அதிமுக - திமுக: இரு ஆட்சிகளும் ஒன்றே! -சிஏஜி அறிக்கையில் அம்பலம்!
அறம் இணைய இதழ்
அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் நிதியை கையாளுவதிலும், எளிய மக்களின் மீதான அக்கறையிலும் எந்த மாற்றமும் இல்லை என்பது கடந்த ஏழு ஆண்டுகால ஆய்வுகளைக் கொண்ட சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. ஆட்சியின் லேபிள் மட்டுமே மட்டுமே மாறியுள்ளது. மற்றபடி இரு ஆட்சியாளர்களுமே கூட்டுக் களவாணிகளே;
இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1000 கோடிக்கும் மேற்பட்ட நிதி செலவழிக்கபடவில்லை. என தெரிய வந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட எளிய மக்கள் வளர்ச்சியில் தமிழக அரசின் அக்கறை இன்மையையும், நிதி மேலாண்மையில் உள்ள போதாமைகளையும் காட்டுகிறது.
சிஏஜி அறிக்கை என்பது சட்டபூர்வமான தரவுகளின் அடிப்படையில் தரப்படுவதாகும். அதாவது, தமிழ்நாடு அரசே கொடுத்துள்ள தகவல்கள், ஆவணங்கள் வழியாகத் தான் அவர்கள் ஆடிட் செய்து ஒரு அறிக்கை தருகிறார்கள்! அந்த வகையில் நடந்த முறைகேடுகளின் ஒரு சிறு பகுதியைத் தான் அவர்கள் வெளியிடுகிறார்கள். ஆயினும், அப்படி தரப்பட்ட சில துளிகளே இவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால், நடந்துள்ள முறைகேடுகளின் அளவு மிகப் பிரம்மாண்டமாகும்! குறைந்தபட்ச சில உண்மைகளாவது இந்த சி.ஏ.ஜி அறிக்கை மூலம் வருகிறது என்பது இன்றைய ஜனநாயக அமைப்பில் ஒரு ஆறுதலான அம்சமாகும்.
அதுவும் இது ஒன்றிய அரசின் நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் துறைகளின் வரவு செலவுக் கணக்கை மட்டுமே சரிபார்க்கும்! . இது மத்திய, மாநில அரசுகளால் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாத தன்னாட்சி அதிகாரம் கொண்ட 58,000 க்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட மாபெரும் அமைப்பு என்பது தான் முக்கியம்!
அது தரும் அறிக்கை வாயிலாக பொதுப் பணம் ஒழுங்காக கையாளப்பட்டுள்ளதா என்ற உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் . தவறு இருக்கிற பட்சத்தில் அரசுகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாகும்!
திமுக அரசு பதவி ஏற்றதும் அன்றைய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்கள் அதிமுக ஆட்சியில் அரசின் நிர்வாக சீர்க்கேட்டால் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் ரூ.34,374 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையின் அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. அவற்றை ஊடகங்கள் கவனப்படுத்தவில்லை என சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதே நிலை தான் தற்போது திமுக ஆட்சியில் உள்ளது. ஆனால், பி.டி.ஆர் நிதி அமைச்சராக தொடர முடியாத நிலையில் நாம் இதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சி.ஏ.ஜி அறிக்கையில் தமிழக போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் கடந்த 7 ஆண்டுகளில் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது. 2017 ம் ஆண்டு ரூ.6,467 கோடியாக இருந்த கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடகா , கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
மின்னணு ஏல செயல்முறைக்கான இலவச இணைய முகப்பை பயன்படுத்தாததால் ரூ. 17.82 கோடி கூடுதல் செலவானதாக சிஏஜி கூறியுள்ளது.
அதேபோல் மருத்துவ பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. தனி வாரியம் இருந்தும் கூட பணியாளர்களை புதிதாக சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28 சதவீத பணிகள் காலியிடங்களாக உள்ளன. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இப்படியான ஊழியர் பற்றாகுறையை தமிழக அரசு கவனத்தில் கொள்வதை தவிர்த்து வருவது கவலையளிக்கிறது.
முன்னதாக மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மின் கொள்முதல் இணைய தளத்தின் மூலம் மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க தமிழக அரசு தவறிவிட்டது. திட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகளான போதும் இந்த மென் பொருளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் பொறுப்புமையம் இல்லை.என இந்திய கணக்கு துறை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதன் விளைவாக மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. இது டெண்டர் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை பாதித்தது. எனவே, அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளுக்கும் மின் கொள்முதல் வலை தளத்தை பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இது தவிர தமிழ்நாடு ஒப்பந்த புள்ளிகள் வெளிப்படைத் தன்மையுடன் கோருதல் சட்டத்தின் விதிமுறைகளில் காலவரம்பு குறித்த விவரங்களை இணைக்கும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்படவில்லை.என்றும் குற்றம் சாட்டியது குறிப்பிடத் தக்கதாகும்.
சாவித்திரி கண்ணன்
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/20130/dmk-admk-govt-are-same-cag/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு