ராகுல் காந்தி வைத்த வேட்டும், வெளிச்சத்திற்கு வந்த தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளும்

தமிழில்: விஜயன்

ராகுல் காந்தி வைத்த வேட்டும், வெளிச்சத்திற்கு வந்த தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளும்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன் செயல்பாடுகளால் மக்களை அடிக்கடி வியப்பில் ஆழ்த்தி வருகிறார். ராகுல் காந்தி ஓக்லாவில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையில் பிறந்தவர் என்பதால் அங்கு நான் இருதய சிகிச்சைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவரின் நினைவு என் உள்ளத்தில் வந்து செல்லும். பாரதிய ஜனதா கட்சி அவரை 'பப்பு' என்று சிறுமைப்படுத்துவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆளும் கட்சியின் உயர்பதவிகளிலும் அத்தகைய குணநலன்கள் கொண்டோர் நிறைந்துள்ளனர் என்பதை நான் நன்கு அறிவேன்.  ஆளுங்கட்சியினர், ராகுல் காந்திக்கு வேண்டுமென்றே இப்புனைப்பெயரைச் சூட்டியுள்ளனர். கேரளத்தின் பண்டைய காவியமான வடக்குன் பாட்டுக்களில், சந்து எனும் கதாப்பாத்திரம் பொறாமையாலும் துரோகத்தாலும் தவறாகச் சித்தரிக்கப்பட்டது போலவே இதுவும் ஒரு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட களங்கமாகும்.

பிற்காலத்தில், புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், தனது படைப்புகள் ஒன்றில் சந்துவின் பிம்பத்தை அஞ்சாநெஞ்சனாக மாற்றியமைத்தார். அதைப்பொல் அவரின் மற்றொரு காவியமான 'ரண்டாமூழம்' என்ற நூலில், முன்கொபமும் செருக்கும் முர்க்கமும் கொண்ட  செயல்களுக்காகப் பலராலும் குறைகூறப்படும் பீமனை அன்பும் கனிவும் நிறைந்த பெருந்தகையாக மாற்றிக் காட்டினார். 

சந்துவையும் பீமனையும் போல் அல்லாமல், ராகுல் காந்திக்குத் தனது பிம்பத்தை மாற்றிக்கொள்ள எவரது உதவியையும் தேவைப்படவில்லை. நரேந்திர மோடி அரசின் ஜனநாயகமற்ற போக்கிற்கு எதிராகத் தனது குரலைத்  தொடர்ந்து ஓங்கி ஒலிப்பதன் மூலம், அவர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தம் வரலாற்றுப் புகழ்மிக்க பாதயாத்திரையைத் தொடங்கியதுமே, பாஜகவினர் அவரை 'பப்பு' என விளிப்பதை நிறுத்திக்கொண்டனர். அந்தச்சமயத்தில, ஒரு பிரபல தொலைக்காட்சி நெறியாளர், ராகுல் தமிழ்நாட்டையும் கேரளத்தையும் கடந்த பிறகு, தன் பயணத்தைத் தனியாகவே தொடர நேரிடும் என்று ஆருடம் கூறினார். ஆனால், அந்த நெறியாளரின் கணிப்புப் பொய்த்துப்போனது. வழிநெடுகிலும் அவரைக் காண்பதற்காகவே வெள்ளம் போல் பல்லாயிரக்கணக்கான; மக்கள் பின்தொடர்ந்தனர். அவரது ஆற்றலும் உற்சாகமும் எள்ளளவும் குறையவில்லை. சமூக வலைத்தளங்களில் சில பாஜக ஆதரவாளர்கள், ‘கடுங்குளிரில் பனித்துகள்கள் அவரது வெற்றுடம்பில் விழும்போது, உடலை கதகதப்பாக வைத்திருக்க ஏதோவொரு பிரத்யேக மின்னணு மேலங்கியை அவர் அணிந்திருக்கக்கூடும் எனக் கேலிச்செய்தனர்.

ராகுல் ஏதோ ஒரு சாக்குப்போக்கினைக் கூறி பயணத்தைக் கைவிட்டுவிடுவார் என்றும் அந்த நெறியாளர் உறுதியாக நம்பினார். ஆனால் ராகுல் அப்பயணத்தை நிறைவு செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவைக் கிழக்கிலிருந்து மேற்காகக் கடக்கும் மற்றொரு யாத்திரையையும் மேற்கொண்டார். மகாத்மா காந்தி உட்பட, இந்தியாவில் வேறெந்த அரசியல் தலைவரும் இத்தகைய நெடும்பயணங்களைப் பாதயாத்திரையாக மேற்கொண்டதில்லை. ஒருமுறை, ராகுல் எவ்விதப் பாதுகாப்பு உபகரணமுமின்றி படகிலிருந்து அரபிக்கடலில் குதித்தபோது, அவர் ஒரு திறன் வாய்ந்த நீச்சல் வீரரும்கூட என்பதை நான் அறிந்தேன். அவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தத் தொடங்கிய நாள் முதல்,  இங்கு நிலவுகின்ற கருத்துக்களுக்கு எதிராக எதிர்நீச்சல் போடுவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ராகுல் காந்தி வெளியிட்ட அணுகுண்டு போன்ற ஆதாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ; இவ்வாதாரம் ஆகஸ்ட் 6, 1945 அன்று ஹிரோஷிமா மீது  வீசப்பட்ட "தி லிட்டில் பாய்" என்ற அமெரிக்க அணுகுண்டின் 80வது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்பாக வெளியிடப்பட்டது. ராகுலின் இவ்வாதாரம் ஓர் அணுகுண்டு அல்ல என்றாலும் அஃது அரசியல் ரீதீயாக சக்தி வாய்ந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், ராகுலின் அணுகுண்டு போன்ற ஆதாரத்திற்கும் அசல் குண்டுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது.

அமெரிக்கா ஹிரோஷிமா மீது குண்டு வீசி மூன்று நாட்களுக்கு பிறகு நாகசாகி மீது மற்றொரு குண்டை வீசியது. ஜப்பானில்  பெரும்பாலானபகுதிகளில் பௌத்த மதம்  பின்பற்றுகையில், நாகசாகி பெரும் கிறிஸ்தவ நகரமாக அறியப்பட்டது. வானுயர்ந்த கோபுரங்களுடன் ஓங்கி நின்ற கேதட்ரல் தேவாலயம் அதன் இலக்குகளில் ஒன்றாக இருந்தது.

ராகுல் காந்தியின் விஷயத்தில், இரண்டாவது தாக்குதலுக்கான அவசியம் எழவில்லை. அவருடைய ஒற்றை ஆதார வெளியீடே வலுவானதாக விளங்குகிறது. மேலும், "விஸ்வ குரு" என அழைக்கப்படும் ஒரு அரசியல் தலைவரைப் போல் அல்லாமல், ராகுலுக்குப் பேசுவதற்கு டெலிப்ராம்ப்டர்கள் தேவைப்படுவதில்லை; பத்திரிகையாளர் சந்திப்புகளையும் தவிர்ப்பதில்லை. ஆங்கிலத்தில் தனது உரையை நிறைவு செய்ததும், ஒரு செய்தியாளர் அதை இந்தியில் கூறும்படி வேண்டியபோது, ராகுல் எவ்வித மறுப்புமின்றி ஒப்புக்கொண்டார்.

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றப் பிரிவில், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதை ராகுல் காந்தி வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இவை பொதுவாக நிகழும் சிறுபிழைகள் அல்ல. சில வாக்காளர்கள் பல வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பலருக்குச் சரியான முகவரி இருக்கவில்லை; சிலருக்குப் புகைப்படங்கள் இணைக்கப்படவில்லை.

இதனைவிட அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒற்றை அறை குடியிருப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். முதல் முறை வாக்காளர்களுக்கெனப்  பயன்படுத்தப்படும் படிவம் 6-ஐப் பயன்படுத்துவோர் தகுதியற்ற முறையில் வயதில் மிக மூத்தவர்களாக இருக்கின்றனர். 18 முதல் 21 வயதுக்குட்பட்ட எந்தவோரு வாக்காளரும் படிவம் 6 ஐப் பயன்படுத்தவில்லை மாறாக, எழுபது, எண்பது, தொண்ணூறு வயதுகளிலுள்ள பல முதியவர்களே அதன் பயன்பாட்டாளர்களாக உள்ளனர். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் இதர ஐந்து சட்டமன்றப் பிரிவுகளில் பாஜக தோல்வியைத் தழுவியபோதிலும், மகாதேவபுராவில் அரங்கேறிய மிகப்பெரிய அளவிளான  முறைகேடுகளே அத்தொகுதியை பாஜக கைப்பற்றுவதற்கு துணை நின்றது என்கிறார் ராகுல் காந்தி.

இம்முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ராகுல் காந்திக்கு ஏன் இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது எனப் பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கான காரணம் தேர்தல் ஆணையம் பழங்கால நடைமுறையை பின்பற்றுவதே  — வாக்காளர் பட்டியல்களை அச்சிடப்பட்ட காகிதங்களாக மட்டுமே வழங்குகிறது. இந்த பட்டியல்களை மின்னணு முறையில் பார்க்கவோ, துல்லியமாக பகுப்பாய்வு செய்யவோ இயலாது. எடுத்துக்காட்டாக, யாரேனும் எனது முழுப் பெயரை இணையத்திலோ அல்லது கட்டுரையிலோ பதிவு செய்யும்போது,  கூகிள் சில நொடிகளில் எனக்கு அறிவிக்கிறது, ஏனெனில் அது கோடிக்கணக்கான பக்கங்களை நொடிப்பொழுதில் ஆராயும் திறன் கொண்டது.

மேம்பட்டத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத்தில், அரசியல் கட்சிகளுக்கும் குடிமக்களுக்கும் பகுப்பாய்வு செய்ய இயலா வடிவங்களில் வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்படுவது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்புகிறார். அவ்வாக்காளர் பட்டியல்கள் டிஜிட்டல் வடிவில் இருப்பின், நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் 'ஏ.ஜே. பிலிப்' என்ற பெயருடையோர் எத்தனை பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை உடனடியாக கண்டறிய இயலும். வாக்குச்சாவடிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் நாற்பத்தைந்து நாட்களில் அழித்துவிடுவது ஏன் என்றும் வினவுகிறார்.

சிசிடிவி காட்சிகளை அழிப்பது, ஒரு கொலையாளி தான் கொலை செய்த  உடலை எரித்துச் சாம்பலாக்கித்  தடயங்களை முற்றிலும் அழிப்பதற்கு ஒப்பானது. புதைக்கப்பட்ட உடலை, பின்னர் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடியும். ஆனால், எரிந்த உடலின் சாம்பலில் இருந்து தகவல் ஏதும் பெற முடியாது. எடுத்துக்காட்டாக, மானுடவியலில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புதைந்திருக்கும் எலும்புக்கூடுகள் மூலம் மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறியமுடிகிறது. ஆனால், கங்கை நதியில் கரைக்கப்படும் சாம்பல் எவ்விதக் குறிப்பையும் தராது. சுருங்கக் கூறின், ராகுல், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.

தேர்தல் ஆணையம் ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஆதாரங்களுடன் கூடிய உறுதிமொழிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது. இஃது இச்சம்பவத்திற்கு முற்றிலும் பொருந்தாத ஒரு விதியாகும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஒருவரின் பெயர் தவறுதலாக விடுபட்டி ருந்தால் இவ்விதி பொருந்தும். ராகுல், தேர்தல் ஆணையத்தின் சொந்தப் பதிவுகளையே ஆதாரமாகக் கொண்டு, அதன் குறைபாடுகள் பாஜகவின் வெற்றிக்கு துணைநிற்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார் அதாவது, ஒரு வாக்காளரின் பெயர் பல வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றிருக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் ஒரு பொத்தானை அழுத்தும் எளிமையான முயற்சியில்,  உறுதிப்படுத்த முடிந்திருக்கும். 

ராகுலும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் மேலும் தீவிரமாகச் செயல்பட்டு, மகாதேவபுரா வாக்காளர் பட்டியலை விரிவாக மீளாய்வு செய்ய வலியுறுத்தியிருக்க வேண்டும்; அத்துடன், எளிதில் சரிபார்க்கத்தக்க டிஜிட்டல் வடிவத்தை கோரியிருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து ஐயங்கள் எழும்போதெல்லாம், அதனைத் திருத்த வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI)  தலையாய கடமையாகும். அண்மையில், பீகாரில் 8 கோடி வாக்காளர் பெயர்களை தேர்தல் ஆணையம் ஒரு மாத காலத்திற்குள் செம்மைப்படுத்தியதாக அறிவித்துள்ளது. இதே வேகத்துடன் செயல்பட்டால், மஹாதேவபுராவில் உள்ள 6 லட்சம் வாக்காளர்களை ஒரு சில நாட்களிலேயே சீராய்வு செய்துவிட முடியும். வாக்காளர்ப் பட்டியல் களங்கமற்று இருப்பதாக ஆணையம் நம்புமானால், அத்திருத்தப் பணியை மேற்கொள்ள மறுப்பது  ஏன் ? இந்த மறுசீராய்வில் வாக்காளர்ப் பட்டியல் களங்கமற்றதாக நிரூபிக்கப்பட்டால் ராகுல் காந்தியின் கூற்று பொய்யாகியிருக்கும். மறுசீராய்வு செய்ய ஆணையம் மறுப்பது, உண்மை நிலவரம் வெளிப்படுவதில் அதற்கு இருக்கும் அச்சத்தையே அப்பட்டமாக உணர்த்துகிறது.

மஹாதேவபுராவில் இதுபோன்ற முறைகேடுகள் அரங்கேறியிருந்தால், மற்ற இடங்களிலும் அவை நிகழாமல் இருந்திருக்குமா? வாரணாசியில் வாக்கு எண்ணிக்கையின்போது, மோடி தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளரை விடப் பின்னடைவைச் சந்தித்தார். மேலும் ஹரியானாவில், காங்கிரஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, பாஜக ஆட்சி அமைக்க அது வித்திட்ட நிகழ்வுகளையும் நாம் நினைவுகூறவேண்டும்.

2024-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகளை விட 25 இடங்கள் அதிகமாகப் வென்று பாஜக டெல்லியில் ஆட்சியில் உள்ளது. ஒரு சில இடங்களாகவே இருந்தாலும் மஹாதேவபுராவில் நடந்தது போன்ற மோசடிகள் மூலம் கைப்பற்றப்பட்டிருந்தால், ஆட்சி செய்ய தார்மீக அதிகாரம் அதற்கு உண்டா? பொதுமக்கள் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் களமிறங்கிச் செயல்பட வேண்டும். அதன் சுதந்திரமே ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.

அரசாங்கம் கவலையின்றி இருப்பதாகவே தோன்றுகிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். ஆனால் பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, அமித் ஷா பதவி விலக மறுத்து, அதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறார். தேர்தல் முறைகேடுகளும் மதவாதப் பிரச்சாரங்களும் பாஜகவை அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்யும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். இந்த நம்பிக்கையுடன், அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவே இந்தியாவை ஆளும் என அமித் ஷா பகிரங்கமாக முழக்கமிட்டார். இது வெறும் ஊகம் அல்ல, மாறாக மக்களுக்கு விடுக்கும் சவாலாகும்.

இவ்வுண்மைகள் அனைத்தும் அவற்றின் ஆழமான பின்புலத்துடனேயே நோக்கப்பட வேண்டும். 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முன்னதாக, தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சட்ட திருத்த்தில் தலைமை நீதிபதியை இக்குழுவிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகப் பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய அமைச்சர் இடம்பெறலாம் என்றவாறு மாற்றியுள்ளனர்.

நியாயமாக, அப்போதைய தலைமை நீதிபதி இம்மாற்றத்தை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், எதிர்ப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக, அவர் தமது இல்லத்தில் ஒரு மதச் சடங்கைத் திட்டமிடுவதில் மும்முரமாக இருந்தார், மேலும் அயோத்தி கோவிலுக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் பிரதிஷ்டை விழாவை நடத்திய, நாட்டின் மிகவும் பிரபல மதகுருவான பிரதமர் மோடியை அழைக்க விரும்பினார். இந்த சட்டத்திருதத்தின் விளைவாக, பிரதமரும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரும், அமித் ஷாவும் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தேர்தல் ஆணையராகத் தேர்ந்தெடுக்க முடியும். எதிர்க்கட்சித் தலைவர் தனது அனைத்து அதிகாரங்களையும் இழந்து, பெயரளவிலான ஒரு நபராக மாறிவிட்டார்.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் 2024 தேர்தல்களுக்குச் சற்று முன்னதாகப் பதவி விலகினார். பிப்ரவரி 19, 2025 அன்று, ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார், இவருடன் டாக்டர் சுக்வீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரும் தேர்தல் ஆணையர்களாக ஆளும் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தபோது அமித் ஷாவுடன் நெருக்கமாக இருந்தவர். அவர் 370 வது பிரிவை நீக்குவதிலும் ஜம்மு காஷ்மீரை மறுசீரமைப்பதிலும் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் அமித் ஷாவின் கீழ் இருந்த கூட்டுறவு அமைச்சகத்திலும் பணியாற்றினார். அமித்ஷாவுடன் இருந்த காலக்கட்டத்தில், பத்திரிகையாளர்கள் வந்தாலே காஷ்மீர் கிரீன் டீ கொடுப்பாராம் – இதன் கரணமாக பத்திரிகையாளர்கள் அவருக்கு “கஹ்வா மனிதர்(காஷ்மீர் தேநீர் கொடுப்பவர்)” என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கின்றனர். இப்போது, மூன்று தேர்தல் ஆணையர்களும் ஆளும் கட்சிக்கு நம்பகம்மானவர்களாக இருக்கும்போது எதிர்க்கட்சிகளின் கவலைகளுக்கு செவிசாயிக்காமல் போவதில் ஆச்சரியமல்லைதானே.

2024 தேர்தல் பரப்புரையின்போது, தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான நிலைப்பாட்டை மக்கள் கண்கூடாகக் கண்டனர். முஸ்லிம்கள் இந்துப் பெண்களின் மாங்கல்யங்களைப் பறித்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி வெளிப்படையாகவே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் பேசியபோதும், ஆணையம் மௌனம் சாதித்தது. அவருக்கு லேசான  கண்டனம் விடுக்க கூட ஆணையத்தால் இயலவில்லை.

ராகுல் காந்தி போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை வெளிக்கொண்டு வருவதில் கவனம் செலுத்தினார்; ஆனால், உண்மையான வாக்காளர் நீக்கப்படுவதும் அதே அளவு கவலைக்குரிய செயலாகும். பீகாரில் மட்டும், பெரும்பான்மையாக உள்ளச் சிறுபான்மை மதத்தினர் மற்றும் தலித்துகளை உள்ளடக்கிய 65 லட்சம் வாக்காளர்கள், “சிறப்புத் தீவிரத் திருத்தம்” என்ற பெயரில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முன் கையறு நிலையில் நிற்பதுபோல் காட்சியளிக்கிறது. ஆனால் இதற்கான தீர்வு எளிமையானதே: ஆணையம் வாக்காளர் பட்டியல்களை மின்னணு வடிவில் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஒரு பொத்தானைச் சொடுக்குவதில், வெவ்வேறு வாக்குச்சாவடிகளில், ஒரே மாதிரியான தகவல்களுடன் கூடிய பல சஞ்சய் குமார்கள் அல்லது பிரியா குமாரிகள் போன்ற நகல் பெயர்களை எளிதாகக் கண்டறிய முடியும். இத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்ற இந்தியாவின் கூற்று வெறும் வெற்றுச் சலசலப்பாகவே ஆகிவிடும்.

டெல்லியில் வாழும் என் நண்பர் ஒருவர், 'தாமஸ்' என்ற குடும்பப் பெயரைக் கொண்டவர், தமது குடும்ப வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தபோது, இந்து ஒலிப்புமுறையில் பெயர் வைத்திருந்த ஒருவரைத் தவிர, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானார். இன்று இந்தியாவில், உங்களின் குடியுரிமையை உறுதிப்படுத்துவது ஆதார் அட்டையோ, ரேஷன் அட்டையோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையோ அல்ல; உங்கள் பெயரே உங்கள் குடியுரிமையை உறுதிப்படுத்துகிறது. நமது தேர்தல்களில் முறைகேடுகள் நடக்கின்றன என்ற ராகுல் காந்தியின் எச்சரிக்கைக்கு இதுபோன்ற செய்திகள்தான்  உண்மையான பொருளை அளிக்கின்றன. மக்கள் நடவடிக்கை எடுக்கக் கோரவில்லை என்றால், ஜனநாயகம் என்பது வெறும் சடங்காக மாறிவிடும்.

ராகுல் காந்தியின் "இவ்வணுகுண்டு போன்ற ஆதாரம்" வெறும் மஹாதேவபுரா தொகுதியையோ, அதன் வாக்காளர் பட்டியலையோ மட்டும் பற்றியதில்லை. அது, ஜனநாயகத்தின் உயிர்நாடியாகத் திகழும் தேர்தல் நடைமுறை பற்றியது, எப்படி அரசியல் இலாபங்களுக்காக மெல்ல மெல்ல, திட்டமிட்ட முறையில் சிதைக்கப்படுகிறது என்பதை பற்றியது. அவர் வெளிக்கொணர்ந்தது வெறும் புள்ளிவிவரங்களோ அல்லது எழுத்துப் பிழைகளோ அல்ல; மாறாக, மக்களின் மனப்பூர்வமான சம்மதமின்றி அதிகாரத்தைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்வதற்கும், உண்மை வாக்குகளின்றி வெற்றிகளைத் தானே உருவாக்கிக் கொள்வதற்கும் வகுக்கப்பட்ட ஒரு நூதனமான மோசடித் திட்டத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார் .

தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையை மறுக்கும்போதும், முறையான பகுப்பாய்வுக்கு வழிவகுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தவறும்போதும், தன்னைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை தனக்கு ஏற்ற வகையிலேயே மாற்றியமைக்கும்போதும், மக்களின் இறையாண்மையின் உண்மையான அடையாளமாகத் திகழ வேண்டிய வாக்குப்பெட்டி, வெறும் ஒரு கண்காட்சிப் பொருளாகச் சுருங்கிவிடுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழலில், ராகுல் காந்தி இந்தச் சீர்குலைவை உலகுக்கு உணர்த்தியது வெறும் அரசியல் நாடகமல்ல – அது ஜனநாயகத்திற்கான போர் முழக்கமாகும். இப்போது, உண்மையான சோதனையை எதிர்கொள்வது அவரல்ல, மாறாக மக்களே: மக்கள் உள்ளபடியான உண்மையைப் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொண்டிருக்கிறார்களா, அல்லது கட்டுப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படும் ஒரு ஜனநாயகத்தில் வாழத் தலைப்படுகிறார்களா என்பதே  மக்கள் முன் உள்ள சவாலாகும்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/en-rahul-gandhis-little-boy-election-commissions-ugly-underbelly/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு