ஹத்ராஸ் படுகொலைகள்: உ.பி அரசே குற்றவாளி

இந்து தமிழ்

ஹத்ராஸ் படுகொலைகள்:  உ.பி அரசே குற்றவாளி

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் விசாரணை தொடக்கம்: தலைமறைவான போலே பாபா பெயர் எப்ஐஆரில் இல்லை

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்த நிலையில் அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. இதற்கு காரணமாகக் கருதப்படும் போலே பாபா சாமியார் தலைமறைவான நிலையில் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லை.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில்நேற்று முன்தினம் நடைபெற்ற மதவழிபாடு, ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 121 பேர் உயிரிழந்தனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெரிசல் சம்பவம் தொடர்பாகசிக்கந்தரராவ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கூட்டத்தின் முக்கியஅமைப்பாளரான தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் பெயர் தெரியாத சிலர் மீது புகார்கள் பதிவாகி உள்ளன.

இப்புகாரின்படி வெறும் 80,000 பேர் கூடுவதற்காக மட்டுமே அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105, 110, 126(2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. எனினும், நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணமான போலே பாபா சாமியார், சம்பவத்தில் நேரடித்தொடர்பு இல்லாததால்அவரது பெயர் முதல் தகவல்அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே போலே பாபா தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் எங்கள் அரசு ஆழமாகத் தோண்டி பிடித்து தண்டிக்கும். இவர்களில் எவரும்தப்ப முடியாது. இந்த சம்பவம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா? என முழு விசாரணைக்கு பிறகு தெரியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

13 ஆண்டில் 2,000 பேர் உயிரிழப்பு:

ஆன்மிகம் தொடர்பான நெரிசல்சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவது நாட்டில் முதன்முறையல்ல. இவற்றில் பெண்கள் மற்றும்குழந்தைகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தேசியக் குற்றப் பதிவேட்டின்படி, கடந்த 2000 முதல் 2013 வரையிலான13 ஆண்டுகளில் சுமார் 2,000 பேர்நெரிசிலில் சிக்கி உயிரிழந் துள்ளனர்.

இவற்றில் முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு:

2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம்தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்மாவட்டத்தின் கும்பமேளாவின் நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர்.

இதே மாநிலத்தில் ஜனவரி25, 2005-ல் சத்தரா மாவட்டத்தின் மந்தரா தேவி கோயிலின் விசேஷத்தில் 340 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் நைனா தேவி கோயிலின்நெரிசலில் ஆகஸ்ட் 3, 2008-ல் 162 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் 30, 2008-ல் ராஜஸ்தான் ஜோத்பூரில் சாமுண்டா தேவி கோயில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் 250.

உ.பி.யின் பிரயாக்ராஜில் ராம் ஜானகி கோயிலில் கிருபாளு மஹராஜ் எனும் ஆன்மிகக் குருவழங்கிய இலவச வேட்டி, சேலைவிநியோகத்தில் நெரிசல் ஏற்பட்டது. மார்ச் 4, 2010-ல் நடந்த இந்தசம்பவத்தில், 63 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 14, 2011-ல் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரி மலையில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஜீப்பால், 104 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசத்தின் டாட்டியாவில் ரத்னாகர் கோயிலில் அக்டோ பர் 13, 2013-ல் பாலம் உடைவதாக கிளம்பிய புரளியால் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 3, 2014 -ல் பிஹாரின் பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் 32 பேர் உயிரிழந்தனர்.

பாலியல் புகார் உட்பட பல வழக்குகளில் போலே பாபா:

உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கஞ்ச்சின் பட்டியாலிவாசியான சூரஜ் பால், அம்மாநிலக் காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்துள்ளார். சுமார் 25 வருடங்களுக்கு முன் 1999-ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற சூரஜ் பால், போலே பாபாவாக மாறியுள்ளார்.

இவரது மனைவியும் போலே பாபாவின் அருகில் மேடையில் அமர்ந்து பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. பாபாவின் மனைவியை பக்தர்கள், ‘மாதாஸ்ரீ’ என அழைத்துள்ளனர். தனது ஆன்மிகப் பிரச்சாரக் காலத்தில் பாபாவின் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருந்தது தெரிய வந்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காலங்களிலும் 50 பேர் எனக் கூறி அனுமதி பெற்ற பாபாவின் கூட்டங்களுக்கு 50,000 பேர் வந்துள்ளனர். இது தொடர்பாகவும் பல வழக்குகள் பதிவாகின.

தமது கூட்டங்களுக்கு வரும் மக்களைக் கட்டுப்படுத்த பாபாவின் நிர்வாகத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் பாபாவின் ‘நாராயணி சேனா’ என அழைக்கப்படுகின்றனர்.

போலே பாபா மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல வழக்குகளும் பதிவாகி நடைபெற்று வருகின்றன. இவை, உ.பி.யின் ஆக்ரா, எட்டாவா, காஸ்கஞ்ச், பரூகாபாத் நகரங்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பதிவாகி உள்ளன. இதில் ஒரு வழக்கில் போலே பாபா, சில நாட்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனும் பெற்றுள்ளார்.

இந்த சர்ச்சைகளையும் மீறி போலே பாபாவின் ஆன்மிகச் சொற்பொழிவிற்கு மயங்கி, லட்சக்கணக்கில் பக்தர்கள் சேர்கின்றனர். ஆனால், ஹாத்ரஸ் சம்பவத்தில் காயமடைந்த பக்தர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் தலைமறைவாகி உள்ளார் போலே பாபா.

கார் டயர் பதிந்த மண் எடுத்தபோது சோகம்: நேற்று முன்தினம் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபாவின் ஆன்மிகக் கூட்டத்துக்காக பொதுமக்கள் கூடி இருந்தனர். பிற்பகல் சுமார் 3 மணிக்கு கூட்டம் முடிந்ததும் முதல் நபராக போலே பாபா வெளியேறி உள்ளார்.

தான் வெளியேறிய பின்னர் பக்தர்கள் வெளியேறும்படி அவர் அறிவித்துள்ளார். அப்போது அவரது பாதங்களை வணங்கி ஆசீர்வாதம் பெற கூட்டத்தில் இருந்தவர்கள் முயன்றனர். மேலும் பலர் போலே பாபா சென்ற வாகனத்தின் கார் டயர் பதிந்த மண்ணை எடுக்கவும் முயன்றனர். இதுபோல், தாம் மிகவும் மதிப்பவரது கால்தடங்களின் மண்ணை எடுத்து உ.பி.வாசிகள் தமது நெற்றி, நெஞ்சில் பூசி பூரிப்படைவது வழக்கம். இந்தவகையில், பாபாவின் கால்தடங்களின் மண் கிடைக்காதவர்கள் அவர் பயணிக்கும் வாகனத்தின் டயர்கள் பதிந்த மண்ணை எடுப்பது உண்டு.

இந்தவகையில் டயர்களின் மண்பதிவை எடுக்க பக்தர்கள் முயன்றுள்ளனர். அவர்களை போலே பாபாவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் பிடித்து பின்னே தள்ளியுள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பிறகு, கூடார நெரிசலுக்கு அஞ்சி வெளியேற முயன்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்குள்ளாயினர்.

(ஆர்.ஷபிமுன்னா)

- இந்து தமிழ்

https://www.hindutamil.in/news/india/1274325-bhole-baba-name-is-not-in-hathras-fir.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு