இந்தியா மீதான அமெரிக்காவின் புதியகாலனிய பிடியை இறுக்கும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம்

தமிழில்: வெண்பா

இந்தியா மீதான அமெரிக்காவின் புதியகாலனிய பிடியை இறுக்கும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம்

திட்ட அறிக்கை: அமெரிக்காவும் இந்தியாவும் அதிதீவிர தொழில்நுட்ப திட்டங்களுக்கான (iCET) போர்த்தந்திர கூட்டை மேம்படுத்தவுள்ளன

வணிகம், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புதுறை ஒத்துழைப்பு இவற்றில் போர்த்தந்திர ரீதியான கூட்டை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் மே 2022ல் அதிதீவிர தொழில்நுட்ப திட்டத்தை (iCET)  பைடனும் மோடியும் அறிவித்தனர்.

தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், மேம்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை இரு நாடுகளுக்கிடையில் ஜனநாயக மதிப்புடையதாகவும் உலகளாவிய மனித உரிமைகளை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது. பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் திறந்த - பாதுகாப்பான தொழில்நுட்பங்களை  வளர்ப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இது ஜனநாயக மதிப்புகளையும் ஜனநாயக நிறுவனங்களையும் வலுப்படுத்தும்.

இன்று, இரண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வாஷிங்டன்னில் iCET இன் தொடக்க கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். அமெரிக்க தரப்பிலிருந்து தேசிய வான் மற்றும் விண்வெளி கழகத்தின் நிர்வாகி, தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர், தேசிய விண்வெளி கவுன்சிலின் நிர்வாகச் செயலர் மற்றும் வர்த்தகத் துறை பாதுகாப்பு துறைகளைச் சார்ந்த மூத்த அதிகாரிகள் இருந்தனர். இந்தியா தரப்பில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், தொலைத்தொடர்புத் துறைச் செயலர், பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக - தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலக மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இரு தரப்பும் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இணை மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தி ஆகியவற்றில் அதிக ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் மற்றும் தங்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்புகளில் இணைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். முக்கிய துறைகளில் ஆய்வரங்கு, கருத்தரங்கு, காட்சி அரங்குகள் மூலம் புதிய இணைப்புகளை  நிறுவு வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். உயிரி தொழில்நுட்பம், அரிய மற்றும் மேம்பட்ட மூலப்பொருட்களின் பயன்பாட்டு தொழில்நுட்பம் ஆகிய துறைகளையும் தங்கள் எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளாக அடையாளம் கண்டுள்ளனர்.

இரு நாடுகளிலும் உள்ள வணிகம், திறன்மிகு உழைப்பு சக்திகளை கையாளுதல் தொடர்பான சிக்கல்களையும் சட்டரீதியான தடைகளையும்  iCETன் அமைப்பு  மூலம் தீர்க்கப் போவதாக அமெரிக்காவும் இந்தியாவும் அழுத்திக் கூறின. இதைத் தொடர்ந்து, ஜனவரி 30 அன்று அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் நடத்திய வட்டமேசை மாநாட்டில் அமெரிக்க வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற மூத்த அமெரிக்க இந்திய அதிகாரிகள், 40க்கும் மேற்பட்ட இரு நாடுகளின் தொழிலதிபர்கள், பல்கலைக்கழக மற்றும் சிந்தனைத்துறை தலைவர்கள் கூடி  தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை விரைவுபடுத்துவது குறித்து வாதிட்டனர்.

தங்கள் தொழில்நுட்ப கூட்டை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும், அமெரிக்காவும் இந்தியாவும் புதிய இருதரப்பு திட்டங்களைத் தொடங்குவதோடு பின்வரும் தளங்களிலும் தங்களது புதிய ஒத்துழைப்பை வரவேற்கின்றன:

தத்தமது சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்புகளை வலுப்படுத்துதல்

தேசிய அறிவியல் அறக்கட்டளை மற்றும் இந்திய அறிவியல் ஏஜென்சிகளுக்கு இடையேயான ஆராய்ச்சி முகமை கூட்டுக்கு புதிய அமலாக்க ஏற்பாட்டில் கையெழுத்திடுவது - செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட வயர்லெஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தவுள்ளன.

ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பங்கேற்புடன் கூட்டு இந்திய-அமெரிக்க குவாண்டம் தொழில்நுடப அமைப்பை நிறுவுதல்.

ஒருமித்த கருத்து, பலதரப்பு பங்குதாரர் நிலைகள், குறிக்கோள்கள் மற்றும் ஜனநாயக மதிப்புடைய வரையறைகள் மற்றும் வளர்ச்சிகள்   இணைந்திருப்பதை உறுதிசெய்யும் வகையில் நம்பகமான AIக்கான பொதுவான தரநிலைகள் மற்றும் வரையறைகளை உருவாக்குவதற்கான உலகளாவிய முயற்சிகளை தீட்டுதல்.

உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் (HPC -ஹெச்பிசி) தொழில்நுட்பம் மீதான ஒத்துழைப்பு மற்றும் மூலக் குறியீட்டை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்க காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவித்தல்.

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

ஜெட் என்ஜின்கள், வெடிகுண்டுகள் தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் பிற அமைப்புத் திட்டங்களை ஆராய்வதில் ஆரம்ப கவனம் செலுத்தி, உற்பத்தியை கூட்டாக மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரைவுபடுத்த புதிய இருதரப்பு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு திட்டத்தை உருவாக்குதல்.

இந்தியாவினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இயக்கப்படும் ஜெட் விமானங்களில் பொருத்தக்கூடிய ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்க அமெரிக்காவிற்கு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை விரைவான மதிப்பாய்வுக்குட்படுத்தி அமெரிக்கா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உளவுத்துறை (ISR) நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களை இணைக்கும் புதிய "ஆராய்ச்சி பாலம்" தொடங்குதல்.

குறைக்கடத்தி (semi conductor) விநியோக சங்கிலிகள்

நெகிழ்வான குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல்; இந்தியாவில் குறைக்கடத்தி வடிவமைப்பு, உற்பத்திசார் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியை ஆதரித்தல்; இரு நாடுகளும் உலகளாவிய குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளை ஆதரிக்கும் திறமையான பணியாளர் சக்திகளை மேம்படுத்தவும் உயர்தொழில்நுட்ப முனைகள் மற்றும் பேக்கேஜிங் அமைப்புகளை இந்தியாவில் உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளையும் ஊக்குவித்தல்.

குறைக்கடத்திகள் உற்பத்திசார் சுற்றுச்சூழல் அமைப்புகளின் போர்த்தந்திர ரீதியிலான வளர்ச்சியை நோக்கமாக கொண்ட (அமெரிக்க செமிகண்டக்டர் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் (எஸ்.ஐ.ஏ) இந்தியா எலக்ட்ரானிக்ஸ் செமிகண்டக்டர் அசோசியேஷன் (ஐஇஎஸ்ஏ) உடன் இணைந்து இந்திய அரசின் செமிகண்டக்டர் மிஷனின் பங்கேற்புடன் ஏற்பட்டுள்ள) பணிக்குழுவை வரவேற்றுள்ளது.

இந்த பணிக்குழு, உலகளாவிய குறைக்கடத்தி சங்கிலியில் இந்தியாவின் பங்கை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து வர்த்தகத் துறை மற்றும் இந்திய செமிகண்டக்டர் மிஷனுக்கு பரிந்துரைகளை வழங்கும். மேலும் அமெரிக்க - இந்திய வர்த்தக உரையாடலுக்கு ஆலோசனைகளையும் வழங்கும். மேலும் அது, தொழிலாளர் மேம்பாடு, மேம்பட்ட பேக்கேஜிங் உட்பட R&D, மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பரிமாற்ற வாய்ப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து எளிதாக்கும்.

விண்வெளி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (ISRO) / NASA ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி வீரர் துறைக்கும் மேம்பட்ட பயிற்சியை உள்ளடக்கிய பரிமாற்றங்களை நிறுவுதல் உட்பட மனித விண்வெளிப் பயணத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

குறிப்பாக நாசாவின் நிலாவுக்கான பயணத் (Commercial Lunar Payload Services - CLPS) திட்டத்துடன் தொடர்புடைய செயல்பாடுகள் தொடர்பாக இரு நாடுகளின் வணிகத் துறைகள் ஒத்துழைப்பதற்கான புதிய அணுகுமுறைகளை அடையாளம் காணுதல். அடுத்த ஆண்டுக்குள் நாசா இஸ்ரோவுடன் இணைந்து அமெரிக்க சிஎல்பிஎஸ் நிறுவனங்களையும், இந்திய விண்வெளி நிறுவனங்களையும் கூட்டி இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும்.

விண்வெளி அறிவியல், புவி அறிவியல் மற்றும் மனித விண்வெளிப் பயணம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்முறை பொறியாளர் மற்றும் விஞ்ஞானி பரிமாற்றத் திட்டத்தை (PESEP) விரிவுபடுத்துவதன் மூலம் புதிய STEM திறமை பரிமாற்றங்களைத் தொடங்குதல் மற்றும் நாசாவின் இரு வருட சர்வதேச திட்ட மேலாண்மை பயிற்சிகளில் பங்கேற்க இஸ்ரோவுக்கு நிலையான அழைப்பை வழங்குதல்.

அமெரிக்க - இந்திய பொது விண்வெளி கூட்டுப் பணிக்குழுவின் கீழ் அமெரிக்க வர்த்தகத் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறைகளின் இருதரப்பு புதிய வணிக விண்வெளி கூட்டை வலுப்படுத்துதல். இந்த திட்டம் அமெரிக்க-இந்தியா  விண்வெளி வர்த்தக ஈடுபாட்டை ஊக்குவிப்பதோடு அமெரிக்க - இந்திய வணிக விண்வெளி துறைகளுக்கிடையே வளர்ச்சி மற்றும் கூட்டுகளை செயல்படுத்தும்.

இஸ்ரோ தலைவரின் இந்த வார அமெரிக்கா வருகையை வரவேற்றதோடு 2023 ஆம் ஆண்டின் கடைசியில் நாசா நிர்வாகிகள்  இந்தியாவுக்கு வருவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க - இந்திய பொது விண்வெளி கூட்டுப் பணிக்குழுவின் நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்துதல்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் திறமை:

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் சங்கம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் உட்பட முன்னணி இந்தியக் கல்வி நிறுவனங்களின் புதிய கூட்டுப் பணிக்குழுவைக் ஏற்படுத்துவது. இது ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக கூட்டுக்கான பரிந்துரைகளை வழங்கும்.

அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு:

தொலைத்தொடர்பு சட்டங்கள் குறித்த பொது-தனியார் உரையாடலைத் தொடங்குதல்.

5G மற்றும் 6G இல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இந்தியாவில் தடைகளற்ற நெட்வொர்க் (Radio access network - RAN) ஐப் பயன்பாட்டை உருவாக்குவது மற்றும் இந்தத் துறையில் உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

அமெரிக்காவும் இந்தியாவும் 2023 ஆம் ஆண்டு புதுதில்லியில் அடுத்த iCET கூட்டத்தை எதிர்நோக்குகின்றன. அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக லட்சிய நோக்கங்களை வழங்க இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு கவுன்சில்கள் அந்தந்த அமைச்சகங்கள், துறைகள் மற்றும் முகவர்களுடன் இணைந்து ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கும் தங்கள் சகாக்களுடன் இணைந்து செயல்படும்.

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.whitehouse.gov/briefing-room/statements-releases/2023/01/31/fact-sheet-united-states-and-india-elevate-strategic-partnership-with-the-initiative-on-critical-and-emerging-technology-icet/