சிறுகுறு தொழில்களை காவு வாங்கும் - ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி

அமெரிக்காவுடனான அடிமை ஒப்பந்தங்கள் மற்றும் ஊக நிதிமூலதன கும்பல்களின்-பங்குச் சந்தை சூதாடிகளின் களமாக இந்தியா மாற்றப்பட்டதன் விளைவேயாகும்

சிறுகுறு தொழில்களை காவு வாங்கும் - ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி

டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு ரூ.80 ஐ தாண்டி சரிந்துவருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் டாலரில் இறக்குமதி செய்யப்படுவதால் டாலருக்கு இணையான அதிக விலை (ரூபாய்) கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுகுறு தொழில்கள் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டாலர் சிட்டி என அழைக்கப்படும் தமிழகத்தின் திருப்பூர் நகரத்தின் தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தில் விவசாயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பெரும்பாலான தென் மாவட்ட கூலித்தொழிலாளர்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை நம்பியே வாழ்கின்றனர். இத்துறைக்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் பெரும்பாலும் டாலரிலேயே இறக்குமதி செய்யப்படுகின்றன. விலையுயர்வின் காரணமாக தொழில் முடங்கி தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைதான் இந்தியா முழுவதும் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் சாமானிய மக்களின் கடன்களுக்கான மாத இ.எம்.ஐ. தொகையும் அதிகரிக்கும் நிலை உள்ளது. 

ஆனால் அம்பானி அதானி போன்ற தரகு கும்பல்களின் சொத்து மதிப்பு மட்டும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. டாலருக்கு இணையான  ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் மறுபுறம் இந்த ஊக மூலதன கும்பல்களும் - பங்குச்சந்தை சூதாடிகளும் பெரும் பலனடைந்து வருகின்றனர். இதைத்தான் சிலர் இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாக மோசடி வார்த்தைகளில் பேசி வருகின்றனர்.              

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணங்களென்ன?

1. அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கும் போர் வெறிக்கும் சேவை செய்யும் வகையில் அதனுடன் அடிமை ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

2. காங்கிரஸ் - பாஜக அரசுகளால் மாறி மாறி அமல்படுத்தப்பட்டு வரும் உலகமய-தாராளமய-தனியார்மயக் கொள்கைகள் அதன் விளைவாக உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, அந்நிய செலாவணி பற்றாக்குறை

3. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது  

4. மோடி கும்பலின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை

5. புதிய காலனிய ஜிஎஸ்டி வரி விதிப்பு

6. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியின் காரணமாக அமெரிக்கா காப்புக் கொள்கைகளை கடைபிடித்து காலனிய நாடுகளில் தனது பிடியை மேலும் இறுக்கியது. இதன் காரணமாக டாலரில் இருந்த அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டு பறந்தோடியது.

7. இறுதியாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.

பெரும்பாலான ஊடகங்கள் கடைசியாக உள்ள காரணத்தை மட்டுமே பேசுகின்றன. உண்மையான காரணங்களை மூடி மறைக்கின்றன.

- செந்தளம் செய்திப் பிரிவு