கறிமசாலாப் பொருட்களில் அனுமதிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளின் உச்ச வரம்பை பத்து மடங்காக உயர்த்தியுள்ளது FSSAI

தமிழில் : சகா

கறிமசாலாப் பொருட்களில் அனுமதிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளின் உச்ச வரம்பை பத்து மடங்காக  உயர்த்தியுள்ளது FSSAI

உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லிகளின் உச்ச அளவு Maximum Residue Level - MRL என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு கிலோ உணவுப் பொருளில் 0.001 மில்லி கிராம் என்பதே அதிகபட்ச (MRL) அளவாக இருந்தது. இப்போது கிலோவுக்கு  0.1 மில்லி கிராம் என்பதாக MRL அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) சமீபத்தில் உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகளின் அனுமதிக்கப்பட்ட அளவை உயர்த்தியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்  செய்தி வெளியிட்டிருந்தது.

பூச்சிகொல்லிகளின் அதிகபட்ச வரம்பு (MRL) தளர்த்தப்பட்டதாக, மே 4 அன்று வெளியிடப்பட்ட எகனாமிக் டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளபடி, முந்தைய வரம்பை விட பத்து மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

பூச்சிக்கொல்லிகளின் அதிகபட்ச வரம்பு (MRL) ஒரு கிலோகிராமுக்கு 0.01 மில்லிகிராமில் இருந்து (mg/kg) 0.1 mg/kg ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

"உச்சவரம்பு தளர்வின் காரணமாக, இந்திய மசாலாப் பொருட்கள் சில முக்கிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது, தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது" என்று பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்காக செயல்பட்டு வரும் PAN என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் குமார் கூறினார். இதுமட்டுமல்லாது, அதிக பூச்சிக்கொல்லி விகிதத்தைக் கொண்ட மசாலாப் பொருட்கள் நம் நாட்டில் இறங்குமதி செய்யப்படுவதற்கும் இந்த தளர்வின் மூலம்  வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று திலீப் குமார் சுட்டிக்காட்டினார்.

தமக்கு வந்த பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே உச்ச வரம்பை தளர்த்தியதாகக் FSSAI  கூறியுள்ளது, இருப்பினும் இந்த கோரிக்கைகளை முன்வைத்தவர்கள் யார் என்பது பற்றி எதுவும்  குறிப்பிடவில்லை.

இது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதியன்று டஃவுன் டு எர்த் பத்திரிக்கை செய்தியொன்று வெளியிட்டிருந்தது. "நீங்கள் [FSSAI] இந்தளவிற்கு உச்ச வரம்பபை உயர்த்தியுள்ளீர்கள் என்றால், உங்கள் முடிவை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சான்றாதாரங்களை வழங்க வேண்டும்" என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் வளங்குன்றா உணவு உற்பத்திக்கான திட்ட இயக்குனர் அமீத் குரானா கூறியதை மேற்கோள் காட்டியிருந்தது.

உச்சவரம்பு அதிகரிப்பினால் இந்த மசாலாப் பொருட்களை உட்கொள்பவர்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அமீத் குரானா கூறினார்.

கடந்த மாதம், ஹாங்காங், சிங்கப்பூர், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் பூச்சிக்கொல்லி அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக MDH மற்றும் எவரெஸ்ட் மசாலா பிராண்டுகளின் விற்பனைக்கு தடை விதித்தன. அந்நாடுகளின் உணவு கட்டுப்பாட்டு ஆணையம்  எத்திலீன் ஆக்சைடு (புற்றுநோயை உண்டாக்கவல்லது) என்ற பூச்சிக்கொல்லி மிதமிஞ்சிய அளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.  இந்த வேதிப்பொருள் காணப்படும் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. வெளிநாட்டு அரசு நிறுவனங்கள் கூறுவதை மறுத்துள்ளதோடு, தங்களது மசாலாப் பொருட்கள் முற்றிலும் பாதுகாப்பானவை என்று MDH நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- சகா (தமிழில்)

மூலக்கட்டுரை : https://m.thewire.in/article/government/fssai-increases-permissible-pesticide-levels-in-spices-by-10-times