பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!

அறம் இணைய இதழ்

பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் பந்தாவாக வலம் வருகிறார்! பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ, அடி, உதை அவமானங்கள்! போராடும் பெண்கள் மீது பொய் வழக்குகள்! ஒரு பாலியல் குற்றவாளியைக் காப்பாற்ற ஒட்டுமொத்த அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யுமா ஒன்றிய அரசு? இப்ப இந்தப் போராட்டம் வேற லெவலுக்கு வந்திருக்கு!

இங்கு செல்வாக்குள்ளவர் தவறு செய்தால், அவருக்கு எதிரான போராட்டங்கள் எல்லாம் செல்லாக் காசுகள் தானா? ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர் என்றால், எத்தகைய குற்றம் செய்தாலும் தண்டனை கிடையாதா..? என பாமரகளும் பேசத் தொடங்கிவிட்டனர்!

விசாரணை, விசாரணை என எத்தனை குழுக்களை அமைப்பார்கள்? ஆனால், அவர்கள் தரும் அறிக்கைகளை ஏன் கமுக்கமாக அமுக்கி விடுகிறார்கள்?  அதுவும், சமீபத்தில்  அமைதியாக பேரணியில் நடந்து வந்த வீராங்கனைகளை காவல்துறை கையாண்ட விதம் நம்மை கண் கலங்க வைத்துவிட்டது. சனாதனத்தின் இயல்பே இது தானோ?

நமது ஆளுநர் ரவியை கேட்டால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிக சீர்குலைந்து விட்டது என்று கூறுவார். அப்போதும் கூட அப்பாவி மக்களின் பற்களை  கொறடாவால் பிடுங்கிய காவல்துறை அதிகாரி பல்பீர்சிங்கை கைது செய்ய வேண்டும் என்று கூற மாட்டார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் வீட்டு சிறுமிகள் இரு விரல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டுவார் ஆளுநர். அந்த தீட்சிதர் வீட்டு சிறுமிகளுக்கு சட்ட விரோதமான குழந்தை திருமணம் செய்யப்பட்டது என்பதை பேச மாட்டார். ஏனென்றால், சனாதன தர்மத்தை காக்க வந்தவரில்லையா?

தீட்சிதர் வீட்டு சிறுமிகள் பற்றி  கவலைப்படும் ஆளுநர் ,கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பற்றி கவலைப்பட மாட்டார் .ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறை ஏதும் இருக்காது.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உலக அளவில் பதக்கங்களை வாங்கிய  புகழ் பெற்ற மல்யுத்த வீராங்கனைகள் நீதி கேட்டு நெடிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்!


இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உலக அளவில் பதக்கங்களை வாங்கிய  புகழ் பெற்ற மல்யுத்த வீராங்கனைகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் பாஜகவின் டெல்லி காவல்துறையால். ஏப்ரல் 23 முதல் டெல்லியில் ஜந்தர் மந்திர் பகுதியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை .

தங்களின் பாலியல் துன்புறுத்தலுக்க்கு காரணமான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பதே மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் கோரிக்கை.

இதைப் பற்றி ஏற்கனவே அறம் இதழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் ஒரு புதிய பரிமாணத்தை -கட்டத்தை -அடைந்துள்ளது. ஆர் எஸ் எஸ் தலைவர் சாவர்க்கர் பிறந்த நாளில் பாராளுமன்றத்தை திறந்த மோடியின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை ,பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அமைதியாக ஊர்வலம் வந்த மல்யுத்த வீரர்களை -வீராங்கனைகளை கைது செய்தது; அவர்களை கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கி  கைது செய்தது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கண்டுத்துள்ளதோடு, ‘பாரபட்சமற்ற விசாரணையை’க் கோரியுள்ளது. மேலும், ”இந்த விவகாரத்தில் 45 நாட்களுக்குள் நியாயமான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்திய மல்யுத்த சமமேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என  ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இவை எல்லாம் ஒரு தனி நபருக்கு சட்ட விரோதமாக  காட்டப்படும் சலுகைகள், சர்வதேச ரீதியில் இந்திய அரசுக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதை காட்டுகிறது.

அவர்களின் போராட்ட பந்தலை ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து அகற்றி தூக்கி எறிந்தது டெல்லி காவல்துறை. மேலும், அந்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடர அனுமதிக்கப் போவதில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் அமைதியாக போராடுவதற்கான அடிப்படை ஜீவதார உரிமை மல்யுத்த வீராங்கனைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் எதிர் கொள்வது என்றும்,  பிரிட்ஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரை போராட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்துள்ளனர். இவர்களின் உறுதிமிக்க போராட்டத்தை காணும் போது, துகில் உரிந்த துரியோதனனுக்கு எதிராக, பாஞ்சாலி வீரச் சபதம் செய்து போராடியது தான் இந்திய மக்களின் நினைவுக்கு வருகிறது. நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்த வீர மங்கைகள் கண்ணீர் சிந்துவதைக் கண்டும், காணாமல் செல்லமாட்டார்கள் இதயமுள்ளவர்கள் என்பது தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது!


முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டு, அதில் பிரிட்ஜ் பூசன் சிங் பாலியல் கொடுமைகளை மல்யுத்த வீராங்கனைகளுக்கு செய்தார் என்ற விவரம் கூறப்பட்டுள்ளது . இருப்பினும் அவர் பிஜேபி-யை சேர்ந்த முக்கியஸ்தர் என்பதால் காப்பாற்றப்படுகிறார். அவர் கைது செய்யப்படுவது இது வரை நிகழவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே, இத்தனை போராட்டங்களும்,  உச்ச நீதிமன்றத்தின் தலையீடும் தேவையாக இருந்தது.

டெல்லி மாநில  அரசின் துணை முதல்வர் சிசோடியா மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் சிறையில் உள்ளார் .அவருக்கு இதுவரை பிணை கூட கிடைக்கவில்லை . சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் வைத்துள்ளது. இந்த இரண்டு அமைப்பும் பிஜேபியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதாவது, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றால், அவர்கள் சிறையில் வைக்கப்படுவார்கள். பாஜகவை சேர்ந்தவர்கள் என்றால், எத்தகைய போராட்டமே நிகழ்ந்தாலும், அவர்கள் எத்தகைய குற்றங்களை செய்திருந்தாலும் கைது செய்யப்பட மாட்டார்கள்.. என்றால், இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? அல்லது சனாதனம் கோலோச்சுகிறதா? என்ற கேள்வி எழுத்தான் செய்யும்!

பிரிட்ஜ் பூஷன் சிங் கைது செய்யப்படவும் இல்லை,  மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் செய்யவும் அனுமதி இல்லை என்ற நிலையில் ஒரு புதிய போராட்ட உத்தியை அவர்கள் அறிவித்தார்கள்.

அவர்கள் உலக அளவில் மற்றும் இந்திய அளவில் பெற்ற பல்வேறு பதக்கங்களை அரித்துவாரில் உள்ள கங்கை நதியில் மூழ்க விட்டு விடுவது என்று முடிவு செய்தார்கள். அதற்காக ஹரித்துவார் சென்றார்கள். பதக்கங்களை கங்கையில் போட்டு மூழ்கடிக்கும்  நிகழ்வை ஒரு போராட்டமாகவே  செய்ய முயன்றார்கள்!.


அவர்களின் போராட்ட நிகழ்ச்சி, இந்தியாவில் உள்ள பலதரப்பாலும் உற்று நோக்கப்பட்டது. மோடி அரசின் விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போராடிய விவசாயிகளுக்கு தலைமை தாங்கிய விவசாய சங்க தலைவர்களில் முக்கியமானவரான திக்காயத் நேரில் சென்று அந்த வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறினார் .விவசாயிகள் சங்கம் இதில் தலையிடும் என்றும், கங்கை நதியில் பதக்கங்களை மூழ்க விடும் போராட்டத்தை ஐந்து நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதற்கிடையில்  மல்யுத்த வீராங்கனைகளின்  கோரிக்கைக்கு நியாயம் கிடைக்க , விவசாயிகள் சங்கம் போராட்டம் உட்பட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். அவரின் வேண்டுகோளை ஏற்று, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

அவர்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு பெருமளவில் திரண்டு வருகிறது.  மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கல்கத்தா நகரின் வீதிகளில் ஊர்வலம் போன செய்தியைத் தொடர்ந்து பெண்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.


அனைத்து மகளிர் அமைப்புக்களும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்க உள்ளன. இந்த அமைப்புகள் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை முன்னிறுத்தி ஜூன் 1 முதல் 3 வரை இந்திய நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள் மூன்று  கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்;

# பிரிட்ஜ் பூசன்  சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

# மல்யுத்த வீராங்கனைகளை  மிருகத்தனமான தாக்கிய டெல்லி காவல்துறையை சேர்ந்தவர்களின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். #  மல்யுத்த வீராங்கனைகள் பேரில் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வைத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் பல அகில இந்திய மகளிர் அமைப்புகள்.

விவசாய சங்கங்களும் , மகளிர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதைப் பார்த்து அவர்களுக்கான ஆதரவு இன்னும் பல்கி பெருக வாய்ப்புண்டு. இது ஒன்றிய அரசுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் கெட்ட பெயரை உருவாக்கிவிடும். ஒரு பாலியல் குற்றவாளியைக் காப்பாற்ற ஒட்டுமொத்த ஆட்சியின் இமேஜும் சரிந்தாலும் கவலை இல்லை என ஒன்றிய அரசு பிடிவாதம் காட்டுமா எனத் தெரியவில்லை.

உயிர் போகும் வரை உறுதியுடன் போராடுவோம் என களம் கண்டுள்ள அவர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். அவர்களின் போராட்டம்  நியாயமான  போராட்டம் என்பதால் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்,முன்னாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

அறம் இணைய இதழ்

aramonline.in /13776/wrestlers-struggle-bjp-govt/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு