இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு
ராமச்சந்திர குஹா
உத்தர பிரதேசத்தின் சாரதா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் அறிவியல் ஆசிரியர், தேர்வுக்காக மாணவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்:
‘பாசிஸம்-நாசிஸத்துக்கும் வலதுசாரி இந்து அமைப்புகளின் சித்தாந்தங்களுக்கும் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா, அப்படியிருந்தால் அவற்றை உதாரணங்களுடன் விளக்கவும்!’
இதற்காக அந்த ஆசிரியர், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார். ‘சமூகங்களுக்கிடையே நல்லுறவைச் சிதைக்கும் வகையிலும் நம்முடைய மாபெரும் தேசத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தேர்வுகளில் வினாக்களைக் கேட்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது’ எனப் பல்கலைக்கழகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
காசோலாயின் இந்தியா:
மாணவர்களிடம் கேட்கக் கூடாது என்று சாரதா பல்கலைக்கழகத்தால் தடுக்கப்பட்ட அந்தக் கேள்விக்கு விடை காண்பதே இக்கட்டுரையின் முயற்சி. இந்தியாவைப் பற்றி ‘மார்சியா காசோலாய்’ (Marzia Casolari) எழுதிய வரலாற்றிலிருந்தும், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் 2000வது ஆண்டு பிரசுரமான அவருடைய ‘1930களில் இந்துத்துவத்துக்கிருந்த வெளிநாட்டுத் தொடர்பு’ என்கிற கட்டுரையிலிருந்தும், இருபதாண்டுகளுக்குப் பிறகு அவரே எழுதிய ‘இன் தி ஷேடோ ஆப் தி ஸ்வஸ்திகா: தி ரிலேஷன்ஷிப் பிட்வீன் ரேடிகல் நேஷனலிஸம் இத்தாலியன் பாசிஸம் அண்ட் நாசிஸம்’ (In the Shadow of the Swasthika: The Relationship between Radical Nationalism Italian Fascism and Nazism) என்கிற நூலிலிருந்தும் தரவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
டாக்டர் காசோலாயின் நூல் இத்தாலி, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆவணக் காப்பகங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளைத் தீவிரமாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. அத்துடன் பல மொழிகளில் இது தொடர்பாக வெளியான கட்டுரைகளும், தகவல்களும்கூட கையாளப்பட்டுள்ளன. 1920களிலும் 1930களிலும் மராட்டிய பத்திரிகைகள், இத்தாலியில் வளர்ந்து வந்த பாசிஸ இயக்கம் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் – பெரும்பாலும் விதந்தோதும் விதமாகவே – செய்திகளை வெளியிட்டன.
வேளாண்மையையே பெரிதும் நம்பியிருக்கும் இந்தியாவிலும் அப்படிப்பட்ட தேசிய உணர்வு தலைதூக்கினால், தொழில் துறை வல்லரசாக நாட்டை வளர்க்கவும், எதற்கெடுத்தாலும் வாதாடும் மக்களைக் கொண்ட இந்திய சமூகத்தில் ஒழுங்கைக் கொண்டுவரவும் முடியும் என்று மராட்டிய பத்திரிகையுலகம் அப்போது நினைத்தது.
முசோலினி குறித்தும் பாசிஸம் பற்றியும் மிகவும் புகழ்ந்து எழுதப்பட்ட பல கட்டுரைகளையும் தகவல்களையும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் தலைவர்களான கே.பி.ஹெட்கேவார், எம்.எஸ்.கோல்வால்கர் ஆகியோராலும் இந்து மகா சபையின் வி.டி.சாவர்க்கர், பி.எஸ்.மூஞ்சி ஆகியோராலும் வாசிக்கப்பட்டிருக்கும்.
அந்த நால்வருக்கும் மராத்திதான் தாய்மொழி. 1920-களின் பிற்பகுதியில் முசோலினிக்கும் பாசிஸ ஆட்சியாளர்களுக்கும் மகாராஷ்டிரத்தில் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர் என்கிறார் காசோலாய். இத்தாலிய சமூகம் குழப்ப நிலையிலிருந்து கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், ராணுவமயமானதும்தான் இந்து தேசியர்களை மிகவும் ஈர்த்திருக்கிறது என்றும் காசோலாய் குறிப்பிட்டுள்ளார்.
முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான பாசிஸ அமைப்புமுறையை, அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சிமுறைக்கு சரியான மாற்று ஜனநாயகமுறையாக அவர்கள் கருதியிருக்கின்றனர் என்கிறார்.
பாசிஸத்தின் குரல்:
வலதுசாரி இந்துத்துவக் கருத்துகளைப் பெரிதும் உருவாக்கிய டாக்டர் பி.எஸ்.மூஞ்சியை காசோலாய் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார். இத்தாலிக்கு 1931இல் சென்ற மூஞ்சி, பாசிஸ ஆட்சியமைப்பின் பல முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். முசோலினியின் சித்தாந்தமும் இளைஞர்களிடையே போர்க்குணத்தை வளர்க்கும் அவருடைய செயல்பாடுகளும் மூஞ்சியை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.
மூஞ்சி கேட்டுக்கொண்டதால், முசோலினியைச் சந்திக்க அவருக்கு அனுமதி தரப்பட்டது. பாசிஸ இளைஞர் இயக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று மூஞ்சியிடம் கேட்டார் முசோலினி. “மேதகு தலைவர் அவர்களே, என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. வளரும் – வளர வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்த அமைப்பு இருக்க வேண்டும். சுதேச ராணுவத்துக்குப் புத்துயிர் அளிக்க இந்தியாவுக்கு இது மிகவும் அவசியம்” என்று பதில் அளித்திருக்கிறார் மூஞ்சி.
இத்தாலியின் பாசிஸ சர்வாதிகாரியான முசோலினியைச் சந்தித்த பிறகு அவருடன் நிகழ்ந்த உரையாடல் குறித்து மூஞ்சி பேட்டியளித்திருக்கிறார். “திருவாளர் முசோலியுடனான என்னுடைய சந்திப்பு மறக்க முடியாதது, நல்ல விதமாக முடிந்தது. ஐரோப்பிய உலகத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் முசோலினியும் ஒருவர். நல்ல உயரம், அகலமான முகம், கீழ்த்தாடையில் இரட்டை நாடி, பரந்த மார்பு என்று நல்ல ஆகிருதி உள்ளவர். உறுதியான சிந்தனை மிக்கவர், வலிமையான ஆளுமை உள்ளவர் என்பதை அவருடைய உருவமே காட்டுகிறது, இத்தாலியர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நேரிலேயே பார்த்தேன்” என்கிறார் மூஞ்சி.
முசோலினியின் ஆளுமை, அவருடைய சித்தாந்தம் ஆகியவற்றால் மிகவும் கவரப்பட்ட மூஞ்சி, அமைதியும் சமரசமும் கூடவே கூடாது, உலகம் எப்போதும் போர் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற அவருடைய சித்தாந்தத்தையும் புகழ்கிறார். இத்தாலிய சர்வாதிகாரியின் சில பொன்மொழிகளையும் அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
“போர் மட்டுமே அதிகபட்ச பதற்றத்தை ஏற்படுத்தி மனிதர்களிடம் பொதிந்துள்ள ஆற்றலை முழுமையாக வெளிக்கொண்டுவருகிறது. அப்படிப்பட்ட போரை சந்திக்கும் தெம்பும் திராணியும் உள்ள தலைவர்களின் நெஞ்சுரத்தையும் நற்பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.”
“நிரந்தர அமைதி என்பது எப்போதும் சாத்தியமும் இல்லை, பயனுள்ளதுமில்லை என பாசிஸம் கருதுகிறது. போரே கூடாது என்கிற கொள்கையை பாசிஸம் நிராகரிக்கிறது, அப்படிப்பட்ட கொள்கை, போராடும் மனப் போக்கைத் துறப்பதால் ஏற்படுவது – கோழைத்தனமானது - தியாகம் செய்வதற்கு அஞ்சுவது என்றும் பாசிஸம் கூறுகிறது!"
ஹிட்லர் – முசோலினியைப் போல…:
ஆர்எஸ்எஸ் எனும் இயக்கத்தை அடுத்துத் தோற்றுவிக்கப்போகும் கே.பி.ஹெட்கேவாருக்கு குருவாக இருந்தவர் மூஞ்சி. நாகபுரி நகரில் படிக்க வந்த ஹெட்கேவார், மூஞ்சியின் இல்லத்திலேயே தங்கியிருந்தார். மருத்துவம் படிக்க அவரைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைத்தவரே மூஞ்சிதான்.
இத்தாலிக்குச் சென்று திரும்பிய பிறகு இந்து மகாசபையையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் நெருங்கிச் செயல்பட வைக்க மூஞ்சியும் ஹெட்கேவாரும் கடுமையாக உழைத்தனர். பாசிஸம் – முசோலினி குறித்து 1934இல் ஹெட்கேவார் தலைமையேற்று நடத்திய மாநாட்டின் முக்கிய பேச்சாளர் மூஞ்சி.
அதே ஆண்டின் மார்ச் மாதத்தில் மூஞ்சி, ஹெட்கேவார் மற்றும் அவருடைய சகாக்கள் நீண்ட ஆலோசனைக் கூட்டமொன்றில் பங்கேற்றனர். “இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் நாடு முழுக்க இந்துத்துவக் கொள்கைகளுக்கு சீரான வடிவம் கொடுக்க நான் ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருக்கிறேன். நாம் ஸ்வராஜ்யம் (விடுதலை) அடையாமல் இதைச் சாதிக்க முடியாது.
சத்ரபதி சிவாஜியைப் போலவோ இத்தாலியின் முசோலினி அல்லது ஜெர்மனியின் ஹிட்லரைப் போலவோ வலிமையான இந்து ஒருவர் தலைமைப் பதவிக்கு வந்தால்தான் இந்தச் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க முடியும். யாராவது ஒரு இந்து சர்வாதிகாரியாக வருவார் என்று அதுவரையில் நாம் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. அறிவியல் சார்ந்த திட்டமொன்றை வகுத்து நாம் அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.”
இத்தாலிய பாசிஸத்தை அடியொற்றி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கு நேரடியான இணைக் கருத்துகளை வடிவமைத்தார் மூஞ்சி. “பாசிஸத்தின் அடிநாதமே மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவது. இந்தியா, அதிலும் குறிப்பாக இந்துக்கள் அத்தகைய அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால்தான் இந்திய இந்துக்களிடையே ராணுவப் படையை மீட்டுருவாக்க முடியும். யாருடைய அமைப்பையும் அடியொற்றாமல், டாக்டர் ஹெட்கேவாரால் தன்னிச்சையாக நாகபுரியில் தொடங்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் அத்தகைய நோக்கம் கொண்டதுதான்!”
இத்தாலியைப் பின்பற்றும் ஆர்எஸ்எஸ்:
இத்தாலியில் பாசிஸ்ட்டுகள் இளம் சிறார்களைத் தங்களுடைய இயக்கத்துக்கு ஈர்க்கப் பயன்படுத்திய அதே வழிமுறையைத்தான் ஆர்எஸ்எஸ் கையாள்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் காசோலாய். ஆர்எஸ்எஸ் ஷாகாவில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவோர் 6-7 வயது முதல் 10 வயது வரை, 10 வயது முதல் 14 வயது வரை, 14 வயது முதல் 28 வயது வரை, 28 வயது முதல் மூத்தவர்கள் வரை என்று சேர்த்துக்கொள்ளப்பட்டு தனித்தனியாகப் பயிற்சி பெறுகின்றனர்.
பாசிஸ இளைஞர் அமைப்புகளின் அதிகாரப் படிநிலையும் அமைப்புமுறையும் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் அப்படியே பின்பற்றப்படுவது வியப்புக்குரியது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தோன்றிய சில காலத்துக்குப் பிறகே இந்த அமைப்புமுறை பாசிஸ இயக்கத்தைப் பார்த்து உருவாக்கப்பட்டது.
1933இல் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காவல் துறை அதிகாரியின் குறிப்பிலிருந்து கார்சோலாய் மேற்கோள் காட்டுகிறார்: ‘இத்தாலியில் பாசிஸ்டுகள் எப்படியோ, ஜெர்மனியில் நாஜிகள் எப்படியோ அப்படியே இந்தியாவுக்கு எதிர்காலத்தில் தங்களுடைய அமைப்பு இருக்க வேண்டும் என்று ஸ்வயம் சேவக் சங்கம் நம்புகிறது. சங்கம் என்பது முஸ்லிம்களுக்கு விரோதமான இயக்கம், இந்துக்களின் மேலாதிக்கத்தை நாட்டில் நிலைநாட்ட நினைப்பது!’
காசோலாயின் ஆய்வு, வி.டி.சாவர்க்கரின் உலகளாவிய பார்வை குறித்தும் பல தகவல்களைச் சொல்கிறது. 1938இல் சாவர்க்கரின் தலைமையில் இந்து மகாசபையானது நாஜி ஜெர்மனியின் வளர்ச்சி பற்றியே அதிகம் பேசியது. இந்தியாவின முஸ்லிம் பிரச்சினையைத் தீர்க்க ஜெர்மனியில் கடைப்பிடிக்கப்பட்ட இன எதிர்ப்புக் கொள்கைகளே சரியானவை என்று கருதப்பட்டன.
சாவர்க்கரின் கருத்துகளாக காசோலாய் மேற்கோள் காட்டுவதாவது: "நாஜியத்தைக் கடைப்பிடிக்க ஜெர்மனிக்கும் பாசிஸத்தைக் கடைப்பிடிக்க இத்தாலிக்கும் முழு உரிமை உண்டு. அந்த சித்தாந்தங்களும் அரசின் அமைப்புமுறையும் அந்த நாடுகளின் சூழலுக்கு, அவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. தேசியவாதம் என்பது பொதுவான புவியெல்லையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல; சிந்தனை, மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் ஏற்படும் ஐக்கியமே தேசியவாதத்துக்குப் பொருத்தமானவை. இந்தக் காரணங்களாலேயே ஜெர்மானியர்களையும் யூதர்களையும் தேசமாகக் கருதிவிட முடியாது."
"ஜெர்மனியில் ஜெர்மானியர்களின் இயக்கம் தேசிய இயக்கமாகும் யூதர்களின் செயல்பாடு மத அடிப்படையிலானது."
"ஒரு தேசம் என்பது பெரும்பான்மை மக்களை அடிப்படையாகக் கொண்ட வடிவத்தைப் பெறுகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன செய்கிறார்கள்? சிறுபான்மையினராக இருந்ததால் ஜெர்மனியை விட்டே அடித்துவிரட்டப்பட்டனர்."
"இந்திய முஸ்லிம்கள் தங்களை இந்தியாவுக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுடனேயே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள், அவர்களுடைய நலனுக்காகவே இந்தியாவில் குரல் கொடுக்கிறார்கள், பக்கத்திலேயே வாழும் இந்துக்களை அன்னியர்களாகக் கருதுகிறார்கள். ஜெர்மனியில் யூதர்கள் செயல்பட்டதைப் போல!"
பாசிஸ்ட்டுகளே ஆதர்சம்
இந்தியாவில் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு சாவர்க்கர் ஆதர்ச நாயகர். காசோலாயின் புத்தகம் இந்துத்துவத்தின் இன்னொரு தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜி பற்றியும் சிறு குறிப்பு கொண்டுள்ளது. போருக்கு இடையிலான இடைவெளிக் காலத்தில் இந்திய அறிவுஜீவிகளிடமும் அரசியலர்களிடமும் ஆதரவு திரட்ட இத்தாலிய அரசு ஆர்வம் காட்டியது.
பாசிஸத்தின் ஆதரவாளரும் தன்னுடைய தலைமுறையில் கீழை நாடுகள் குறித்து அதிகம் ஆராய்ந்தவருமான ஜுசப்பே டுச்சி இந்தப் பணியை மேலும் தீவிரப்படுத்தினார். 1930களில் பி.எஸ்.மூஞ்சியுடனும் எஸ்.பி.முகர்ஜியுடனும் தொடர்ந்து அவர் கடிதம் மூலம் தொடர்புகொண்டார்.
எஸ்.பி.முகர்ஜி அப்போது கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர். பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தைத் தோற்றுவிக்கும் தீவிர முயற்சியில் முகர்ஜி அப்போது ஈடுபட்டிருந்தார். “கல்கத்தாவில் நம்முடன் நெருங்கிச் செயல்படக்கூடிய தோழர் முகர்ஜி” என்று பாசிஸ சிந்தனையாளர் ஜூவான்னி ஜென்டையல் என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்துத்துவத்துக்கும் பாசிஸத்துக்குமுள்ள ஒற்றுமைகள் குறித்து ஆராய்ந்த முதல் அறிஞர் மார்சியா காசோலாய் அல்ல. ஆனால், அவர்தான் மிகத் தீவிரமாகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ந்திருக்கிறார். சாரதா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சட்டப்படியான, முக்கியமான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார் என்பதையே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களை அதற்குப் பதிலளிக்க விடாமல் தடுத்தும், ஆசிரியரைப் பணிநீக்கம் செய்தும் எங்கே உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்ற தங்களுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.
இந்துத்துவத்தை நிறுவியவர்களுக்கு ஐரோப்பிய பாசிஸ்ட்டுகள் ஆதர்சமாகத் திகழ்ந்தார்கள் என்பதை நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும் என்று விரும்பும் ஆட்சியாளர்கள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் அச்சப்பட்டதாலேயே இந்த இடைநீக்க நடவடிக்கை!
தமிழில்: வா.ரங்காசாரி
- அருஞ்சொல்
https://www.arunchol.com/ramachandra-guha-on-hindutva-italy