பொது சிவில் சட்டத்தால் பாஜக சாதிக்க போவது என்ன..?
அறம் இணைய இதழ்
சுமார் 76 ஆண்டுகால விவாதமாக தொடர்கிறது பொது சிவில் சட்ட அமலாக்கம்! இதை ஆதரிப்பவர்கள் பாகுபாடு கூடாது என்ற சமத்துவக் கண்ணோட்டத்துடன் கேட்கிறார்களா? எதிர்க்கும் அரசியல் கட்சிகள் முஸ்லீம்களின் ஓட்டுக்காக எதிர்க்கிறார்களா…?
”பொது சிவில் சட்டம் அவசியம் தேவை” என மோடி குரல் எழுப்பியுள்ளார் . ஆக, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான்! இந்திய அரசியல் நிர்ணய சபையிலேயே எழுப்பப்பட்டது தான், பொது சிவில் சட்டக் கோரிக்கை! அதன் பிறகு பல முறை அரசியல்வாதிகளால் எழுப்படுவதும், எழுப்பட்ட உடனேயே நாலாபுறமிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் வெடித்துச் சிதறி பின் மோதலிலும், குழப்பத்திலும் தான் இதுவரை முடிந்திருக்கிறது.
இன்றுவரை பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரவில்லை .
பொது சிவில் சட்டம் என்றால் என்ன? இதற்கு ஏன் இஸ்லாமியரிடமிருந்தும், பழங்குடியினரிடமிருந்தும்,சீக்கியரிடமிருந்தும் ஏன் ஒருமையை விரும்பாத – இஸ்லாமியரல்லாத இந்திய மக்களில் பல்வேறு பிரிவினரிடமிருந்தும் எதிர்ப்பு வருகிறது? இதை அவ்வப்போது தூக்கிப் பிடிப்பவர்கள் யார்? என அலசுவது அவசியமாகிறது.
காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின், நம்மை நாம் எப்படி வடிவமைத்து கொள்வது, இந்நாட்டு மக்களின் சமூகத்திலும் வாழ்வுமுறையிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, அநீதியை அகற்றி நீதியை நிலைநாட்ட , அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அளிக்க, முன்னேற எத்தகைய ஆட்சிமுறையை மேற்கொள்வது என்ற கேள்விக்கான பதிலே, இந்திய அரசியல் சாசனமாகும் .
இந்த அரசியல் சாசனம் முதலில் இந்நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பற்றி (Fundamental Rights) கூறுகிறது. அதற்குப்பின் , இந்த அரசு இந்த நாட்டை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற “வழிகாட்டும் நெறிமுறைகளை” தொகுத்து ஓர் அத்தியாயமாக கொடுத்துள்ளது.
இத்தகைய வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்று தான், பொது சிவில்சட்டம் ஆகும் ; பல்வேறு கலாச்சாரங்களையும், அடையாளங்களையும் பின்பற்றும் பல்வேறு மொழிகள் பேசும் இந்நாட்டு மக்கள் தங்களது சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்விலும் ஒரு உன்னதமான பேதமற்ற விதிமுறையை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும் என விழைவதில் தவறில்லை. இதைத் தான் நமது வழி காட்டும் நெறிமுறை கூறுகிறது. ஆனால், பொது சிவில் சட்ட திணிப்பை இந்திய அரசியல் சாசனம் ஏற்கவில்லை, கூறவில்லை.
பலதார மணமும்,பெண்ணடிமைத் தனமும், அர்த்தமற்ற மதச்சடங்குகளும் நிரம்ப பெற்றிருந்த இந்துக்கள் கூட்டத்தில் , அவர்களது திருமணம், சொத்துரிமை, வாரிசு உரிமை போன்ற விடயங்களில் வழக்கிலிருந்த பல்வேறு வழிமுறைகளை ஒருங்கிணைத்து ஒரே சீராக மாற்றியமைக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1946ம் ஆண்டே முயன்றனர். அதற்கு இந்து மகா சபையினரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது, இது தவிர, பல்வேறு காரணங்களினால் இந்து பொது சட்டம் (Hindu Code) பிரிட்டிஷாரால் கொண்டுவர முடியவில்லை.
விடுதலைக்கு பின்னரே ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு இந்துக்களின் பொது நடைமுறை சட்டத்தை (Hindu Code Bill) உருவாக்க , அம்பேத்கரை தலைவராக கொண்ட ஒரு குழுவை நியமித்தது.
அம்பேத்கர் கொண்டுவந்த வரைவு சட்டத்தை இந்து மகா சபையினர் எதிர்த்தனர், காங்கிரஸ்காரர்களான வல்லபாய் பட்டேல் , பி. டி. டாண்டன், பட்டாபி சீத்தாராமையா போன்றோரும் எதிர்த்தனர்! அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்தும் கடுமையாக எதிர்த்தார். இந்துக்களின் இந்து மதத்தின் புனிதமே கெட்டுவிடும் என இவர்கள் வாதிட்டனர் . இத்தகைய பலத்த எதிர்ப்புகளை சமாளிக்க , சட்ட மசோதா தோற்கடிக்கபடாமல் இருக்க, பல்வேறு சட்ட திருத்தங்கள் மூலம் அதை சாரமற்றதாக்க நேரு ஒத்துக் கொண்டார். இந்த சமரசத்தை எதிர்த்து அன்று அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்.
பெண்ணடிமை, தீண்டாமை, சாதிய ஏற்ற தாழ்வு, போன்ற சமுதாயக் கொடுமைகளை களைந்தெறிய ஒரு நியாயமான அரசு முன்வர வேண்டும் ,பெண்களுக்கு திருமணங்களில் சம உரிமையும், சொத்துரிமையும், கல்வி உரிமையும் வழங்க வேண்டும். அந்த முயற்சிக்கு மதத்தின் பெயரால் மதச்சடங்குகள் மற்றும் புனித்த்தின் பெயரால் முட்டுக் கட்டை போடுவதை ஒருபோதும் மக்கள் சகித்துக் கொள்ளக்கூடாது என்று முழங்கினார் அம்பேத்கர். நாகரீக சமுதாயமாக மாறவே நாம் விடுதலையடைந்தோம் , அவ்வாறிருக்க மக்கள் ஏன் தங்களை முழுமையாக கேள்வி ஏதுமின்றி மதத்திடம் ஒப்படைத்துள்ளனர் என்பது எனக்கு விளங்கவில்லை என அங்கலாய்த்தார் அம்பேத்கர்.
அரசியல் வழிகாட்டு நெறியெல்லாம் அரசு ஏற்றுக்கொண்டாலும், அனைத்து மக்களும் அதை உளமார ஏற்றால்தான், நடைமுறை படுத்த இயலுமே அன்றி, அரசு ஒரு போதும் பொது சிவில் சட்டத்தை திணிக்கலாகாது என்று கூறினார் அம்பேத்கர்.
ஆனால், வழக்கம்போல் அம்பேத்கர் சொன்னதில் ஒரு பாதியை பிடித்துக் கொண்டு பா ஜ கவினர் ‘’அம்பேத்கரே சொல்லி விட்டார் எனவே, நாங்கள் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதில் என்ன தவறு?’’ என கேட்கின்றனர்.
”இஸ்லாமிய பெண்டிரையும் , பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியப் பிரிவினரையும் விடுவிக்கத்தான் மோடி பொது சிவில் சட்டம் கொண்டு வருகிறார் . ஓட்டு வங்கி அரசியலுக்காகவே எதிர்கட்சிகள் இம் முயற்சியை எதிர்க்கின்றன’’ என்று சங்கிகள் கூவுகின்றனர்.
இந்த பிரச்சினையை கையிலெடுப்பதன் மூலம், இந்து முஸ்லீம் என்ற மதவாதம் மேலோங்கி இந்துக்களின் வாக்குகளை வளைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் மோடி.
இந்து பெண்களின் விடுதலைக்கும், உரிமைக்கும் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத இந்த சனாதனவாதிகள், ஆணாதிக்க வெறியர்கள் இஸ்லாமிய பெண்களை பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பது நகைப்பிற்கிடமானது.
‘முத்தலாக் ‘ முறை செல்லாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் விவாக ரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்களை கிரிமினலாக்கி சட்டம் இயற்றியவர்கள், இந்து பெண்களின் விவாக ரத்து உரிமை பற்றியோ திருமணம் மூலம் நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றியோ வாய் திறக்காதது ஏன்?
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறை பாதுகாப்பு சட்டவிதிகளை (498A and POSCO) தளர்த்த வேண்டும் என்று கூறிவரும் இந்து பெரும்பான்மையினர் பற்றி பாஜக வாய்மூடி இருப்பதும் , இவர்களும் இவரது இந்துத்வ நண்பர்களும் ஒரு பால் (Gay marriages) திருமணத்தை
வெறுப்பதும் அவர்களது உரிமைகளை ஒதுக்குவதும் என்ன நியாயம்?
முதலில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் “இந்துக்கள்” மத்தியில் நிலவும் திருமண முறைகளை (தாய் மாமனை மணத்தல் போன்ற முறைகளை) ஒரே முறையாக மாற்ற முடியுமா சங்கிகளால்? அல்லது கோவில் கருவறைக்குள்ளே யார் யார் நுழையலாம் என்று தீர்மானிக்கிற உரிமையை கோவில் பூசாரிகள் விட்டுவிடுவார்களா?
‘கனகசபை’ யில் யார் ஏற வேண்டும் என்பதையும் எப்போது இறைவனை வேண்டலாம் என்பதையும் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கூறுவது இச்செவிடர்களுக்கு கேட்கவில்லையா? இதிலெல்லாம் முதலில் ஒற்றுமையை , ஒரு உயரிய ஒழுங்கை ஏற்படுத்த திராணி இல்லையாம்!இவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காக பொது சிவில் சட்டத்தை கொண்டு வரத் துடிக்கின்றனர் என்றால், யார் நம்புவர்?
திருமணச் சட்டங்களில் சாதி மத வேறுபாடுகள் களையப்பட்டால் சாதி, மதங்களை பற்றி விண்ணப்பங்களில் கேட்கமாட்டீர்களா? அப்படியானால், மத மாற்ற தடை சட்டம் அப்பொழுது இருக்குமா இருக்காதா?
வட கிழக்கில் வாழும் பழங்குடியினரை இந்த பொது சிவில் சட்டத்திற்குள் அடைக்க முடியாது என்பது தெரிந்த பின்னர், அங்குள்ள பா ஜ கவினரே இப்போது இந்த பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிப்போம் என்று நீட்டி முழக்குவதின் பொருள் என்ன?
பஞ்சாபில் வாழும் சீக்கியரிடம் என்ன கூறப்போகிறது பா ஜ க?
குஜராத்,சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வாழும் ‘கோண்ட் ‘போன்ற பழங்குடியினரிடம் மோடி கும்பல் என்ன கதை அளப்பார்கள் ?
இவர்களுக்கெல்லாம் விதிவிலக்கென்றால் இம்சை இஸ்லாமியர்களுக்கு மட்டுந்தானா?
2018ம் ஆண்டு 21வது சட்ட ஆணையம் இந்த பொது சிவில் சட்டத்தை விலாவாரியாக பரிசீலித்து, கிட்ட தட்ட 80,000 தரவுகளை அலசி, ஆராய்ந்து சில உண்மைகளைக் கூறியுள்ளது.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை ஒப்புக்கொள்ளும் மகளிர் அமைப்புகள் பலவும், தங்களின் மத அடையாளத்தையும் முக்கியமானதாக கருதுகிறார்கள்!
மேலும், அவர்களுக்கு மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த தன்னுரிமை சட்டங்கள் (personal law) ஒரு சுதந்திரத்தை கொடுக்கின்றன என்றும், அந்த சுதந்திரம் அவர்களுக்கு அவர்கள் விரும்பும் மத்த்தை பின்பற்ற உதவுகிறது என்றும் கருதுகிறார்கள். எனவே, இதை மாற்றுவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதே அந்த உண்மைகள் ஆகும்.
எனவேதான் அந்த 21வது சட்ட ஆணையம் (Law Commission) ‘’இந்த பொது சிவில் சட்டம் அவசியமற்றது மட்டுமல்ல, விரும்பத் தகாததும் கூட’’ (UCC is neither necessary nor desirable) என கருத்து தெரிவித்துள்ளது.
உலகில் காணப்படும் அனைத்து மதங்களும் இங்கு பின்பற்றப்படும் நிலையில், பல்வேறு கலாச்சார வேறுபாடுகள் நிறைந்த இந்த மக்கள் திரளில், பல மொழிகளையும், அடையாளங்களையும் தன்னகத்தே வைத்துள்ள பல இனங்கள் வாழும் இந்நாட்டில் மக்களனைவரும் ஒரே வார்ப்பில் தான் இருக்க வேண்டுமா?
என்ன அவசியம் அதற்கு? என்ன தேவை அதற்கு ?
எதற்காக ஒரே நாடு, ஒரே அச்சு என்று இந்த பாவிகள் கூக்குரலிட வேண்டும்?
வழிகாட்டும் நெறிமுறைகளிலேயே இதை சொல்லியிருக்கிறது அதற்காக முயற்சிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்? இந்த நாடு இருவேறு சட்டங்களை வைத்துக் கொண்டு முன்னேற முடியுமா என்றெல்லாம் மோடி கும்பல் புலம்புவதும் ஒரு காரணத்திற்காகத் தான்.
வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றில் முக்கியமானது செல்வம் ஒரு சிலரிடம் குவிவதை தடுப்பது, சமமான உழைப்பிற்கு சம்மான ஊதியம் அளிப்பதை உறுதி செய்தல்,
நாட்டு மக்களுக்கு வாழ்வுரிமைகளை பாதுகாத்து உறுதி செய்தல், நாட்டு மக்களுக்கு சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதியை பெற்றுத் தருதல் அதை உறுதி செய்தல் சமுதாயத்தில் உள்ள ஏழை பணக்காரன் இடையே உள்ள ஏற்ற தாழ்வை குறைத்தல் போன்ற இந்த நெறிமுறைகளை காக்க அல்லது நடைமுறைபடுத்த இந்த மோடி அரசு இந்த ஒன்பது ஆண்டுகளில் என்ன செய்தது?
பொது சிவில் சட்டம் கொண்டுவருவதில் ஏன் இந்த ஓர வஞ்சனை? அவசரம்?
சட்ட ஆணையம் தேவையற்ற முயற்சி என ஒதுக்கிய பிறகும், அரசியல் ஆதாயங்களுக்காக இச்சட்டத்தை கொண்டுவர பா ஜ க முயல்கிறது. நாடாளுமன்ற மேலவையில் பா ஜ க எம்.பி. யின் தனி நபர் தீர்மானமாக ஒரு கோரிக்கையும் கடந்த மாதத்தில் வைக்கப்பட்டது; நாடாளுமன்ற சட்ட நிலைக் குழுவில் இதை விவாதிக்க, அதன் தலைவர் (சுஷில் குமார் மோடி-பா ஜ க ) முயற்சிகள் எடுக்கிறார் , ஒருவழியாக தேவையற்றது என சட்ட கமிஷன் கூறியதை மீண்டும் விவாத்த்திற்கு எடுத்துக் கொள்ளவே இத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.
தங்களுடைய தன்னுரிமை சட்டங்களில் மாற்றங்களை கொணரும் சீர்திருத்தங்களை இந்துக்கள்-பா ஜ க மறுப்பதும், அவை மதத்தின் புனிதத்தையே கெடுத்துவிடும் என்று எதிர்ப்பதும், அதே சமயம் இஸ்லாமியர்களின் தன்னுரிமை சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது நாட்டிற்கு அவசியம் , முன்னேற்றத்திற்கான தேவை என்று கூறுவதும் இரட்டை நிலை அல்லவா?
மேலும், ஒரு சமூகத்திடம் கத்தி முனையில் தன்னுரிமை சட்டங்களில் மாற்றம் கொண்டுவர இயலுமா? சீர்திருத்தம், மாற்றம் எல்லாம் இயல்பாக உள்ளிருந்தே கிளர்ந்து எழுந்தாலே விடிவு பிறக்கும் , வாள் முனையில் அல்ல.
ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமிய வெறுப்பு ஒன்றையே விதைத்து நாடெங்கிலும் இஸ்லாமியரை ஒதுக்கி பதட்டத்தில் வைத்திருக்கும் பா ஜ க , அவர்களுக்கெதிராக குடியுரிமை சட்டம், லவ் ஜிகாத் சட்டம், மத மாற்ற சட்டம், பசு வதை தடுப்பு சட்டம் என பல்வேறு ஆயுதங்களை ஏவி ஒடுக்க நினைக்கும் பா ஜ க , அவர்களை தேச துரோகிகள் என்றும், அப்பா ஜான்கள் என்றும் ஏளனம் பேசும் பா ஜ க, அவர்கள் வீடுகளை புல் டோசர் மூலம் தரை மட்டமாக்குவதை கொள்கையாக கொண்ட பா ஜ க, அவர்கள் இறை வழிபாடு செய்வதையே தடுத்து நிறுத்தி விரட்டியடுக்கும் சங்கிகள், ராம நவமி, அனுமன் நவமி என்ற பெயரில் ஊர்வலம் நடத்தி இஸ்லாமியர் வாழ்விடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பா ஜ க ,ஆர .எஸ்.எஸ். கும்பல்..,
இன்று,
இஸ்லாமியர் முன்னேற்றத்திற்காக நன்மைக்காக இந்த பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார்களாம் , நம்ப முடிகிறதா?
முதலில் இவர்கள் வாய்சவடாலை விடுத்து, பொது சிவில் சட்ட முன் வடிவை வெளியிட்டால் இவர்களது சாயம் வெளுத்துவிடும்.
2024 தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற பகீரத முயற்சியில் இச்சட்டத்தின் மூலம் இந்து முஸ்லீம் கலவரங்கள் வெடித்தால் இந்துக்களின் வாக்குகளை பெருமளவு அள்ளலாம் என்ற கணக்கில் நடக்கும் முயற்சி இது.
வேற்றுமைகளும்,வெவ்வேறு அடையாளங்களும் அழிவைத் தருவதில்லை , மாறாக நமது நாட்டிற்கு அழகு சேர்க்கிறது . எனவே, நாம் நாமாக இருந்து நேசக்கரம் நீட்டுவோம். சக வாழ்வு வாழ்வோம். இதுவே இன்றைய தேவை.
கட்டுரையாளர்;ச.அருணாசலம்
- அறம் இணைய இதழ்