MSME க்கான நிதி ஒதுக்கீடுகளையும் அபகரிக்கும் கார்ப்பரேட்டுகள்

செந்தளம் செய்திப் பிரிவு

MSME க்கான நிதி ஒதுக்கீடுகளையும் அபகரிக்கும் கார்ப்பரேட்டுகள்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) உதவும் வகையில் தற்சார்பு இந்தியா (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ் அவசரகாலக் கடன் உத்திரவாதத் திட்டம் (ECLGS) கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டது. மூன்று லட்சம் கோடி முதலீட்டில் இதற்கான நிதித் தொகுப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் 4.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த நிதியாண்டில் 5 லட்சம் கோடி வரை பிணையின்றி கடன் வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிதியாண்டிலும் இத்திட்டத்தின் நிதி தொகுப்பில் 9,000 கோடி ஒதுக்கப்பட்டு நீடிக்கப்பட்டுள்ளது.

MSME துறைகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவே உள்ளன. அதிகபட்சமாக ஒரு கோடி முதலீடும், 5 கோடி வரை வரவு-செலவு பார்க்கும் நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என 2020-ல் மோடி அரசு MSME துறையை மறுவரையறை செய்தது. இந்தியாவில் 6.33 கோடி MSME நிறுவனங்கள் இருக்கின்றன; இதில் 6.30 கோடி நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவும், 3.31 லட்ச நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், வெறுமனே 5,000 நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் இருக்கின்றன.

குறு நிறுவனங்கள் மூலம் 10.8 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கபடுகிறது. சிறு நிறுவனங்கள் 32 லட்சம் பேருக்கும், நடுத்தர நிறுவனங்கள் 1.8 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன.

பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?

அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தின் மூலம் குறு நிறுவனங்களே 83 சதவீத கடன்களைப் பெற்றுள்ளது; மேலும் அந்த குறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட கடன்கள் 10 லட்சத்திற்கும் குறைவான கடன்களாகவே கொடுக்கப்பட்டுள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசியிருந்தார்.

சொல்லப்படாதது என்ன?

கடந்த நிதியாண்டின் கடைசி நான்கு மாதங்களில் வழங்கப்பட்ட கடன் நிலவரங்களை ஆராய்ந்தால் உண்மை வேறாக இருக்கிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டும் 2,56,600 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. குறு நிறுவனங்களுக்கு 68,900 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நான்கு மாத கால முடிவில் சராசரியாக கொடுக்கப்பட்டுள்ள கடன் அளவும் பெருமளவில் மாறுபடுகிறது. நடுத்தர நிறுவனங்களுக்கு சராசரியாக 1 கோடியே 40 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது; சிறு நிறுவனங்களுக்கு 59 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது; குறு நிறுவனங்களுக்கு வெறுமனே 9 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 100-ல், 1 சதவீதம் கூட இல்லாத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களையும், பொறுக்கி எடுத்தாற் போல வெகுசில குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவதன் நோக்கம் ஆபத்தானதாக இருக்கிறது. நடுத்தர நிறுவனம் என்ற பெயரில் சிறிது சிறிதாக பிரித்து உருவாக்கப்பட்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மக்கள் பணம் வாரி வழங்கப்படுவதை மூடி மறைப்பதற்காகதான் இவ்வாறு புள்ளி விவரத்தை ஒரு பக்க சார்பாக ஒப்பிட்டு திரித்து புரட்டுகிறார்கள். ஏதோ, இதுவரை இத்திட்டத்தின் கீழ் மட்டும் கொடுக்கப்பட்ட 3.6 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களில், 83% அதாவது கிட்டத்தட்ட 3 லட்ச கோடிக்கும் அதிகமான கடன்கள் குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது போல நாடகமாடுகிறார்கள்.

- செந்தளம் செய்திப் பிரிவு