சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களின் முக்கிய பாகங்கள் சுதேசியத் தயாரிப்பு அல்ல!

எச்சரிக்கை மணி எழுப்பும் முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல்

சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களின் முக்கிய பாகங்கள் சுதேசியத் தயாரிப்பு அல்ல!

சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டவை என்றாலும், அவற்றின் முக்கிய இயக்கப் பாகங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல," என்ற கவலைக்கிடமான செய்தியை ஒரு முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியா முதன்முதலாக ட்ரோன்களை ஒரு நிஜப் போரில் பயன்படுத்திய நிகழ்வாக ஆபரேஷன் சிந்துர் அமைந்தது. பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை இந்த நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ரஹீம்யார் கான் ஆகிய இடங்களில் உள்ள விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட 'ஆம்பர் விங்ஸ்' (Amber Wings) என்ற ட்ரோன் உற்பத்தி நிறுவனத்திற்கு தற்போது ஆலோசனை வழங்கிவரும் முன்னாள் மேஜர் ஜெனரல் எம். இந்திரபாலன், சிந்தூர் நடவடிக்கையில் ட்ரோன்களைப் பயன்படுத்திப் போரிடும்போது இந்தியா தனது திறனை நிரூபித்திருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த ட்ரோன்களுக்கான அடிப்படை தொழில்நுட்பம் இன்னமும் பிற நாடுகளை கணிசமான அளவிற்கு சார்ந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டவை மட்டுமே என்றும், முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டன என்பதே அவரின் வாதமாக இருக்கிறது.

சிஎன்என்-நியூஸ்18 டிஃபென்ஸ் டவுன்ஹால் நிகழ்வில் உரையாற்றிய இந்திரபாலன் மேலும் கூறியதாவது: "நாம் அண்மையில் பயன்படுத்திய பெரும்பாலான ட்ரோன்கள் ஒருங்கிணைக்கப்பட்ட (assembled) ரகத்தைச் சேர்ந்தவை. அவை இங்குதான் ஒருங்கிணைக்கப்பட்டன. எனினும், இந்திய நிறுவனங்கள் இந்த இடைவெளியை நிச்சயம் நிரப்பி வருகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்தியாவசியமான, மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நமது நாட்டில் முழுமையாக உற்பத்தி செய்யப்படாத மின்னணு சாதனங்களை பெறுவதற்கு பிறநாடுகளையே நாம் இன்னமும் சார்ந்திருக்கிறோம்."

ட்ரோன் போரில் இந்தியாவின் முதன்மை அனுபவமாக சிந்துர் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது, பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ரஹீம்யார் கான் ஆகிய இடங்களில் உள்ள விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இம்முயற்சியில், "வட்டமிட்டுத் தாக்கும் ட்டேரான்கள்" (loitering munitions) அல்லது "காமிகேஸ் ட்ரோன்கள்" (kamikaze drones) என அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகை தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய ட்ரோன்கள் இலக்கு பகுதிக்கு மேல் குறிப்பிட்ட நேரம் வட்டமிட்டு, காத்திருந்து, எதிரியின் ரேடார் மற்றும் ஏவுகணை இருப்பிடங்களை மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

அதேநேரத்தில், "'சிந்தூர்' நடவடிக்கை, இந்தியாவின் ட்ரோன் தொழில்நுட்பக் கட்டமைப்பில் நிலவும் மிக முக்கியப் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது," என இந்திரபாலன் குறிப்பிட்டார்.

"ஒரு ட்ரோனின் புறத்தோற்றத்தில் அதன் காற்றியக்கவியல் விமானக் கட்டமைப்பு, உந்திகள் போன்றவை இருப்பதை காண முடியும். ஆனால், அதன் உண்மையான சக்தி அதன் மூளையில்தான் உள்ளது: அதாவது, அதன் தானியங்கி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, வழிநடத்தல் அமைப்பு, தொலைஅளவியல் போன்றவைதான் அந்த மூளை. இந்த அம்சங்களில்தான் நாம் அதிதீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை 'சிந்தூர்' நடவடிக்கை நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது.”

“உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையிலோ, அல்லது சீனா பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையிலோ, நாம் வெகுதூரம் பின்தங்கியிருக்கிறோம். நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் ஏராளம்."

"வெளிநாட்டு திசைக்காட்டும் மற்றும் தரவுப் பரிமாற்ற அமைப்புகளையே சார்ந்திருக்கும் நமது நிலை, இந்திய ட்ரோன்களை ஆள்மாறாட்டம் மூலம் திசைதிருப்புதல், சமிக்ஞைகளை முடக்குதல், இணையவழி ஊடுருவல் போன்ற பேரபாயங்களுக்கு உட்படுத்தக்கூடும்" என்று இந்திரபாலன் எச்சரிக்கை மணி எழுப்பியிருக்கிறார்.

"ஓர் ட்ரோனில், RTK-அடிப்படையிலான அல்லது GPS திசைக்காட்டும் அமைப்பு இருக்கலாம்; ஆயினும், அந்த அமைப்புக்கு நமது சுதேசிய உள்கட்டமைப்பின் பக்கபலம் இல்லையெனில், அதன் கட்டுப்பாட்டை எளிதில் தடம் புரட்டிவிட முடியும். அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான GPS அமைப்பையே நாம் நம்பியிருந்தால், நமது பாதுகாப்பு அரண் எந்த அளவிற்கு வலுவிழந்துவிடும் என்பதை நீங்கள் அறிந்ததே. அதுபோலவே, சீனாவின் பெய்டோவைச் சார்ந்திருப்பதாலும் அதே பாதிப்புகள் நேரும் என்பது சொல்லவேண்டியதில்லை."

பெய்டோ (BeiDou) என்பது சீனாவின் பிரத்தியேக செயற்கைக்கோள் திசைக்காட்டும் அமைப்பு ஆகும்; இது அதிகாரப்பூர்வமாக பெய்டோ திசைக்காட்டும் செயற்கைக்கோள் அமைப்பு (BDS) என்றழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் GPS, ரஷ்யாவின் GLONASS மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ ஆகிய தொழில்நுட்பங்களுக்கு நிகரானதாகும்.

இந்த வரிசையில், இந்தியாவும் தனக்கெனத் தனித்துவமான ஒரு செயற்கைக்கோள் வழிசெலுத்தல் வலையமைப்பை வடிவமைத்துள்ளது; அதுவே 'நாவிக்' (NavIC - இந்திய செயற்கைக்கோள் இடஞ்சுட்டி வலையமைப்பு) எனப் போற்றப்படுகிறது.

இந்தியாவின் சுதேசிய இடஞ்சுட்டி வலையமைப்பு குறித்து, அந்த முன்னாள் இராணுவ அதிகாரி தனது பார்வையை இவ்வாறு முன்வைத்தார்:

"நமது ட்ரோன்களுக்கு (drones) 'நாவிக்' (NavIC) வலையமைப்பு முற்றிலுமாகத் தயாராகிவிட்டதா என்று கேட்டால்... தொடக்கநிலை திசைக்காட்டுதலுக்கு மட்டும் தயாராகியிருக்கிறது என்று கூறமுடியும்; பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), நாவிக்-ஐ விரிவாகவே பயன்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. ஆனால், நடைமுறையில் நமது ட்ரோன்களுக்கு அது எந்த அளவிற்குப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது? என்று கேட்டால் ஓரளவிற்கு வந்துள்ளது என்பதே நிதர்சனமாகும்."

ட்ரோன்களின் தொலைப்பதிவு (telemetry) மற்றும் தரவுப்பரிமாற்ற சாதனங்கள் (transmission systems) தற்சமயம் இறக்குமதி செய்யப்படுகின்றன; அவற்றை முழுவதுமாக உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்திரபாலன் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார்.

"ஒவ்வொரு வானூர்தியிலும் தரவுப் பரிமாற்றத்திற்கான ஒரு செயலமைப்பு உண்டு – அதாவது ஒரு பிரத்யேகத் தொகுதி (module) இருக்கும். அது வானொலி அதிர்வெண் (RF) தொகுதியாகவோ, சிடிஎம்ஏ (CDMA) அல்லது செல்லிடை பேசி (mobile) சார்ந்ததாகவோ, அல்லது செயற்கைக்கோள் வழி இயங்கும் தொகுதியாகவோ இருக்கலாம். இந்த அடிப்படையான செயல்தொகுதிகள் எதுவும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதில்லை. இவை யாவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூழலிலேயே நாம் இருக்கிறோம். அதிலும், இன்றைய சந்தையில் மலிவாகக் கிடைக்கும் கருவிகள் சீனத் தயாரிப்புகளாகவே உள்ளன. நீங்கள் சேகரித்து அனுப்பும் எந்தவொரு தரவையும், அதில் புதைந்திருக்கும் ஒரு ரகசிய ஒட்டுக்கேட்புக் கருவி (bug), மிக எளிதாக வேறு இடத்திற்குத் திசைதிருப்பி விடக்கூடும்."

"ட்ரோன்களுக்கான ஒரு முழுமையான உள்நாட்டுத் தொழில்நுட்பக் கட்டமைப்பை (domestic drone stack) உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

"தரவுப் பரிமாற்றத் தொகுதி என்ற இந்த அதிமுக்கியமான பாகம், கட்டாயமாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது," என்கிறார் இந்திரபாலன்.

- விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.businesstoday.in/india/story/ex-army-general-warns-most-drones-in-op-sindoor-were-assembled-core-systems-are-not-made-in-india-482646-2025-07-01

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு