இந்தியா- ஐரோப்பா இடையே வழித்தடம்: துருக்கி எதிர்ப்பது ஏன்?
BBC News தமிழ்
ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு நாட்களுக்கு பிறகு துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் தங்களை இதில் சேர்க்காதது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வர்த்தகப் பார்வையில் துருக்கி வலுவான நிலையில் இருப்பது மட்டுமின்றி, மத்திய கிழக்கிலும் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளது, நேட்டோவிலும் துருக்கி அங்கம் வகிக்கிறது. அப்படியிருக்கும்போது இந்தப் பொருளாதாரப் பாதையில் இருந்து துருக்கி விலக்கி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்?
இதனால் துருக்கிக்கு என்ன இழப்பு? இந்த திட்டத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன? மேலும் இது சீனாவை எதிர்கொள்வதற்கான திட்டமா?
இந்தியா ஐரோப்பாவை இணைக்கும் வழித்தடம்
இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா இடையேயான பொருளாதார வழித்தடத்திற்கான பணிகள் எப்போதும் தொடங்கும், எந்த நாடுகள் எவ்வளவு முதலீடு செய்யவுள்ளன, எந்த வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் போன்றவை தொடர்பாக தற்போது எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பின்படி, இந்த திட்டம் இரண்டு வழிகளை கொண்டிருக்கும். ஒன்று இந்தியாவை வளைகுடா நாடுகளுடன் இணைக்கும் கிழக்கு பாதை, மற்றொன்று வளைகுடா நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு பாதை. இதற்காக சாலை, கடல் மற்றும் ரயில் பாதைகள் மேம்படுத்தப்படும்.
கப்பலில் பயணம் நேரம், எரிபொருள் செலவுகளை குறைப்பது மற்றும் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கான இணைப்பை வலுப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வுத் துறையின் பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா இத்திட்டம் பற்றி கூறுகையில், “இந்தப் பொருளாதார வழித்தடத்தின் மூலம் முதலில் மும்பை துறைமுகத்தில் இருந்து கடல் மார்க்கமாக துபாயின் ஜெபல் அலி துறைமுகத்துக்கு சரக்குகள் வந்து சேரும் அங்கிருந்து சாலை வழியாகவோ, ரயில் வழியாகவோ சௌதி அரேபியாவிற்குள் நுழையும்” என குறிப்பிட்டார்.
சௌதி அரேபியாவில் சாலை அல்லது ரயிலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு, பொருட்கள் இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், அது கிரேக்கத்தில் உள்ள பிரியஸ் துறைமுகம் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழையும் என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது, மும்பையில் இருந்து ஐரோப்பாவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அரபிக் கடல், ஏடன் வளைகுடா, செங்கடல் வழியாகச் சென்று சூயஸ் கால்வாயில் இருந்து வெளியேறி மத்திய தரைக் கடலுக்குள் நுழைந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றன.
துருக்கியின் கவலைக்கு என்ன காரணம்?
திட்டத்தில் பங்கேற்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர, வேறு சில கவலைகளும் துருக்கிக்கு உள்ளன.
இந்திய கவுன்சிலில் உலக விவகாரங்களுக்கான மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக் இது தொடர்பாக கூறுகையில், “இந்தப் பொருளாதார வழித்தட திட்டத்தில் அமெரிக்கா பிரதானமாக உள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு (பிஆர்ஐ) மாற்றாக இதை உருவாக்குவது குறித்து பேசப்படுகிறது. இது சீனாவுடன் நல்லுறவு கொண்ட நாடுகளான ஈரான், துருக்கி, எகிப்து போன்றவைகளுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய தரைக் கடலில் துருக்கி ஆதிக்கம் செலுத்துகிறது, அந்தப் பகுதியில் வேறு எந்த நாடும் ஆதிக்கம் செலுத்துவதையும் தனது முக்கியத்துவம் பலவீனமடைவதையும் அது விரும்பவில்லை. தற்போதைய பாதை பொருளாதார வழித்தடமாக இல்லாமல் புவிசார் அரசியல் வழித்தடமாக மாறிவிடும் என்று துருக்கி அஞ்சுகிறது.”என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை என்பதோடு இந்தப் பிராந்தியத்தில் இருக்க விரும்புகிறது என்பதே இதன் பொருள்.
இது அமெரிக்காவின் திட்டமாக இருக்குமோ என்று பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யாவும் சந்தேகிக்கிறார்.
“சௌதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ராஜாங்க உறவுகள் இல்லை, ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது முக்கியமானது என்பதை அமெரிக்கா நிரூபிக்க முடியும். இதை சாக்காக வைத்து இஸ்ரேல் ஜி20லும் சேர்க்கப்படலாம். ” என்றார்.
துருக்கியிடம் இருந்து விலகி இருப்பதன் மூலம் , சௌதி அரேபியா இந்த பிராந்தியத்தில் ராஜாங்க ரீதியில் பலன் பெறும். மேலும் துருக்கியின் 'சரக்கு கையாலும் மண்டலம்' என்ற பிம்பமும் குறையும்.
துருக்கி உடன் ஒத்துழைப்பது எவ்வளவு கடினம்?
துருக்கியின் உதவி இல்லாமல் கூட இஸ்ரேலில் இருந்து கிரீஸுக்கு பொருட்களை அனுப்ப முடியும், ஏனெனில் அது இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் வராது.
பேராசிரியை சுஜாதா ஐஸ்வர்யா இது தொடர்பாக கூறும்போது, “கணக்குப்படி பார்த்தால், நேரடியான வழியே சிறந்தது, அது குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்ளும். நாம் துருக்கியைப் பார்க்கும்போது, அது சற்று உயரத்தில் அமைந்துள்ளது. எனவே, அது கொஞ்சம் கூட பொருந்தாது ” என்கிறார்.
துருக்கியை இந்த திட்டத்திற்குள் கொண்டு வராததற்குப் பின்னால் ராஜாங்க கண்ணோட்டம் மட்டுமல்லாமல், வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்றும் சுஜாதா ஜஸ்வர்யா கூறுகிறார்.
“இஸ்ரேலில் இருந்து துருக்கிக்கும், அங்கிருந்து கிரீஸுக்கும் சென்றடைவதில் மிகப் பெரிய தடையாக இருப்பது சைப்ரஸ் ஆகும், ஏனெனில் துருக்கியுடன் நீண்டகால தகராறு உள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேலும் துருக்கியும் தங்களுக்குள் குழாய் பதிக்க முடியவில்லை” என அவர் குறிப்பிடுகிறார்.
துருக்கிக்கு சைப்ரஸுடன் மட்டுமின்றி கிரீஸுடனும் பதற்றம் உள்ளது. கிழக்கு மத்திய தரைக் கடலில் எரிசக்தி வளங்கள் மற்றும் கடல் எல்லைகளை வைத்திருப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பலமுறை போர் போன்ற சூழ்நிலைகள் எழுந்துள்ளன.
சுற்றியுள்ள நாடுகளுடன் துருக்கிக்கு அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக, அந்நாடு இந்த திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் எதிர்காலத்தில் இந்த சிரமங்களைத் தவிர்க்க முடியும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொருளாதார வழித்தடத்தை அமைப்பது எந்தளவு கடினமானது?
இந்த வழித்தடத்தை அமைப்பதில் சீனாவின் பெல்ட் & ரோடு திட்டம் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்.
துணை சகாரா ஆப்ரிக்க பகுதியில் 38 நாடுகள், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 34 நாடுகள், கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் 25 நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 17 நாடுகள், அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் இருந்து லத்தீன் 18 நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து 6 நாடுகள் என உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளும் சீனாவின் பெல்ட் & ரோடு திட்டத்தின் கீழ் வருகின்றன.
“சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே முன்மொழியப்பட்ட வழித்தடத்திற்கு இடையே சீனா ஏற்கனவே ரயில் பாதையை அமைப்பதால், சாத்தியமான பொருளாதார வழித்தடம் திட்டம் வெற்றுத்தனமாக தோன்றுகிறது. இதனால் புதிய வழித்தடம் அமைப்பதற்கு மீண்டும் ரயில் பாதை தேவைப்படும். அவற்றை அமைப்பது சிரமமானது” என பேராசிரியை சுஜாதா ஐஸ்வர்யா கூறுகிறார்.
“சீனாவையும் நம்முடன் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த திட்டத்தை உருவாக்குவது எளிதாக இருந்திருக்கும், ஆனால், அமெரிக்கா இருப்பதன் காரணமாக அது செய்யப்படவில்லை. சௌதி அரேபியாவும் இந்தியாவும் அமெரிக்காவை முன்னணியில் காண விரும்புகின்றன. ஏனெனில் இரு நாடுகளின் நலன்களும் சீனாவை விட அமெரிக்காவையே அதிகம் பிரதிபலிக்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம், டாக்டர். ஃபஸுர் ரஹ்மான் சித்திக் இந்த திட்டத்தை சீனாவின் திட்டத்தை விட ஜனநாயகப்பூர்வமானது என்றும் நேர்மையானது என்றும் குறிப்பிடுகிறார்.
“பெல்ட் & ரோடு திட்டம் முழுக்க முழுக்க சீனாவுக்கு சொந்தமானது. இந்த திட்டத்தில் உள்ள பல நாடுகளும் சீனாவிடம் கடனில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய வழித்தடம்' பல நாடுகளின் பணத்தை உள்ளடக்கியதாக இருக்கும், மேலும் அது ஜனநாயகமாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
பொருளாதார வழித்தடத்தால் என்ன பலன் கிடைக்கும்?
பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டால், இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு சரக்குகளை கொண்டு செல்வதில் சுமார் 40 சதவீதம் நேரம் மிச்சமாகும் என்றும், போக்குவரத்துக்கான செலவும் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் புதிய வழித்தடம் பல போக்குவரத்து முறைகளை உள்ளடக்கியது என்பதால், ஐரோப்பாவைச் சென்றடைய பல முறை சரக்குகளை ஏற்றி இறக்க வேண்டியிருக்கும் என்று பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா குறிப்பிடுகிறார்.
“முதலில் சரக்குகள் மும்பை துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்று அனுப்பப்படும். பின்னர் துபாயில் அவை கப்பலில் இருந்து இறக்கப்படும். ஒரு டிரக் அல்லது ரயிலில் ஏற்றப்பட்டு பின்னர் இஸ்ரேலை அடையும். அங்கு கப்பலில் ஏற்றப்பட்டு சரக்குகள் ஐரோப்பாவை அடையும். அத்தகைய சூழ்நிலையில், மும்பையில் இருந்து ஐரோப்பாவை அடைவதற்குள், 10 ரூபாய் மதிப்புள்ள பொருளின் மதிப்பு பத்து மடங்கு அதிகரிக்கும்” என்று அவர் கூறுகிறார்.
தற்போது சரக்குகள் ஈரானின் சபஹர் அல்லது பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை அடைந்துவிட்டால், நேரடியாக தரைவழியாக ஐரோப்பாவை சென்றடையும், மீண்டும் மீண்டும் ஏற்றி இறக்க வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பொருளாதார வழித்தடத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இவ்வளவு விரைவாகவே பேசுவது சரியாக இருக்காது என்று ஃபஸ்ஸூர் ரஹ்மான் சித்திக் கூறுகிறார்.
இந்தப் புதிய வழித்தடமானது ‘குளோபல் சவுத்’ பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்
- பிபிசி நியூஸ் தமிழ்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு