வேங்கைவயல்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனம்
வினவு தளம்

சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.
வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், தலித் இளைஞர்களே குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அயோக்கியத்தனமாகத் தெரிவித்துள்ளது. தாங்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் தலித் மக்களே மலம் கலப்பார்களா என தமிழ்நாடு மக்கள் இதனைக் காறி உமிழ்ந்து வருகின்றனர்.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி கொடூரம் அரங்கேறி இரண்டாண்டுகள் ஆகியும், வழக்கை விசாரித்துவரும் தமிழ்நாடு அரசின் சி.பி-சி.ஐ.டி. போலீசு தற்போதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. வழக்கு விசாரணை நடந்துவரும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.சி-எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் பலமுறை அவகாசம் கோரி இழுத்தடித்து வந்தது. கடந்த 23 ஜனவரி அன்று கூட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டுமென சி.பி-சி.ஐ.டி. போலீசு கோரியதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, இரண்டாண்டுகளாகக் குற்றப்பத்திரிகையைக் கூட தாக்கல் செய்யாத தமிழ்நாடு அரசின் சி.பி-சி.ஐ.டி. போலீசிடமிருந்து இவ்வழக்கை ஒன்றிய அரசின் சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று (ஜனவரி 24 அன்று) அவ்வழக்கு விசாரணைக்கு ஆஜரான தமிழ்நாடு அரசு, கடந்த ஜனவரி 20 அன்றே மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி-சி.ஐ.டி. போலீசு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், வேங்கைவயலை சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று தலித் இளைஞர்கள்தான் குற்றவாளிகள் எனவும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்தரையர் சாதியைச் சார்ந்த ஊர்த் தலைவரையும் அவரது கணவர் முத்தையாவையும் பழிவாங்குவதற்காக முரளிராஜா குடிநீரில் நாற்றம் அடிப்பதாகப் பொய்யான செய்தியைப் பரப்பி வந்ததாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் இருவரும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாகவும் தெரிவித்துள்ளது. சி.பி-சி.ஐ.டி. போலீசின் இந்த கேடுகெட்ட வாதத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்படியே வாந்தி எடுத்த தமிழ்நாடு அரசு சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.
உண்மையில், வேங்கைவயல் தலித் மக்களைப் பழிவாங்குவதற்காக முத்தரையர் சாதியைச் சேர்ந்த முட்டுக்காடு ஊர்த்தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாதான் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் கள ஆய்வுகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆனால், குற்றப்பத்திரிகையில் சாதிவெறியன் முத்தையாவை பழிவாங்குவதற்காகத் தலித் இளைஞர்கள் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புனையப்பட்டிருப்பது அயோக்கியத்தனத்தின் உச்சமாகும்.
முத்தரையர் ஆதிக்கச் சாதி சங்கமும் சாதிவெறியன் முத்தையாவும் ஆர்.எஸ்.எஸ். உடன் நெருக்கமாக உள்ள காரணத்தால் ஆரம்பத்திலிருந்தே முத்தையாவை காப்பாற்றி தலித் மக்களைக் குற்றவாளிகளாக்க ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது ‘சமூகநீதி காவலனாம்’ தி.மு.க. அரசும் ஆர்.எஸ்.எஸ்-இன் அடியொற்றி சட்டப்பூர்வமாகவே முத்தையாவை காப்பாற்றி தலித் மக்களைக் குற்றவாளிகளாக்கியுள்ளது.
அதேபோல், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய இரு இளைஞர்கள்தான் 2022 டிசம்பர் 26 அன்று முதன்முதலில் நீர்த்தேக்கத் தொட்டியைச் சோதனையிட்டு அதில் மலம் கலக்கப்பட்டிருப்பதை வெளிக்கொண்டுவந்தனர். நீரில் திட்டுதிட்டாக மலம் மிதப்பதையும் காணொளியாகப் பதிவு செய்திருந்தனர். அப்போதே அந்த இளைஞர்கள் பதிவு செய்திருந்த காணொளியை, “தவறு செய்தவர்களின் காணொளி” என பா.ஜ.க-வின் ஐ.டி. விங் தலைவரான சி.டி.நிர்மல் குமார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததையடுத்து, சங்கிகள் கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கினர். சங்கி நிர்மல் குமாரின் வெறுப்பு-பொய் பிரச்சாரத்தைக் குற்றப்பத்திரிகை வரை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு போலீசு.
மற்றொரு இளைஞரான போலீசு கான்ஸ்டபிள் முரளிராஜாவையும் “வீடு தருகிறோம், பணம் தருகிறோம், குற்றவாளியாக ஒத்துக்கோ” என்று சி.பி-சி.ஐ.டி. போலீசு மிரட்டிவந்தது. அவரை ஆயுதப் படைக்கு மாற்றி வதைத்தது. இவையெல்லாம் ஏற்கெனவே அம்பலமாகியிருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக அவரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்த அப்பட்டமான சாதிய நடவடிக்கையை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, தமிழ்நாடு ஊடகங்கள் குற்றப்பத்திரிகையில் உள்ளதையே தமிழ்நாடு மக்களுக்கு ஒப்பித்துக் கொண்டிருக்கின்றன. பொது விவாதத்திலிருந்து இவ்விவகாரத்தைத் திட்டமிட்டு ஓரங்கட்டுகின்றன.
“நியூஸ் 18 தமிழ்நாடு” செய்தியோ ஒருபடி மேலே சென்று, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள தலித் இளைஞர்களின் புகைப்படங்களையும், அவர்கள் தங்களது தாய் மற்றும் அத்தையுடன் பேசிய வெட்டி ஒட்டப்பட்ட கேட்பொலியையும் (ஆடியோ) “பிரத்தியேக செய்தி” என்ற பெயரில் பகிர்ந்து, சாதிவெறியர்களுக்கு அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வின் ஐ.டி. விங்கை சேர்ந்த சமூக வலைத்தள பக்கங்களும் துளியும் வெட்கமின்றி அதனைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
2022-ஆம் ஆண்டு இறுதியில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பேசுபொருளானதிலிருந்தே பாதிக்கப்பட்ட தலித் மக்களைக் குற்றவாளிகளாக்கவே ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் முனைப்புக் காட்டி வந்தது. தலித் மக்களிடம் டி.என்.ஏ. சோதனை நடத்துவது; உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்திக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி கொடுமைப்படுத்தியது என பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. உண்மையில், மலம் கலந்த தண்ணீரைக் குடித்ததைக் காட்டிலும் இந்த சாதிய அரசு அம்மக்களுக்குச் செய்த கொடுமைகள் எந்த வகையிலும் குறைவானதல்ல.
“இந்த வழக்கில் போலீசு குற்றவாளியைக் கண்டுபிடித்தால் பிடிக்கட்டும். இல்லையென்றால் விட்டுவிடட்டும். எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். குற்றவாளிகளை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட எங்களையே தொடர்ந்து குற்றவாளிகளாக்கும் முயற்சிகளைச் செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் எங்களையே இம்சிக்கிறார்கள். இது எவ்வளவு கொடுமை… நாங்களே மலம் கழித்து, அதை நாங்களே எங்கள் குடிநீரில் அள்ளிப்போட்டு, அதையே நாங்கள் குடிப்போமா… இதை யோசிக்க மாட்டார்களா?” என்று பாதிக்கப்பட்ட தலித் மக்கள் கண்ணீர்விட்டு கைகூப்பிக் கெஞ்சும் அளவிற்கு அவர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
உண்மையில், பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக்கத்தான் தி.மு.க. அரசும் தமிழ்நாடு போலீசும் தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வந்தது. தற்போது வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வேறுவழியின்றி தாக்கல் செய்துள்ளது என்பதே உண்மையாகும்.
சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள். இதற்கு தி.மு.க. அரசு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இச்சமயத்தில், சி.பி-சி.ஐ.டி. போலீசின் குற்றப்பத்திரிகை மீது கண்டனம் தெரிவித்துள்ள வி.சி.க., சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் இவ்வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால், சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்றுவது எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தராது என்பதே அனுபவமாகும். சமீபத்தில் கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளிகளையும் மருத்துவ மாஃபியா கும்பலையும் பாதுகாக்கும் விதமாகவே சி.பி.ஐ. விசாரணை அமைந்தது அம்பலப்பட்டு நாறியுள்ளது. சொல்லப்போனால், ஆர்.எஸ்.எஸ். உடன் நெருக்கமாக உள்ள முத்தரையர் சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் தலித் மக்களைக் குற்றவாளிகளாக்குவதற்கும் சி.பி.ஐ. போலீசு இன்னும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதே உண்மை.
எனவே, வேங்கைவயல் மக்களுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது மட்டுமே பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும். உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரும் வழியும் அதுவேயாகும்.
(சோபியா)
- வினவு தளம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு