டிரம்ப் வரிக்கொள்கை: வீழும் உலகமயமும் எழும் தேசியமயமும்..!

விகடன் இணையதளம்

டிரம்ப் வரிக்கொள்கை: வீழும் உலகமயமும் எழும் தேசியமயமும்..!

அமெரிக்க குடியரசுத் தலைவராக ட்ரம்ப் இதற்கு முன்னர் 2018-இல் பதவி ஏற்றபோது, இதேபோல் சீனாவுக்கு எதிரான கடுமையான இறக்குமதி வரியை விதித்தார். அது ஏதோ ட்ரம்ப்பினுடைய தனிப்பட்ட அணுகுமுறையாகவோ, குடியரசுக் கட்சியின் கொள்கையாகவோ மட்டும் அமையவில்லை.

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது Delimitation - `Trump Tariff’ விவகாரம்.

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இது 'விடுதலைநாள்” (Liberation day) என்ற முழக்கத்தோடு அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்டு ட்ரம்ப் 109 நாடுகளுக்கு கடுமையான இறக்குமதி வரிவிதிப்பை ஏப்ரல் 2 அன்று அதிரடியாக அறிவித்ததிலிருந்து உலக நாடுகள் அதிர்ந்து நிற்கின்றன. பங்குச் சந்தைகள் தாறுமாறாக நிலைகுலைந்துள்ளன.

ட்ரம்ப் அறிவிப்புக்குப் பதிலடியாக, இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என அடுத்தடுத்த நாடுகளும் அமெரிக்காவுக்கு வரிச்சுவர் எழுப்பின!

முதலில், தங்கள் நாட்டுக்குள் வரும் எல்லா நாட்டு இறக்குமதி மீதும் 10% இறக்குமதி வரி விதித்த ட்ரம்ப், ஏப்ரல் 2 அன்று சீன இறக்குமதி மீது 54%, இந்திய இறக்குமதி மீது 26%, வியட்நாம் மீது 34% ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது 24% என வரலாறு காணாத அளவில் வரிவிதிப்பை அறிவித்தார். கிட்டத்தட்ட இதே அளவில், எல்லா நாடுகளும் பதிலடியாக அமெரிக்கா மீது வரிவிதித்தன.

இதன் விளைவாக பங்குச் சந்தையில் இரத்தக் களறி ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் அத்தோடு நிற்கவில்லை. சீனாவின் பதிலுக்குப் பதிலடியாக 104% என்று சீனப் பொருட்கள் மீது வரிவிதித்தார். அதற்கு மேலும் பதிலடியாக சீனா 84% வரிவிதித்தது.

இந்த வரிப்போர் எங்கே போய் முடியும், எதிலே போய் நிற்கும் எனத் தெரியாமல் உலகநாடுகளும் பன்னாட்டுக் குழுமங்களும் கைபிசைந்து நிற்கிறார்கள்.

இது, ட்ரம்ப் என்ற சக்தி வாய்ந்த நாட்டின் தலைவரது தனிநபர் குணக்கேடா, அல்லது உலக பொருளியலில் எதிர்காலப் போக்கைக் குறிக்கிறதா என்பது குறித்து தெளிவடைய வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த நோக்கத்திலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

உலகமயம் (Globalization)

இந்த அதிரடி அறிவிப்பில் ட்ரம்ப் பாணி என்பது இருந்தாலும், அது அடிப்படையில் டரம்ப்பின் துக்ளக் தர்பார் என்று குறைத்து புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, அண்மைக்காலமாக உலகை ஆட்டிப்படைத்துவந்த உலகமயம் (Globalization) என்ற உலக வேட்டை மயத்தின் தகர்வை இது குறிக்கிறது.

1980 களின் இறுதிப் பகுதியில் ரீகனாதாரம் (Reganomics) என்றும் தாட்சரியம் (Thatcharism) என்றும் ஆரவாரத்தோடு அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரெட் தாட்சர் அம்மையார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட திறந்த வணிகம் (Free Trade), தாராளமயம் (liberalization) போன்றவை, 1990-இல், “உலகமயம்” என நிலைகொண்டது.

மறுபுறம், 1989 இறுதியல் மக்கள் எழுச்சியால் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு கிழக்கு, மேற்கு செர்மனிகள் ஒன்றிணைந்தன. இது ஒரு புறம் தேசிய இன எழுச்சியை எடுத்துக் காட்டியது. மறுபுறம் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சியை முன்னறிவித்தது.

உலகமயம் என்பது நாட்டு எல்லைகள் கடந்து தொழில் மூலதனம் பரவியதை குறித்தது. அதேபோல், ஒற்றைச் சந்தை எனத் தடையற்ற வணிகம் பரவியதையும் எடுத்துக்காட்டியது. அதுமட்டுமின்றி இந்தியா, பாக்கித்தான், பிலிப்பைன்ஸ் போன்ற வளர்ச்சியடையாத நாடுகளிலிருந்து தொழில்நுட்ப அறிவு பெற்ற உழைப்பாளர்கள் வளமான மேற்குலக நாடுகளில் பணியாளர்களாகக் குவிந்ததையும் குறித்தது.

இது பல்வேறு நாடுகளில் இன சமநிலையை (demographic balance) சீர்குலைத்தது. அங்கங்கே வெளியாரை வெளியேற்றுவோம் என்ற முழக்கங்கள் எழுந்தன.

இவற்றின் கலவையான விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2016-இல் பிரிட்டன் வெளியேறியது. பிரிட்டனின் வெளியேற்றம் (Brexit) உலகமயத்திற்கு எதிரான தேசிய மயத்தின் எழுச்சிக் குறியீடாக அமைந்தது. அப்போதிருந்தே, வளர்ச்சியடைந்த நாடுகள் கூட தங்கள் நாட்டு தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இறக்குமதி வரியை உயர்த்தத் தொடங்கின. உலக வர்த்தகக் கழகத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்சுக்கும் செர்மனிக்கும், பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் கூட வர்த்தக வழக்குகள் குவிந்தன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏகப்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. உலக மய உரசல்களையே இவை எடுத்துக்காட்டின.

De-globalization Era

அமெரிக்க பெருங்குழுமங்களின் மூதலீட்டின் முதன்மை வழியாக வங்கி மூலதனங்களே இருந்தன. கிட்டத்தட்ட ‘0‘% வட்டிக்கு வங்கிக் கடன்களைத் திரட்டி முதலீடு செய்வது முக்கிய வழியாக அமைந்தது. மறுபுறம், உற்பத்தி சுருக்கம், கடன் தேக்கம் ஆகியவை 2008-இல் பெரிய வங்கிகள் ஓட்டாண்டியாவதில் முடிந்தன.

அரசாங்கத்தின் கருவூலத்தைக் கிட்டத்தட்ட காலிசெய்து அந்த பகாசுர வங்கிகளை நிமிர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இதனை, அமெரிக்க பொருளியில் அறிஞர் வால்டன் பெல்லா (Walden Bello) உலகமய நீக்கம் (De-Globalization) என வரையறுத்தார்.

அமெரிக்க குடியரசுத் தலைவராக ட்ரம்ப் இதற்கு முன்னர் 2018-இல் பதவி ஏற்றபோது, இதேபோல் சீனாவுக்கு எதிரான கடுமையான இறக்குமதி வரியை விதித்தார். அது ஏதோ ட்ரம்ப்பினுடைய தனிப்பட்ட அணுகுமுறையாகவோ, குடியரசுக் கட்சியின் கொள்கையாகவோ மட்டும் அமையவில்லை. ஏனெனில், அடுத்து வந்த ஒபாமாவும் இனிவரும் காலம் உலகமய நீக்க காலம் (De-globalization Era) என அறிவித்தார்.

இதற்கு முன்னர் அதிபராக இருந்த ஜோ பைடனும் சீனா இந்தியா, பிரான்ஸ், செர்மனி ஆகிய நாடுகளுக்கு எதிராக கடுமையான இறக்குமதி வரிவிதிப்பை செயல்படுத்தத்தான் செய்தார்.

Stop Globalization, Start Localization

உலகமயம் கோலோச்சத் தொடங்கியதற்குப் பிறகு, அமெரிக்க பெருங்குழுமங்கள் தங்கள் நாட்டில் நேரடி பொருள் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு பல்வேறு நாடுகளிலிருந்து உதிரி உறுப்புகளை இறக்குமதி செய்து அவற்றை தங்கள் நாட்டுத் தொழிலகங்களில் கோத்ததையே (அசெம்ளிங்) முதன்மை வழியாகக் கொண்டன. குறுகிய காலத்தில், நிறைய இலாபம் பார்க்கலாம் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு செய்தன.

அதேபோல், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வங்காளதேசம் போன்ற நாடுகளில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து உழைப்பு பிழியும் நிறுவனங்கள் (Sweat shop) பொருள் உற்பத்தியில் இறங்கின. இதுவும் குறுகிய காலத்தில் நிறைய இலாபம் பார்க்கும் முயற்சிதான்.

இவற்றின் விளைவாக, அமெரிக்காவில் தொழில் உற்பத்தி (Manufacturing Sector) சுருங்கியது. வேலையின்மை பெருகியது. இந்தச் சுமையை அமெரிக்க ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் மீது சுமத்தி, வெள்ளை இன வெறியில் சவாரி செய்தனர்.

இதே நிலை பிரான்ஸ், பிரிட்டன், செர்மனி போன்ற நாடுகளிலும் நிகழ்ந்தன.

இன்னொரு புறம், காலநிலை மாற்றம் (Climate Change), உலகம் வெப்பமாதல் (Global Warming) போன்றவற்றின் தாக்கம் காரணமாக வளர்ச்சியை நிறுத்து (Stop the Growth) என்ற மக்கள் முழக்கம் எல்லா நாட்டு அரசுகளையும் அழுத்தியது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவளி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது, தொழில் உற்பத்தி முறையைச் சூழலுக்கு இசைவாக மாற்றியமைப்பது என்ற தேவை எழுந்தது.

இது உலகமயம், கண்மூடித்தனமான தொழில் வீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக பெரும் சவாலாக எழுந்தது. உலகமயம் வேண்டாம், உள்ளுர் மயம் வேண்டும் (Stop Globalization, Start Localization) என்பதே புதிய அறிவியல் முழக்கமாகப் புறப்பட்டது.

இந்தப் போக்குகள் அனைத்தின் ஒட்டுமொத்த விளைவுதான் இப்போது ட்ரம்ப் அறிவித்து எல்லா நாடுகளும் பதிலடியில் இறங்கியுள்ள புதிய சூழல்.

உலகமயம்... தேசியமயம்!

டரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்புக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையில் வெளிப்படையான அல்லது திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று புதிய உடன்பாடுகள் ஏற்படக்கூடும். இப்போதே, கடந்த 9-4-2025 அன்று ட்ரம்ப் ஒரு பக்கம் சீனாவுக்கு எதிராக 104% இறக்குமதி வரிஉயர்வை அறிவித்ததோடு பிற நாடுகள் மீதான இறக்குமதி வரிவிதிப்பை 90 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறார். இவையெல்லாம், புதிய நிலைமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

ஆனால், ஒன்றுமட்டும் உறுதி்; உலகமயம் வீழ்கிறது; தேசியமயம் எழுகிறது!

சீனாவின் வெற்றிக்குப் பின்னால், அந்நாட்டு பெரும் கட்டமைப்புத் தொழில்கள் அரசு பொறுப்பில் இருப்பதும், அந்நாட்டின் பாதிக்கு மேலான உற்பத்தி, சிறு மற்றும் நடுத்தர தனியார் தொழில் முனைவோர் வழியாக நடப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்தியாவில், அதைவிடச் சிறப்பான வழிகாட்டல், காந்தியப் பொருளியல் என்ற வகையில் நமக்கு முன்னால் உள்ளது. அந்த காந்தியப் பார்வையை அச்சுபிசகாமல் அப்படியே பின்பற்றுவது மாற்று வழியல்ல. மாறாக, இந்தியாவில் உள்ள பன்முகப்பட்ட தேசிய இன மரபுத் தொழில் நுட்பங்களில் காலூன்றி நின்று, பரவலாக்கப்பட்ட (decentralized) தொழில் நுட்ப பன்மை சார்ந்த (Technological Plurality) சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முதன்மை பெறும் தேசிய இனப் பொருளியலே நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்.

மொத்தத்தில், உலக வேட்டை மயத்திலிருந்து விலகி, உள்ளுர் வள மயத்திற்கு திரும்ப வேண்டும் என்பதுதான் ட்ரம்ப் அதிரடி நமக்குத் தரும் படிப்பினை.!

(கி.வெங்கட்ராமன்)

- விகடன் இணையதளம்

https://www.vikatan.com/government-and-politics/kalam-series-on-trump-tariff-and-de-globalization-era

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு