அதிகரித்துவரும் நிலச்சரிவு நிகழ்வுகள் - காரணம் என்ன?
விகடன் இணைய இதழ்
நிலச்சரிவுப் பேரிடர்கள் எதனால் ஏற்படுகின்றன, இவற்றின் பாதிப்பு அதிகமாவதற்குப் பின்னால் என்ன காரணங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
2024-ம் ஆண்டு ஜூலை முப்பதாம் தேதி, வயநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளாக மாறிவிட்டது.
நிலச்சரிவுப் பேரிடர்கள்
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 231 பேர் இறந்தனர். மேலும் 218 பேரின் உடல் பாகங்கள் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்திருக்கின்றன. புஞ்சிரிமட்டம், சூரல்மலா மற்றும் முண்டக்கை ஆகிய கிராமங்களில் இந்தப் பேரிடர் ஏற்பட்டது. இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் நிகழ்ந்த பேரிடர்களிலேயே மிக அதிகமான உயிரிழப்பு கொண்ட நிகழ்வு இது.
நிலச்சரிவுகள்
2024 செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வடக்கில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் 5 பேர் இறந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர். 2024 ஆகஸ்ட் மாதத்தில் திரிபுரா மாநிலத்தில் கடுமையான மழையும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் 32 பேர் இறந்தனர், மூன்று பேர் படுகாயமடைந்தனர். 2024 ஜூலை மாதத்தில் கர்நாடகாவில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. 2024 மே மாத இறுதியில் மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 28 பேர் இறந்தனர். 2024 ஜூலை மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் இறந்தனர். 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இதுபோன்ற நிலச்சரிவுப் பேரிடர்கள் எதனால் ஏற்படுகின்றன, இவற்றின் பாதிப்பு அதிகமாவதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
நிலவியல் கூறுகள்...
ஒரு பகுதியில் இயற்கையாகவே உள்ள சில நிலவியல் கூறுகள் அந்தப் பகுதியில் நிலச்சரிவுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. 2023-ம் ஆண்டில் வெளியான இந்திய நிலச்சரிவு வரைடபத்தில் (Landslide atlas, 2023) உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட இமாலயப் பகுதிகள் நிலச்சரிவுகளால் படுமோசமாக பாதிக்கப்படுகின்றன என்பது உறுதிசெய்யப்பட்டது. அதிக மக்கள் தொகையும் கட்டுமானங்களின் அடர்த்தியும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நிலச்சரிவுக்கான அச்சுறுத்தல் அதிகம் என்று அந்த வரைபடம் குறிப்பிடுகிறது. நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 147 இந்திய மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதில் வயநாடு 13ம் இடத்தில் இருக்கிறது.
உத்தரகாண்ட் நிலச்சரிவு
2011-ம் ஆண்டில் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு சுற்றுச்சூழல் ஆரய்ச்சிக்கான குழுவை நியமித்தது. சூழலியலாளர் மாதவ் காட்கிலின் தலைமையிலான இந்தக் குழு, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சூழல் கூறுகளை விரிவாக ஆராய்ந்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பிலான இடத்தை சுற்றுச்சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக (Ecologically Sensitive Zone) அறிவிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது அமல்படுத்தப்படவில்லை.
கட்டுமானங்கள்
நிலச்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் கட்டுமானங்கள் கட்டப்படும்போது பாதிப்பும் உயிரிழப்பும் அதிகமாகும். வயநாடு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல ஆண்டுகளாக நிலப்பயன்பாடு பற்றிய விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. காடழிப்பு, சரியான திட்டமிடுதல் இல்லாத கட்டுமானப் பணிகள் ஆகியவை அதிகரித்து வருகின்றன. 1950 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வயநாடு பகுதியில் உள்ள 62% காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. வயநாட்டில் பல குவாரிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
நிலச்சரிவு பாதிப்புகள்
இமயமலைப் பகுதிகளில் கட்டுமானங்களும் 'Hydroelectric projects' என்று அழைக்கப்படும் பெரிய அணைகளும் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்தபடியே இருக்கிறது. சுற்றுலாவை மேம்படுத்தவும் கட்டுமானங்கள் அதிகரிக்கப்படுகின்றன. மே 2024-ல் வயநாடு 'ப்ரக்ருதிசம்ரக்ஷணசமிதி' என்ற சூழல் பாதுகாப்பு அமைப்பு, இந்தப் பகுதியில் அதிகரித்துவரும் கட்டுமானங்களையும் சுற்றுலா செயல்பாடுகளையும் பதிவுசெய்திருக்கிறது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் மழைப்பொழிவும் நிலச்சரிவு பாதிப்பை அதிகமாக்குகிறது. உதாரணமாக, வயநாடு நிலச்சரிவின்போது வழக்கத்தைவிட 493% அதிகமாக மழைப்பொழிவு இருந்ததை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அரபிக் கடலின் சராசரி வெப்பநிலை அதிகரித்ததால் கூடுதல் மழைப்பொழிவு ஏற்படுகிறது. ஒரு வருடத்தில் பெய்யவேண்டிய மொத்த மழையில் ஆறு சதவிகித அளவு வெறும் சில மணிநேரங்களில் கொட்டித் தீர்த்திருக்கிறது. இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் 140 மில்லிமீட்டர் மழை பெய்தது.
வயநாடு நிலச்சரிவு
வயநாடு நிலச்சரிவில் காலநிலை மாற்றத்தின் பங்கு எவ்வளவு என்று 'World Weather Attribution' குழுவினர் ஆராய்ந்திருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் வயநாட்டில் பொழிந்த மழையின் அளவு 10% அதிகரித்திருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்து. கடந்த 45 ஆண்டுகளாகவே இந்த அளவு கனமழை பெய்யும் சாத்தியக்கூறு 17% அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் காலநிலை மாற்றத்தால் பொதுவான பருவமழையின் கூறுகளும் மாறியிருக்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு இடத்தில் ஏற்படும் நிலச்சரிவுக்குப் பின்னால் அடிப்படை நிலவியல் கூறுகள், நிலப் பயன்பாட்டில் இருக்கும் தவறுகள், கட்டுமானங்கள் அதிகரிப்பது, காலநிலை மாற்றம் என்று பல காரணங்கள் உண்டு.
`அதிகரித்துவரும் நிலச்சரிவுகள்’
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் அதிகரித்து வருகின்றன என்று RMSI அமைப்பின் சமீபத்திய அறிக்க்கை தெரிவிக்கிறது. அதிகரிக்கும் சராசரி மழைப்பொழிவு, 25 முதல் 45 டிகிரி சாய்கோணம் கொண்ட சரிவுகளில்கூட கட்டுமானங்களை மேற்கொள்வது, காடழிப்பு, மலைப்பகுதிகளில் உள்ள தாவரங்களை அழிப்பது, வேகமான கட்டுமான வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக சுட்டப்படுகின்றன. இந்தக் காரணிகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், கேரளா, மேகாலயா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துவருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நிலச்சரிவு
கேரளாவில் நடந்த பேரிடரைப் பற்றி விரிவாகப் பேசும் ஆராய்ச்சியாளர் நிதின் ராம், காட்கில் அறிக்கை என்பது ஒரு அறிவுப்புலப் பரிந்துரை மட்டுமல்ல, அது கொள்கை முடிவுகளுக்கான ஒரு வழிகாட்டி என்கிறார். அறிவியல் ரீதியான இந்தப் பரிந்துரைகளை நிராகரிப்பதன்மூலம் அவற்றின் அடிப்படை நோக்கத்தையே நாம் நிராகரிக்கிறோம் என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வாழ்வதற்கான உரிமையை வழங்கியிருக்கிறது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும் என 1987-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நிகழ்ந்துவரும் சுற்றுச்சூழல் சீர்கேடு, இந்த அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று நிதின் ராம் சுட்டிக் காட்டுகிறார்.
எதிர்காலத்தை நோக்கிய நமது பயணத்தில் நாம் நிச்சயமாக அறிவியலின் கையைப் பற்றிக்கொள்ளவேண்டும். அது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, அவசியமானதும்கூட.
விகடன் இணைய இதழ்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு