பார் கவுன்சில் தலைவர் சாம் டவுன்என்ட் கே.சி. (Sam Townend KC) கூறியுள்ளார்.

இவர்கள் இப்படி கொஞ்சிக் குலாவுவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஒருபுறம் பாசிச மோடி அரசு ‘காலனி நீக்கம்’ என்ற மோசடியின் பெயரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால், பி.சி.ஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களோ “இந்திய சட்ட சந்தையை பிரிட்டனுக்குத் திறக்க பி.சி.ஐ திறந்த மனதுடன் வந்துள்ளது” என்று லண்டனில் மோடி அரசின் சார்பாகப் பேசியுள்ளார்.

ஏகாதிபத்திய நாடுகளுக்கு இந்தியாவை முழுவதுமாக திறந்துவிடும் வேலையை மிகத் தீவிரமாகச் செய்து வருகிறது பாசிச மோடி அரசு. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்திய சட்டத் துறை என்ற சேவைத் துறையின் சந்தையை பிரிட்டன் நாட்டிற்குத் திறந்துவிடுவதற்கான செயல்தான் இது. இந்திய பார் கவுன்சிலும் பெயரளவிற்கான எதிர்ப்பைக் கூட வெளிப்படுத்தாமல் மோடி அரசு கூறியதை அச்சு பிசகாமல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஒருபுறம், இந்த நடவடிக்கையானது பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தும். மற்றொருபுறம், எளிய சமூகப் பின்னணியில் இருந்து வரும் இந்திய வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கும்.

எனவே, சட்டத் துறை தாராளமயமாக்கப்படுவதற்கு எதிராக நாம் உடனடியாகப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்கள் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகத் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களோடு ஒருங்கிணைந்து நடத்தப்பட வேண்டும்.

(பொம்மி)

- வினவு இணைய தளம்

https://www.vinavu.com/2024/07/02/india-to-open-up-legal-market-to-uk-lawyers-and-firms/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு