மக்கள் நலனுக்கு எதிரான பட்ஜெட்!

தீக்கதிர்

மக்கள் நலனுக்கு எதிரான பட்ஜெட்!

2024- 25 ஆம் ஆண்டிற்காக ஒன்றிய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. அது உண்மைகளை மறைத்து மக்கள் நலனுக்கு எதிராக, கார்ப்பரேட்களின் நலன் களுக்கு ஆதரவாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை திருப்திப்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

2024-25 ஆம் நிதியாண்டின் நாட்டின் வளர்ச்சி  விகிதம் 8.2 சதவிகிதமாக  உயரும் என நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்திருக்  கிறார். ஆனால் வளர்ச்சி விகிதத்தில் 60 சதவிகி தம் பங்கு வகிக்கும் நுகர்வு விகிதம் பாதியாகக் குறைந்திருக்கிறது. இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு  48 சதவிகிதம் குறைந்திருக்கிறது.  உணவு பணவீக்கம் 9.4 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.  இந்த லட்சணத்தில்  எப்படி வளர்ச்சி விகிதம் மட்டும்  8.2 சதவிகிதமாக உயரும்?  மோசடி புள்ளி விபரங்களால் ஒருபோதும் உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது.

2021- 22 ஆம் நிதியாண்டில் ரூ.2.89 லட்சம் கோடியாக இருந்த  உணவு மானியத்தை மோடி அரசு படிப்படியாகக் குறைத்து, இந்த பட்ஜெட்டில்  ரூ.2.05 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கியிருக் கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.84 ஆயிரம் கோடியை வெட்டியிருக்கிறது. இதே போல் 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ.2.51 லட்சம் கோடியாக இருந்த விவசாயிகளுக்கான உர மானியத்தை வெட்டி சுருக்கி, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.1.64 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ. 87 ஆயிரம் கோடியை குறைத்திருக்  கிறது. இதுதான்  ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது ஒன்றிய மோடி அரசு அக்கறை காட்டும் லட்சணம்.

புதிதாக வேலையில் சேரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.5 ஆயிரமும், வேலை யமர்த்தும் கார்ப்பரேட்டுக்கு ஒவ்வொரு தொழி லாளி வீதம்  ரூ.72 ஆயிரமும் கொடுக்கப்படும் என்பதும் யாரின் நலனை முன்னிறுத்தும் திட்டம்? கடந்த 10 ஆண்டுகளில்  ஒன்றிய மோடி அரசு பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ரூ.17 லட்சத்து 46 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறது. ஒன்றிய அரசிற்குக் கிடைக்கும் நேரடி வருமானம்  மொத்தம் ரூ. 5.74 லட்சம் கோடி. அதில் தனிநபர் வருமான வரி  ரூ. 3.46 லட்சம் கோடி, கார்ப்பரேட்களின்  வருமான வரி ரூ.2.10 லட்சம் கோடி மட்டுமே. அப்படியிருந் தும் சாதாரண மக்களின் நலனை விட கார்ப்பரேட்களின் நலனே மோடி அரசிற்கு முக்கியமாக இருக்கிறது. 

பீகாருக்கு நேரடியாக அதிக நிதி ஒதுக்கீடும், ஆந்திராவிற்குப் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதியை ஏற்பாடு செய்வதாகவும் பட்ஜெட் டில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஆட்சியைத் தக்க வைப்பதற்கே தவிர அந்த மாநில மக்களின் நலன் கருதி அல்ல.

- தீக்கதிர்

https://theekkathir.in/News/headlines/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/emphasis-is-also-placed-on-appeasing-the-parties-supporting-the-regime

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு