தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் “திராவிட மாடல்” அரசு!
செந்தழல் இணையதளம்

சென்னை, தமிழ்நாட்டின் தலைநகர் 86 இலட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரமாக இருப்பதால் தினமும் கொட்டப்படும் ஏராளமான குப்பைகளைச் சுத்தம் செய்து நகரம் தூய்மையாக இருக்க தூய்மைப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை நிறுத்தி விட்டால் “சிங்காரச் சென்னை” சீரழிந்து விடும். ஆனால், இத்தகைய அத்தியாவசியப் பணிகளில் பணியாற்றும் மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம். இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு எப்பொழுதும் செவி சாய்த்ததில்லை.
தினசரியும், பண்டிகைக் காலங்களிலும், மழை காலங்களிலும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களின் நலனுக்காக வீதியில் இறங்கிச் சுத்தம் செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்கள் காலை 4.00 மணிக்கு எழுந்து கழிவுகள், மலங்கள், மருத்துவக் கழிவுகள் என அனைத்தையும் தங்கள் கைகளால் அகற்றி நகரைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். தேசிய விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறை என எதுவும் இவர்களுக்குக் கிடையாது.
ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் தூய்மைத் தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்வது, மலர்த்தூவி மாலை அணிவிப்பது, "FRONT LINE WARRIORS" போன்ற பட்டங்களை அளிக்கின்றனர். இன்னொரு பக்கமோ அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களது வயிற்றில் அடிக்கின்றனர்.
நிரந்தரப் பணி இல்லை, நியாயமான கூலி இல்லை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை, பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு கிடைக்கப் பெறுவதில்லை எனப் பல்வேறு வகைகளில் தூய்மைத் தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்றன.
சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 15 மண்டலங்களில் 2011 காலகட்டத்தில் அதிமுக அரசு 11 மண்டலங்களை ஒப்பந்த முறைக்கு விட்டு விட்டது. தற்பொழுது 05 மற்றும் 06வது மண்டலமாக உள்ள திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் ஆகிய இரண்டு மண்டலங்களும் மாநகராட்சியின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் (National Urban Livelihoods Mission) கீழ் செயல்பட்டு வந்துள்ளது.
ஆனால், தற்பொழுது மாநகராட்சி அந்த இரண்டு மண்டலங்களையும் ஆந்திர மாநிலத்தின் நிறுவனமான "RAMKY GROUP" என்ற நிறுவனத்துடன் ஆண்டிற்கு 270 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் பத்து ஆண்டுகளுக்கு 2700 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. 'ராம்கி' Ramky எனும் நிறுவனத்திற்கு பல மண்டலங்களின் தூய்மைப்பணிகளுக்கான ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி ஏற்கனவே கொடுத்திருக்கிறது . இது ஆந்திராவின் ஜெகன்மோகன்ரெட்டி கட்சி எம்.பியான அல்லா அயோத்தியா ராமிரெட்டி என்பவருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். அதிக சொத்து வைத்திருக்கும் எம்.பி.க்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்.
01.08.2025 முதல் இந்த மண்டலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் புதிய ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த இரண்டு மண்டலங்களிலும் உள்ள தூய்மைத் தொழிலாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமையில், 2021 முதல் தொடர்ந்து தங்களுடைய ஊதிய உயர்வுக்காக போராடி நாளொன்றுக்கு 321 ரூபாய் என்ற இடத்திலிருந்து தற்பொழுது 753 ரூபாய் என பெற்று வருகின்றனர். இவர்களில் தற்பொழுது 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மாத ஊதியம் ரூ.23,000 வரை பெறுகின்றனர். ஆனால், புதிய ஒப்பந்ததாரரின் கீழ் பணியாற்றும் பொழுது இவர்களின் ஊதியம் ரூ.18,000 ஆக குறைக்கப்படும் என ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 01 தேதி முதல், ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும், பணி நிரந்தரப்படுத்த வேண்டும், மற்றும் பணிநேரம் வரையறை செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலுக்கும், பொருளாதாரச் சிக்கல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தூய்மைத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, தொழிலாளர்களை திசை திருப்பி ஏமாற்றியே வந்துள்ளது. பெரும்பான்மையான வாக்குறுதிகள் நடைமுறைக்கு வரவில்லை என்பதே தொழிலாளர்களின் கவலை.
ஒப்பந்த முறைக்கு மாற்றப்படுவதனால் சரியான ஊதியம் கிடைப்பதில்லை என்றும், பணி நிரந்தரம் இருக்காது என்றும், 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பணி கிடைக்காது என்றும் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாது தற்பொழுது பெற்று வரும் ரூ.23 ஆயிரம் இல்லாமல் மாதம் 15,000 முதல் 17,000 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்பதால் தொழிலாளர்கள் இந்த ஒப்பந்த முறையை எதிர்க்கின்றனர். அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவில் உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் வருமானத்தில் ரூ6000 முதல் ரூ 8000 வரை குறையும் என்பது அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பலத்த அடியாக இருக்கும்.
அரசின் பல்வேறு துறைகளில் இந்த நிலைமைதான் நீடிக்கிறது. சுகாதாரத்துறையில் (Health Department) செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், லேப் டெக்னீசியன்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவே இருக்கின்றனர். பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்கள், மதிய உணவுப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், சுகாதார உதவியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவே இருக்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம்(SSA), தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்(RMSA), கஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளி (KGBV), மதிய உணவு திட்டம்(Noon Meal) சார்ந்த பணிகளிலும் பெரும்பாலும் ஒப்பந்தமுறையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
போக்குவரத்து துறையிலும் 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக புதிய நியமனங்களில் ஒப்பந்த முறையே பயன்படுத்தப்படுகிறது. நடத்துநர், ஓட்டுநர், மின் மற்றும் மெக்கானிக் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பணிமனை உதவியாளர்கள் போன்ற பணிகளில் அதிகமாக ஒப்பந்தப்பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மின்வாரிய துறையிலும் இதே நிலைமை தான் நீடிக்கின்றது.
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக அரசு தனது ஆட்சி சமூக நீதிக்கானது, திராவிட மாடல் அரசு எனக் கூறிக்கொள்கிறது. ’எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது தான் எமது திராவிட மாடல்’ அரசின் கொள்கை என மூச்சுக்கு முந்நூறு முறை முழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால் உண்மையில் ஏழைத் தொழிலாளர்கள் இவருடைய ‘எல்லோருக்கும்` என்பதில் அடங்கவில்லை. `எல்லோருக்கும்` என்பதில் முதலாளிகள் மட்டுமே உள்ளடங்கி உள்ளனர். இவர்களுடைய திராவிட மாடல் அரசு முதலாளிய மாடல் அரசுதான். அதனால்தான் தனியார் முதலாளிகளுக்கு ஒப்பந்தங்களை அளித்து பல ஆயிரம் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து வருகிறது. சில முதலாளிகள் கொள்ளையடிக்கவும் கொழுக்கவும் வழிவகுத்து வருகிறது அரசு.
எலும்புத் துண்டுகளுக்காக அலையும் நாய்களைப் போல் உழைக்கும் மக்கள் போராட்டம் எங்கு நடந்தாலும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் ஓடோடி வந்துவிடும். அதுபோலத்தான் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என உறுதி மொழி அளிக்கிறார். இவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் சென்னை மாநகராட்சியில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டது என்பதை அந்தத் தொழிலாளிகள் மறந்திருப்பார்கள் என்ற துணிச்சல்தான் இவர்களை இப்படி நா கூசாமல் பேச வைக்கிறது.
தி.மு.க.வும் எதிர்க்கட்சியாக இருந்த போது இவ்வாறு பல வாக்குறுதிகளை உழைக்கும் மக்களுக்கு அளித்துத்தான் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் தனது வாக்குறுதிகளைக் கிடப்பில் போட்டு விட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுத்து வருகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஓட்டுக்காக மக்களின் நண்பனாக நடிக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் முதலாளிகளின் ஏஜண்டுகளாகச் செயல்படுகின்றன. ஏனென்றால் இது முதலாளிகளின் அரசு.
போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு, நீதிமன்றத்தின் மூலம் போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி செய்தது. எனினும் தொழிலாளர்கள் தங்களுடையை போராட்டத்தில் உறுதியாக இருந்ததால், இரவோடு இரவாக, காவல்துறையைக் கொண்டு போராட்டக் களத்தில் இருந்த தொழிலாளர்களை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் பொழுது ஏராளமான தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர்.
தன்னை கம்யூனிஸ்ட் என்றும், ஏழை மக்களின் நலன் மீது அக்கறை கொண்டவர் என்றும் மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசின் உண்மை முகம் மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டு வருகின்றது. தூய்மை தொழிலாளர்களின் தீரம் மிகுந்த போராட்டமானது ஆட்சியாளர்களின் வர்க்க சார்பை தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளது.
ஆளும் வர்க்கத்தின் சுரண்டலிலிருந்து தங்களின் வாழ்வாதாரங்கள் இந்த அரசால் பாதுகாக்கப்படும் என்ற பொய்யான நம்பிக்கையிலிருந்து தொழிலாளர்களின் விடுபட வேண்டும். தங்களுடைய உழைப்பினால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையைத் தொழிலாளர் வர்க்கம் அறிய வேண்டும்; தம்முடைய உண்மையான பலத்தை அறிந்து தமது தலைமையின் கீழ் ஓர் அரசை நிறுவ வேண்டும். அதன் மூலமே சுரண்டலை ஒழிக்க முடியும். தொழிலாளர் வர்க்கத்தின் நலனும் சமூகத்தில் உள்ள முதலாளிகள் அல்லாத பிற உழைக்கும் மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்; மேம்படும்.
(மாறன்)
செந்தழல் இணையதளம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு