சரணடைவதா அல்லது எதிர்த்துப் போராடுவதா: டிரம்ப் பழைய கிழக்கிந்திய கம்பெனியைப் போல் செயல்படுகிறாரா? இந்தியாவால் அவரைச் சமாளிக்க முடியுமா?

தி வயர்

சரணடைவதா அல்லது எதிர்த்துப் போராடுவதா: டிரம்ப் பழைய கிழக்கிந்திய கம்பெனியைப் போல் செயல்படுகிறாரா? இந்தியாவால் அவரைச் சமாளிக்க முடியுமா?

சீனாவின் விட்டுக்கொடுக்காத, உறுதியான வியூகத்திலிருந்து இந்தியா பாடம் கற்றிருக்க வேண்டும். ஈரானைப் போன்ற பல சிக்கல்கள் நிறைந்த நாடும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், அணு ஆயுத பலம் கொண்ட வலிமைமிக்க நாடுகளை கையாள்வதில் தனது நிலைப்பாட்டைத் தற்காத்துக்கொண்டு, பின்வாங்காமல் இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

(பட விளக்கம்) பெஞ்சமின் வெஸ்ட் வரைந்த இந்த ஓவியத்தில், வங்காளத்தின் கவர்னராக இருந்த ராபர்ட் கிளைவ்-க்கு முகலாயப் பேரரசர் ஷா ஆலம் ஒரு சட்டபூர்வ ஆவணத்தை வழங்குவது சித்தரிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் ஒப்பந்தம் எனப் பெயர் பெற்ற இந்த உடன்படிக்கை, கிழக்கிந்திய கம்பெனிக்கு 1765 ஆகஸ்ட் மாதத்தில் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் அதிகாரத்தை வழங்கியது..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அச்சுறுத்தும் தொனியுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைப் பெற முயற்சிக்கிறார். இது, கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றி, பின்னர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவைத் தன் காலனியாக மாற்றிய சூழ்நிலையைப் போன்றது. இந்தியா எதிர்ப்பின்றிப் பணிந்து போகுமா என்பது இன்னும் கேள்விக்குறியே. உதாரணமாக, கனடா சமீபத்தில் ஜூன் 30 அன்று பெரிய தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான தனது 3% வரியை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுடன் இணங்கியது. அமெரிக்க அரசாங்கத்துடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காகவே இம்முடிவை எடுத்தது.

அமெரிக்காவின் வர்த்தகச் சட்ட முறைமையின்படி, வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதற்கு முன்னர் அதிபருக்கு காங்கிரஸின் (அமெரிக்காவின் நாடாளுமன்றம்) அனுமதி தேவை. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ சட்டங்களில் "வர்த்தக ஒப்பந்தம்" என்ற சொற்றொடர் பலமுறை பயன்படுத்தப்பட்டாலும், அதிபரால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இந்த ஒப்புதல் அவசியமாகும். இது முறையான "செயலாட்சி ஒப்பந்தங்கள்" (executive agreements) மட்டுமின்றி, அமெரிக்கத் தரப்புக்கு வரம்பற்ற முறையில் ஆதாயம் தேடும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட சிறிய ஒப்பந்தங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரம் (TPA) எனப்படும் ஒரு விசேஷ அதிகாரம் மூலம் இந்த அனுமதியை அமெரிக்க நாடாளுமன்றம் வழங்குகிறது. எந்த வகையான வர்த்தக ஒப்பந்தமாக இருந்தாலும், இரு நாடுகளும் சட்டபூர்வமாகப் பின்பற்ற வேண்டிய ஒரு கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக (binding agreement) அதனை மாற்றுவதற்கு காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ ஒப்புதலை வழங்க வேண்டும். அமெரிக்கச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்ய இந்த நடவடிக்கை இன்றியமையாதது.

பிப்ரவரி 13 அன்று பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்ப்புடன் பேசியதைத் தொடர்ந்து, சில சமயங்களில் "விஸ்வகுரு" (உலகிற்கே வழிகாட்டி) எனப் போற்றப்படும் இந்தியத் தலைமை, ட்ரம்ப் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. அதற்கான எந்தவிதப் போதிய திட்டமிடலையும் செய்யாத நிலையிலும் கூட, இந்திய அரசு 500 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருப்பதாகப் பெருமிதத்துடன் அறிவித்தது.

பின்னர், அமெரிக்காவுடனான இந்தியாவின் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட "பெரிய, நல்ல, அற்புதமான" வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் மந்தமானதாகத் தென்பட்டது. தற்போது, இந்த ஒப்பந்தம் ஒரு நிலையற்ற நிலையில் இருப்பதோடு, தோல்வியடையக்கூடும் எனத் தோன்றுகிறது. மத்திய அரசு, அமெரிக்க அரசின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் என்ன மாதிரியாக தீங்குகள் விளையக்கூடும் என்பதை திடீரென உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம். அமெரிக்க மரபணு மாற்றப்பட்ட (GM) வேளாண் பொருட்களை இந்தியச் சந்தையில் எந்தவித வரம்புமின்றி நுழைய அனுமதிப்பதோடு, அத்தகைய விளைபொருட்களைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் அனைத்துச் சட்டதிட்டங்களையும் நீக்குவது என்ற கோரிக்கையே இதில் மிகவும் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியா ஏன் இவ்வளவு கவலை கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வது எளிது. ஏனெனில், இந்தியா 140 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடாக இருப்பது மட்டுமல்லாது, 70 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் துண்டு நிலத்தை வாழ்வாதாரமாக(மூன்று ஹெக்டேருக்குக் குறைவாக) கொண்டு வாழ்ந்து வருகின்ற நாடாகவும் இருக்கிறது. இருப்பினும், அமெரிக்கா இந்தியாவின் சந்தைகளை அகலத் திறக்க மிகக் கடுமையாக முயற்சிக்கும் என்பது நீண்ட காலமாகவே அறியப்பட்டிருந்த போதிலும், இந்தியாவை "விழிப்படையச் செய்வதற்கான" நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. அமெரிக்கா குறிப்பாக அதன் கார்ப்பரேட் பண்ணை ஏற்றுமதிகளை விற்க விரும்புகிறது. இவை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெருமளவிலான நிதி உதவியைப் பெறுவதோடு, மரபணு மாற்றப்பட்ட பொருட்களை முழுமையாக சார்ந்துள்ளன. ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் சீனா போன்ற நாடுகளால் நிராகரிக்கப்பட்ட அதே ஏற்றுமதிப் பொருட்களையே இந்தியச் சந்தையில் கொட்டுவதற்கு விரும்புகிறது.

இந்தியாவின் முதன்மை கொள்கை வகுக்கும் அமைப்பான நிதி ஆயோக் போன்ற நிறுவனங்களும், அதன் முக்கிய வேளாண் வல்லுநர்கள் சிலரும், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பயிர் (GMO) திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவதுதான் ஆழ்ந்த கவலைக்குரிய விசயமாக இருக்கிறது. ஏனெனில், மரபணு மாற்றப்பட்ட இப்பயிர்கள், குறுக்கு மகரந்தச் சேர்க்கை, குறுக்கு சாகுபடி வாயிலாக, இந்தியாவின் வளமான பூர்வீகப் பயிர் வகைகளுக்கு நிரந்தரமான, மீளாத பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இருந்தும் இவர்கள் இத்திட்டத்தை ஆதரிப்பது முரணாகப் படுகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளி நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பயன்பாட்டையும், இறக்குமதியையும் தொடர்ந்து எதிர்த்து வந்ததோடு, அதன் நீண்டகால அபாயங்களைப் பற்றியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது.

தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருட்களின் மீதான வரிகளைச் சாராத (சுங்க வரியல்லாத சிக்கல்கள் எனப்படும்) விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் துவங்க இயலாது என்பதை தற்போது ஆழமாக உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், 2015-ஆம் ஆண்டு அவர் வர்த்தக அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது, நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (WTO) கூட்டத்தில், இந்தியாவின் கோரிக்கைக்கு அவர் வலுவாக ஆதரவளிக்கவில்லை. அந்தக் கூட்டத்தில், இந்தியா தனது மக்களுக்கு அதிக அளவில் உணவு தானியங்களைச் சேமித்து வைக்க (பொது கையிருப்பு முறை எனப்படுவது) நிரந்தர ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வலியுறுத்தி வந்தது. ஆனால் அதற்காக விடாப்பிடியாக போராடவில்லை. இதுபோன்ற கடந்தகால நடவடிக்கைகளின் தீங்குகள் இப்போதே வெளிப்படத் தொடங்கியிருக்கலாம். பாஜக தலைமையிலான அரசின் அடுத்தடுத்த வர்த்தக அமைச்சர்கள், வர்த்தக ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவதில் தோல்வியடைந்தனர்; மேலும், அழுத்தம் கொடுக்கப்படும்போது முக்கியமான அம்சங்களில் அடிக்கடி விட்டுக்கொடுப்பதாகவும் தெரிகிறது.

இந்தியா ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து ஏராளமான புதிய வரிகளை (சுங்க வரிகள்) எதிர்கொண்டு வருகிறது. இதில், பொருட்களுக்கான பொதுவான 10% வரி, எஃகு, அலுமினியம், கார்கள் மற்றும் கார் உதிரி பாகங்களுக்கான 25% வரிகள் மட்மல்லாது மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி மீதான புதிய வரி ஆகியனவும் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மலிவான ஜெனரிக் மருந்துகளின் தயாரிப்பில் (பிராண்டட் மருந்துகளின் விலை குறைந்த பிரதிகள்) உலகின் முன்னணி விநியோகஸ்தர்களில் ஒன்றாக இருப்பதுதான் இந்த மருந்துப் பொருட்கள் மீதான வரி நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவதற்கு குறிப்பான காரணமாகும். ஜூலை 9 காலக்கெடுவிற்குள் அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா ஏற்காவிட்டால், கூடுதலாக 26% பதிலடி வரிவிதிப்பை எதிர்கொள்ளக்கூடும். வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்காத நாடுகளுக்கு, வரி விதிப்புத் தண்டனைகளை விளக்கும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பப்படும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே விதித்துள்ள சில வரிகள், இந்தியாவுக்கு ஏற்றுமதி வழியாக கிடைக்கும் வருவாயில் பல பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த வர்த்தக லாபம் (வாங்குவதை விட உலகிற்கு அதிகமாக விற்பது) என்பதுகூட $44 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்பதைக் கருத்தில் கொண்டால், இழப்பு என்பது மிகப்பெரியதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சீனாவின் உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோக வலைப்பின்னல்கள் மீதான கட்டுப்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்கா இந்தியாவை பல பொருட்களுக்கான முக்கிய விநியோகஸ்தராக்குவதற்கு வாய்ப்புள்ளது என்பது மட்டுமே ஒரெயொரு சிறு நம்பிக்கைக்குரிய விசயமாகும்.

சீனாவின் அணுகுமுறையிலிருந்து பெறவேண்டிய பாடம்

சீனாவின் விடாப்பிடியான அணுகுமுறையிலிருந்து இந்தியா ஒரு முக்கியப் படிப்பினையைப் பெற்றிருக்க வேண்டும். 2018 ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பொருட்கள் மீது பதிலடி வரிகளை அறிவித்தபோது, சீன அரசு ஒரு கணமும் தயக்கமின்றி, அமெரிக்கப் பொருட்கள் மீதும் அதே விகிதத்தில் வரிகளை விதித்து, எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் மண்டியிட மறுத்தது. இந்தத் திடமான நிலைப்பாடு, இறுதியில் அமெரிக்காவை புதிய வரிகளை நிறுத்துவது குறித்து ஓர் உடன்பாட்டை நாடத் தூண்டியது.

உலகளாவிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசிய மூலப்பொருட்களைத் தன் கட்டுப்பாட்டில் சீனா வைத்திருப்பதால், இந்தியாவிடம் தற்போது இல்லாத பொருளாதார பலமும், உலகளாவிய ஆதிக்கமும் சீனாவிடம் குடிகொண்டிருப்பது மறுக்க முடியாத பேருண்மை. ஆயினும், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு அவசரப்பட்டுத் தலைவணங்குவதற்குப் பதிலாக, ஓர் உறுதியான, நெஞ்சுரம் மிக்க நிலைப்பாட்டை எடுக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு இன்னமும் இருந்துகொண்டுதான் இருந்தது.

பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டபோதிலும், ஈரானைப் போன்றதொரு நாடே கூட, தனது நிலைப்பாட்டைத் தளராமல் காத்துக்கொண்டு, அணு ஆயுத வல்லரசுகளுக்கு மண்டியிட மறுக்கும் துணிவு தனக்குண்டு என்பதை நிலைநிறுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, கடும் நெருக்கடிகள் சூழ்ந்தபோதிலும், ஈரான் தனது 400 கிலோகிராமுக்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இன்று, இந்தியா மிகக் கடுமையானதொரு இக்கட்டான பெருஞ்சுழலில் சிக்கியுள்ளது; இதில் நற்பயன் விளையும் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

இந்தியா பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டால், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்கா விதித்தது போலவே, கடுமையான தண்டனைச் சுங்க வரிகளுக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ஆனால், முழுமையாக அடிபணிவது இதைவிடவும் மோசமான விளைவுகளைத் தரக்கூடும். இது, தன் மக்களுக்கான சட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கும் இந்தியாவின் சுதந்திரமான உரிமையைத் துறப்பதாகும். மேலும், இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், விவசாயத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத நிரந்தர சேதத்தை விளைவிக்கும். இச்சூழ்நிலை, காலனியாதிக்க காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிடிக்குள் இந்தியா சிக்குண்டு, காலனியாக மாறிய நிலைக்கு ஒப்பானதாக அமையும்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/trade/indias-trade-sovereignty-trump-deal-agreement-tariffs

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு