பன்மைத்துவத்தை சிதைக்கும் பொது சிவில் சட்டம்
தீக்கதிர்
பொதுசிவில் சட்டம் என அழைக்கப் படும் ‘சீரான சிவில் சட்ட’ (uniform civil code) முன் வரையை வரும் மழைக்கால கூட்டத் தொடரில் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய சட்டக்கமிஷன் பொது சிவில் சட்டம் குறித்து பொது மக்களின் கருத்து கேட்டு 14.06.2023 அன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனிடையில் இந்தியா முழு வதும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பி னர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.
அதேவேளையில், பொது சிவில் சட்டம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் அதை ஆதரிக்கும் பலர், அம்பேத்கரும், நேருவும் ஆதரித்த பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பது சரியா என்ற கேள்வியை முன் வைக்கின்றார்கள். அதேபோல் பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர் மட்டும் எதிர்ப்பது போன்றும், வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் அவர் களை ஆதரிப்பது போன்றும் ஒரு தோற்றத்தை திட்ட மிட்டு உருவாக்கி வருகிறார்கள். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் தானே இருக்க முடியும்; இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லா மியர்களுக்கு என்று தனித்தனியாக சட்டங்கள் இருப்பது மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது அல்லவா என்ற கேள்வியையும் முன்வைத்து வரு கிறார்கள். இந்த கேள்விகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் பொதுசிவில் சட்டம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது.
பொது சிவில் சட்டம் தான் என்ன?
இந்தியாவில் பொது சிவில் சட்டங்கள் பல உள்ளன. உரிமையியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சி சட்டம், ஒப்பந்த சட்டம், மாற்றுமுறை ஆவணச்சட்டம், பொருட்கள் விற்பனை சட்டம், சொத்து உரிமை மாற்று சட்டம் என்று ஏராளமான சிவில் உரிமைகள் சார்ந்து பொதுச் சட்டங்கள் (Public laws) உள்ளன. அதே வேளையில் திருமணம், விவாகரத்து, சொத்து ரிமை, வாரிசு உரிமை, ஜீவனாம்சம், தத்தெடுத்தல் போன்ற தனிநபர் சார்ந்த விவகாரங்களுக்கு பொது வான சட்டங்கள் இல்லை. இவை அனைத்தும் அந்தந்த மதம், சமூகம், இனம் சார்ந்த பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் அந்தந்த மத நூல்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து ஜீவனாம்சம் மற்றும் தத்தெடுக்கும் சட்டம், இஸ்லாமிய ஷரியத் சட்டம், இந்திய விவாகரத்து சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் என்ற தனிநபர் சார்ந்த (Personal laws) சட்டங்க ளாக இயற்றப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது இந்தி யாவில் உள்ள பல்வேறு ஆதிவாசி சமூகங்களில் தனித் தனியே திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசு உரிமை, சொத்துரிமை குறித்து பல்வேறு பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் இருந்து வருகின் றன. ஆதிவாசிகளின் இந்த பழக்கவழக்கங்களும் நடை முறைகளும் சட்ட வடிவமாக (codification of law) ஆக்கப்படாததோடு எழுத்து வடிவமாகக் கூடஆக்கப் படாமல் நடைமுறையில் உள்ளது. இவற்றை யெல்லாம் அகற்றிவிட்டு இந்தியா முழுவதும் திரு மணம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுஉரிமை, சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்றவை அடங்கிய அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை உரு வாக்குவது என்பதே, பாஜக அரசு முன் வைக்கும் பொது சிவில் சட்டத்தின் நோக்கம்.
இந்து திருமண முறைகளிலேயே எத்தனை வேற்றுமை!
இந்தியாவின் பலமே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ தான் என்கிறோம். அது வேற்றுமையில் ஒற்றுமை அல்ல. மாறாக பன்மைத்துவத்தின் ஒருமை அல்லது ஒற்றுமை என்பதே சரியாகும். அந்த வகையில் தனிநபர் சார்ந்த திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் ஜீவனாம்சம் போன்ற விவகா ரங்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் பழங்குடிகளுக்கிடை யேயான வெவ்வேறு வகையான மாறுபட்ட பழக்க வழக்கங்களும் எழுதப்படாத சட்ட திட்டங்களும் நடை முறையில் இருந்து வருகின்றன. இந்து திருமண முறை களிலேயே கூட, பல்வேறு மாறுபட்ட பழக்க வழக்கங் கள் இருப்பதை இந்து திருமணச் சட்டமே அங்கீக ரித்துள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ கத்தில், தாய் மாமன் மகளை திருமணம் செய்வதும், தகப்பனின் உடன்பிறந்த சகோதரியின் மகளை திருமணம் செய்வதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 (எ) அந்த உறவுமுறை திருமணங்களை சபிண்டாஸ் (sapindas) என்று கூறி தடை செய்கிறது. (Prohibited relationship of Marrage). அதேவேளையில் அதே சட்டம் தென்னிந்திய உறவுமுறை திருமணத்தை நீண்ட நெடிய பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற அடிப் படையில் அங்கீகரிக்கின்றது. பொது சிவில் சட்டம் என்று வரும்பொழுது தென்னிந்திய நடைமுறையான உறவுமுறை திருமணம் என்பது தடை செய்யப்படலாம்.
தமிழ்நாடு கொண்டு வந்த சட்டத்திருத்தம்
அதேபோல் அந்தந்த சமூகம் சார்ந்த பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகளின் அடிப்படையில் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சொல்லும் இந்து திருமணச் சட்டப் பிரிவு 7, அப்படி செய்யும் திரு மணமானது யாகம் வளர்த்து மணமக்கள் இருவரும் 7 முறை அந்த யாகத்தைச் சுற்றி வரவேண்டுமென் றும், 7வது முறை சுற்றி முடிந்த பின்பே திருமணம் முழு மையடைகிறது என்றும் கூறுகிறது. தமிழகத்தில் சமூ கத்தின் உயர் அடுக்கில் உள்ள சில சாதிகளைத் தவிர பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்களில் யாகம் வளர்த்து, அதை சுற்றி வந்து திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் கிடையாது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் கிராமக் கோயில்களில் அல்லது பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றி தாலிகட்டி திருமணம் செய்து கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்து திருமணச் சட்டப்படி இந்த வகையான திருமணங்கள் எல்லாம் திருமணம் என அங்கீகரிக்கப்படாமல் இருந்தன. இது போன்ற திருமணங்களையும் சுயமரியாதை திருமணங் களையும் அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் முதன் முதலாக தமிழக அரசு 1967ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டம் பிரிவு 7யு-ன்படி சட்டத் திருத்தம் கொண்டுவந்தது.
இந்துக்களில், பிராமண சாதியில் விதவை மறு மணம் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற வர்ணங்களில் விதவை மறுமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிராமணர்களின் திருமணமுறை என்பது கன்னிகாதானம் என்ற அடிப்படையில் பிரம்ம விவாகம் எனப்படுகின்றது. மற்ற வர்ணங்களில் பரிசம் போட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் அசுர விவாகம் என்ற முறையிலான திருமணம் என்று சொல்லப்படுகின்றது. இப்படி இந்து திருமணச் சட்டத்திற்குள்ளேயே திருமணம் குறித்து பல்வேறு மாறுபட்ட பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் இருக்கும் நிலையில் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதிவாசிகள் என அனைவரின் பழக்கவழக்கங்களையும் நடைமுறை களையும் மறுதலித்து பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் செயல் ஆகும். திருமணத்தைப் போன்றே வாரிசுரிமை, சொத்துரிமை, விவாகரத்து போன்றவற்றிலும் இந்திய சமூகத்தில் பல்வேறு பழக்கவழக்கங்களும் நடை முறைகளும் பின்பற்றப்படுகிறது.
இஸ்லாமியர்கள் மட்டும் தான் எதிர்க்கிறார்களா?
போபாலில் பேசிய பிரதமர் மோடி இஸ்லாமியர் மட்டுமே பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகவும், வாக்கு வங்கி அரசியல் பசி உள்ளவர்கள் அதை ஆதரிப்பதாகவும் பேசியுள்ளார். இஸ்லாமியர் மட்டுமல்லாது சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின்களின் ஒரு பிரிவினர் மற்றும் ஆதிவாசிகள் ஆகியோர் பொது சிவில் சட்டம் தங்களது பாரம்பரிய பழக்கவழக்கங்க ளை நீர்த்து போகச் செய்துவிடும் என்றும், தங்களின் தனித்தன்மையை அது பறித்துவிடும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பதை பிரதமர் மோடி திட்டமிட்டு மறைத்துள்ளார். இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதம் உள்ள ஆதிவாசி மக்களின் பல்வேறு குழுக்களிடையே திரு மணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்றவற்றில் பல்வேறு மாறுபட்ட பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் உள்ளன. குறிப்பாக சிலவற்றை குறிப்பிடலாம்: மிஜோ இனமக்களின் வாரிசுரிமை என்பது பெற்றோர் அல்லது சொத்தின் உரிமையாளர் மர ணித்து இறுதிச்சடங்குவரை எப்படி பராமரிக்கப்பட்டு வரப்பட்டார் என்பதைப் பொறுத்தே அமைகின்றது. பெற்ற குழந்தையாக இருந்தாலும் பெற்றோர்களை இறுதிவரை பராமரிக்கவில்லை என்றால் குழந்தை களுக்கு சொத்துரிமை கிடையாது.
அதேபோல் காஸி (khasi) இனமக்களில் தாய்வழி சமூக முறையே நடைமுறையில் உள்ளது. காஸி இன மக்களின் சொத்துக்களில் வாரிசுரிமை என்பது கடைசி மகளுக்கே உள்ளது. பெற்றோரையும் குடும்பத் தில் வருவாய் ஈட்ட முடியாதவர்களையும் பராமரிக்கும் பொறுப்பு கடைசி மகளுக்கே உள்ளது. இப்படி பல்வேறு மாறுபட்ட பழக்கவழக்கங்க ளையும் நடைமுறைகளையும் கொண்டுள்ள சிக்கிம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து போன்ற வட கிழக்கு மாநிலங்களில் வாழும் ஆதிவாசி மக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் அட்டவணை எண்.5 மற்றும் அட்டவணை எண்.6 தங்களுக்கு வழங்கி யுள்ள நிலத்தின் மீதான உரிமை மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் சார்ந்த நடைமுறைகளை பறித்துவிடும் என்று கூறி பொதுசிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதோடு, அம்மாநில அரசு களும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றன. மேகாலயா ஆதிவாசிகள் அவர்களுக்கிடையில் இருக்கும் பல்வேறு உட்பிரிவுகளில் திருமணம் வாரிசு உரிமை, சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம் சம் போன்றவற்றில் தாங்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் வெவ்வேறு வடிவிலான பழக்க வழக்கங்க ளையும் நடைமுறைகளையும் பொது சிவில் சட்டம் பறித்து தங்களது தனித்தன்மையை இழக்கச் செய்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.
அசாம் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் காஸி ஜெயிந்தியா மாவட்ட மலைக்கவுன்சில், காரோ மாவட்ட மலைக்கவுன்சில் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் பொது சிவில் சட்டம் பறித்துவிடும் என்று கூறி கடுமையாக எதிர்த்து வருகின்றார்கள். அதேபோல் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களின் ஆதிவாசி அமைப்புகளும் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
வரலாற்றுப் பின்னணி
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மெக்காலே தலைமையில் 1833ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் சட்டக்கமிஷன் இந்தியாவிற்கான சட்டங்களை உருவாக்கும்போது (Codification of laws) அவை பொதுத்தன்மையுடன் (Uniform code) இருக்க வேண்டும் என்று கூறியது. அப்படி பொதுத்தன்மையுடன் சட்டங்கள் உரு வாக்கும்போது வட இந்திய இந்து கூட்டுக் குடும் பங்கள் அனுபவித்து வந்து, கூட்டுக்குடும்ப சொத்துக்கு வழங்கப்பட்ட (HUF- Hindu Undivided Family) சலுகைகள் பறிபோய்விடும் என்றும், விதவைகள் மறுமணம், பலதாரமணம் முதலியவை குறித்த சீர்திருத்தங்களை இந்து சமூகத் தலைவர்களும்; முத்த லாக், ஜீவனாம்சம் போன்ற அம்சங்களில் இஸ்லா மிய சமூகத் தலைவர்களும், இரு மதங்களின் அடிப் படை வாதிகளும் கடுமையாக எதிர்ப்பைத் தெரி வித்ததன் விளைவாக தனிநபர் சார்ந்த திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, ஜீவனாம்சம் போன்ற விவகா ரங்கள் குறித்து பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதிலிருந்து ஆங்கிலேய அரசு பின்வாங்கியது.
சுதந்திர இந்தியாவில் நாகரீக சமூகத்தில் பொது சிவில் சட்டம் என்பதே இந்திய சமூகத்தை முன் னோக்கி நகர்த்திச் செல்லும் என்ற நோக்கில், பொது சிவில் சட்டம் நிறைவேற்ற ஜவஹர்லால் நேரு விரும்பி னார். அதனடிப்படையில் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு சட்ட அமைச்சர் என்ற முறையில் பொதுசிவில் சட்டம் குறித்த சட்ட முன் வரைவை நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் முன் வைத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் தலைவராக இருந்த வல்லபாய் பட்டேலும் இஸ்லாமிய தலைவர்களும் முதல் சட்டக்கமிஷன் கூறிய பொதுத் தன்மை வாய்ந்த சட்டங்களுக்கு என்ன காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ, அதே காரணங்களுக்காக கடு மையாக எதிர்த்ததன் அடிப்படையில் அந்த சட்ட முன் வடிவு திரும்பப் பெறப்பட்டது. அதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது ‘சட்டங்கள் இயற்றுவதற்கு மதங்கள் குறுக்கிடும் போக்கை புரிந்து கொள்ள முடிய வில்லை’ என்று கூறிய அம்பேத்கர், ‘பொது சிவில் சட்டம் இயற்ற அரசு முற்படும்போது குறிப்பாக முஸ்லீம் சமூகத் தினரின் கருத்தொற்றுமையுடன் செயல்படவில்லை என்றால் குழப்பமே ஏற்படும்’ என்றும் கூறினார். ஆக அம்பேத்கர் இந்திய சமூகத்தின் ஒத்த கருத்தின் அடிப்படையிலேயே பொது சிவில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற வலுவான கருத்தை கொண்டிருந்தார் என்பது உறுதியாகிறது.
பாஜக அரசின் நோக்கம்
பாலின அசமத்துவம் மற்றும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் பொது சிவில் சட்டத்தை அமைப்பதே நோக்கம் என்று ஒன்றிய பாஜக அரசு கூறிக் கொண்டாலும் இஸ்லாமி யர்களைக் குறிவைத்தே பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது என்ற அச்சம் அந்த மக்களிடம் உள்ளது. பெயரளவில் பொது சிவில் சட்டம் என்று கூறிவிட்டு இந்து சனாதன தர்மத்தின் அடிப்படையில் சிவில் சட்டத்தை நிறைவேற்றுமோ என்ற ஐயத்தை பல்வேறு இஸ்லாமிய சமூகத் தலைவர்களும் எழுப்பி வருகிறார்கள்.
செய்ய வேண்டியது என்ன?
பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கும் அதே வேளை யில் முத்தலாக், பலதாரமணம், வாரிசுரிமை, சொத்து ரிமை, ஜீவனாம்சம், விவாகரத்து போன்ற அம்சங்களில் பெண்களுக்கு பாதகமான அம்சங்களை நீக்கி பாலின சமத்துவம் கொண்ட சட்டத் திருத்தங்களை மேற் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. பாலின அசமத்துவத்தை கலைவதற்கு செய்ய வேண்டிய அடிப்படையான முக்கிய நடவடிக்கையும் அதுவே. அந்த வகையில் ஜவஹர்லால் நேரு, பொது சிவில் சட்டத்தின்மூலம் செய்ய நினைத்து முடியாமல் போன பல்வேறு சீர்திருத்தங்களை தனிநபர் சட்டங்களில் தேவையான மாற்றங்களுடன் சட்டத் திருத்தங்கள் மூலம் செய்தார். உதாரணமாக, எவரும் தங்கள் திரு மணத்தை பதிவு செய்து அதன் மூலம் அவரவர் மதம் சார்ந்த தனிநபர் சட்டம் அனுமதிக்கவில்லை என்றா லும், வாரிசுரிமை பெறும் வகையில் 1954ம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தைக் கொண்டு வந்தார். பல தாரமணத்தை தடை செய்தல், தத்தெடுத்தவர் பிள்ளை யின் தாயாரை திருமணம் செய்து கொள்ளலாம் போன்ற பல்வேறு திருத்தங்களை இந்து தனிநபர் சட்டங்களில் கொண்டு வந்தார். இந்து வாரிசுரிமைச் சட்டப்படி பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரி மையை மறுத்து வந்த நிலையில் முதன் முதலாக 1989ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை கிடைக்கும் வகையில் இந்து வாரிசுரிமைச் சட்டம் (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) 1989ன்படி முற்போக் கான சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதன் பின் னரே ஒன்றிய அரசு 2005ம் ஆண்டு இந்து வாரிசுரி மைச் சட்டத்தில் திருத்தம் செய்து, பெண்களுக்கு பெற் றோர் சொத்தில் சமஉரிமை வழங்க வகைசெய்தது.
அதே வழியில் தனிநபர் சட்டங்களில் உள்ள பாலின அசமத்துவத்தை நீக்கும் வகையில் முத்தலாக், வாரி சுரிமை, சொத்துரிமை, ஜீவனாம்சம், விவாகரத்து, தத்தெடுத்தல் போன்ற தனிநபர் விவகாரங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தனிநபர் சட்டங்க ளில் (Personal laws) சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாறாக இந்து சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையிலான பொது சிவில் சட்டத்தை நிறை வேற்ற செய்யும் அத்தனை முயற்சிகளும் இந்திய நாட்டின் பன்மைத்துவத்தை சிதைத்து ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
பெ.ரவீந்திரன், வழக்கறிஞர்
கட்டுரையாளர் : மாநிலக் குழு உறுப்பினர், தமுஎகச
https://theekkathir.in/News/articles/world/common-civil-law-that-undermines-pluralism