ட்ரம்ப் காட்டும் வெள்ளைக்கொடி; ஒத்துழைக்காத சீனா - பரஸ்பர வரி கணக்கின் பின்னணி!

விகடன் இணைய தளம்

ட்ரம்ப் காட்டும் வெள்ளைக்கொடி; ஒத்துழைக்காத சீனா - பரஸ்பர வரி கணக்கின் பின்னணி!

இந்தியாவிற்கு 27%, சீனாவிற்கு 34%, ஜப்பானுக்கு 24% - வரி விகிதங்கள் எப்படி முடிவு செய்யப்பட்டது?

'என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு... சீக்கிரம் எடு'

இது தான் தற்போதைய உலக அரங்கின் நிலை. ஆம்... உலக நாடுகளின் 'பெரிய அண்ணன்' என்ற கூறப்படும் அமெரிக்கா, சீனாவை தவிர அனைத்து நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு பிறகு என ஒத்தி வைத்துள்ளது.

ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்காவின் 'விடுதலை நாள்' என குறிப்பிட்ட ட்ரம்ப், அந்த நாளில் சில நாடுகளை தவிர்த்து அனைத்து நாடுகளுக்குமான பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

சில நாடுகளை தவிர, அனைத்து நாடுகளுக்கு வரி!

சில நாடுகளை தவிர, அனைத்து நாடுகளுக்கு வரி!

வரி விதிப்புகளும், வெள்ளைக்கொடியும்!

'அமெரிக்காவின் மீது அனைத்து நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. அதற்கு பதிலடி தான் இந்தப் பரஸ்பர வரி' என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இது உண்மையும் கூட. பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரி விதித்து தான் வருகிறது.

அவர் வெளியிட்ட பரஸ்பர வரி பட்டியலில் இந்தியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் என நாடுகளின் பெயர்கள் நீண்டன. அந்தப் பட்டியலின் படி, இந்தியாவுக்கு 27 சதவிகித வரியும், சீனாவிற்கு 34 சதவிகித வரியும் விதிக்கப்பட்டது.

வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் 'அமெரிக்க பொருள்களின் மீது வரிகள் கிடையாது' என சமாதனம் பேசத் தொடங்கின. இதை ட்ரம்ப்பும் தனது சமூக வலைதள பக்கத்தில் '75 நாடுகள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்" என்று உறுதி செய்துள்ளார். ஆனால், அது எந்த நாடுகள் என்று அவர் குறிப்பிடவில்லை.

இப்படி முக்கால்வாசி நாடுகள் வெள்ளைக் கொடி பறக்க விட, சீனா மட்டும் கொஞ்சம் கூட இறங்கி வர தயாராக இல்லை. இவ்வளவு ஏன்? ட்ரம்ப் பல முறை வெவ்வேறு விதமாக கூறியும் பேச்சுவார்த்தைக்கு கூட முனைப்பு காட்டவில்லை.

அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கே சீனா ஒரு பரஸ்பர வரி போட்டு அமெரிக்காவின் மீது 84 சதவிகித வரியை விதித்துள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பங்குச்சந்தையும், உலக பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.

ட்ரம்ப்பின் அந்தர்பல்டி

"சில நேரங்களில் மருந்து எடுத்துகொள்ள தான் வேண்டும்" என்று மாஸ் பதில்களை அள்ளி தந்து வந்த ட்ரம்ப், பரஸ்பர வரி அமலுக்கு வர இருந்த நாளில் அந்தர்பல்டி அடித்துள்ளார்.

ட்ரம்ப் கூறிய வரி அமல் நாள் நேற்று. ஆனால், 'உலக சந்தைகளின் மீது அக்கறை காட்டாத சீனாவை தவிர பிற நாடுகளுக்கு அடுத்த 90 நாள்கள் வரையில் பரஸ்பர வரி அமல் ஆகாது. ஆனால், சீனாவிற்கு மட்டும் இந்த வரி உடனடியாக அமலுக்கு வருகிறது. அதுவும் 125 சதவிகிதம்' என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.

அடுத்த 90 நாள்கள் வரையில், ஏப்ரல் 2-ம் தேதி ட்ரம்ப் அறிவித்த 10 சதவிகித வரி அதாவது அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாட்டின் பொருள்களின் மீது 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற வரி விதிப்பு மட்டும் தொடரும். இது கடந்த 5-ம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது.

ட்ரம்ப்பின் வரி எப்படி விதிக்கப்பட்டது?

ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதை மட்டுமே நாம் பெரும்பாலும் பேசிகொண்டிருக்கிறோம். இதற்கு பின்னால் இருப்பது என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விகிதங்கள் அமெரிக்காவில் 2021-ம் ஆண்டு வெளியாகிய “Tariff Pass-Through at the Border and at the Store: Evidence from US Trade Policy” என்ற ஆராய்ச்சி இதழின் படி தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு தரப்பு அறிவித்தது.

இந்த இதழின் இணை ஆராய்ச்சியாளரான பிரெண்ட் நெய்மன் அமெரிக்க அரசின் இந்தக் கருத்திற்கு கடுமையான அதிர்ச்சியை காட்டியுள்ளார்.

இதுக்குறித்து அவர் நாளிதழ் ஒன்றில் , "ட்ரம்ப் இந்த வரி விகிதங்களை அறிவித்த நாளன்று, 'எப்படி இவ்வளவு அதிக வரி விகிதங்களை அறிவிக்கலாம்?' என்று அதிர்ச்சியாக இருந்தது.

இரண்டாவது நாள், இந்த வரி விகிதங்கள் எங்களுடைய ஆராய்ச்சி இதழை வைத்து வரையறுக்கப்பட்டது என்று அமெரிக்க அரசு சொன்னப்போது என்னுடைய அதிர்ச்சி இன்னும் கூடியது.

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் வரி வேறுபடுவதற்கு காரணம் என்ன?

நான் அமெரிக்க அரசின் வரிகொள்கையில் இருந்து முழுவதும் மாறுபடுகிறேன். எங்கள் ஆராய்ச்சிப்படி பார்த்தாலும் வரி விகிதங்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க வேண்டும். இப்போது விதிக்கப்பட்டிருக்கும் வரி விகிதத்தில் நான்கில் ஒரு பங்கு இருக்க வேண்டும்.

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் வரி விகிதங்கள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உண்டு. எந்தப் பொருளை ஏற்றுமதி செய்கிறோம், எந்த பொருளை இறக்குமதி செய்கிறோம், அதன் மூலப்பொருள் என்ன என்பதை பொறுத்தது வரிகள்.

உதாரணத்திற்கு இலங்கையிடம் இருந்து அமெரிக்கா ஆடைகளை வாங்குகிறது. இலங்கை அமெரிக்காவிடம் இருந்து மருந்துகள், எரிவாயு போன்றவற்றை வாங்குகிறது. அதனால், அவற்றின் மூலப்பொருள், நன்மைகள், வளர்ச்சிகள் பொறுத்தே வரி அமைய வேண்டும்.

ட்ரம்ப்பின் வரி சரி என எடுத்துக்கொண்டாலும், பிற நாடுகள் நம் மீது அதிக வரி விதிக்கக்கூடும். பிற நாடுகளின் அமெரிக்காவின் பொருள்களின் விலையை அதிகப்படுத்தும். அதனால், அமெரிக்காவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.

ஆக மொத்தம், ட்ரம்ப்பின் இந்தக் கொள்கை கைவிடப்பட வேண்டும். மேலும், இந்த வரியை நான்கால் வகுத்து விதிக்க வேண்டும்" என்று எழுதியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் எச்சரிக்கை

ட்ரம்ப்பின் இந்த அதிரடி வரி விதிப்பு பெரியளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளதால் தான் தற்போது ட்ரம்ப் வரி விதிப்பை ஒத்தி வைத்துள்ளார் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பிரகடனப்படுத்தி உள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகை, "அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக எதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தால், அதற்கான பலனை சந்திப்பீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த 90 நாள்கள் இடைவெளியில் பிற நாடுகள் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்திகொண்டு, ஒரு நல்ல முடிவை எடுப்பது அனைத்தும் நாடுகளுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்.

பொருளாதார பாதிப்பின் சின்ன உதாரணம்

இந்த பரஸ்பர வரியினால் அமேசான் நிறுவனம் சீனாவில் இருந்து பொருள்களை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது. இதனால் சீனாவில் குறைந்த விலைக்கு கிடைக்கும் பொருள்களை பிற நாடுகளில் இருந்து வாங்க வேண்டியதாக இருக்கும். இதனால், பொருள்களின் விலைகள் கூடும். நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள். நுகர்வு பாதித்தால் பொருளாதாரம் பாதிப்படையும்.

இது சீனாவிற்கு மட்டுமே நடக்கிறது என்றாலும், பரஸ்பர வரி அனைத்து நாடுகளுக்கு அமலுக்கு வரும்போது உலக பொருளாதாரம் பெரும் பாதிப்படையும்.

அந்த ஒட்டுமொத்த பாதிப்பிற்கான இப்போதைய சின்ன உதாரணம் சீனா தான்.

(நிவேதா. நா)

விகடன் இணைய தளம்

https://www.vikatan.com/government-and-politics/policy/us-tariff-shock-all-nations-spared-but-china

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு