ஒன்றிய பட்ஜெட்டில் அதிகமான நிதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழில்: விஜயன்

ஒன்றிய பட்ஜெட்டில் அதிகமான நிதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது

நடப்பு(2025-26) நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 6,81,210 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 2024-25 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 40,151 கோடி ரூபாய் அதிகமாகும். இருப்பினும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  இராணுவச் செலவு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2%-க்கு குறைவாகவே உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக, பாதுகாப்புச் செலவினம் மத்திய அரசின் ஆண்டுச் செலவினத்தில் 13-14% ஆக இருந்து வருகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலதன நிதி ஒதுக்கீட்டில், அதாவது ஆயுத தளவாடங்கள் வாங்குதல், நவீனமயமாக்கல் போன்ற செலவினங்களுக்காக 1,85,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பாதுகாப்புத் துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில் 27% ஆகும். இதில், 1,48,722 கோடி ரூபாய் ஆயுத தளவாடங்களை நவீனமயமாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 31,277 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கும், எல்லைப்பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

இராணுவத்தின் அன்றாட நடைமுறைச் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் 3,11,732 கோடி ரூபாய் ஆகும். இது, மொத்த பாதுகாப்பு ஒதுக்கீட்டில் 45% ஆகும். இராணுவத்தினரின் ஓய்வூதியங்களுக்காக 1,60,795 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 23.60% ஆகும்.

மீதமுள்ள 28,682 கோடி ரூபாய், அதாவது பட்ஜெட்டில் 4.21%, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிவில் நிர்வாக அமைப்புகளுக்கானது. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation - BRO), கடலோரக் காவல்படை போன்ற அமைப்புகள் இதில் அடங்கும்.

நிதியாண்டு இராணுவத்திற்கான மொத்தச் செலவு (₹கோடிகள்) மத்திய அரசின் மொத்தச் செலவு (CGE) (₹கோடிகள்) CGE-யில் இராணுவச் செலவின் விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தி (₹கோடிகள்) உள்நாட்டு உற்பத்தியில் இராணுவச் செலவின் விழுக்காடு

2020-21 (உள்ளபடி) 4,84,736 35,09,836 13.81% 1,98,00,914 2.4%

2021-22 (உள்ளபடி) 5,00,681 37,93,801 13.20% 2,36,64,637 2.12%

2022-23 (உள்ளபடி) 5,73,098 41,93,157 13.65% 2,73,07,751 2.1%

2023-24 (உள்ளபடி) 6,09,504 44,43,447 13.7% 3,01,75,065 1.97%

2024-25 (திருத்தப்பட்ட மதிப்பீடு) 6,41,060 47,16,487 13.6% 3,24,11,406 1.98%

2025-26 (பட்ஜெட் மதிப்பீடு) 6,81,210 50,65,349 13.45% 3,56,97,923 1.91%

 

இராணுவ பட்ஜெட், தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதமாக கணக்கிடப்படுகிறது.

இந்தியாவின் புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, நமது இராணுவம் நவீன தொழில்நுட்பத்துடன், போர்த்திறன் மிக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.

இதனை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்புப் படைகளின் மூலதனச் செலவுகளுக்காக ₹1,80,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-25 நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீட்டை விட 4.65% அதிகமாகும்.

நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில் துறையை வலுப்படுத்தி, நமது படைகளைத் தற்சார்புடையதாக மாற்றும் நோக்கில், 2020-21ம் நிதியாண்டில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, நவீனமயமாக்கல் என்ற அம்சத்திற்கு அதிகப்படியான நிதி, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களையும், தளவாடங்களையும் கொள்முதல் செய்ய ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இராணுவ உற்பத்தியில், தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், நவீனமயமாக்கல் என்ற அம்சத்திற்கு கணிசமான நிதி உள்நாட்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 75 சதவீதமளவிற்கு அதாவது ₹1,11,544 கோடி ரூபாய் அளவிற்கு இராணுவ நவீனமயமாக்கலுக்கான தேவையை உள்நாட்டு ஆதாரங்கள் மூலமாகவே பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ வீரர்களின் சம்பளங்களுக்காக, ஓய்வூதியங்களுக்காக ₹3,11,732 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற(2024-25) நிதியாண்டில் இராணுவத்தின் அன்றாட நடைமுறைச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 10.24% அதிகமாகும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO-வுக்கு நிதி ஒதுக்கீடு 12.41% உயர்ந்து ₹26,816 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் DRDO புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இராணுவத்தை தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தி, நாட்டில் புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) சூழலை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று பாதுகாப்பு அமைச்சகம் கருதுகிறது. இந்த நோக்கத்திற்காக, iDEX திட்டத்திற்கு ₹450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் 34 லட்சம் இராணுவ ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தும் விதமாக, ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (OROP) திட்டம் ஜூலை 2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஓய்வூதியங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். OROP திட்டத்தின் கீழ், மூன்றாவது திருத்தம் ஜூலை 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், நடப்பு(2025-26) நிதியாண்டிற்கு ₹1.61 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது சென்ற(2024-25) நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 13.87% அதிகம். இந்த ஒதுக்கீடு, பணவீக்கம் காரணமாக ஏற்படும் விலை உயர்வுகளைக் கருத்தில் கொண்டு, முன்னாள் இராணுவ வீரர்களுக்கும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் மேம்பட்ட வாழ்க்கை முறையை பராமரிக்க உதவும்.

இந்திய கடலோர கவால்படைக்கான மூலதன நிதி ஒதுக்கீடு

இந்திய கடலோர காவல்படைக்கு (ICG) மூலதனச் செலவிற்காகவும், அன்றாட நடைமுறை செலவிற்காகவும் மொத்தமாக ₹9,677 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டைக்(2024-25) காட்டிலும் 26.50% கூடுதலாகும். இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு, இந்திய கடலோர காவல்படையின் செயல் திறனை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு தயார்படுத்தவும் இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பதை வெளிக்காட்டுகிறது. ICG, தனது கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவசரத் தேவைகளின்போது அண்டை நாடுகளுக்கும், வணிக கப்பல்களுக்கும் உடனடி உதவி அளிக்கிறது.

குறிப்பாக, கடலோர காவல்படையின் மூலதன பட்ஜெட் (Capital Budget) 43% வரை உயர்ந்துள்ளது. அதாவது, சென்ற(2024-25) நிதியாண்டில் ₹3,500 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, நடப்பு (2025-26) நிதியாண்டில் ₹5,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அதிகரிப்பானது, மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH), டோர்னியர்-228 ரக விமானங்கள், அதிவேக ரோந்து கப்பல்கள் (FPVகள்), பயிற்சி கப்பல்கள், மற்றும் அதிவேகமாக செயல்படும் ரோந்து படகுகள் போன்றவற்றை கொள்முதல் செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், அன்றாட நடைமுறைச் செலிவினத்தின்கீழ், நிதி ஒதுக்கீடு 12.64% உயர்ந்து, ₹4,152 கோடியிலிருந்து ₹4,676 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்

நடப்பு(2025-26) நிதியாண்டில், இந்தியாவின் எல்லைப் பகுதி உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சவாலான நிலப்பரப்புகளில் இராணுவத்தின் நகர்வை எளிதாக்கவும், எல்லைப்புறச் சாலைகள் அமைப்புக்கு (Border Roads Organisation - BRO) மூலதன நிதியாக ₹7,147 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.74% கூடுதலான ஒதுக்கீடு ஆகும். இந்த நிதி ஒதுக்கீடு, எல்லைப் பகுதிகளில் சுரங்கப்பாதைகள், பாலங்கள், சாலைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதற்கு பயன்படும்.

மேலும், எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO) ஏறத்தாழ 70,000 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளதுடன், அவர்களின் தொழிற் திறன்களை மேம்படுத்துவதற்கும், பிராந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது. இதன் மூலம், நீண்ட கால வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

கர்னல் அஜய் சுக்லா (ஓய்வு), தெற்காசியா மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரங்கள், இராணுவ தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் இராணுவ பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை எழுதி வரும் ஒரு கட்டுரையாளர், திறனாய்வாளர் மற்றும் ஊடகவியலாளர் ஆவார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/economy/defence-ministry-gets-largest-chunk-of-union-budget