இந்தியாவில் 12.9 கோடி ஏழைகள் 7.5 கோடியாக குறைந்தது எப்படி? திருத்தப்பட்ட வறுமைக் கணக்கீட்டின் பின்னணி என்ன?

தமிழில்: விஜயன்

இந்தியாவில் 12.9 கோடி ஏழைகள் 7.5 கோடியாக குறைந்தது எப்படி? திருத்தப்பட்ட வறுமைக் கணக்கீட்டின் பின்னணி என்ன?

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு ஜப்பான், ஜெர்மனியுடன் போட்டிப் போடுவதாக இந்தியா கூறிவருகிறது. ஆனால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்டுள்ள இந்தியாவுடன் போட்டியிடுவதற்கு எவருமில்லை எனும் அளவிற்கு இந்தியா அதில் முன்னிலை வகிக்கிறது.

உலக வங்கி, உலகளாவிய வறுமை நிலவரம் குறித்து ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடுகிறது. சமீபத்தில், 2024ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 12.9 கோடி மக்கள் மிகக் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாகக் குறிப்பிட்டது. 2017ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில், நாடுகளுக்கிடையே பண மதிப்புகள் சீரமைக்கப்பட்ட பிறகு, ஒரு நாளைக்கு $2.15 டாலருக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களையே இங்கு, "மிகக் கடுமையான வறுமை"யில் வாழ்வதாக குறிக்கிறது. உலகளாவிய அளவில் உள்ள 69.2 கோடி பரம ஏழைகளில், இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான, அதாவது மொத்த உலக வறியோர் எண்ணிக்கையில் சுமார் 18.6% பரம ஏழைகள் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தது.

நடப்பு மாதத்தில், உலக வங்கி புதிய அறிக்கையொன்றை வெளியிட்டது; இது முதன்மையாக இந்தியாவை மையப்படுத்தியிருந்தது. இந்த முறை, அவர்கள் வறுமைக் கோட்டை உயர்த்தியிருந்தனர் – இது 2021ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் புதிய அளவுகோலின்படி, உலகெங்கிலுமுள்ள தீவிர வறுமையின் பிடியில் உள்ளோரின் எண்ணிக்கை 80.8 கோடியாக உயர்ந்தது. ஆனால், இந்தியாவுக்கான புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை 7.52 கோடியாக குறைந்திருக்கிறது. ஆகவே, ஒரே ஒரு வருடத்தில், இந்தியாவில் தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை 5.38 கோடியளவிற்கு உலக வங்கி குறைத்திருக்கிறது. உலக வங்கி இத்தகைய பெரும் குறைப்பை எவ்வாறு செய்தது என்பதே பலருக்கும் கேள்வியாக எழுந்துள்ளது.

புர்கினா பாசோவின் வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட (ஒரு நபர் ஒரு நாளைக்கு $2.15 அல்லது $3 டாலருக்கும் குறைவாக வருமானம் ஈட்டுவதை குறிப்பதாகும் ) வறுமைக் கோடு, தற்போது உலகின் வறுமை மிகுந்த 23 நாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று உலக வங்கி மேலும் விளக்கமளித்திருந்தது. இவை "குறைந்த வருவாய் நாடுகள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா தற்போது "நடுத்தர வருவாய் நாடு" எனக் கருதப்படுவதால், இந்த வறுமைக் கோடு இந்தியாவுக்கு உண்மையில் பொருத்தமானதல்ல என்றும் உலக வங்கியே குறிப்பிட்டிருந்தது.

இப்படியிருக்க, இந்திய அரசு இதனை ஒரு பெரும் சாதனையாக இவ்வளவு தீவிரமாக முன்னிறுத்துவது ஏன்? இந்தியாவுக்குப் பொருத்தமான உலக வங்கியின் வறுமைக் கோட்டைப் பயன்படுத்தினால், இந்தியா இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்ட நாடாகவே நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவின் புதிய கணக்கெடுப்பு முறையினை ஏற்றுக்கொண்ட உலக வங்கி

2016-2017 ஆம் ஆண்டிற்கு முந்தைய கணக்கெடுப்பு நம்பகத்தன்மையற்றதாகக் கருதப்பட்டு, புறக்கணிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா 2022-2023 ஆம் ஆண்டில் ஒரு புதிய நுகர்வோர் கணக்கெடுப்பை மேற்கொண்டது.

2024 ஆம் ஆண்டுக்கான வறுமை அறிக்கையை உலக வங்கி வெளியிட்டபோது, இந்த புதிய கணக்கெடுப்பின் முடிவுகளை இந்தியா ஏற்க மறுத்தது. இதற்கு மாறாக, இந்தியாவில் வறுமையை மதிப்பிடுவதற்கு 1990 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயன்படுத்தி வந்த பழைய முறையையே பயன்படுத்த வேண்டுமென கூறிவந்தது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்ட போது தனது அணுகுமுறையை முழுமையாக மாற்றிக்கொண்டதோடு, இந்தியாவின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நுகர்வோர் கணக்கெடுப்புத் தரவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் உலக வங்கி கூறியிருந்தது. இலவச உணவு தானியங்களை அவற்றின் சந்தை விலையில் கணக்கிடுவது போன்ற சில சீரமைப்புகளைச் செய்தபின்பு, இறுதியாக முழுமையான நுகர்வோர் கணக்கெடுப்பு நடைபெற்ற 2011-2012 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வறுமை நிலவரத்தையும் உலக வங்கி மறு ஆய்வு செய்தது.

புதிய முடிவுகள் பெரும் வியப்பை அளித்தன

கடந்த ஒரு மாதத்தில் நுகர்வுக்கான செலவுகளை நினைவுகூர்ந்து கூறுவதன் அடிப்படையில் கணக்கிடப்படும் பழைய முறையை (Uniform Recall Period - URP) பயன்படுத்தி, உலக வங்கி 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் 28.94 கோடி மக்கள் கடுமையான வறுமையில் வாழ்ந்ததாகக் கணித்திருந்தது. (இது 2017 ஆம் ஆண்டு விலைகளுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட ஒரு நாளைக்கு $2.15 டாலருக்கும் குறைவான வருமானம் பெறுபவர்களைக் குறிப்பதாகும்). இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 23% ஆகும். இதே முறையைப் பயன்படுத்தி, 2021 ஆம் ஆண்டிற்கு கணக்கிடும்போது 18.213 கோடி மக்கள் (13%)  கடுமையான வறுமையில் இருந்ததாக கணித்திருந்தது.

ஆனால், உலக வங்கி இந்தியாவின் புதிய கணக்கெடுப்பு முறையான மாற்றியமைக்கப்பட்ட கலப்பு நினைவுபடுத்தல் காலத்தைப் (Modified Mixed Recall Period - MMRP) பயன்படுத்தியபோது, கடுமையான வறுமையில் உள்ளோரின் எண்ணிக்கை 2011 இல் 20.6 கோடியாக (16%) குறைந்ததோடு, 2022 இல் வெறும் 3.367 கோடியாக (2.35%) திடீர் சரிவைக் கண்டது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவின் புதிய கணக்கெடுப்பு முறை தீவிர வறுமையை ஏறக்குறைய இல்லாமல் ஆக்கிவிட்டது!

ஒரு நாளைக்கு $3 டாலர் வருமானம் ஈட்டுவதை வறுமைக் கோடாக (2021 ஆம் ஆண்டு விலைகளுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்டது) பயன்படுத்தும்போதும் இதேபோன்றதொரு போக்கு காணப்படுகிறது. இந்த வறுமைக் கோட்டின்படி, 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் 34.441 கோடி பரம ஏழைகள் (27%) இருந்தனர். ஆனால், இந்த எண்ணிக்கை 2022 இல் 7.522 கோடியாக (5.25%) குறைந்தது—சுமார் 27 கோடி மக்களின் வறுமைநிலை குறைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது.

இதைத்தான் நரேந்திர மோடி அரசாங்கம் பெருமையுடன் சுட்டிக்காட்டும் வியத்தகு வறுமை குறைப்பு நடவடிக்கையாகும்.

உண்மையில், இந்தியாவில் தீவிர வறுமையின் பிடியில் சிக்தித் தவிப்போரின் எண்ணிக்கை என்ற பெயரில் மூன்று வெவ்வேறு எண்ணிக்கைகளை 2025 ஆண்டு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கையில் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

*   18.213 கோடி (URP முறை, ஒரு நாளைக்கு $2.15 டாலர் வருமானம் ஈட்டுவதை வறுமைக் கோடாக கொண்டது, 2017 விலைவாசியை அடிப்படையாகக் கொண்டது)

*   3.367 கோடி (MMRP முறை, ஒரு நாளைக்கு $2.15 டாலர் வருமானம் ஈட்டுவதை வறுமைக் கோடாக கொண்டது, 2017 விலைவாசியை அடிப்படையாகக் கொண்டது)

*   7.522 கோடி(MMRP ஒரு நாளைக்கு $3 டாலர் வருமானம் ஈட்டுவதை வறுமைக் கோடாக கொண்டது, 2021 விலைவாசியை அடிப்படையாகக் கொண்டது)

இந்த மதிப்பீடுகளுக்கு இடையே ஐந்து மடங்கிற்கும் அதிகமான அளவிற்கு வேறுபாடு நிலவுவதை காண முடிகிறது!

நீங்கள் விரும்பும் எண்ணிக்கையைத் தேர்வு செய்யலாம் அல்லது அனைத்தையும் புறக்கணிக்கலாம் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. ஏனெனில், உலக வங்கி $2.15 டாலர் அல்லது $3 டாலர் வருமானம் ஈட்டுவதை வறுமைக் கோடாகப் பயன்படுத்துவது, தற்போது குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பொருந்தாது என்பதையும் சேர்த்துக் கூறியிருக்கிறது.

அதிக ஏழைகளை கொண்ட இந்தியா

இந்தியா போன்ற நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும், வழக்கமான தீவிர வறுமைக் கோட்டைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் உயர்த்தப்பட்ட வறுமைக் கோட்டைப் பயன்படுத்துவதே ஏற்றதாக இருக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கைகள் வாயிலாக ஓர் அழுத்தமான உண்மையைப் பதிவுசெய்துள்ளது. இத்தகைய நாடுகளில் வறுமையை அளவிட, ஒரு நபருக்கு நாளொன்றுக்கு $6.85 டாலர் (2017ஆம் ஆண்டு விலையின்படி) அல்லது $8.3 டாலர் (2021ஆம் ஆண்டு விலையின்படி) என்ற அளவுகோலைப் பயன்படுத்துகிறது. இந்த உயர்த்தப்பட்ட வறுமைக் கோடு, உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைத் தாண்டி, மின்சாரம், சுகாதாரம், இணைய வசதி போன்ற நவீன வாழ்வின் இன்றியமையாத கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

2025ஆம் ஆண்டுக்கான, உலக வங்கியின் புதிய மதிப்பீடுகளின்படி, இந்த உயர் வறுமைக் கோட்டின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 117.57 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 82% ஆகும். 2011ஆம் ஆண்டிலும் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட அதே அளவில், அதாவது 117.445 கோடி மக்களாக (மொத்த மக்கள் தொகையில் 92.5%) இருந்தது. இது கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஏழைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் காணவில்லை என்பதையேக் காட்டுகிறது.

உலக அளவில், இந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 300.83 கோடி ஆகும். இவர்களில் ஏறத்தாழ 31% ஏழைகள் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள். இதன் மூலம், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது தெளிவாகிறது. சஹாரா பாலைவனத்திற்கு கீழுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 108.66 கோடி ஏழைகள் இருக்கும் நிலையில், அதனையும் தாண்டிய எண்ணிக்கையிலான ஏழைகள் இந்தியாவில் உள்ளனர்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்காகக் கொண்டுவரப்பட்ட, ஆனால் தற்போது படிப்படியாகக் கைவிடப்பட்டு வரும், மற்றொரு வறுமைக் கோடான ஒரு நபருக்கு நாளொன்றுக்கு $4.2 டாலர் (2021ஆம் ஆண்டு விலையின்படி) என்பதையும் உலக வங்கி பயன்படுத்துகிறது. இந்த அளவீட்டின்படி, 2025ஆம் ஆண்டில் உலக அளவில் 160 கோடி ஏழைகள் உள்ளனர். இவர்களில் இந்தியா 34.229 கோடி ஏழைகளைக் கொண்டுள்ளது, இது உலகளாவிய மொத்த எண்ணிக்கையில் சுமார் 21% ஆகும். இந்தக் குறைந்த வறுமைக் கோட்டின்படியும் கூட, உலகிலேயே அதிகபட்ச ஏழைகள் எண்ணிக்கையைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சஹாரா பாலைவனத்திற்கு கீழுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 77.58 கோடி ஏழைகள் (அதன் மக்கள் தொகையில் 48.4%) உள்ளனர். ஆனால், அங்குள்ள எந்த ஒரு தனி நாடும் இந்தியாவைப் போன்று அதிக ஏழைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் சுமார் 22.78 கோடி ஏழைகளே உள்ளனர்; இது இந்தியாவின் ஏழைகள் எண்ணிக்கையை விடப் பல மடங்கு குறைவு. சீனா உட்பட கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் இந்த அளவீட்டின்படி வெறும் 14.3 கோடி ஏழைகளே உள்ளனர் – இது இந்தியாவின் எண்ணிக்கையில் பாதியளவை விடவும் குறைவு.

ஆகவே, இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு ஜப்பான், ஜெர்மனியுடன் போட்டிப் போடுவதாக கூறிவருகிறது. ஆனால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்டுள்ள இந்தியாவுடன் போட்டியிடுவதற்கு எவருமில்லை எனும் அளவிற்கு இந்தியா அதில் முன்னிலை வகிக்கிறது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.deccanherald.com/opinion/from-129-million-to-75-million-whats-behind-indias-poverty-recount-3587856?utm_source=whatsapp&utm_medium=referral&utm_campaign=socialshare