கல்வியை மிஞ்சும் திருமண வணிகம்: இந்தியர்களை கடனாளியாக்கும் மணவிழாக்கள்
பிபிசி தமிழ்
அனைத்துக் கண்களும் மும்பையை நோக்கியே உள்ளன. சமூக வலைதளங்களைத் திறந்தாலே பிரகாசமான வண்ணங்களிலான உடைகள், ஜொலிக்கும் நகைகள் என, இந்தியப் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் காட்சி தருகின்றனர். அவர்களது புகைப்படத் தோற்றங்கள் மணிக்கணக்கில் விவாதிக்கப்படுகின்றன.
உலகப் பிரசித்தி பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் மும்பையை முகாமிட்டுள்ளனர். உலகப் பணக்காரர்களுள் ஒருவரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்களில் தான் இவையனைத்தும் நடந்தேறின.
கொண்டாட்டங்களின் உச்சமாக ஜூலை 12-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
தங்கள் செல்வாக்கின் பிரதிபலிப்பாகவும், செல்வத்தின் காட்சி அலகாகவும் சமூகத்துக்கு முன்னால் முன்வைக்க இத்திருமணங்களை இந்தியக் குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. மத வேறுபாடு இல்லாமல், இந்தியாவின் அனைத்துப் பிரிவுகளிலும் இத்திருமணப் பண்டிகை மோகம் ஓர் தனிப்பண்பாடாகவே மாறியிருக்கிறது.
வட இந்திய இந்துத் திருமணங்களில் திருமணத்திற்கு முன்பாக சங்கீத், ஹல்தி போன்ற நிகழ்ச்சிகள் மிக ஆடம்பரமாக நடைபெறுகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகள் அனந்த் - ராதிகா திருமணத்தில் புதிய உச்சத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன. இதைப்போலவே, இஸ்லாமிய திருமணங்களில் மெஹந்தி, நிக்காஹ், வலிமா ஆகிய சடங்குகள் உள்ளன. கிறிஸ்தவ திருமணங்களில் நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கண்ணுக்கு எதிரே தற்போது நடந்துவரும் அனந்த் - ராதிகா திருமணம் குறித்து, 'அம்பானி வீட்டுத் திருமண செலவுகள் பல ஆயிரம் கோடி' என ஊடகங்களில் யூகச் செய்திகள் இடம்பிடித்துள்ளன.
அம்பானி வீட்டுத் திருமணம் என்று அல்லாமல், இந்தியச் சமூகத்தில் திருமணம் என்றாலே, தங்கள் வசதிக்கேற்பவும் பெரும்பாலானோர் பொருளாதாரச் சக்தியை மீறிக் கடன் பெற்றும் ஆடம்பரமாகவே செய்துகொள்ள விரும்புகின்றனர்.
மதம், சாதி, கலாசாரங்களைக் கடந்து திருமணக் கொண்டாட்டம் என்பது இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, கட்டாயமான ஓர் வாழ்நாள் பெருஞ்செலவு. ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் தங்கள் வீட்டுத் திருமணத்தின் போது 'தங்கள் சக்தி' என்ன என அவர்களது சுற்றத்தின் முன்பு நிரூபித்தே ஆக வேண்டும் என்பது ஒரு பண்பாட்டு அழுத்தம் போல உருவாகியிருக்கிறது.
பல லட்சம் கோடி ரூபாய் திருமணச் சந்தை
சமீபத்தில் முதலீட்டு வங்கியியல் மற்றும் மூலதனச் சந்தை நிறுவனமான ‘ஜெஃப்ரீஸ்’ வெளியிட்ட ஆய்வறிக்கை இதைப் பிரதிபலித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களின் வணிகம் 130 பில்லியன் டாலர்கள் (சுமார் 10.7 லட்சம் கோடி) அளவுக்கான பொருளாதாரத்தை உள்ளடக்கியதாக அந்த அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உணவு மற்றும் மளிகைப் பொருள் சார்ந்த வணிகத்திற்கு (56.5 லட்சம் கோடி ரூபாய்) அடுத்ததாக உள்ள இரண்டாவது பெரிய நுகர்வுச் சந்தை. இந்தியாவின் திருமணச் சந்தை மதிப்பு அமெரிக்காவை (5.8 லட்சம் கோடி), விட கிட்டத்தட்ட இருமடங்காகவும், சீனாவை விட குறைவாகவும் (14 லட்சம் கோடி) உள்ளது.
எண்ணிக்கையாகப் பார்த்தால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் முதல் ஒரு கோடி திருமணங்களும், சீனாவில் 70 முதல் 80 லட்சம் திருமணங்களும், அமெரிக்காவில் 20 முதல் 25 லட்சம் திருமணங்களும் நடைபெறுகின்றன.
திருமணம் மீதான பொருளாதார அழுத்தம் இந்தியச் சமூகத்தில் மிக அதிகம் என்பதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சராசரியாக ஒரு திருமணத்திற்கு 12.5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாகவும், அதுவே ஆடம்பரமான திருமணம் என்றால் 20-30 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக ஜெஃப்ரீஸ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சராசரித் திருமணச் செலவு ரூ.12.5 லட்சம் என்பது, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தனிநபர் சராசரியைவிட (சுமார் ரூ.2.4 லட்சம்) ஐந்து மடங்கு அதிகம். சராசரி ஆண்டு குடும்ப வருமானத்தைவிட (ரூ.4 லட்சம்) மூன்று மடங்கு அதிகம்.
மேலும், இந்தத் தொகை, இந்தியாவில் மழலையர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான 18 ஆண்டுகளுக்கு ஒருவரின் கல்விக்கு ஆகும் செலவைவிட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதே அளவீட்டின்படி, அமெரிக்காவில் கல்வியை விடத் திருமணத்திற்கு அரை மடங்கு குறைவாகவே செலவு செய்யப்படுகிறது. இதிலிருந்தே இந்தக் கலாசார முரணைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த ஆய்வறிக்கையானது, ஏற்கெனவே உள்ள தரவுகள் மற்றும் திருமணம் சார்ந்த மையங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரத் திருமணங்கள் குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர குடும்பங்களின் மீது முடியாதச் சுமையை ஏற்படுத்துகின்றன.
மீளமுடியாத கடன் சுழல்
சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவுக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பு 22 வயதில் நிறைய செலவுகள் செய்து ‘ஆடம்பரமாக’ திருமணமான போது “எல்லாம் நன்றாகவே இருந்தது.”
ஆனால், அதனால் ஏற்பட்ட கடன் வலையிலிருந்து வெளியேற தன் பெற்றோருக்கும் கணவருக்கும் சுமார் 10 ஆண்டுகளானதாகக் கூறுகிறார் கார்த்திகா.
2014-ஆம் ஆண்டில் திருமணமான போதே, மண்டபம் மற்றும் சாப்பாடு செலவுகளுக்காக மட்டும் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவானதாகக் கார்த்திகா கூறுகிறார். “திருமணத்திற்குத் தயாரான போது எல்லாம் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது, மேக்கப், உடைகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்துச் செய்தோம்” என ஆரம்பிக்கிறார் கார்த்திகா.
“என்னுடையது காதல் திருமணம். இருவருக்குமே அப்போது 22 வயதுதான். எங்களுடையது குறைந்த வருமானம் கொண்ட குடும்பம் தான். என்னை அப்பா பொறியியல் படிக்க வைத்தார். அதற்கே நிறைய செலவு செய்தார். நானும் என்னுடைய கணவரும் திருமணத்திற்கு முன்பு முதன்முறையாக வேலைக்குச் சென்றதால், 20,000 ரூபாய்க்குள் தான் எங்கள் இருவரின் சம்பளமும் இருந்தது. அதனால் சேமிப்பு இல்லை. என் திருமணத்தை நன்றாக நடத்த வேண்டும் என அப்பா 7 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தார். என் கணவர் தனியார் வங்கியிலிருந்து மூன்று லட்சம் தனிநபர் கடன் வாங்கியிருந்தார்,” என்கிறார் அவர்.
கணவர் வாங்கிய மூன்று லட்ச ரூபாய் கடனை அடைக்க முடியாமல், வட்டி எல்லாம் சேர்த்து 2022 -ஆம் ஆண்டில் தான் ஆறு லட்ச ரூபாயாக கடனை அடைத்ததாகக் கூறுகிறார் கார்த்திகா. இந்தக் கடனை அடைக்க மேலும் ஒரு கடன் - அதை செலுத்த மற்றொரு கடன் என ஒரு கடன் சுழற்சியிலேயே தங்கள் திருமணத்தின் முதல் சில ஆண்டுகள் சிக்கிக் கொண்டதாகக் கூறுகிறார் அவர்.
“இடையில் கொரோனா காலத்தில் ஐ.டி. துறையில் இருந்த என் கணவரின் வேலையும் போய்விட்டது. பின்னர் ஓராண்டுக்குப் பின்னர் அவருக்கு வேலை கிடைத்தபோதுதான் கடனைத் திருப்பிச் செலுத்த முடிந்தது. இந்த ஒரு கடனால், எங்களால் வீடு வாங்க முடியவில்லை, வங்கியில் சிபில் ஸ்கோரும் மிகவும் அடிவாங்கியது,” எனக் கூறுகிறார் கார்த்திகா.
கார்த்திகாவின் திருமணத்திற்காகக் கடன்பட்ட அவரது பெற்றோர் அதிலிருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கையில், கடந்த 2023 அக்டோபர் மாதம் அவருடைய தம்பி திருமணத்திற்காக மேலும் 6 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்தக் கடன் அடுத்த 4-5 ஆண்டுகளுக்குக் கூடத் தொடரலாம் எனக்கூறும் கார்த்திகா, தங்கள் வாழ்க்கையின் பெரும் காலத்தை இப்படிக் கடனிலேயே கழிப்பதாகக் கூறி வருந்துகிறார்.
தான் அனுபவித்த கஷ்டங்களைத் தன்னுடைய இரு மகள்கள் படக்கூடாது, எனவே அவர்களது திருமணங்களை எளிமையாக நடத்த வேண்டும் என்றுதான் விரும்புவதாகவும் அதற்கேற்பத்தான் அவர்களை வளர்ப்பேன் என்பதும் கார்த்திகாவின் ‘திருமணப் படிப்பினை’.
விரும்பிச் செலவிடும் இளைஞர்கள்
திருமணத்திற்காகக் கடன் பெற்று, அதன் வலையிலிருந்து மீள முடியாதவர்கள் ஒரு புறம் என்றால், தங்கள் சேமிப்பின் பெரும்பகுதியை விரும்பியே திருமணத்திற்காக செலவிடுபவர்கள் இன்னொரு புறம்.
சென்னையை சேர்ந்த தினேஷ் தன் திருமணத்திற்காக சுமார் 4-5 ஆண்டுகளாகச் சேமித்த தன்னுடைய சேமிப்பின் 70 சதவிகிதத்தை செலவு செய்யச் சற்றும் தயங்கவில்லை. அவரே திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடும் மற்றும் ஒருங்கிணைக்கும் தொழில் தான் செய்துவருகிறார். நகை, திருமண மண்டபம், மேடை அலங்காரம் என, சுமார் ரூ.30 லட்சம் வரை தனது திருமணத்துக்காகச் செலவு செய்திருக்கிறார் தினேஷ்.
“எங்களுடைய திருமணத்திற்கு முன்பு பல்வேறு சடங்குகள் உள்ளன. அனைத்தையும் ஆடம்பரமாகவே செய்தோம். பெண் பார்க்கும் படலம், ‘பூ வைக்கும் நிகழ்வு’ (திருமணத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கான சடங்கு), நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு என அனைத்து நிகழ்வுகளையும் நன்றாகவே செய்தோம்,” என்கிறார் தினேஷ்.
திருமணத்திற்கு ஃபோட்டோ ஷூட்டுக்கு மட்டும் ரூ.1.5 லட்சம் செலவு செய்திருக்கிறார் அவர். சுமார் 2,000 பேர் வரை விருந்தினர்கள் கூடிய அவருடைய திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில், ஐந்து வேளைகள் வெவ்வேறு வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளன. மியூசிக் பேண்ட், ஹெலிகேம் மூலம் புகைப்படங்கள் எடுப்பது போன்ற நவீன உத்திகள் அனைத்தையும் தனது திருமணத்தில் பயன்படுத்தியிருக்கிறார் தினேஷ்.
ஒவ்வொருவருக்கும் எப்படித் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. “எனக்குப் பெற்றோர் இருவரும் இல்லை. அம்மா, அப்பா இருந்து என் திருமணத்தை எப்படி நிகழ்த்தியிருப்பார்களோ, அப்படி நடத்த வேண்டும் என நினைத்து எந்தக் குறையும் இல்லாமல் திருமணம் செய்தேன். நம் மகிழ்ச்சிக்காக நாம் செலவு செய்துதான் ஆக வேண்டும். என் வளர்ச்சியை நான் மற்றவர்களுக்கு எப்படி நிரூபிப்பது?” என்கிறார் தினேஷ்.
அவருடைய திருமணத்திற்கு ரூ.5 லட்சம் வரை அவருடைய வழிகாட்டி ஒருவர் வழங்கியுள்ளார். அதை மட்டும் திருப்பி செலுத்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.
பெரும் செலவு வைக்கும் நகைகள்
இந்தியத் திருமணங்களில் அதிகச் செலவு வைப்பவை நகைகள்தான். நகைகளுக்கு மட்டும் 35 முதல் 40 பில்லியன் டாலர்கள் (2.9-3.3 லட்சம் கோடி ரூபாய்) வரை நகைகளுக்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது என ஜெஃப்ரீஸ் அறிக்கை கூறுகிறது. ஏழை, நடுத்தர குடும்பங்களில் தங்க நகைகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம், ஆடம்பர திருமணங்களில் வைர நகைகளுக்கும் தரப்படுகிறது.
இந்தியத் திருமணங்களில் வரதட்சணையாகத் தங்க நகைகள் வழங்குவது பல காலமாக தொடர்ந்துவருகிறது. எனவே, திருமணச் செலவுகளில் கணிசமான அளவுக்கு நகைகளுக்கானச் செலவு மணப்பெண்ணின் வீட்டார் மீது சுமத்தப்படுகிறது. கடன் பெற்றோ, மாதச் சீட்டு செலுத்தியோ தங்கள் மகள்களுக்குப் பெற்றோர்கள் நகைகளை வாங்குகின்றனர்.
“என் திருமணத்திற்குப் புதிதாக 8 சவரன் நகைகள் வாங்கினோம். ஏற்கெனவே 7 சவரன் நகைகள் எனக்காகப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்தனர். புதிதாக வாங்கிய நகைகளுக்குச் சுமார் 5-6 லட்சம் ரூபாய் செலவாகியது” என, தினேஷின் மனைவி பவித்ரா கூறுகிறார்.
நகைகளுக்கு அடுத்த இடத்தில் உணவு வருகிறது. சுமார் 24 முதல் 26 பில்லியன் டாலர்கள் (1.9-2.1 லட்சம் கோடி ரூபாய்) வரை திருமணங்களில் பரிமாறப்படும் உணவுக்காகச் செலவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகள், உடைகள், அலங்காரம், புகைப்படங்கள் உள்ளிட்ட செலவுகள் திருமணங்களை ஆக்கிரமித்துள்ளன.
இப்போது பெரும்பாலான திருமணங்களில் டி.ஜே., ஃப்ளோர் டான்ஸ் என வந்திருக்கும் விருந்தினர்களும் பங்கேற்கும் விதமான நிகழ்ச்சிகளை நடத்துவது பிரபலமாகி வருகிறது. தவிர, ஃபோட்டோ பூத், செல்ஃபி பூத், 3டி கேமரா என புதிய தொழில்நுட்பங்களைத் திருமணக்கூடங்களில் அமைக்கவும் தற்போது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர்.
இன்னும் சொல்லப் போனால், திருமணத்தையொட்டிப் பல்வேறு கலாசாரங்களில் வீடுகளிலேயே நடத்தப்பட்டு வந்த நலங்கு, சங்கீத், மெஹந்தி, ஹல்தி உள்ளிட்டச் சடங்குகள் இப்போது உறவினர்களைக் கூட்டி மண்டபங்களிலோ, ஹோட்டல்களிலோ நடத்தப்படுகின்றன. குறிப்பாக, சங்கீத், மெஹந்தி, ஹல்தி போன்ற வட இந்திய வழக்கங்களைத் தங்கள் திருமணங்களில் நடத்தத் தென்னிந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறார் திருமண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான தினேஷ்.
‘ஒருநாளுக்காகச் செலவு செய்வது வீண்’
சில இளைஞர்களுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்வதோ, ‘மேக்கப்’ அணிந்துகொண்டு ‘காட்சிப்பொருளாக’ மேடைகளில் நிற்பதோ பிடிக்கவில்லை என்றாலும் பெற்றோர்கள், உறவினர்களுக்காகச் அப்படி செய்ய வேண்டியுள்ளது என்பது, சமீபத்தில் திருமணமான பலரிடம் நான் உரையாடியபோது தெரியவந்தது.
தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இரண்டாம் அடுக்கு நகரம் என்றாலும் அங்கேயே அவருடைய திருமணத்திற்குச் சுமார் 12 லட்ச ரூபாய் வரை செலவாகியிருக்கிறது.
“ஆனால், எனக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்வதில் உடன்பாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் நம் நட்புவட்டம் பெரிதாகிக் கொண்டே போகிறது. அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவிர, மற்றவர்களின் திருமணத்தோடு நம்மைச் சுற்றியிருப்பவர்கள் ஒப்பிடுவார்கள். அதனால்தான் மற்றவர்கள் மெச்சும் அளவுக்கான திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது,” என்கிறார் சதீஷ்.
இந்தியாவுக்குள் திருமணம் என்பதன் கலாசார முக்கியத்துவம், இந்தியாவைத்தாண்டிய சந்தை உருவாக்கத்துக்கான புதிய தொழில் ஆகத்தொடங்கியுள்ளது. கடந்தாண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ‘இந்தியாவில் திருமணம் செய்யுங்கள்’ (வெட் இன் இந்தியா) என அழைப்பு விடுத்தார். திருமணம் செய்வதற்கு வெளிநாடுகளைத் தேர்ந்தெடுக்காமல் இந்தியாவிலேயே திருமணம் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர், உதய்பூர் போன்ற இடங்களில் உள்ள அரண்மனைகள், ஹோட்டல்கள் போன்றவையும், கோவா போன்ற கண்கவர் கடற்கரை பகுதிகளும் பாலிவுட் பிரபலங்கள் முதல் பணக்காரர்களின் விருப்பமான திருமண இடமாக உள்ளது. இப்போது, பல பிரபலங்கள் தமிழ்நாட்டின் மாமல்லபுரம், கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் திருமணம் செய்யும் 'டிரெண்ட்' உருவாகிவருவதாக ‘மேரேஜ் கலர்ஸ்’-யின் திருமண நிகழ்ச்சி வடிவமைப்பாளர் பிரதீப் சந்தர் கூறுகிறார்.
“ஒன்றுமே இல்லாத இடத்தில் ‘செட்’ அமைத்து, அம்பானி திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்தினார். அது டிரெண்டானது. பாலிவுட் நடிகைகள் கடற்கரையோர திருமணங்களை நடத்துகின்றனர். தனித்துவமாக நடத்தப்படும் திருமணங்கள் டிரெண்டாகின்றன. ஹிட்டாகும் படங்களுக்கு ஏற்பத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ‘பொன்னியின் செல்வன்’ தீம், ‘பாகுபலி’ தீம் எனக் கேட்டு அப்படியே வேண்டும் என்கின்றனர்,” என்கிறார் அவர்.
இருந்தாலும் எளிமையாகத் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்து பல்வேறு செலவுகளை குறைத்துக்கொள்ளும் இளைஞர்களும் கணிசமாக உள்ளனர்.
அப்படி ஒருவர்தான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ். “என்னுடையது காதல் திருமணம். நண்பர்கள், சில உறவினர்களின் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்,” என்கிறார் அவர்.
திருமணம் நடந்ததை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த சுமார் 50,000 ரூபாய்க்குள் செலவுகளை அடக்கி எளிமையான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியதாக அவர் கூறுகிறார்.
“திருமணம், வரவேற்பு எனக் கடன் வாங்கி லட்சங்களில் செலவழிப்பதைவிட, அந்த பணத்தை வைத்து வீட்டுக்குத் தேவையானதை வாங்கலாம் என திட்டமிட்டோம். இப்போது வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கியுள்ளோம். ஆடம்பரமாகத் திருமணம் செய்திருந்தால் கடனில் தான் சிக்கியிருப்போம்,” என்கிறார் மனோஜ்.
ஆடம்பரத் திருமணம் குறித்த செய்திகள் அணிவகுக்கும் போதெல்லாம் எளிய திருமணம் தான் நமது உண்மையான பண்பாடு என்றும், பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக்கொள்வது மட்டுமே பழங்கால நடைமுறை என்ற வாதமும் பலரால் முன்வைக்கப்படுறது.
சமூக அழுத்தமும் நுகர்வு கலாசாரமும்
ஆனாலும், பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணங்கள் மூலம் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் கவரப்படுவதாக, டெல்லியில் உள்ள மகளிர் வளர்ச்சி ஆய்வு மையத்தின் இயக்குநர் மணிமேகலை கூறுகிறார்.
“ஆடம்பரத் திருமணங்கள் சமூகத்தில் பரவலாக நிதி சார்ந்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கடன் வாங்கியாவது ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். இப்போதுள்ள இளைஞர்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இது நுகர்வுக் கலாசாரத்தின் நீட்சி,” என்கிறார் மணிமேகலை.
மற்றவர்களின் செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகளைக் கவனிப்பதன் மூலம் தனிநபர்களின் நடத்தையில் ஏற்படும் விளைவுகள் (demonstration effect) காரணமாகவும் இத்தகைய ஆடம்பரத் திருமணங்கள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
“திருமணங்களில் பெண் வீட்டார் திருமணச் செலவுகள், நகைகள், பாத்திரங்கள் முதல் மின்சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வரை வாங்க வேண்டும். இதனால், நிறைய கடன் பெறுகின்றனர். வேலைக்குச் செல்லும் மகள்கள் திருமணமாகிச் சென்றுவிடுவதால், வயதான காலத்தில் பொருளாதாரப் பின்புலமின்றி, அவர்களாகவே கடனை அடைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்,” என்கிறார் மணிமேகலை.
www.bbc.com /tamil/articles/cp3861e3egro
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு