வக்ஃப் சட்ட மசோதா வெறும் 'இஸ்லாமியர்கள்' பிரச்சினை மட்டுமன்று – இது இந்தியா முழுவதையும் பாதிக்கும் விஷயம்
தி வயர்

சிலரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி, அவர்களுக்கு மட்டும் வித்தியாசமான சட்டங்களை உருவாக்குவது ஒருபோதும் சரியானதாக இருக்காது. அப்படி நடந்தால், ஆளும் அரசு யாரை எதிர்க்க நினைக்கிறதோ அவர்களை இது போன்று மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கும்.
முதலாவதாக, "இஸ்லாமியர்களை மட்டும் பாதிக்கின்ற ஒரு விஷயம் இந்தியாவிற்குப் பிரச்சினை இல்லை" என்று நினைப்பது தவறானது. இந்தியாவில் சுமார் 14.2% மக்களை (கடந்த பதினான்கு வருடங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, அதனால் இந்த புள்ளிவிவரங்கள் பழையவை) பாதிக்கிற எந்த ஒரு விஷயமும் முழு நாட்டிற்கும் முக்கியமானது என்பது எவரும் மறுக்க முடியாது அடிப்படை உண்மையாகும்.
இருப்பினும், "வக்ஃப் சட்டம் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் தானே? மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றுகூட சிலர் வாதிடலாம்.
விரைவில் சட்டமாகப் போகும் இந்த மசோதா, பாஜக கொள்கையின் ஒரு முக்கியமான பகுதியாக விளங்குகிறது. ஊர்களின் பெயர்களை மாற்றுவது, அவர்களின் கலாச்சாரத்தை மறைப்பது, அவர்களை அரசியலிலிருந்து ஒதுக்கி வைப்பது போன்ற செயல்களின் மூலம் இஸ்லாமியர்களைப் பொது வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவது, எம்.எஸ். கோல்வால்கர், வி.டி. சாவர்க்கர் ஆகியோர் 'புண்ணிய பூமி' என்று குறிப்பிட்டு வந்த இந்தியாவை உருவாக்க உதவுகிறது. சிந்து நதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே உள்ள இந்த நிலம் இந்துக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அல்லது கம்யூனிஸ்டுகள் இந்தியாவை தங்கள் கண்ணொட்டத்திலிருந்து பார்க்கவில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள்.
வக்ஃப் பிரச்சினையின் முக்கியமான அம்சம் நிலம். இஸ்லாமியர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான நிலத்தையே சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதும், ஒருவேளை அவர்கள் நிலம் வைத்திருந்தால், அது கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பதும் தெளிவான நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது இனிமேலும் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்க முடியாது. வக்ஃப் சட்டம் நிறைவேற்றப்படுவதன் உண்மையான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை எல்லா இந்தியர்களும் கவனிக்க வேண்டியது அவசியம்.
1. பாஜக ஒரு பெரும்பான்மை பெறாத ஆளும் கட்சியாக இருப்பது கவனத்திற்குரியது
2019ஆம் ஆண்டு பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தபோது நிலவிய சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று எண்ணுபவர்கள், 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீரைப் உடைத்து, பின்னர் அதன் மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேசங்களாகக் குறைக்கும் சட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, எந்தவித ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படாமல், மாநில சட்டமன்றம் இல்லாத நிலையிலேயே அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு மட்டுமின்றி, முழுமையான அரசியல் முடக்கமும் ஏற்படுத்தப்பட்டு, காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் மட்டுமல்லாது 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்தல் என இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் முதல் மூன்று முக்கிய விஷயங்களைப் பொறுத்தவரை வக்ஃப் சட்டம் காஷ்மீரைப் போல இல்லாவிட்டாலும், இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வெறுப்புணர்வில் இது ஒரு தொடர்ச்சியான, அதிகம் வெளிப்படையாக பேசப்படாத அம்சமாக இருந்து வந்துள்ளது. பல பத்தாண்டுகளாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பல்வேறு உரைகளிலும், கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறுப்பிலும் இது ஒரு முக்கியமான விசயமாக இருந்து வந்துள்ளது.
இருப்பினும், போதுமானதாக இல்லையென்றாலும், ஒரு குழு அமைக்கப்பட வேண்டியதாயிற்று.
சற்று இழுபறியான நிலையும், பேரம் பேச வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
அரசியல் கூட்டாளிகளை இணங்க வைக்க வேண்டியும், பின்னர் அவர்களை நெருக்குதலுக்கு உள்ளாக்க வேண்டியும் இருந்தது.
குறைபாடுகள் உள்ளவர்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்த நேரம் கிடைத்தது. மேலும், ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டியிருந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஆதரவாளர்களுக்கு இந்து ராஷ்டிரத்தை நோக்கியப் பயணம் சீராக நடைபெறுகிறது என்பதை உணர்த்தும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடமிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயன்றார். இருந்தபோதும், அங்கு ஒரு விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் மீதான நம்பிக்கையும், எதிர்கட்சிகளிடம் போதுமான பலமும் இருந்த காரணத்தால் கொள்கை அடிப்படையில் தங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. 2019இல் நடந்த நிகழ்வுகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. அப்போதைய 'அவையின் மனநிலை' பல எதிர்க்கட்சிகளை பணிவாக ஒத்துப்போகச் செய்தது.
2.பொதுவான சிவில் சட்டமா?
அனைவரையும் "சமமாக" ஆக்குவதற்காக பல்வேறு சமூகங்களிடையே நிலவும் தனிநபர் சட்டங்களை மாற்றுவது குறித்துப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் இதன் உள்ளார்ந்த நோக்கம் யாதெனில், எல்லாவற்றையும் ஒர்மைப்படுத்துவதாகவே தோன்றுகிறது – அல்லது ‘இந்து’ தனிநபர் சட்டங்களுக்கு மேலதிக ஒத்திசைவாக மாற்றுவதாகவே உள்ளது.
இஸ்லாத்தில் அறக்கொடை, சமூக நலனின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே வக்ஃபின் அடிப்படையான தத்துவம் என்று சிறுபான்மையினர் நலத்துறைக்கான முன்னாள் மத்திய அமைச்சர் கூறுகிறார்; இதற்கு முன்னர் 2013-ஆம் ஆண்டில் வக்ஃப் சட்டங்களில் திருத்தங்களைக் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். இஸ்லாமிய அறப்பணிகளுக்கும், ஏழை எளியோருக்கு உதவி செய்வதற்காகவும் "ஸகாத் (கட்டாயத் தர்மம்), குர்பானி (தியாகம்), மற்றும் வக்ஃப் (மத அறக்கட்டளைகள்) ஆகியவை முதன்மையான நடைமுறை உதாரணங்களாக விளங்குகின்றன" என்பதையும் அவர் சேர்த்துக கூறுகிறார். தற்பொழுது, பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா எனும் தனித்துவமான பண்பு, ஒரு பரந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் நோக்கில் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது – அந்த நிகழ்ச்சி நிரலானது முழுமையான ஓர்மையை வலியுறுத்துகிறது.
இது அமலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டால், இஸ்லாமியர்கள் அல்லது அவர்களின் வாழ்க்கை முறையை மட்டும் பாதிப்பதற்கு மாறாக, எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் நிரூபிப்பது போல, இந்த ஓர்மையை நோக்கிய முனைப்பு காலப்போக்கில் இந்தியா முழுவதையும் தாக்கும். மொழிப்பன்மைத்துவம், பிராந்திய அடையாளங்கள், மாறுபட்ட அரசியல் கருத்துக்கள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல் இதனை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
3. ஒருவர் இஸ்லாமியராவதற்கு? தயவுசெய்து ஐந்து ஆண்டுகள் காத்திருக்கவும்
நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் ஒரு விதியின்படி, இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் மதரீதியான அறக்கட்டளையான வக்ஃபுக்கு சொத்து தானம் செய்ய விரும்பினால், அவர் மதம் மாறிய நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.
ஆனால் இஸ்லாமிய நெறிமுறைகளின்படி, ஒருவர் மனப்பூர்வமாக கலிமாவை (விசுவாசப் பிரகடனத்தை) மொழிந்தாலே இஸ்லாமியராகிவிடுகிறார். இதனை உறுதிப்படுத்த எந்த மதகுருவோ அல்லது வெளியாளிடமிருந்து எந்த அதிகாரமோ தேவையில்லை.
தற்போது, இந்திய அரசாங்கம், மதம் மாறிய ஒருவரை "உண்மையான" இஸ்லாமியராக கருதுவதற்கு அவர் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது, பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஜியா-உல்-ஹக் ஆட்சிக்காலத்தில் அரசாங்கமே யார் "நல்ல" முஸ்லிம் என்று வரையறுத்தது போன்றதாகும்.
இன்று இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைக்கிறார்கள்—ஆனால் நாளை, இது எந்த மதத்தையும் பாதிக்கலாம்.
அரசாங்கம் தன்னிச்சையாக விதிகளை உருவாக்கி ஒருவர் இந்துவா இல்லையா என்று தீர்மானிக்க முடியுமா? பாஜக தலைமையிலான அரசாங்கம் இவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டால், அது ஒரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். விரைவில், மத்திய அரசாங்கம் யார் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுக்கவும் தொடங்கலாம்!
4. ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது உறுப்பு மீறப்படுகிறது எனில், அடுத்து அதே நிலைமைதான் அனைத்து இந்தியர்களுக்கும்.
இந்திய அரசியலமைப்பின் 14ஆவது உறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவத்தை உறுதியளிக்கிறது. வக்ஃப் வாரியங்களுக்கான (இஸ்லாமிய மதச் சொத்துக்களை நிர்வகிக்கும் அமைப்புகள்) விதிமுறைகளை அரசாங்கங்கத்தால் மாற்றிவிட முடியும் என்கிற போது, அதே வழிமுறையை மற்ற மதங்களிலுள்ள இத்தகைய நிறுவனங்களுக்கும் பொருத்த முடியும்.
சட்ட வல்லுநர் ஃபைஸான் முஸ்தபா அவர்கள் இது உண்மையில் வக்ஃப் நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சிதானா என்று கேள்வி எழுப்புகிறார். இந்துக்கள் அல்லாதவர்கள் எப்போதாவது கோயில் நிர்வாகக் குழுக்களில் –அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றுவது பற்றிக்கூட பேச வேண்டியதில்லை– அனுமதிக்கப்படுவார்களா என்று அவர் கேட்கிறார். புத்தர்களின் புனிதத் தலமாகிய புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் இந்து ஆதிக்கத்தை எதிர்த்து பௌத்தர்கள் ஏற்கெனவே போராடி வருகின்றனர். 1949ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புத்தகயா கோயில் சட்டத்தை நீக்க வேண்டுமென கோருகின்றனர், ஏனெனில் அந்தச் சட்டம் ஒரு பௌத்தத் திருத்தலத்தின் பொறுப்பாளராக ஒரு இந்து அதிகாரியை நியமிக்கிறது. இந்து தேசியவாதத்தின் செல்வாக்கு அதிகரிப்பதால், பௌத்தர்கள் மேலும் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள், இது போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது.
எந்தவொரு மக்கள் பிரிவினரும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படக்கூடாது. இன்று ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான பாகுபாடு நாளை மற்றவர்களையும் குறிவைக்கும்; அரசாங்கம் யாரை அடுத்து எதிர்க்கத் தீர்மானிக்கிறது என்பதைப் பொறுத்து இது அமையும்.
பல்துருவ பன்னாட்டு வர்த்தக முறைகளுக்கு எதிராக டிரம்பின் வர்த்தகப் போர்கள் போன்ற கொள்கைகளால் உருவாகி வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இந்தியாவின் வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தித் துறை, அதிர்ச்சியளிக்கும் விதமாகக் குறைந்தகொண்டே வரும் வேலைவாய்ப்பு விகிதம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்) பெருகிவரும் தேவை போன்ற முக்கியமான பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்காமல், வக்ஃப் மசோதாவை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பாஜக தனது விருப்பத்தை—அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகள் மீது மட்டுமல்லாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாசிச கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத தனது கூட்டணிக் கட்சிகள் மீதும் கூட—திணித்து வருகிறது. வக்ஃபு மசோதா என்பது "இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டுமல்ல"—இது நிச்சயமாக எல்லோரையும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம் என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/politics/why-the-waqf-bill-passage-is-not-a-muslim-issue-it-affects-all-of-india