ஈழத் தமிழர்களுக்கு தீர்வானவரா திசநாயக்கா?

மே 17 குரல்

ஈழத் தமிழர்களுக்கு தீர்வானவரா திசநாயக்கா?

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது, “நான் 13 வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன், கூட்டாட்சியை உறுதிப்படுத்துவேன்  என்று கூற இங்கு வரவில்லை. ஒருங்கிணைந்த இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளில் மீட்டெடுப்பது குறித்து பேசவே வந்தேன்” என தமிழர் பகுதிகளில் பேசிய, ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியைச் சார்ந்த அனுரகுமார திசநாயக்கா வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையின் இடதுசாரி கட்சி என கூறப்படும் இக்கட்சி, மக்கள் சக்தி கூட்டணி (NPP) சார்பாக போட்டியிட்டது. தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சியை சார்ந்த சஜித் பிரேமதாசா மற்றும் அனுரகுமார திசநாயக்கா ஆகியோருக்கு இடையில் நடந்த மும்முனைப் போட்டியில், அனுரகுமார திசநாயக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

இத்தேர்தலில், பெரும்பாலான தமிழர்களின் கட்சிகள், 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதாக அறிவித்த சஜீத் பிரேமதாசாவிற்கு ஆதரவு அளிப்பதாக நிலைப்பாடு எடுத்தது. தமிழர் பகுதிகளில் திசநாயக்காவிற்கு பெருமளவில் ஆதரவில்லை. தமிழர்களின் குறைந்தபட்ச தீர்வான 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது ஈழத் தமிழ் கட்சிகளின் கோரிக்கையாகும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது ஈழத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

இந்திய – இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட 13வது சட்டத்திருத்தம் என்பது தமிழர்களுக்கான நிலம், காவல் அதிகாரம், வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு போன்ற குறைந்தபட்ச உரிமைக்கானதே தவிர தமிழர்களின் கோரிக்கைகளுக்கான முழுமையான தீர்வு அல்ல. ஆனால் அதைக் கூட இலங்கையின் மற்ற கட்சிகள் பேச்சளவிலாவது பரிசீலிப்பதாக சொல்லும் போது, ஒரு இடதுசாரி கட்சியை சார்ந்தவரான திசநாயக்கா தேர்தல் பரப்புரை சமயத்தில் கூட எதிர்த்து பேசியது தமிழர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.

மேலும், இந்த திசநாயக்கா தமிழர் பகுதிகளான வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்கும் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டால், அதனை முழுமூச்சுடன் ஜேவிபி எதிர்த்து நிற்கும் என 2010-லேயே பேசியவர். தமிழர் மாகாணங்களின் இணைப்பானது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்கிற நிலைப்பாடு கொண்டது இந்தக் கட்சி. 

இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்பு தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்காக நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்றவர்கள். 2007-ல் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட போது ஜேவிபி கட்சியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் என்பவர் கொழும்பு செய்தியாளர்களிடம் கடந்த வருடம் பேசியிருந்தார்.

இந்திய – இலங்கை அரசுகளால் 1987-களில் முன்வைக்கப்பட்ட 13வது சட்டத்திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை எழுந்த போதே, அதை முற்றிலும் எதிர்த்து வன்முறைகளில் ஈடுபட்டது ஜேவிபி கட்சி. இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் என சிங்கள இளைஞர்களிடையே பேரினவாதத்தை தூண்டி விட்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டது இக்கட்சி. இதனால் இலங்கை அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையே 2 வருடத்திற்கும் மேலாக சண்டை நீடித்தது. இந்த சண்டையில் குறைந்தபட்சம் 50 ஆயிரத்திற்கும் மேலான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

ரோகண விஜயவீரா என்பவரால் 1965-ல் துவங்கப்பட்ட ஜேவிபி கட்சி, 1971களில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சிகள் இணைந்து மக்கள் முன்னணி அரசு என்ற பெயரில் ஆட்சி அமைத்திருந்தன. அந்த ஆட்சியால் ஏற்படும் சீரழிவுகளுக்காக ஆயுதப் புரட்சியை கையிலெடுப்பதாகக் கூறி, ஜேவிபி அமைப்பு அரசுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டது. சேகுவேரா மீது கொண்ட ஈர்ப்பு ரோகண விஜயவீராவை ஆயுதக் கிளர்ச்சிக்கு தூண்டியது.

முதிர்ச்சியற்ற இளைஞர்கள், தெளிவற்ற கோரிக்கை மற்றும் ஒருங்கிணைவுகளில் ஏற்பட்ட தோல்வியால், சிங்கள அரசப் படைகளின் குரூரத்திற்கு ஜேவிபி இலக்காகியது. சிங்கள அரசுப் படைகளுக்கும், ஜேவிபிக்கும் இடையேயான சண்டைகளால் 10,000-க்கும் மேற்பட்ட ஜேவிபி இளைஞர்கள்  கொல்லப்பட்டனர்.

மேலும், 2002-ல் சந்திரிக்கா குமாரதுங்கா ஆட்சியில் அரசுக்கும் – புலிகளுக்கும் இடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தை முறிக்க வேண்டும் என போராட்டம் நடத்திய கட்சி ஜேவிபி கட்சி. கண்டியில் இருந்து கொழும்பு வரை ஆயிரக்கணக்கான சிங்களர்களுடன் பேரணி நடத்தியவர் திசநாயக்கா. இராணுவ ரீதியாக போர் நடத்தினால் மட்டுமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என கூறிய இரண்டு கட்சிகளில் ஒன்று ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுனே), மற்றொன்று ஜேஎம்யு (ஜாதிக ஹெல உறுமய). சிங்களப் பத்திரிக்கையாளர்களே இந்த செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். ஜேவிபியின் மூத்த உறுப்பினரான ’லால்காந்த்’ என்பவரும் இதனை பல இடங்களில் பேசியுள்ளார்.

    அரசுக்கும் – விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நார்வேயை எதிர்த்து, மனித உரிமை செயல்பாட்டாளர்களை எதிர்த்து, தொடர்ந்து 2002-லிருந்து ஐக்கிய நாட்டின் அலுவலகங்கள், தூதரங்கள் முன்பு போராட்டங்களை நடத்திய கட்சியே ஜே.வி.பி.

இலங்கையின் ஒற்றையாட்சியே நிலவ வேண்டும், பௌத்தமே இலங்கையின் தேசிய மதம் என்று பேசிய பௌத்த சிங்கள பேரினவாதியே அனுரகுமார திசநாயக்கா. பெளத்த பிக்குகள் இடையே உரையாற்றும் போதும், இலங்கை அரசியலமைப்பு பௌத்தத்திற்கே முதன்மை இடத்தை வழங்கும் என உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு ஒரு பௌத்தராக, சிங்களத் தேசியவாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திசநாயக்கா இடதுசாரியாகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவர் மட்டுமல்ல, ஜேவிபி மூத்த மற்றும் முன்னணி தலைமைகள், சிங்கள பெளத்த இனவாதியும், பொதுபல சேனா அமைப்பைச் சார்ந்த பெளத்த பிக்குவான ஞானசாகர் போன்றோருடன் நெருக்கமான உறவுகளைப் பேணுபவர்களாக இருக்கிறார்கள். “ஒற்றை மதம், ஒற்றை ஆட்சி என சிங்கள பெளத்த தேசியவாதம் பேசி, தமிழினத்தின் வழிபாட்டு, பண்பாட்டு உரிமைகளைப் புறக்கணிக்கும் கட்சியே ஜேவிபி”.

    ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும், ஜேவிபி போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரைக் கொண்டாடியது. பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டு தமிழர்களைக் கூட வைத்து, கொத்துக் கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளைப் போட்டுக் கொன்ற போர்க்குற்றவாளிகளை தேசத்தின் காவலர்கள் எனப் புகழாரம் சூட்டியது.

போரின் பொழுது உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகள் என ஐநாவினால் அடையாளப்படுத்தப்பட்ட எந்த அதிகாரிகளையும் தண்டிக்க முற்படப் போவதில்லை என ஜேவிபி கட்சி அறிவித்தது. மேலும் சிறுவர்களை பாலியல் கடத்தலில் ஈடுபடுத்தியதாக ஐநாவினால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியான ஜெனரல் அருண ஜெயசேகராவை வெளிப்படையாகவே ஆதரித்தது ஜேவிபி. இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என திசநாயக்கா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்க அவர்களை இலங்கையின் தூதுவர்களாக பல நாடுகளுக்கு அனுப்பியது. அவ்வாறு பாகிஸ்தானின் தூதராக அனுப்பப்பட்ட சம்பத் தூயகொண்டாவை, இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலராக இப்போது நியமித்துள்ளார் திசநாயக்கா.  

இவ்வாறு ஜேவிபி என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றைய தேர்தல் பிரச்சாரம் வரை, தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது. ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அல்லது எதிர்கட்சியாக இருந்து கொண்டு, தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல், இலங்கை ஆட்சி பீடத்தின் சதுரங்க காய்களை தமிழர்களுக்கு எதிராகவே எப்போதும் நகர்த்தியிருக்கிறது.

”அரசுக்கு எதிராக, பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக ஆயுதக் கிளர்ச்சி நடத்திய போது, புலிகளிடம் ஆதரவு கோரியது ஜேவிபி. சிங்கள, தமிழர் பாட்டாளிகள் விடுதலைக்கு இணைந்து பாடுபட வேண்டுமென்றால், தமிழீழக் கோரிக்கையை ஆதரிக்கக் கோரினார்கள் புலிகள். ஆனால் அதனை நிராகரித்தவர்கள் ஜேவிபி கட்சியினர். இந்த செய்தியை உறுதிப்படுத்தியவர் சர்வதேச மனித உரிமைப் போராளியும், சிங்களராக இருந்து தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்தவருமான விராஜ் மெண்டிஸ்”. அவர் சமீபத்தின் இறந்து போனது தமிழ் சமூகத்தின் பேரிழப்பாகும். 

இலங்கையின் இந்தியாவின் தலையீட்டினை எதிர்த்தவர்கள் சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை செயலரை சந்தித்து இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாக உறுதி கூறியிருக்கிறார்கள். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடம் சென்று ஆதரவைக் கோரியிருக்கிறார்கள். உலக வர்த்தக நிதியத்திடம் (IMF) ஒப்பந்தம் செய்து கொள்வதைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

ஒரு இனத்தின் உரிமைப் போராட்டத்தை, அதன் வரலாற்றுப் பின்னணியின் ஊடே பகுப்பாய்வு செய்யும் இடதுசாரித் தன்மையை ஜேவிபி கட்சியினர் அன்றிலிருந்து இன்று வரை கைக்கொள்ளவே இல்லை. தமிழினத்தின் நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளி, சிங்கள உழைக்கும் வர்க்கத்திடமும் தமிழினத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதத்தை வளர்த்து விட்டதில் முக்கியப் பங்கு ஆற்றியவர்கள் ஜேவிபி. இவர்கள் எந்த வகையில் இடதுசாரி கொள்கையாளர்கள்? தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்ட கட்சி, இனி வருங்காலத்தில் எப்படியான தீர்வுகளை வழங்கும் என்பதே என்பதே உலகத் தமிழர்களிடம் எழும்பும் கேள்விகளாக உள்ளன.

- மே 17 குரல்

https://may17kural.com/wp/is-disanayaka-the-solution-for-eelam-tamils/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு