இன்னும் எத்தனை காலமோ? இந்த அரசியல் நாடகங்கள்! - சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

”திமுகவை ஒழித்துக் கட்டுவதே எங்கள் இலக்கு” என்று பாஜக சொல்கிறது!
”பாஜகவை ஒழித்துக் கட்டி தமிழகத்தை காப்பாற்றுவதே எங்கள் லட்சியம்” என்கிறது திமுக!
உண்மையில் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் வாழ வைத்துக் கொள்ளவே இவ்விதம் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்தக் கருத்து பலருக்கு முட்டாள் தனமாகத் தெரியும். ஆனால், இதுவே யதார்த்தம்.
ஒருவரை பற்றி அடிக்கடி பேசுவதன் மூலம் நீங்கள் அவருக்கு மிக முக்கியத்துவம் தருகிறீர்கள்..! அவரை மக்கள் மறந்துவிடாதபடிக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறீர்கள். அவர்களை எதிர்ப்பதால் தான் உங்கள் இருப்பு அர்த்தமாகிறது எனும் போது அவரை அழித்துவிடும் போது, உங்கள் தேவையே மக்களுக்கு இல்லாமல் போய்விடுமோ என பதறுகிறீர்கள்! ஆகவே, அந்த எதிரி தொடர்ந்து பலமான கோலோச்சி உங்களை வாழ வைக்க வேண்டும் என உங்கள் அந்தரங்கத்தில் ஒரு விருப்பம் மறைந்து கொண்டு இருக்கிறது. சமயங்களில் அது வெளிப்படையாகவும் வெளிப்பட்டுவிடுகிறது.
இதுவே திமுக, பாஜக இருவரின் நிலைமையுமாகும். ‘உனக்கு நான், எனக்கு நீ’
திமுகவின் பாஜக பாசத்தை சொல்ல வேண்டுமென்றால், பிரதமர் மோடியைக் அழைத்து தமிழகத்தில் பல விளையாட்டு நிகழ்வுகளை நடத்தியது, கலைஞர் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கொண்டு வெளியிட்டது. தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி ஆகியோர்களின் சட்ட விரோத செயல்பாடுகளை வேடிக்கை பார்ப்பது, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை ஆதரித்து ஊர்வலம் நடத்தியது என ஒரு டஜனுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன…!
அதே போல பாஜகவின் திமுக மீதான பாசத்தை சொல்ல வேண்டுமென்றால், திமுக ஆட்சியில் நடக்கும் வரைமுறையற்ற ஊழல் முறைகேடுகள் போன்றவற்றை சும்மா ரெய்டு நடத்திவிட்டு, உரிய நடவடிக்கை இல்லாமல் அமைதி காப்பதாகும். உண்மையான எதிரியை பாஜக விட்டு வைக்காது என்பதற்கு லாலுபிரசாத் யாதவுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்ந்து குடைச்சல் தந்து சிறையில் தள்ளியதே சாட்சியாகும்.
பாஜகவை திமுக வீரியமாக எதிர்ப்பதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அதற்கு ஒரு மரியாதை கிடைக்கிறது. திமுகவின் வாக்கு வங்கி பலப்படுகிறது. தன்னை கடுமையாக எதிர்ப்பதற்காக பாஜக ஒருபோதும் திமுகவை தண்டிப்பதில்லை. ஏனென்றால், எதிர்ப்பெல்லாம் வெறும் பேச்சு அளவில் தானே, ஆட்சி நிர்வாகத்தில் நம்முடைய அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும், திட்டங்களையும் திராவிட மாடல் லேபிளில் திமுக அமல்படுத்திவிடுகிறதே. தேசிய கல்விக் கொள்கை, தொழிலாளர் விரோதச் சட்டங்கள் , விவசாயிகளிடம் நிலங்களை பறித்து கார்ப்பரேட்களுக்கு தருவது, போக்குவரத்து வாகன சட்டத்தின்படி அதிக அபராதங்கள் விதிப்பது, அதானி, அம்பானிகளுக்கு தமிழகத்தில் அதிக தொழில் வாய்ப்புகளைத் தருவது, ( தமிழகத்தின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கே அதானி நிறுவனத்திடம் மிக அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதே)
அவ்வளவு ஏன்? மூன்றாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வுகளை மத்திய அரசு வெளியிட மறுப்பதாக சண்ட பிரசங்கம் செய்து வரும் திமுக அரசு ஐந்தாம் கட்ட ஆய்வு தொடங்கி ஒன்பதாம் கட்ட ஆய்வு வரை இன்று வரை அதிகாரபூர்வ ஆய்வு அறிக்கையை தற்போது வரை வெளியிடவில்லை. நான்காம்கட்ட ஆய்வு அதிமுக ஆட்சியில் அதிகாரபூர்வமாக வெளியானது. எனில், திமுக அரசுக்கு என்ன தயக்கம்? ஏனென்றால் பாஜக விரும்பாததை திமுக அரசு செய்யாது.
பாஜக ஒரு மனிதகுல விரோத கட்சி. மனுநீதியை மீண்டும் செயல்படுத்த துடிக்கும் கட்சி. ஏழை, எளியோரை வதக்கி வாட்டி பணக்காரர்களை வாழவைக்கும் கட்சி. ஆனால், திமுகவிற்கு இந்த நோக்கங்கள் கிடையாது. அதே சமயம் மட்டுமீறிய அளவில் பொதுச் சொத்தை களவாடியதால், பாஜகவிடம் மறைமுகமாக பம்மிப் பதுங்கி எஜமான சேவகம் செய்கிறது. இதன் மூலம் பாஜகவின் கெடு நோக்கங்களுக்கு தன்னையும் அறியாமல் துணை போகிறது.
ஆகவே, பாஜகவை பொறுத்த வரை தமிழக அரசியல் களத்தை திமுக vs பாஜக என்று கட்டமைப்பதே அதன் நோக்கமாகும். இன்றைய நிலைமைகள் தொடர்ந்தால், நிச்சயமாக அதிமுகவை மெல்ல, மெல்ல பாஜக அழித்து விடும், அல்லது ஒரு சிறு கட்சியாக்கிவிடும்.
தற்போதைய நிலவரப்படி, பாஜகவை உண்மையாகவே எதிர்ப்பதற்கு – பாஜகவை அரசியல் தளத்தில் இருந்தே அப்புறப்படுத்துவதற்கு – வீரியம் கொண்டதாக எந்த அரசியல் கட்சியும் இல்லை. ஆனால், அப்படி ஒரு அரசியல் இயக்கம் உருவாக வேண்டியது காலத்தின் தேவையாகும்.
(சாவித்திரி கண்ணன்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/22021/bjp-dmk-politics/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு