அரசு வேலைகளும் அரசு துறைகளும் அனைத்தும் தனியாருக்கே! “நம்ம ஸ்கூல் திட்டம்” திராவிட மாடலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்!
கவர்ச்சித் திட்டங்கள் மூலம் தனியாரை கமுக்கமாக நுழைக்கும் வேலையை கனகச்சிதமாக திறம்பட திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. - வினவு வலைதளம்
நீண்ட காலமாக அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் உதவியைப் பெற்று சிறு சிறு உதவிகளை பெற்று வந்தன. தற்போது, ஒட்டுமொத்தமாக அரசு இலவசக்கல்வி சேவையை கைக்கழுவி தனியாருக்கு விட்டுவிட்டு செல்வதற்கான உச்சக்கட்ட நடவடிக்கையே “நம்ம ஸ்கூல் திட்டம்”.
பள்ளிக்கல்வித் துறையின் நம்ம ஸ்கூல் திட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் படித்து பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்த மாணவ – மாணவியர், தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்கள், தொழிற்சாலைகளை நிறுவியவர்கள், சமூக அக்கறைகொண்ட முன்னாள் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளப்படும். சமூக பொறுப்புணர்வு நிதி என்னும் சி.எஸ்.ஆர் நிதியை கொண்டு அரசு பள்ளிகளை மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட, நபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் பள்ளி சுற்றுச்சுசுவர், பள்ளிகளுக்கு சுண்ணாம்பு அடித்தல், கணினிகள், சுகாதரமான கழிப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் உருவாக்குதல், நூலகங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர், “நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெரு நிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள்; தமிழ்நாட்டின் தொழில்துறையில் முன்னிலையில் இருக்கும் வேணு சீனிவாசன் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் தலைவராகவும், தூதுவராக விஸ்வநாதன் ஆனந்த் இருப்பது நமக்கு கிடைத்த பெருமை” என்று கூறியுள்ளார்.
பள்ளிக்கூடங்கள் மட்டும் அரசு பெயரில் இயங்கும். பள்ளிக் கட்டிடம், குழந்தகளைத் தவிர அனைத்தும் தனியாருக்கே தாரைவார்த்துள்ளது. சமீப காலமாக பள்ளி ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையிலே நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அறிவித்துள்ள திட்டத்தின்படி, பள்ளி மேம்பாட்டு பணிகளும் முழுமையாக முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு விட்டுவிட்டால் கல்வித்துறை எதற்கு? கல்வித்துறை அதிகாரிகள் எதற்கு?, கல்வித்துறை அமைச்சர் எதற்கு?, இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு?.
தொழிலாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிய கார்ப்பரேட் முதலாளியை தலைவராக நியமித்து இத்திட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கம் கல்வி சேவையாக வழங்குமா? இல்லை, கல்வி வியாபரமாக வழங்குமா? என்ற கேள்வியே எழுகிறது. இத்திட்டத்திற்கு தலைவராக இருக்கக்கூட தகுதியில்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள் தான் தமிழக அரசிடம் உள்ளனரா?.
டி.வி.எஸ் நிறுவனம் அதன் தொடக்கக் காலம் முதலாக தொழிலாளி விரோத, தொழிற்சங்க விரோத போக்கோடு தான் நடந்துக்கொண்டிருக்கிறது. டி.வி.எஸ் குழுமத்தின் கிளையான ஆக்சில்ஸ் நிறுவனத்தில் வேலைநீக்கம் போன்ற நடவடிக்கைக்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வந்துள்ளன. டி.வி.எஸ் ஐய்யங்கார் குழுமத்தின் நடைமுறை தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவது தான்.
இந்த உழைப்பு சுரண்டலின் அடையாளமான வேனு சீனிவாசனுக்கு தான் நம்ம ஸ்கூல் திட்டத்தை நடத்த சொல்லியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
***
தமிழகத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசும் மாநில அரசும் நிதியை ஒதுக்கி பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்தி வருவது தான் நடைமுறை. 1990ம் ஆண்டிற்கு முன்னால் கல்வி, குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் போன்றவை முழுமையாக அரசு நடத்தி வந்தது. அது, 1990ம் ஆண்டிற்கு பின்னால் கொண்டுவரப்பட்ட தனியார்மயமாக்கும் மறுகாலனியாக்க கொள்கையை படிப்படியாக அமல்படுத்த தொடங்கியது. அதன் தொடக்கக் கட்டத்தில் அரசு + தனியார் கூட்டு நடவடிக்கையில் தொடங்கி, இறுதியாக முழுமையாக தனியாரிடம் ஒப்படைப்பதே இலக்கு.
இந்நிலையில் தான் அரசின் பங்களிப்பு மட்டுமல்லாமல் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்பட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது ஏதோ ஒரு நாளில் வந்த முடிவல்ல அரசு பள்ளிகளை முழுமையாக தனியாருக்கு கொடுப்பது தான் அரசின் நோக்கமே.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் சிலர் மட்டுமே இல்லம்தேடி கல்வி, வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் திட்டம் போன்ற கவர்ச்சித் திட்டங்களை அம்பலப்படுத்தி பேசி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் “என்ன திட்டம் வந்தா நமக்கென்ன, நான் அரசு ஊழியர் அரசுக்கு எதிராக பேச முடியாது, கூடாது” என்று மெளனம் சாதிக்கவே செய்கின்றனர்.
இவை, எதிர்காலத்தில் அரசு பள்ளிகளின் குழந்தைகளுக்கு மட்டும் ஆபத்தல்ல அரசு வேலைகளுக்கும் ஆபத்து என உணர்ந்தவர்களே குரல் கொடுக்கின்றனர். நிரந்த ஆசிரியர் பணியை ஒழித்து ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் பணிக்கான நடவடிக்கையையும் தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது இந்த அரசு. இனி “அரசு வேலைகளோ அரசு துறைகளோ அனைத்தும் தனியாருக்கே” என்ற நிலையே எதார்த்தமாகிவிட்டது.
இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பது மட்டுமே ஒரே வழி. ஆசிரியர்கள் + மாணவர்கள் + பெற்றோர்கள் இணைந்து இத்திட்டங்களை அம்பலபடுத்தும் விதமாக பொதுவில் விவாதத்தை எழுப்புவதே அவசியமாக உள்ளது. கவர்ச்சித் திட்டங்கள் மூலம் தனியாரை கமுக்கமாக நுழைக்கும் வேலையை கனகச்சிதமாக திறம்பட திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
***
திராவிட மாடல் என்ற பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் திட்டத்தை உள்ளடக்கியே வருகின்றன. அதை வெளிப்படையான பெயரில் கொண்டுவந்தால் திமுக ஆட்சிக்கு கலங்கம் வந்துவிடும் அல்லவா. அதனால், கவர்ச்சிக்கரமான பெயரில் திராவிட மாடல் என்ற பெயரால் கொண்டுவரப்படுகின்றன. தேர்தலுக்கு முன்னாலிருந்த கவர்ச்சி திட்ட மயக்கத்திலே இன்னும் பல முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் மீளாமல் உள்ளனர்.
இத்திட்டங்களை விமர்சிக்கக் கூடிய எதிர்கட்சிகளுக்கு தெரியும் ஒன்றிய அரசின் திட்டத்தையே இந்த அரசு அமல்படுத்துமென்று, சிறு அளவில் எதிர்ப்பைக் காண்பித்துவிட்டு கலைந்துவிடுவோம் என்ற மனநிலையே பாஜக’விற்க்கும் அதிமுக’விற்க்கும்.
ஒருவேளை, இந்தத் திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். முக ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளும் எதிர்த்துக் களத்தில் நின்றிருக்கும். ஆனால் இன்றைய நிலை என்ன? எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை நிறுவி வருகின்றன.
சரி, கூட்டணிக்கட்சிகள் கேள்விக்கேட்டால் கூட்டணி தர்மம் சீர்குலைந்துவிடும், சீட்டு பறிபோய்விடும் என்று அச்சத்தில் அமைதிக் காக்கின்றன. மக்களுக்கு எதிரான திட்டத்தை எதிர்க்கும் ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளோ திராவிட மாடல் திட்டம் என்று எதை கொண்டுவந்தாலும் ஆதரவு கொடுத்தாக வேண்டும் என்ற மனநிலையிலே உள்ளனவே அது ஏன்?.
திராவிட மாடல் ஆட்சிக்கு முன் புரட்சிகர அரசியலை பேசியவர்கள் இன்றோ திராவிட மாடல் ஆட்சிக்கு கலங்கம் வராமல் இருக்க ஆலோசகராக செயல்படுகின்றனர். இன்றோ திமுக திராவிட மாடல் ஆட்சியின் சரி, தவறை விமர்சிக்கும் அமைப்புகளோ சொர்பமாகிவிட்டன. இது தான் மிகுந்த அச்சத்திற்குறியதாக உள்ளது. பாசிஸ்டுகள் வளர்வதற்கும் வெற்றிப்பெறுவதற்கும் இவர்களின் மெளனம் சாதகமாகவே அமையும்.
***
மற்ற நாடுகளில் அரசு துறைகளைத் தனியாருக்கு கூவிக்கூவி வித்ததன் விளைவே பொருளாதர நெருக்கடியை சந்தித்து போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தனியார்மய – தாராளமய – உலகமய மறுகாலனியாக்க திட்டத்தை மூர்க்கமாக அமல்படுத்தியவர்கள் யார்? மதவாதம், இனவாதம் பேசும் பாசிஸ்டுகளே. அவர்களுக்கு இன, மத கோட்பாட்டுக்கு கலங்கம் விளைவிக்காத எதையும் செய்வார்கள், ஆக, கார்ப்பரேட் கொள்ளைக்கும் துணை போகிறார்கள்.
நமது நாட்டிலோ வெறும் காவி பாசிஸ்டுகளை மட்டும் எதிர்ப்பதாக ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளவர்களின் கவனத்திற்கு; காவி எதிர்ப்பு தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு மட்டுமே தவிர, இந்த பாசிச கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்ற அல்ல.
நீங்களும் மக்கள் நலனை தூக்கி எறிந்துவிட்டு ஓட்டுக்காக அரசியல் பேசுவதென்றால் திராவிட மாடல் கார்ப்பரேட் கொள்ளையை தற்போது ஆதரிப்பது போலவே ஆதரியுங்கள். பாசிசம் என்பது வெறும் காவி மட்டுமல்ல, கார்ப்பரேட் சுரண்டலையும் உள்ளடக்கியது தான்.
குழலி
- வினவு வலைதளம்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு