இந்தியா - அமெரிக்கா 2+2 இடைக்கால உரையாடல்: பாதுகாப்பு, வணிகம், எரிசக்தி மற்றும் இந்தோ-பசிபிக் உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது

விஜயன் (தமிழில்)

இந்தியா - அமெரிக்கா 2+2 இடைக்கால உரையாடல்: பாதுகாப்பு, வணிகம், எரிசக்தி மற்றும் இந்தோ-பசிபிக் உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது

2025 ஆகஸ்ட் 25 அன்று, இந்திய தரப்பில் இரண்டு பிரதிநிதிகளும், அமெரிக்கத் தரப்பில் இரண்டு பிரதிநிகளும் ஓர் இடைக்கால கலந்துரையாடலை மேற்கொண்டனர். இப்பேச்சுவார்த்தைகள் வணிகம், எரிசக்திப் பாதுகாப்பு மட்டுமல்லாது இராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டிருந்தன. அடுத்த பத்தாண்டுக் காலத்திற்கான இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்தும், சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்தும் இரு நாடுகளும் விரிவாக விவாதித்து, அதன் அவசியத்தை அழுத்தமாகப் பதிவு செய்தன.

இந்த உரையாடல் இணையவழி வாயிலாக நடைபெற்றது. இதில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (அமெரிக்காவிற்கான) நாகராஜ் நாயுடு காகனூர் அவர்களும், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) விஸ்வேஷ் நேகி அவர்களும் இணைந்து தலைமை வகித்தனர். அமெரிக்கத் தரப்பில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான மூத்த பொறுப்பு அதிகாரி பெத்தானி பி. மோரிசன் அவர்களும், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான தற்காலிக பாதுகாப்புத் துணைச் செயலாளர் ஜெடிடியா பி. ராயல் அவர்களும் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று வழிநடத்தினர். ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களின் மீது 50% கூடுதல் சுங்க வரி விதிப்பதாக அறிவித்ததற்குப் பிறகு, நடைபெற்ற அரசு மட்டத்திலான முதல் கலந்துரையாடலாக இது கருதப்படுகிறது.

இந்த உரையாடலின் மையக் கருப்பொருட்கள் யாவை?

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் பலதரப்பட்ட முக்கிய விஷயங்களை விரிவாக ஆராய்ந்தன:

வணிகம், முதலீடு

எரிசக்திப் பாதுகாப்பு, அதிலும் குறிப்பாக இராணுவம் சாராத அணுசக்தி ஒத்துழைப்பில் தனிச்சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது

அத்தியாவசிய கனிம வளங்களை ஆராய்ந்து கண்டறிதல்

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்த செயல்பாடு

இருதரப்பும் பொருளாதார நிலைத்தன்மையையும், பிராந்திய பாதுகாப்பையும் ஒருசேர வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின. 21 ஆம் நூற்றாண்டிற்கும் அதற்குப் பின்னரும், இந்தியா-அமெரிக்கா COMPACT (Catalyzing Opportunities for Military Partnership, Accelerated Commerce & Technology) திட்டத்தின் கீழ் இந்தக் களங்களில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை எய்திட இந்தியாவும் அமெரிக்காவும் உடன்பாடு கண்டன.

புதிய இராணுவ ஒப்பந்தம் எவற்றை உள்ளடக்கியது?

இந்தியா-அமெரிக்கா இடையேயான முக்கிய இராணுவ கூட்டணிக்கான புதிய பத்தாண்டுக் கால ஒப்பந்த விதிமுறைகளை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் முடிவு, இந்த உரையாடலின் மையச் குறிக்கோள்களில் ஒன்றாகத் திகழ்ந்தது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை குறிப்பிட்டது. இந்த ஒப்பந்தம் பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பினை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது:

இராணுவத் தளவாட உற்பத்தி

அறிவியல் தொழில்நுட்பம்

இராணுவ செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு

உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்

இந்தியா டுடே வெளியிட்ட செய்தியறிக்கையின்படி, இரு நாடுகளும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் மதிப்புள்ள மாபெருமோர் இராணுவ ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் உள்ளன. 97 இலகு ரகப் போர் விமானங்களான மார்க் 1A தேஜஸ் ரகத்திற்குரிய 113 என்ஜின்களைக் கொள்முதல் செய்வது பற்றியும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. இவைதவிர, துவக்கத்தில் 83 மார்க் 1A ஜெட் விமானங்களுக்காக 99 GE-404 என்ஜின்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

(இந்தத் தகவல் மின்ட் ஊடகத்தால் நடுநிலையாக உறுதிப்படுத்தப்படவில்லை.)

இந்த உரையாடலில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

இந்திய அரசின் செய்தி வெளியீட்டின்படி, சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்களின் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின. அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் குவாட் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தினர். 

இப்பிராந்தியத்தில் எழும் புதிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவான போர்த்தந்திர நலன்கள் உள்ளன என்பதை இக்கலந்துரையாடல்கள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தின. 

இந்தச் சந்திப்பு ‘மிகவும் பயனுள்ளது’ என வர்ணிக்கப்பட்டது. எட்டப்பட்ட முடிவுகளை இருதரப்பும் மனமுவந்து வரவேற்றதுடன், தத்தம் மக்களின் நலனுக்காக இந்தப் கூட்டணியை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளன.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.livemint.com/news/world/indiaus-hold-2-2-intersessional-dialogue-new-10-year-defence-framework-trade-energy-and-indo-pacific-ties-discussed-11756228347256.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு