பட்ஜெட் 2025: “பரம ஏழைகளை” ஒட்டுமொத்தமாக புறக்கணித்து நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளுக்குத் தீனிபோடுகிறது!
பி.ஜே. ஜேம்ஸ்
எதிர்பார்த்தபடி, தீவிர வலதுசாரி, புதிய பாசிச கொள்கைகளை முன்னிலும் வேகமாக புகுத்துவதில் மோடி ஆட்சி ஆர்வம் காட்டும் அதே வேளையில் உலகிலுள்ள 70 கோடி “பரம ஏழைகளில்” செம்பாதிக்கும் அதிகமாக நமது நாட்டிலிருக்கும் முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட அடித்தட்டு உழைக்கும் மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளுக்கு தீனிபோடும் வகையில் அல்லது தட்டிக் கொடுக்கும் வகையில் 2025–ம் ஆண்டிற்கான இந்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.145 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட 35 கோடி மக்கள் சாதாரண, எவ்வித தனித்திறனும் தேவைப்படாத, உடலுழைப்பாளிகளாக இருக்கிறார்கள்; பெரிதும் ஊதிப் பெருக்கப்பட்ட வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான MGNREGA திட்டத்தின் கீழ் பதிவு செய்து வேலை பார்த்து வந்தவர்களுக்கு எல்லா மாநிலங்களிலும் முன்பு குறைந்தப்பட்ச உத்தரவாதமாக ஓராண்டிற்கு நூறு நாள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்தியாவில் கொடிய வறுமையை எதிர்கொண்டு வரும் “பரம ஏழை எளிய மக்களுக்கு” 100 நாள்கள் வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென்றால் இந்தியாவின் ஜிடிபி(2024) மதிப்பில் 1.5 சதவீதத்தை அதாவது குறைந்தபட்சம் 2.70 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டுமென கடந்த ஆண்டு பல்வேறு வல்லுநர்கள் மதிப்பீடு செய்து கூறியிருந்தனர். ஆனால், 2047க்குள்ளாக “வளர்ந்த பாரதத்தை” உருவாக்குவதாக சொல்லும் மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. பட்ஜெட் மதிப்பீட்டின்படி, 2021–ம் ஆண்டில் மொத்த ஜிடிபியில் 0.56% ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் படிப்படியாக குறைந்து 2023ம் ஆண்டு 0.33 சதவீதமும், அதுவே, 2024ல் 0.25 சதவீதமும் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
“நடுத்தர வர்க்கத்தின் நலன் காக்கும் பட்ஜெட்” என்று வர்ணித்திருப்பதை பார்க்கும் போது வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் எழக்கூடிய அதிருப்தியை எப்படியாவது குறைக்க வேண்டுமென்ற பதற்றம் வெளிப்படுவதையும் பார்க்க முடிகிறது; நுகர்வை அதிகரிப்பதன் மூலம் “வளர்ந்த பாரதத்தை” உருவாக்குகிறோம் என்ற பெயரில், வருமான வரியைக் குறைப்பது, பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 1 இலட்சம் கோடி அளவிற்கான வரி வருவாய் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது; இந்த முறை பட்ஜெட் உரையில் MGNREGA திட்டம் பற்றி எங்குமே பேசவில்லை. மொத்தத்தில், “பரம ஏழைகளை” இந்தாண்டு பட்ஜெட் கொடிய வறுமையில், சொல்லொண்ணா துயரத்தில், கையறு நிலைமையிலேயே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. உலகளவில், நாளொன்றிற்கு 1.90 டாலருக்கும் குறைவாக வருமானம் பெறக்கூடியவர்களை “பரம ஏழைகள்” என்று உலக வங்கி வரையறுத்திருக்கிறது, அதுவே இந்தியாவில் நாளொன்றிற்கு 1.15 டாலருக்கு குறைவாக வருமானம் ஈட்டக்கூடியவர்களை பரம ஏழைகள் என்று வரையறுத்துள்ளது.
இதே இந்தியாவில்தான், உலகிலேயே கார்ப்பரேட்டுகள் மீது விதிக்கப்படும் வரி மிக மிகக் குறைவாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்திய பெருங் கோடீஸ்வரர்களின் செல்வம் என்பது 42 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகிலேயே மிக மிகப் பிற்போக்கான வரிவிதிப்பாக கருத்தப்படும் ஜிஎஸ்டி வரியின் மூலமாக நாட்டின் மொத்த வரிச் சுமையும் சாதாரண இந்திய மக்களின் மீதுதான் சுமத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், கொள்கையளவிலும், நடைமுறையளவிலும், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சட்ட வரம்புகளை தளர்த்துதல் என்ற பெயரில் தொடர்ச்சியாக “தொழில் செய்வதை எளிமைப்படுத்துவது”, “முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவது” போன்ற நடவடிக்கைகள் உட்பட பல்வேறு கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளோடு இந்தாண்டு பட்ஜெட்டில் வரிவிதிப்பு முறையை மேலும் எளிமைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள், வளர்–ஆய்வுத் திட்டங்கள், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள், ஏன் அணு சக்தி திட்டங்களில்கூட அரசு–தனியார் பங்கேற்பு என்ற பெயரில் ஒட்டுண்ணி முதலாளிகளின் பங்கேற்பை உத்திரவாதப்படுத்துகிறார்கள். சிறிய ரக அணு உலைகளை தனியார் பங்கேற்புடன் வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும், அணு சக்தி சட்டத்திலும், அணு சக்தி விபத்து இழப்பீட்டு சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருப்பதும், அணு உலை விபத்து என்ற பேரழிவை மட்டுமல்லாது, ஏகாதிபத்திய நாடுகளின் பாதுகாப்பற்ற விலையுயர்ந்த அணு உலைகளையு திணிப்பதும், அணுக் கழிவுகளை கொட்டும் குப்பை கூடமாக இந்தியா மாறும் அபாயமும் உள்ளது. மேலும், இது போன்ற கார்ப்பரேட் தாக்குதல்களுக்கு சேவை செய்யும் வகையில், இந்தாண்டு(2025) பட்ஜெட்டில், பன்னாட்டு கார்ப்பரேட் கம்பனிகளின் ஆசியுடன், அவர்களுக்கு இளைய பங்காளிகளாக செயல்படும் இந்திய கார்ப்பரேட்டுகளின் ஆசியுடன் மாநில வாரியாக புதிய தாராளமய கார்ப்பரேட்மயக் கொள்கைகளை முன்னிலும் தீவிரமாக செயல்படுத்துவதற்கு முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களின் குறியிட்டெண்(Investment Friendliness Index) தரவரிசை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இத்திசை வழியில், அநேகமாக ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய பாசிச, தீவிர வலதுசாரி டிரம்ப் ஆட்சிக்கு இணக்கமாக இருப்பதை தெரிவிக்கும் வகையில், வரலாறு காணாதளவிற்கு இந்தியக் காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய மூலதனம் உள் நுழைவதற்கு திறந்துவிட்டுள்ளார்கள். உலகளவில் வெறுத்தொதுக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் தங்குதடையின்றி இந்திய காப்பீட்டுத் துறையில் முதலீடு செய்து, கொள்ளையடித்து பறந்தோடுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. அந்நிய வர்த்தகத் துறையில் இருந்து வந்த ஏழு காப்பு வரிகளை ஒரெயடியாக ரத்து செய்ததோடு, ஒட்டுமொத்த காப்பு வரிக் கொள்கையையும் எளிமைப்படுத்துவது, வரம்புகளை தளர்த்துவது என்று இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டிருப்பது கூட டிரம்ப் மிரட்டலின் மற்றுமொரு பாதிப்பு எனலாம். அமெரிக்கா அல்லது சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப பெருங்கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றபோதும் செயற்கை நுண்ணறிவு போன்ற முன்னணி தொழில்நுட்பங்கள் பற்றியும்கூட இந்த பட்ஜெட்டில் சில வெற்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 500 கோடி ரூபாய் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அமைக்கப்படும என்று அறிவித்துள்ளனர். சுருக்கமாகச் சொல்வதெனில், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வந்த பல்வேறு அறிவிப்புகளையடுத்து, பங்குச் சந்தை குறியீட்டெண்கள்(சென்சக்ஸ், நிஃப்டி), தடுமாற்றதோடு ஆரம்பித்தபோதும், நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடிக்கும்போது உயரத் தொடங்கியது.
கார்ப்பரேட் நலன்களுக்கு எளிதில் வளைந்து போகக்கூடிய ஊடகங்களும், மோடி ஆட்சியும் கட்டியமைத்த பிம்பத்திற்கும், இந்தியாவின் யதார்த்த நிலைமைக்கும் இடையிலான இடைவெளி என்பது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது. வீட்டோ அதிகாரம் உடைய அமெரிக்காவின் புதிய காலனிய கருவியாக இருக்கும் ஐஎம்எஃப் அமைப்பு, முன்பே இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதத்தை தாண்டிச் செல்லாது என்று கணித்திருந்தது. IMF அமைப்பின் ஆணைக்கினங்க 2003ம் ஆண்டு அன்றைய வாஜ்பாய் அரசாங்கத்தால் இயற்றப்பட்ட FRBM(நிதிப் பொறுப்புகள் மற்றும் பட்ஜெட் மேலாண்மை) சட்டம்தான் இறுதியினும் இறுதியாக புதிய காலனிய ஆட்சியில் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான இலக்கு உட்பட இந்திய பட்ஜெட்டின் அனைத்து அளவுகோல்களையும் நிர்ணயம் செய்கிறது என்பதை பட்ஜெட் பற்றி ஆராயும் எவருக்கும் தெரிந்த விசயம் ஆகும். 2047ம் ஆண்டிற்குள்ளாக வளர்ச்சியடைந்த பாரத நாட்டை உருவாக்குவதற்கு 8 சதவீத ஜிடிபி வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டுமென சொல்லிக் கொண்ட போதிலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றவாறெல்லாம் பேசி வருகிற போதிலும், IMF அமைப்பின் கணிப்புகளுக்கு ஏற்பவே, நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும் வருகிற நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதத்திற்குள்ளாகவே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், ஏற்கனேவே குறிப்பிட்டபடி, உலகிலுள்ள பரம ஏழைகளில் செம்பாதிக்கும் அதிகமாக இருக்கும் இந்தியா அடிக்கடி “உலக வறுமையின் தொட்டில்” என்று அழைக்கப்படுகிறது, மேலும், மோடி ஆட்சியின்கீழ் 1 சதவீத பெரும் பணக்காரர்கள் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வ வளத்தை கைப்பற்றி வைத்திருக்கும் அளவிற்கு கொடிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. குறைந்தபட்ச கூலி, சமூக பாதுகாப்பு வசதிகள் என எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாத முறைசார/அமைப்பு சாரா துறையில்தான் 90 சதவீதத்திற்கும் அதிகமானத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இன்றும், உலகளவில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம், வேலைவாய்ப்பின்மையால் இந்தியாவே தரிசானது போல் காட்சியளிக்கிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் மூலதனச் செலவிற்காக 10 லட்சத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். (கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 11.11 லட்சம் கோடி ரூபாய்) அரசு–தனியார் பங்கேற்பு மாடல் வழியாகவும், இன்னப் பிற வழிகளிலும், ஒட்டுண்ணி முதலாளிகளால் குறுகிய காலத்தில் கொள்ளை இலாபத்தை பெருக்கித் தரக்கூடிய ஊக வணிகத் துறைகளில் முதலீடு செய்யப்படுமே ஒழிய வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய உற்பத்தி துறைகளுக்கு வழங்கப்படாது. ‘பாசிச இரட்டை எஞ்ஜீன் ஆட்சி’ நடக்கும் பீகார் போன்ற மாநிலங்களுக்கு வரப்பிரசாதமாக மாறிய பட்ஜெட், இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. ஓரிரு வரிகளில் சொல்வதென்றால், மேற்கண்ட அனைத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது, நிதிநிலை அறிக்கையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களும் புதிய தாராயமய கார்ப்பரேட் மயமாக்கல் விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிற வரையில் நாடும், நாட்டு மக்களும் சென்று கொண்டிருக்கும் நாசகரப் பாதையிலிருந்து மீண்டு வர முடியாது. மேலும், “பொற் காலம்” அமிர்தகாலம் என்று எத்தனை முறை கூவினாலும் சாதாரண இந்தியர்களின் துயரகரமான வாழ்வை எதைவைத்தும் ஆட்சியாளர்களால் மூடிமறைத்துவிட முடியாது. அனைத்து முற்போக்கு–ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து நின்று பட்ஜெட்டின் உண்மையான சாராம்சம் என்வென்பதை தோலுரித்துக் காட்டுவதும், மக்கள் நலனிலிருந்து மாற்று அரசியலை உருவாக்குவதும் உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில்தான் உள்ளது.
(பி.ஜே. ஜேம்ஸ், பொதுச் செயலாளர், சிபிஐ(எம்எல்) ரெட் ஸ்டார்)
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://redstaronline.in/2025/02/01/budget-2025-patting-on-middle-class-dreams-in-gross-disregard-of-the-absolute-poor/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு