கொலையும் வெறுப்புமே தத்துவமாய்…
ஆர். விஜயசங்கர்
(பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையுண்டிருக்கிறார். இதே போல் கல்புருகி என்கிற சிந்தனையாளர் இதே முறையில் கொல்லப்பட்ட போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-தமுஎகச நடத்திய கண்டனக் கூட்டத்தில் Vijayasankar Ramachandran ஆற்றிய உரை. Vijayasankar Ramachandran அவர்களது facebook பதிவிலிருந்து மிக்க நன்றியுடன் எடுத்துக்கொண்டோம்.)
கல்புருகியின் படுகொலைக்குக் கண்டன உரையாற்றப்போவதில்லை நான். கண்டனங்களும், சூளுரைப்புகளும், அஞ்சலிகளும் அவசியம்தான். ஆனால் அவை மட்டுமே அவசியமில்லை. இந்தப் படுகொலைக்கு பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. சமூக அரசியல் தந்திரம் இருக்கிறது. வெறுப்பை விதைத்து அரசியல் அதிகாரத்தை அறுவடை செய்யும் நுண்ணரசியல் இருக்கிறது. இவற்றைப் புரிந்து கொள்ளாமல், தத்துவார்த்த தளத்தில் எதிர்கொண்டு வீழ்த்தாமல் கல்புருகிகளை உருவாக்க முடியாது. காப்பாற்றவும் முடியாது. இன்று அவர், நாளை நாம் என்று அச்சம் தரும் அரசியல் அரியணை ஏறிவிட்டது. விடுதலைப் போரினை ஒளிந்து நின்று பார்த்த அரசியல் அது. விடுதலைக்குப்பின் காந்தியைக் கொன்ற அரசியல் அது. கொன்றதால் இத்தனை ஆண்டுகள் அரசியல் சட்டத்தின் விளிம்பிலேயே நின்ற அரசியல். அதுதான் இன்று டெல்லி செங்கோட்டையிலிருந்து கொக்கரிக்கிறது.. தேசியக் கொடியை மதிக்காதவர்கள் இன்று காவிக்கொடியுடன் கார்களில் பவனி வருகின்றனர். நேற்றைய ’நடுநிலையாளர்கள்” இன்று வலதுபக்கம் என்று இறுமாப்புடன் நிற்கின்றனர். இடுக்குகளிலிருந்த புழுக்கள் கூட நெளியத் துவங்கிவிட்டன.
இதனால்தான் கொலையை நியாயப்படுத்தும் ஒரு தத்துவத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். வெறுப்பு அரசியலின் அபாயத்தின் அடிவேர்களைத் தொட்டுப் பார்க்கப்போகிறேன். கல்புர்கி ஓர் பேராசிரியர். மகாபாரதம் உண்மையென்றால் இந்த ‘புண்ணிய பூமியில்” முதன்முதலில் ஆசிரியனைக் கொன்றவன் அர்ச்சுனனாகத்தான் இருப்பான். குருட்சேத்திரப் போர்க்களத்தில் தன் சகோதர கவுரவர்களை மட்டுமின்றி அவர்களுடன் நின்ற தன் ஆசிரியர்களான துரோணரையு, பீஷ்மரையும் எதிர்த்து வில்லேந்த வேண்டிய தருணத்தில் கலங்கி நிற்கிறான் அவன். அவனுக்கிருந்த தயக்கத்தை அகற்றியவர் கிருஷ்ண பரமாத்மா.
”நீ உடலைத்தான் கொல்கிறாய். அவர்களின் ஆன்மாவையல்ல. ஆன்மாவிற்கு அழிவில்லை.” இது கிருஷ்ணனின் உபதேசம்.
படுகொலைகள் இன்று வரை இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்கிறது. நம்பிக்கை சட்டத்திற்கும் மேலானது என்பவர்கள் எழுதிய சட்டம் இன்று வரை தொடர்கிறது. படுகொலைகளும் தொடர்கின்றன.
மனைவியின் கண்ணுக்கு முன் ஒரு வயதான கணவனின் உடல் குண்டுகளால் துளைக்கப்பட்டு விழும்போதும் அவருடைய ஆன்மா அழிவில்லாமல் இருக்கப்போகிறது என்று அவர் அழாமல் இருக்க முடியுமா?
இதைச் செய்தவன் மனிதனா? எப்படிச் செய்யமுடிந்தது? அவனுடைய மனிதம் என்ன ஆனது? ”நீ உடலைத்தான் கொல்கிறாய். அவர்களின் ஆன்மவையல்ல. ஆன்மாவிற்கு அழிவில்லை” இது தத்துவமா? அரசியல் தந்திரமா? இப்படிப் பல கேள்விகள். இதற்கு ஒருவர் விடை சொல்கிறார்.
அவர் இந்தியாவும் உலகமும் போற்றிய ஒரு மனிதர். வருடம் 1932. ஈரான் நாட்டிற்குச் செல்லும் வழியில் விமானம் பாக்தாத் நகரத்தில் நிற்கிறது. பிரிட்டிஷ் போர் விமானங்கள் ஈராக் நாட்டின் மீது குண்டு மழை பொழியக் காத்திருக்கின்றன. மீண்டும் அவருடைய விமானம் மேலே கிளம்பி பயணத்தைத் தொடர்கிறது. அவருடைய சிந்தனை இப்படிச் செல்கிறது.
“விமானம் மேலே கிளம்பபி உயர உயரச் செல்கிறது. நம் ஐம்புலன்களுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொடர்பு சன்னமாகிக் கொண்டே வருகிறது. கடைசியில் கண்களுக்கும் பூமிக்கும் மட்டுமே தொடர்பு என்றாகி விடுகிறது. அதுவும் அருகாமை இல்லாத தொடர்பு. மேலே செல்வதற்கு முன் இந்த பூமியும் அதன் முடிவில்லா பன்முகத் தன்மைகளும் பற்றி நமக்கு ஒரு நிச்சய உணர்வு இருந்தது. ஆனால் நாமிருக்கும் உயரத்தில் அந்த உணர்வு மங்கி விடுகிறது. முப்பரிமாணமாயிருந்த பூமி என்ற எதார்த்தம் இரண்டு பரிமாணங்களாய் ஒரு உயிரற்ற வரைபடமாய் கீழே. காலம், நேரம் என்ற சூழலுக்குள்தான் உலகில் வாழும் பல்வேறு படைப்புகள் தம் தெளிவான தனித் தன்மையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த சூழலை இழக்கும்போது, படைப்புகள் எல்லாம் கசிந்து மறைகின்றன. விமானத்திலிருந்து பார்க்கும்போது பூமி இப்படி மறைவது போல்தான் தோன்றியது. அதன் இருப்பு நம் உணர்விலிருந்து மங்கிவிட்டது.
”இத்தகைய மனநிலையிலிருந்து அழிவேற்படுத்தும் ஆயுதங்களை ஒருவர் பொழியும்போது கொஞ்சமும் இரக்கமற்றவராகி விடுவார்போலும். தான் செய்யப் போவது கொலைக்குற்றம் என்று உணரும்போது இயற்கையாக வரும் தயக்கம் கைகளைத் தடுப்பதில்லை. ஏனெனில் அது குற்றம் என்ற உணர்விற்கு ஆதாரமான விவரங்களும், புள்ளிவிவரங்களும் மறைந்து விடுகின்றன. இயற்கையிலேயே மனிதன் பூமியுடன் அன்புகொண்டவன். புலன்களால் உணரப்படும் அந்த எதார்த்தம் மறையும்போது மனிதமும் மறைகிறது.”
என்ன சொல்லவருகிறார் இவர் என்று நம் எண்ணிக்கொண்டிருக்கையில் அவர் சிந்தனை வேறு ஒரு தளத்தை அடைகிறது. அவர் தொடர்கிறார்.
”பகவத் கீதை உபதேசிக்கும் தத்துவமும் அந்த போர்விமானம் போன்ற ஒன்றுதான். இரக்க குணம் கொண்ட அர்ச்சுனனின் சிந்தனையை அந்த தத்துவம் கிறுகிறுக்க வைக்கும் உயரத்திற்கு கொண்டு சென்று விடுகிறது. அந்த உயரத்திலிருந்து பார்க்கும்போது, கொல்பவனுக்கும் கொல்லப்படுபவனுக்குமான வேறுபாடு தெரியாது; எதிரிக்கும், உறவினக்குமான வேறுபாடு தெரியாது. மனிதனின் போர்ப்பாசறையில் தத்துவம் என்ற பெயரில் இப்படி பல ஆயுதங்கள் இருக்கின்றன. அவை உண்மையை மறைக்கும் ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை ஏகாதிப்பத்தியத்தின் தத்துவங்களிலும், சமூகவியல் தத்துவங்களிலும், இறையியல் தத்துவங்களிலும் காணலாம். இத்தகைய உயரங்களிலிருந்து வீசப்படும் ஆயுதங்களினால் மடிபவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல்தான்:
நா ஹன்யதே ஹன்யமனே சாரிரே. (உடல் கொல்லப்படும்போது ஆன்மா கொல்லப்படுவதில்லை).”
பலரும் நினைக்கும் வகையில் இது முதன்முதலாக கீதையில் சொல்லப்பட்ட தத்துவமல்ல, இதன் மூலம் கதா உபநிடத்தில் உள்ளது என்கிறார் அந்தப் பெரியவர்.
“ஆன்மா பிறப்பதில்லை. மரணமடைவதுமில்லை. அது எங்கிருந்தும் வருவதுமில்லை; அது எங்கேயும் செல்வதுமில்லை. அது யாராகவும் ஆவதுமில்லை. உடல் கொல்லப்படும்போது ஆன்மா இறப்பதில்லை. கொல்பவன் தான் கொன்றுவிட்டதாகவும், கொலையுண்டவன் தான் இறந்து விட்டதாகவும் நினைத்துக் கொண்டால் அவர்கள் இருவருக்கும் உண்மை புரியவில்லை என்றுதான் அர்த்தம். யாரும் கொல்வதும் இல்லை; கொல்லபடுவதும் இல்லை.”
இந்த உண்மைகளை உரக்கச் சொன்னவர் அறிவியல் அறிஞர் அல்ல; பகத்சிங்கைப் போன்ற புரட்சிக்காரர் அல்ல. பெரியாரைப் போன்ற பகுத்தறிவுவாதியல்ல; அரசியல் தலைவரரும் அல்ல. இதைச் சொன்னவர் உபநிஷத்துக்களில் மூழ்கி முத்தெடுத்தவர். அவர் பெயர் ரவீந்திரநாத் தாகூர். இதைத் தாகூர் சொன்னபோது அவருடைய நெருங்கிய நண்பர் உட்பட பல சமகாலத்தவருக்கும் பெரும் அதிர்ச்சி.
உபநிடத்தில் சொல்லப்பட்ட இந்தக் கருத்து ஒரு நொடிநேரச் சிந்தனைக் கீறல் அல்ல. இடைச்செருகல் அல்ல. உபநிடதங்களில் ஒன்றிப்போன முக்கிய அங்கம். சிறு வயது முதலே உபநிடதங்களைக் கற்றுத் தேர்ந்த தாகூர் ஒரு நிமிடத் தடுமாற்றத்தில் இதைப் பேசவில்லை. உபநிஷத்துக்களின் அழகியலை அவர் போற்றியிருக்கலாம். ஆனால், மனிதநேயம் பகிரங்கமாக சிதைக்கப்படும்போது அவருக்கு அந்த பொறுமை இல்லை.
முதன்முதலில் இவர்கள் தேரில் ஏறிய போதே தொடங்கிவிட்டது இந்த போராட்டம். நேற்று பன்சாரே. அதற்கு முதல்நாள் தபோல்கர். இன்று கல்புர்கி.. நாளை யார்?
இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்கிற கீழையியல் தத்துவத்தை உடைப்பதில் பெரும்பங்காற்றிய தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, தாகூரின் சிந்தனையோட்டத்தை நமக்கு விளக்குகிறார்.
காலத்தை வென்று நிற்கும் புராதன இந்தியச் சிந்தனைக்கு ஒரு அரசியல் பயன்பாடு இருந்தது என்பதையே தாகூர் கூறுவதாக அவர் கூறுகிறார்.
என்ன அரசியல் இது? தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இதற்கு பதில் தருகிறார்:
“உபநிஷத்துகளின் சாரத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அத்வைத வேதாந்தம் கொலையையும் பிற ஈனச்செயல்களையும் நியாயப்படுத்துகிறது. அது மட்டுமின்றி நம் பொது வாழ்க்கையிலும் பல விஷயங்களை நியாயப்படுத்துகிறது. நீ விதைக்கலாம். அதை அறுவடை செய்யும் உரிமை மற்றொருவனுக்கு. இரட்டைப் பிறப்பினரை கொழுக்கவைப்பதற்கு மட்டுமே சூத்திரர்கள் உழைக்கவேண்டும். இந்த அற்பமான விஷயங்களைப் பற்றி ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள். அழிக்க முடியாத சக்தி ஒன்றுள்ளது. அது விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. பசித்திருக்கும் சூத்திரனும் அவன் உழைப்பினால் கொழுத்திருக்கும் இரட்டைப் பிறப்பினனும் உன் மாயலோகத்திற்கு வெளியில் இல்லை. சட்டமியற்றுபவர்கள் இந்த தத்துவத்தை ரசிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதனால்தான் இந்த தத்துவத்தின் எதிரிகளான லோகயதவாதிகளுக்கும் சார்வாகர்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கினர். சார்வாகர்களின் தத்துவத்திற்கும் ஒரு அரசியல் செயல்பாடு இருக்கிறது. அந்த அரசியல் சட்டமியற்றியவர்களின் அரசியலுக்கு நேர்மாறானது.”
பொருள்முதல்வாதம் பேசிய சார்வாகர்களுக்கு ஏன் தண்டனை?
அவர்கள் பிராமணப் பழமைவாதிகளின் கருத்துக்களை மறுத்தும் எதிர்த்தும் உடைத்தும் பேசியதால்தான்.
யாகங்களில் பலியிடப்படும் விலங்குகள் நேரடியாக சொர்க்கத்திற்குச் செல்கின்றன என்று அவர்கள் கூறினர். சொர்க்கத்திற்குச் செல்ல அப்படி நிச்சயமான பாதை ஒன்று இருந்தால், ஏன் உங்கள் தந்தையர்களை அவ்வழியில் அனுப்பக்கூடாது என்றனர் இவர்கள். இறப்புக்குப் பின்னும் ஆன்மா வாழ்கிறது என்றும், ஒருவர் இறந்தபின் அவருக்குப் படைக்கப்படும் உணவு அவருடைய ஆன்மாவிற்கு போஷாக்கு அளிக்கிறது என்று சாமியார்கள் கூறினர். அப்படியென்றால் அடுத்த ஊருக்குச் செல்லும்போது கூட ஏன் சோறு கட்டிச் செல்கிறீர்கள். உணவை வீட்டிலேயே வைத்து சடங்கு செய்து படையல் செய்தாலேய பயணம் செய்பவரின் வயிற்றுப் பிரச்சினை தீர்ந்து விடுமே என்றார்கள் இவர்கள்.
உண்மை நடைமுறையில்தான் உறுதிசெய்யப்படுகிறது என்பதையே உணர்த்தவே இந்த விவாதங்களை செய்தனர் சார்வாகர்கள் போன்ற பொருள்முதல்வாதிகள். அன்றைய அறிவியல் புரிதலில் எழுந்த வாதங்கள் இன்றைய அறிவியலின் அசுர வளர்ச்சிக்குப் பின்னர் மேலும் வலுப்பட்டு பகுத்தறிவுவாதமாகவும், விஞ்ஞான சோஷலிமாகவும் மலர்ந்திருக்கின்றன. தத்துவங்கள் கேள்விகளை எழுப்பிச் செல்ல, அறிவியல் விடையளித்துக்கொண்டே மிகவேகமாக முன்னேறுகிறது.
பழமைத் தத்துவங்களுக்கு நெருக்கடி முற்றும்போது அவற்றைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. மக்களிடையே அறிவியல் சிந்தனை பரவும்போது கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள். வர்ணாசிரம தர்மத்திற்கும், சாதிப்பிரிவினைக்கும், மூடநம்பிக்கைளுக்கும் அடிவிழும்போது, சாதிகளில்லாத, வர்க்கங்களில்லாத சமுதாயத்தை நோக்கிய அரசியல் வலுப்பெறுகிறது.
வேத மரபினுக்கு எதிராகவும் பகுத்தறிவாதத்தை ஆதரித்தும் பேசிய தபோல்கர், பன்சாரே, கல்புர்கி போன்றோருக்கு ஏன் கடுமையான மரண தண்டனை வழங்கப் பட்டது என்பது புரிகிறது. தத்துவம் என்ற பெயரில் அரசியல் அடிமைகளை உருவாக்குவது காலகாலமாக தொடர்கிறது.
கிரேக்க நாட்டு பிளேட்டோவும் இதைத்தான் சொன்னார். “நற்பயன் விளைவிக்கும் பொய்கள், உன்னதமான பொய்களைச் சொல்வது அரசியல் ரீதியான பயனளிக்கும் என்றார். கோயபல்சிலிருந்து(Goebbels), சங்க பரிவாரங்கள் வரை இன்றுவரை இதைத்தான் செய்து வருகின்றனர். பிளேட்டோவின் சமகாலத்தவரான சோகிரடிசும் இதைத்தான் சொன்னார். மக்களின் உணர்வுநிலையை மூடநம்பிக்கைகளினால் முடமாக்கிவிட்டால் அவர்கள் சமூக மேல்தட்டில் இருப்பவர்களிடமும் ஆளும் வர்க்கங்களிடமும் முழுச் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழியில்லை.என்றார்.
இன்று இந்தியா என்றறியப்படும் நாட்டில், வேத மரபைத் தவிர வேறொன்றினைப் பேசுபவர்கள் எல்லோரையும் நாத்திகர்கள் என்று பட்டம் சூட்டினர். சார்வாகர்களுக்கும், சமணர்களுக்கும், பவுத்தர்களுக்கும், அவர்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் கூட நாத்திகர்கள் என்றே பட்டம் சூட்டப் பட்டது. வேதத்தை நிந்திப்பவர்கள் எல்லோருமே நாத்திகர்கள்தாம் என்று மனுவே கூறியிருக்கிறார்.
வேதத்தையும், வர்ணாசிரம தர்மத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே இந்துக்கள் என்று நிலை நிறுத்தப்பட்டது. தர்க்கம் செய்பவர்களுக்கு தண்டனை என்றானது.
மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மருக்கு ஒரு கதையைச் சொல்கிறார்:
செல்வச்செழிப்பினால் மமதை கொண்ட ஒரு வியாபாரி ஒரு பிராமணன் மீது தேரை இடித்து விடுகிறான் அதனைத் தட்டிக் கேட்க முடியாத பிராமணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறான். அதைத் தடுக்க இந்திரன் ஓநாய் வடிவில் வருகிறான். முற்பிறப்பில் பிராமணனாக இருந்த தான் எப்படி ஓநாய் ஆனேன் என்ற கதையைச் சொல்லுகிறான்.
“என் முற்பிறப்பில் நான் தர்க்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன். நான் வேதத்தை தூற்றுபவனாக இருந்த காரணத்தினால் பண்டிதனாயிருந்த போதிலும் நான் வெறுக்கப் பட்டேன். சபை கூடும் இடங்களில் எல்லாம் தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பேன். அது மிகவும் முறையற்ற செயல். நான் பிராமணர்களின் வாதங்களுக்கு எதிர்வினையாற்றி வந்தேன். நான் எதையும் சந்தேகிப்பதால் என்னை நாத்திகன் என்றனர். நான் மெத்தப் படித்தவன் போல் நடிக்கும் ஒரு முட்டாள் என்றனர். ஓ பிராமணனே இவற்றின் விளைவுதான் இன்று நான் வாழும் ஓநாய் வாழ்க்கை.”
ராமாயணத்தில் ராமன் பரதனுக்கு ஒரு அறிவுரை கூறினான்.
லோகாயதம் பேசுபவர்களை கூடச் சேர்த்துக் கொள்ளாதே. அற்புதமான சாத்திரங்கள் நமக்கு இருக்கும்போது இந்த லோகாயதவாதி தர்க்கத்தை நம்பி இருக்கிறான். தர்க்கம் என்பது நம்பிக்கையின்மையையும், சச்சரவையும் ஏற்படுத்தும் ஒரு வீணான யுக்தி”
இவர்களின் தத்துவங்கள் தர்க்கத்திற்கு எதிரானவை. பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் விரோதமானவை.
இருபதாம் நூற்றாண்டிலும் இதே கதைதான். அப்போது பொருள்முதல்வாதிகள் எதிரிகள் என்றால், இப்போது இவர்களுக்குப் புதிய எதிரிகள் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் வடிவத்தில் வந்து விட்டதாகக் கூறுகின்றன.
இந்துத்வம் என்ற அரசியல் கொள்கையை உருவாக்கிய சவார்க்கர் கூறுவதைக் கேளுங்கள்:
”எந்த மனிதனும் இந்துவாகவோ, கிறிஸ்துவனாகவோ, முஸ்லிமாகவோ பிறக்கவில்லை. அவன் மனிதனாகத்தான் பிறக்கிறான் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இது மற்றவர்களைப் பொறுத்தவரையில் உண்மையாக இருக்கலாம். இந்து தாயின் கருவறையில் இருக்கும்போதே முதலில் சமஸ்கரிக்கப்படுகிறான் அவன். இறந்தபின் கொள்ளிவைக்கப்படும்போது மீண்டும் சமஸ்கரிக்கப்படுகின்றான். ஒரு இந்துவுக்கு 16 சமஸ்காரங்கள் இருக்கின்றன. அவைதான் அவனை இந்துவாக வைத்திருக்கின்றன. நாம் தாயின் கர்ப்பபையிலிருந்து வெளிவரும் முன்னரே இந்துவாகி விடுகிறோம். நாம் இந்துவாகவே பிறக்கிறோம். மற்றவர்கள் பேரில்லாத பிறவிகளாகப் பிறக்கின்றனர். பிறகு சுன்னத் செய்யும்போதோ அல்லது ஞானஸ்நானம் செய்யும்போதோ முஸ்லிமாகவும் கிறிஸ்துவனாகவும் மாறுகின்றனர்.”
கரு ஆணா, பெண்ணா என்றறியும் தொழில்நுட்பம இப்போது உள்ளது போல் அது இந்துவா இல்லையா என்றறியும் தொழில்நுட்பம் இருந்தது போலும். பிளாஸ்டிக் சர்ஜரி புராதன இந்தியாவில் இருந்தது என்று கூசாமல் பேசும் பிரதமர் இருக்கும் நாட்டில், இப்படி ஒரு கதையையும் அவிழ்த்துவிடலாம்தான்.
இவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி எதிரியில்லை. கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும்தான் பிரதான எதிரிகள். இந்து நாடு, முஸ்லிம் நாடு என்ற இரு தேசக்கொள்கையை முதன்முதலில் அறிவித்த சவார்க்கர். அதற்கு ஒரு தத்துவ விளக்கம் அளிக்கிறார்:
”இந்த நாடு புராதன காலத்திலிருந்தே இந்து நாடாக இருக்கிறது. இங்கு பார்ஸிகளும், யூதர்களும் நம் விருந்தினர்களாகவும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஆக்கிரமிப்பாளர்களாகவுமே இருக்கின்றனர். ஒரு வரலாற்று விபத்தின் காரணமாக ஒரு பொதுவான எல்லைக்குள் ஒரு பொதுவான எதிரியின் ஆட்சியின் கீழ் இருப்பதால் மட்டுமே அவர்கள் எல்லோரையும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று கூறிவிடமுடியுமா? எல்லை சார்ந்த தேசியம், பொது எதிரி என்கிற கருத்தாக்கங்களின் அடிப்படையில் அமைந்த தேசியத்தின் காரணமாக இந்து தேசியம் என்ற நேர்மறையான, உத்வேகமளிக்கக்கூடிய ஒரு உள்ளடக்கத்தை நாம் இழந்துவிட்டோம். இதனால் விடுதலை இயக்கம் என்றாலே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கம் என்றாகி விட்டது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதே தேசியம், தேசபக்தி என்றாகி விட்டது. இதற்கு அடுத்த ஒரு தலைவர் வந்தார். அவர் கம்யூனிஸ்டுகளையும் உள்நாட்டு எதிரிகள் பட்டியலில் சேர்த்தார். அவர்தான் குருஜி என்றழைக்கப்படும் கோல்வால்கர். அவர் கூறுவதைக் கேளுங்கள்: இந்துஸ்தானத்தில் இருக்கும் அன்னிய இனங்கள் இந்து கலாச்சரத்தையும், மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதித்து, வழிபாடு செய்யவேண்டும். இந்து இனத்தையும் கலாச்சாரத்தையும் போற்றிப்பாடுவதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது. அவர்கள் தங்களின் தனித்த இருப்பையும் அடையாளத்தையும் இழந்து இந்து இனத்துடன் கலக்கவேண்டும். அல்லது எவ்வித சலுகையுமின்றி, குடிமக்களின் உரிமை கூட இல்லாமல் இங்கு தங்கி இருக்கலாம்.”
இந்த குருஜியின் குரு யார் தெரியுமா? ஹிட்லர்.
ஜெர்மானிய தேசியப் பெருமிதம் இன்று பேசப்படும் தலைப்பாகி விட்டிருக்கிறது. தன் தேசம் மற்றும் கலாச்சாரத்தின் புனிதத்தைப் பாதுகாக்க உலகமே அதிர்ச்சியடைந்த செயலை அது செய்தது. செமிட்டிக் இன யூதர்ளை அழித்தது. தேசப் பெருமிதத்தின் உச்சகட்ட வெளிப்பாடு இதுதான். அது மட்டுமல்ல. அடிவேர் வரை வேறுபட்ட இனங்களும், கலாச்சாரங்களும் ஒரு முழுமையான அடையாளத்திற்குள் ஐக்கியமாக முடியாது என்பதையே ஜெர்மனி காட்டுகிறது. இந்துஸ்தான் கற்றுக் கொண்டு பலனடைய ஒரு உதாரணம் இது”.
இவர்களுக்கு முஸ்லிம்கள் எதிரி
கிறிஸ்துவர்கள் எதிரி
கம்யூனிஸ்டுகள் எதிரி
இந்து மதத்திற்குள்ளேயே தர்க்கம் செய்பவன் எதிரி!
பகுத்தறிவு பேசுபவன் எதிரி!
வர்ணாசிரமத்தை எதிர்ப்பவன் எதிரி
உழைக்கும் மக்கள் எதிரி!
இவர்கள்தாம் இன்று நம்மை ஆள்பவர்கள். மதக்கலவரங்களினால் அரசியல் நடத்துபவர்கள் இன்று மனக் கலவரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கைகளினால் பெரும் பலனடைந்த ஒரு சிறுபான்மைக் கூட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளியல் செழிப்பான வாழ்க்கையைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் வர்க்க உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், ஜனநாயகத்துக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும், நாட்டின் இறையாண்மைக்காகவும் நடந்த நெடிய போராட்டங்களினால் உருவான அரசியல் இவர்களின் முழு அதிகாரத்திற்குத் தடையாக இருக்கிறது.
இந்த அதிகாரத்தை மீட்பதற்கான எதிர்ப்புரட்சிதான் இன்று நடக்கிறது. மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ்ணனுக்கு பதிலாக புத்தர் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்று வரலாற்றியல் அறிஞர் ரோமிலா தாப்பர் வேடிக்கையான வினா எழுப்பினார். புத்தர் அர்ச்சுனனிடம் ‘இந்தப் போர் தேவையா” என்றுதான் கேட்டிருப்பார் என்றும் அவர் கூறுகிறார். அவர்கள் ஒவ்வொரு முறை தேரில் ஏறும்போதும் நமக்குப் பிரச்சினைதான்.
அத்வானியின் தேர்தானே இந்த நாட்டின் மத ஒற்றுமையின் மேலேறி ஓடியது!
அவர்கள் எதிரிகளாய்க் காண்பவர்கள்தாம் நம் குருட்சேத்திரப் போரின் நம் அணி!
இந்த முறை நாம் தேர் ஏறுவோம்! மார்க்சும், அம்பேத்கரும், பெரியாரும்தான் நம்முடைய தேரோட்டிகள்! மனித மனங்களை வெல்லும் மகாபாராதப் போர் தொடங்கட்டும்.
- ஆர். விஜயசங்கர்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு