தூய்மை தொழிலாளர்கள் சந்தித்து வரும் துரோக வரலாறு!
அறம் இணைய இதழ்

தமிழகத்தில் ஒப்பந்தக் கூலி, தனியார் மயம், அவுட் சோர்சிங் எப்போது தொடங்கியது. யாரால் வளர்த்தெடுக்கப்பட்டது? ஏழாம் கட்டமாக இன்றைக்கு அமைச்சர்கள் வந்து நடத்திய பேச்சு வார்த்தை ஏன் தோல்வி அடைந்தது..? மற்ற மாநிலங்கள் தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றன? ஒரு அலசல்;
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியதைக் எதிர்த்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ராயபுரம், திரு.வி.க.நகா் உள்ளிட்ட நான்கு மண்டலங்களின் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளனர். இதனால் தண்டையார்பேட்டை, மண்ணடி, பிராட்வே,எழும்பூர், அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளின் பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா, ஆணைய குமரகுருபன் ஆகியோர் தூய்மை பணியாளர்களை பணிய வைக்க செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
ஊருக்காக உழைப்பவர் என்ற பெயர் இந்த தூய்மை பணியாளர்களுக்கு தான் நூறு சதவிதம் பொருந்தும்.
இவர்கள் தற்போது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளனர்.
அந்த நிறுவனம் தற்போது இவர்கள் வாங்கும் சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்து லாபம் பார்க்கும் ஏற்பாட்டை எதிர்த்து தான் போராடுகிறார்கள்;
இப்படி தனியாருக்கு தங்களை தாரை வார்க்க அரசு திட்டமிடுவதை தடுக்க கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இதனால் சற்று பின் வாங்கிய திமுக அரசு தற்போது மூர்க்கமாக தனியார்மயத்தை அமல்படுத்த தயார் ஆகிவிட்டது.
கடந்த 10 நாட்கள் நடக்கும் இவர்களின் போராட்டங்களை உழைப்பவர் உரிமை இயக்கத்தின் தலைவர்களான எஸ்.குமாரசாமியும், கு.பாரதியும் தலைமை தாங்கி நடத்துகின்றனர். இந்த போராட்டங்களுக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் விசிக அமைப்புகளின் பங்கேற்பு இல்லை என்பது திமுக அரசின் நோக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது. ஆரம்பத்தில் தனியார்மயத்தை எதிர்த்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தற்போது களத்தில் இல்லை. 10 நாளான இன்று தான் சிபிஎம் தலைவர் பெ.சண்முகம் போராட்டக் களத்திற்கு வந்து வாழ்த்தி சென்றுள்ளார். ஆனால், சிஐடியு தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு இயக்கம் களத்தில் இவர்களுக்கு உற்ற துணையாக உள்ளது.
பஞ்சை பராரிகளான இந்த ஏழைப் பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள் ஆகிய சூழல்களை எப்படித் தான் சமாளித்து இத்தனை மன உறுதியுடன் இரவும், பகலுமாக போராடி வருகிறார்களோ..வியப்பாக உள்ளது. அதே சமயம் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி மூலமாக இவர்களில் சிலரை உருவி எடுத்து தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்லும் வேலைகளும் நடந்து கொண்டுள்ளது.
எந்த நாடு உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்களை மதிக்கின்றதோ அந்த நாடு மானுட வசந்தம் வீசும் நாடாக இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் அந்தக் காலம் தொடங்கி உடல் உழைப்பு சார்ந்து தொழில் செய்வோரை மிகவும் ஒடுக்கும் விதமாக குறைந்த கூலியை நிர்பந்திப்பது வழக்கமாக உள்ளது.
துப்புரவுப் பணியாளர்கள் ஒரு நாடோ , நகரமோ உயிர்ப்புடன் இருக்க இயலாது. மற்றவர்கள் செய்யக் கூசும் பணிகளை அவர்கள் நமக்காக செய்கிறார்கள். அந்த தூய்மை பணியாளர்களை ஒரு சுமையாக கருதிய முதல் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி தான். 2001 -06 காலகட்டத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.எம்.சுவாமிநாதன் தலைமையில் ஊதியம் மற்றும் செலவினச் சீர்திருத்தங்கள் குழு ஒன்றை அமைத்தார், ஜெயலலிதா. அந்தக் குழு தான் அரசு பணியில் ஆட் குறைப்பை பரிந்துரைத்தது. உண்மையில் அரசு பணிகளில் மிக அதிக சம்பளம் பெறும் ஐ.ஏ.எஸ் போன்ற உயர் பதவியாளர்களே தேவைக்கும் அதிகமாக உள்ளனர். ஆனால், அப்போது தொடங்கி அரசின் அடிநிலை பணிகளில் ஆட்சேர்ப்பு என்பது வெகுவாக குறைந்துவிட்டது.
கருணாநிதி மீண்டும் 2006 பதவி ஏற்ற போது, அந்த பரிந்துரையை நிராகரித்து நியாயமான பணி இடங்களை நிரப்பினார்.
மீண்டும் அதிமுக ஆட்சி 2011 ஆட்சிக்கு வந்த பிறகு, குருப் D பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நியமிப்பது கிட்டத்தட்ட அறவே நிறுத்தப்பட்டுவிட்டது.
அவுட் சோர்சிங் மூலம் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அடித்தள ஊழியர்கள் நியமனத்தால் ஒப்பந்ததாரர்கள் கொழுக்கவும், ஆட்சியாளர்கள் பெருந்தொகை லஞ்சமாக பெறவுமான சூழல் உருவானது. ஒவ்வொரு ஒப்பந்த பணியாளர் சம்பளத்திலும் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டு ஆட்சியாளர்களும், ஒப்பந்த நிறுவனமும் பலன்களை ருசி பார்க்கின்றனர். தற்போது தினக் கூலியாக 760 ரூபாய் சம்பளமாகப் பெறும் தூய்மை பணியாளர்கள் இனி தனியாரிடம் ரூ590 தான் பெற முடியும். இதன் மூலம் மாதம் ரூ 6,000 த்தை இழக்கிறார்கள்.
இப்படி எடுத்துக் கொண்ட பணத்தை ஓய்வூதியத்திற்காகவும், இ.எஸ்.ஐக்காகவும், விபத்து காப்பீட்டுக்கும் அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கே திருப்பி தருகிறது எனச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு தருவதில்லை என்பதற்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோவை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் போராட்டமே உதாரணமாகும்.
தனியார் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு போராட்டம் நடத்தும் கோவை துப்புறவு பணியாளர்கள்
கிட்டத்தட்ட தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்பு தொழிலாளர்களும் இவ்வாறு ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்படுவதை ஆட்சியாளர்கள் பொருட்படுத்துவதே இல்லை.
தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 22,950 தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 15,000 தூய்மை பணியாளர்கள் என்றால், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் என்று சேர்த்துப் பார்த்தால் லட்சத்திற்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.
அந்த வகையில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகள் , ஸ்டாலின் ஆட்சியின் 4 ஆண்டுகள் என கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசுத் துறைகள் அனைத்திலும் தனியார் மயத்தின் மூலம் ஒப்பந்த கூலி அடிப்படையில் தான் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்டாலின் கலைஞரை பின்பற்றவில்லை, ஜெயலலிதாவையே பின்பற்றுகிறார் என்பது வருத்தத்திற்கு உரியதாகும்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருக்கும் போது அவர் இதை ஊக்குவித்தார். வெளிநாடுகளில் லட்சங்களில் சம்பளம் பெற்று வாழ்ந்த அவர், தாய் நாட்டில் பண்ணையார்தனமாக சிந்தித்தார். அரசு துறைகளில் சம்பளச் செலவினத்தை குறைக்க, அரசுப்பணியிடங்களை ஒப்பந்த முறையில் மேற்கொள்ள தொடர்ந்து நிர்பந்தித்தார். இதற்காகவே ஒரு மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைத்தார். இதன் பிறகு தான் இந்த அரசின் குருப் D மற்றும் C ஆகிய நிலைகளில் அதிக அளவில் ஒப்பந்த பணியாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டனர்.
தூய்மை பணியாளர்களைத் தனியாருக்கு தாரை வார்க்க இரு தளபதிகளை கொண்ட முதல்வர்.
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறாமல் ஒப்பந்த முறையிலான சுரண்டல் என்பது அரசாணை 115 மூலம் தொடர்கிறது. கடந்த 14 ஆண்டுகளாக குருப் D-ல் வேலைக்கு ஆள் எடுக்காததால் சுமார் 50 சதவிகித காலி பணி இடங்கள் உள்ளன. இதனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் வாட்ச்மேன், தூய்மை பணியாளர்களே இல்லை. அரசு மருத்துவமனைகளோ தூய்மை பணியாளர் பற்றாக் குறையால் திணறுகின்றன.
அரசியலமைப்பு சட்டப்படியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை முடக்கி, அரசு பணிகளுக்கு , ஒப்பந்த முறையில் வெளி முகமை மூலம் ஆட்களை நியமிப்பது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். தூய்மை பணியாளர்கள் சமூகத்தின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகும். அவர்கள் இல்லாமல் இந்த சமூகம் இயங்காது. அவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து கண்ணியமான வாழ்க்கையை உறுதிபடுத்துவதில் அரசாங்கத்திற்கு என்ன தான் பிரச்சினை?
எல்லாவற்றிலும் தமிழ்நாடு தான் முன்னேறிய மாநிலமாக உள்ளது என்று சொல்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
ஆந்திராவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 23,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. ‘ஆந்திர அரசு வெளிமுகமை தொழிலாளர் கழகம்’ என்ற அரசு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழிலாளர்களை தருகிறது. இதனால் ஒப்பந்தக்காரர்களின் சுரண்டல் தடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவிலும் இந்த நடை முறை தொடர்கிறது.
ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லி போன்ற மாநிலங்கள் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து மனித வளத்தை பேணி, நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டார்கள். ராஜஸ்தானில் அன்றைய காங்கிரஸ் முதல்வர் அசோக்கெலாடும், ஒரிசாவில் அன்றைய முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஒப்பந்த தூய்மை பணிகளை சில ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தப்படுத்திவிட்டனர்.
ஆனால், தமிழ்நாடோ பழைய பண்ணையார்த்தன சுரண்டல் முறையை நிறுவனப்படுத்தும் ஒப்பந்த முறைக்கு திரும்பிக் கொண்டுள்ளது ! இதை நாம் திராவிட மாடல் என்றும் சமூக நீதி என்றும் கற்பிதம் செய்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
மூலக்கட்டுரை: https://aramonline.in/22431/sanitation-workers-chennai/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு