ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றம் ஆரம்பகால தலித் அணிதிரட்டலுக்கான எதிர்வினையாகவும் இருந்தது

ஆனந்த் டெல்டும்டே

ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றம் ஆரம்பகால தலித் அணிதிரட்டலுக்கான எதிர்வினையாகவும் இருந்தது

மரபான கூற்று என்னவென்றால், இந்து-முஸ்லிம் கலவரங்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்க அச்சுறுத்தல் ஆகியவற்றின் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ் (RSS) உருவானது என்பதாகும். இந்த மதவாத பார்வை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், அதற்கு இணையான – அதையும் விட முக்கியமானதொரு நோக்கத்தை இது மூழகடித்துவிட்டது. அதாவது, பிராமணிய மேட்டுக்குடியினர் தங்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வந்த சாதி எதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிர்வினை எனும் நோக்கத்தை அது மறைத்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ்ஸின் உருவாக்கத்தைப் புரிந்து கொள்ள, முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டின் வெளிப்புற அச்சுறுத்தல் மற்றும் பிராமணிய ஆதிக்கத்திற்கு சவால் விடுத்த கீழ் சாதியினரின் விடுதலை இயக்கங்களின் உள் அச்சுறுத்தல் ஆகிய இரண்டு அச்சுறுத்தல்களையும் ஒரே நேரத்தில் ஆராய வேண்டும்.

1925ல் நாக்பூரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) நிறுவப்பட்டது — இன்று இந்து தேசியத்தின் சித்தாந்தத் தலைநகரமாக இது கொண்டாடப்படுகிறது — இது ஒரு ஆழமான வரலாற்று முரணைக் கொண்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாக்பூர் மத்திய இந்தியாவின் ஒரு மாகாண நகரம் மட்டுமல்ல; அது தீவிர சமூக மாற்றத்திற்கான களமாக இருந்தது. இப் பிராந்தியம் ஜோதிபா பூலேயின் சத்யசோதக் சமாஜத்தின் பரவல், பிராமணர் அல்லாதோர் இயக்கங்களின் எழுச்சி, மற்றும் ஆரம்பகால தலித் அரசியல் நடவடிக்கைகளின் தோற்றம் ஆகியவற்றைக் கண்டிருந்தது. இது இந்து ஒற்றுமைக்கான வெற்றுப் பலகையாக (tabula rasa) இருப்பதற்குப் பதிலாக, சாதியப் போராட்டத்தின் களம் மற்றும் பிராமண எதிர்ப்பு எழுச்சியாக இருந்தது. இந்த பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து ஏகதா (இந்து ஒற்றுமை) என்ற வாசகம், இந்து அடையாளத்தை உள்ளடக்கிய மறுவடிவமைப்பாகக் கருதப்படுவதை விட முஸ்லிம்களின் நிலைப்பாட்டினாலும் தலித் மற்றும் பிராமணர் அல்லாதோரின் அணிதிரட்டலினாலும் எழுந்த இரட்டை சவால்களைச் சமன் செய்வதற்கான எதிர்-புரட்சி என்றே அழைக்கலாம்.

விதர்பாவில் தலித் அணிதிரட்டல்

காலனிய கட்டத்தில், மகர் சமூகத்தைச் சேர்ந்த பலர் விதர்பா பிராந்தியத்தில் செழிப்படைந்தனர், மேலும் அவர்கள் இயல்பாகவே சமூக மேம்பாட்டை நோக்கித் தங்களை வளர்த்துக் கொண்டனர். எம்.எல். கோசரே ஆவணப்படுத்தியபடி, 1884ஆம் ஆண்டிலிருந்தே இப்பகுதியில் தலித் இயக்கத்தின் வரலாறு இந்த நடவடிக்கைகளுக்கு சாட்சியமளிக்கிறது.

விதர்பா முழுவதும் மகர்கள், சீர்திருத்த நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக இயங்கிய வலைப்பின்னலைக் கொண்டிருந்தனர் என்று அவர் எழுதுகிறார். இது தவிர, இந்து சமூகத்தின் கட்டமைப்பிற்குள்ளேயே தீண்டத்தகாதவர்களின் துயரம் மற்றும் மனித உரிமைகள் குறித்து சட்டப்பூர்வமான முறையில் மற்றவர்களுக்கு உணர்த்துவதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது. கிசான் ஃபகோஜி பன்சோடே போன்ற பல குறிப்பிடத்தக்க தலைவர்கள் தோன்றினர், ஆனால் மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த மகாத்மா பூலே, கோபால் பாபா வாலாங்கர் மற்றும் சிவ்ராம் ஜன்பா காம்ப்ளே ஆகியோரால் ஈர்க்கப்பட்ட சமகால அமைப்புகளும் இருந்தன. மகர் தலைவர்களிடையே வித்தல் ராம்ஜி ஷிண்டேவுக்கும் குறிப்பிடத்தக்க ஆதரவாளர்கள் இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சத்யசோதக் இயக்கத்தின் மையமாக விதர்பா இருந்தது, அந்த இயக்கம் பிராமணிய அதிகாரத்தை நிராகரித்து அனைத்து மனிதர்களின் சமத்துவத்தையும் அறிவித்தது. சாதி படிநிலை குறித்த பூலேயின் தீவிரமான விமர்சனம் அப்பகுதியில் உள்ள சூத்திர மற்றும் தலித் சமூகங்களிடையே எதிரொலித்தது. அவரது சீடர்கள் நாக்பூர், அமராவதி மற்றும் வர்தா ஆகிய மராத்தி பேசும் மாவட்டங்கள் முழுவதும் சத்யசோதக் சமாஜத்தின் கிளைகளை நிறுவி, அவரது கல்வி, பகுத்தறிவு மற்றும் சமூக சமத்துவத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

பழையபாணி சமூக சீர்திருத்தவாதியான வித்தல் ராவ்ஜி மூன் பாண்டே, 1908ல்  மகர் சபாவை நிறுவினார், இது அம்பேத்கர் காலத்திற்கு முந்தைய தலித் இயக்க வரலாற்றின் மிக முக்கியமான அமைப்பாக மாறியது. இது 1913, ஏப்ரல் 13-15 வரை நாக்பூர் டவுன் ஹாலில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தது, இதில் மராத்தி பேசும் பகுதி முழுவதிலுமிருந்து சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த சபாவில் மால்குஜார்கள், வட்டிக்கு பணம் கொடுப்போர், ஒப்பந்தக்காரர்கள், தரகர்கள், மர வர்த்தகர்கள், பட்வாரிகள், எழுத்தர்கள், ஆசிரியர்கள், துறவிகள், பூசாரிகள், ஷேட்டியஸ் மற்றும் பிற வசதி படைத்த மகர்கள் மட்டுமின்றி, புனேயைச் சேர்ந்த சிவ்ராம் ஜன்பா காம்ப்ளே, மும்பையைச் சேர்ந்த தோண்டிபா நாராயண் கெய்க்வாட், நாசிக்கைச் சேர்ந்த தர்மதாஸ் சந்த் மற்றும் பண்டரிபூரைச் சேர்ந்த பாபுஜி பாண்டே போன்றோரும் அங்கம் வகித்தனர்.

1910 – 1920 களுக்குள், விதர்பா சாதி எதிர்ப்பு செயல்பாட்டின் மையமாக மாறியிருந்தது. அம்பேத்கர் தேசியத் தலைவராக எழுச்சி பெறுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே, கல்வி அணுகல், கோயில் நுழைவு மற்றும் குடிமை உரிமைகளுக்காக அணிதிரளும் வெளிப்படையான இயக்கமாக இது இருந்தது. நாக்பூரில் மகர்கள் மற்றும் மாங்களிடையே ஷிண்டேயின் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் மிஷன் மற்றும் பன்சோடேயின் சமூக சீர்திருத்தப் பணிகள், தார்மீக சீர்திருத்தம் மற்றும் அரசியல் நடவடிக்கை ஆகிய இரண்டின் மூலமும் சமூக சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டின. இதே காலகட்டத்தில், வட்டாரமொழி துண்டுப்பிரசுரங்களும் உள்ளூர் கூட்டங்களும், நிர்வாகத்திலும் கல்வியிலும் பிராமண ஆதிக்கத்தை வெளிப்படையாகத் தாக்கின, இது மேற்கு மகாராஷ்டிராவில் இருந்த பரந்த பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை எதிரொளித்தது.

இந்த எழுச்சி பிராமணிய ஒழுங்கைக் கலக்கமடையச் செய்தது. கீழ் சாதியினரின் நிலைப்பாடு, மதம் மற்றும் தேசியவாதத் துறைகளில் பிராமணத் தலைமைத்துவத்தின் சமூக கற்பித்தலுக்கு அச்சுறுத்தலாக மாறியது. 1920களின் முற்பகுதியில், நாக்பூரில் இருந்த உயர் சாதி மேட்டுக்குடியினரிடையே இருந்த கவலை வெளிப்படையாகத் தெரிந்தது. ஒரேநேரத்தில் உள்ளிருந்து தலித் மற்றும் சூத்திர இயக்கங்களாலும், வெளியிலிருந்து முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டினாலும், கல்வி, சடங்கு அதிகாரம் மற்றும் தேசியவாத அரசியல் ஆகியவற்றின் மீதான பிராமணர்களின் வரலாற்று ஏகபோகம் சவாலுக்குள்ளானது.

எதிர்-அணி திரட்டலாக மதவாத ஒருமைப்பாடு

1909ஆம் ஆண்டின் மார்லி-மிண்டோ சீர்திருத்தங்கள் இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தன. அவை முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதிகளை வழங்கியது மட்டுமல்லாமல், தீண்டத்தகாதவர்களும் பழங்குடி சமூகங்களும் இந்துக்களாகக் கருதப்படக் கூடாது என்ற முஸ்லிம் லீக்கின் வாதத்தையும் ஏற்றுக்கொண்டன. இதன் விளைவாக, 1911ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்து மக்கள் தொகையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தது – இந்துக்கள், ஒடுக்கப்பட்ட வகுப்புகள் மற்றும் அனிமிச இந்துக்கள் (பழங்குடியினர்) – இதன் மூலம் இந்து மதம் என்று அழைக்கப்படுவதற்குள் உள் பிரிவுகளை நிறுவனமயமாக்கியது.

இந்த நடவடிக்கை பிராமணியத் தலைமையை அமைதியிழக்கச் செய்தது, ஏனெனில் பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேறியவுடன் அரசியல் அதிகாரத்தின் பிடி இயல்பாகவே தங்கள் கைகளுக்கு வந்து சேரும் என்று அவர்கள் நீண்டகாலமாக ஊகித்திருந்தனர்.  மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள் (1919) மூலம் அதிகாரத்தை மேலும் பிரித்தளிப்பதாக பிரிட்டீஷார் உறுதியளித்தபோது, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும், 1916ஆம் ஆண்டின் லக்னோ ஒப்பந்தம் மூலம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க முயன்றன.

எவ்வாறாயினும், இந்த ஏற்பாட்டு எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அரசியல் வலிமை முஸ்லிம் லீக்கை விட பலவீனமடையாமல் இருக்க, ஒடுக்கப்பட்ட வகுப்புகளை இந்து மத வட்டத்திற்குள் வைத்திருப்பது காங்கிரசுக்கு கட்டாயமாகியது. இதனால் இந்த ஒப்பந்தம் இந்து-முஸ்லிம் என்ற இரண்டிற்கு அப்பால் பிரதிநிதித்துவத்தை  விரிவுபடுத்தியது. மதவாதப் பிரதிநிதித்துவக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டவுடன், ஒடுக்கப்பட்ட வகுப்புகள் தனி அரசியல் அங்கீகாரத்தை கோர வேண்டியதாயிற்று – இது காங்கிரஸின் அரசியல் கணக்கீட்டிற்கு அச்சுறுத்தலாகியது.

ஒப்பந்தத்தின்  விளைவாக, பம்பாய் மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் அமைப்புகள் தனிப் பிரதிநிதித்துவம், தீண்டாமையை ஒழித்தல், கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பிற்கான அணுகல் ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கின. 1917க்கும் 1920க்கும் இடையில், மகாராஷ்டிராவில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் நான்குக்கும் மேற்பட்ட மாநாடுகள் காங்கிரசின் தூண்டுதலின் காரணமாக நடத்தப்பட்டன. இதில் லோக்மான்ய திலக் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். எழுப்பப்பட்ட பல கோரிக்கைகள் – ஒதுக்கப்பட்ட இடங்கள், கோயில் நுழைவு மற்றும் சாதி அடிப்படையிலான தீண்டாமைகளை நீக்குதல் போன்றவை – காங்கிரஸ் மேட்டுக்குடியினர் சீர்திருத்தத் தயங்கிய இந்து சமூக ஒழுங்கை நேரடியாக சவால் செய்தன. இந்த முன்னேற்றங்கள் பிராமணிய முகாமை பீதியடையச் செய்தன, ஏனெனில் அவை தங்கள் சமூக மேலாதிக்கம் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக அவற்றைப் பார்த்தன.

1920 மே மாதம் கோலாப்பூர் ஷாஹு மகாராஜால் நாக்பூரில் கூட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் மாநாடு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இந்த நிகழ்வு இப்பகுதியில் தலித் தலைமைத்துவத்தின் வளர்ந்து வரும் அரசியல் முதிர்ச்சியைப் பிரதிபலித்தது. இங்கேதான், (அதுவரை பிரபலமில்லாதவராக இருந்த) இளம் அம்பேத்கர், தீண்டத்தகாதவர்களின் விடுதலை அவர்களால் மட்டுமே அடையப்பட வேண்டும் என்று உணர்ச்சிமிக்க பிரகடனம் செய்தார். அவரது வார்த்தைகள் உயர் சாதி ஆதிக்கத்திலிருந்து ஒரு தீர்க்கமான முறிவைக் குறித்ததுடன், விரைவில் இந்திய அரசியலின் களத்தை மாற்றியமைக்கக்கூடிய தனித்த தலித் அரசியல் விழிப்புணர்வின் எழுச்சியையும் சுட்டிக்காட்டின.

நாக்பூரில் பிராமணிய நெருக்கடி

ஆர்.எஸ்.எஸ்ஸின் பிறப்பிடமான நாக்பூர் முன்பு (1920ஆம் ஆண்டளவில்) சாதியப் போராட்டத்தின் களமாக இருந்தது. நாக்பூர் மேட்டுக்குடியினர் – பெரும்பாலும் சித்பவன் மற்றும் தேசஸ்த பிராமணர்கள் – இந்த முன்னேற்றங்களை அச்சத்துடன் பார்த்தனர். மத்திய மாகாணங்களின் உளவுத்துறை அறிக்கைகளிலிருந்து (1921–23) பெறப்பட்ட சான்றுகள், "மிஷனரி மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களால் ஊக்குவிக்கப்பட்டவை" என்று கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி சங்கங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றிய வளர்ந்து வரும் கவலையை வெளிப்படுத்துகின்றன. இந்த பதற்றம் மதம் பற்றியது மட்டுமல்ல, சமூகக் கட்டுப்பாட்டின் இழப்பைப் பற்றியதும் ஆகும். இந்து மகாசபா மற்றும் சேவா சமிதி போன்ற பிராமணர்கள் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகள் "தீண்டத்தகாதவர்களை இந்து மத வட்டத்திற்குள் இழுக்க" எதிர்-கூட்டங்களை ஏற்பாடு செய்தன.

இந்தச் சூழலில், 1925இல் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்ஸை நிறுவிய கே.பி. ஹெட்கேவர், ஏற்கனவே இந்து மகாசபையின் உள்ளூர் கிளையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். 1922-23ஆம் ஆண்டுகளில் அவர் ஆற்றிய உரைகள், இந்து சமூகத்தின் பலம் “ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையில்” உள்ளது என்றும், “சாதிப் பிரிவுகளும் அந்நிய மதங்களும் தேசத்தை பலவீனப்படுத்துகின்றன” என்றும் எடுத்துரைக்கின்றன. இது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வாக மட்டுமல்லாமல், தலித்துகளின் அந்நியப்படுதலுக்கான எதிர்வினையையும் இணையாகப் பிரதிபலிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அமைப்பு வடிவம் – அதாவது, பயிற்சி பெற்ற இந்து ஆண்களின் இராணுவமயமாக்கப்பட்ட, படிநிலை கொண்ட, பிரம்மச்சரியம் பூண்ட ஒரு குழு – மதவாத வன்முறைக்கான  எதிர்வினை மட்டுமல்ல, இந்து சமூக அமைப்பைப் திட்டமிடப்பட்ட படை போல ஒழுங்குபடுத்துவதற்கான   உத்தியாகும். சாகா (கிளை) மாதிரி, அடையாள சகோதரத்துவம் மூலம் சாதி வேறுபாடுகளைக் கடந்து ஊடுருவி  இருந்தது, இருப்பினும் நடைமுறையில் இது பிராமணியத்தின் சித்தாந்த மற்றும் தலைமைத்துவக் கட்டுப்பாட்டைப் பாதுகாத்தது.

இந்த இரட்டை நோக்கம், இந்து மகாசபையின் மூத்த தலைவரும், பின்னர் நாசிக்கில் உள்ள மத்திய இந்து இராணுவக் கல்விச் சங்கத்தின் தலைவருமான பி.எஸ். மூஞ்சே உடனான ஹெட்கேவரின் கடிதப் போக்குவரத்து மூலம் தெளிவாகிறது. 1925ஆம் ஆண்டின் ஒரு கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ் "இந்துக்களிடையே ஒழுக்கத்தை புகட்டுவதற்காக பிறந்ததாக" மூஞ்சே பாராட்டினார், மேலும் "கீழ் நிலை மக்களும் கூட இப்போது தினசரி பயிற்சிகளில் இணைகிறார்கள்" என்று குறிப்பிட்டார் (ஆண்டர்சன் & டாம்லே, 1987: 30 இல் மேற்கோள் காட்டப்பட்டது). இதன் உள்ளார்ந்த பொருள் தெளிவாக உள்ளது: உயர் சாதி தலைமையின் கீழ் இந்து மத வட்டத்திற்குள் தலித்துகள் உள்ளிழுக்கப்படுவது, அதன் சுதந்திரமான அரசியல் நிலைப்பாட்டுக்கான ஆற்றலை ஈடு செய்வதாகும்.

எனவே, இந்து மதவாதம் சாதிய அரசியலின்  முகமூடியாக செயல்பட்டது. “இந்து ஒற்றுமை” என்ற வாசகம், பிராமணிய சமூகக் கட்டுப்பாட்டின் திட்டத்தை மறைத்தது. காங்கிரஸ் சாதிச் சீர்திருத்தத்தில் தெளிவற்றதாக இருந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் இந்து மதத்தின் உள் முரண்பாடுகளை சித்தாந்த ஆதாரமாக மாற்ற முயன்றது – சாதிப் படிநிலையை ஒற்றை நாகரிக அமைப்பிற்குள் “செயல்பாட்டுப் பன்முகத்தன்மை” என்று முன்வைத்தது.

இரட்டை அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான உத்தி

ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றம் குறித்த பார்வைகளில் சாதி ரீதியான இந்த அம்சம் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. ஆரம்பகால வரலாற்றாசிரியர்கள் – எச்.வி. சேஷாத்ரி (1988) மற்றும் சி.பி. பிஷிகர் (1979) போன்றவர்கள் – ஹெட்கேவரை “அந்நிய அச்சுறுத்தல்களுக்கு” எதிராக இந்துக்களை ஒன்றிணைப்பவராகச் சித்தரித்தனர். நாக்பூரில் நடந்த சாதிப் பதற்றங்கள் பற்றிய  குறிப்புகளை கவனமாகத் தவிர்த்துள்ளனர். பிற்கால ஆய்வாளர்களும் விமர்சனங்களை முன்வைத்தாலும் கூட அதன் சமூகவியல் அடிப்படைகளை ஆராயாமல் மதவாத அச்சுறுத்தல் என்ற கருத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டனர். ஆயினும்கூட, ஆர்.எஸ்.எஸ்ஸின் தோன்றிய காலமும் இடமும் சாதி ரீதியான எழுச்சிக்கான ஆதாரங்களை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. 1919க்கும் 1924க்கும் இடையில், நாக்பூர் தலித் எழுத்தறிவு மற்றும் மிஷனரி கல்வியின் விரைவான பரவல், மத்திய மாகாண கவுன்சிலில் அரசியல் அங்கீகாரத்தைக் கோரும் சாதி சங்கங்களின் உருவாக்கம், உள்ளூராட்சிகளில் பிராமணர் அல்லாதோரின் வளர்ந்து வரும் பங்கேற்பு ஆகியவற்றைக் கண்டிருந்தது. கீழ்ப்படிதல், ஒழுக்கம், இந்து ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி, சரியாக இந்த சூழலில்தான் ஹெட்கேவரின் ஆர்.எஸ்.எஸ் உருவம் பெற்றது. இதனால், ஆர்.எஸ்.எஸ் உயர் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, முஸ்லிம்களுக்கு எதிராகப் போராட கீழ் சாதியினருக்கு ஒரு இந்து அடையாளத்தை வழங்குவதன் மூலம் சாதிப் புரட்சியை முன்கூட்டியே தடுக்கும் முயற்சியாக உருவானது.

இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, 1925இல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிறப்பு மதவாதக் கலவரங்களுக்கான எதிர்வினையாக மட்டுமல்லாமல், இரட்டை பதற்றத்தின் வெளிப்பாடாக இருந்தது: முதலாவதாக, லக்னோ ஒப்பந்தம் மற்றும் கிலாபத் இயக்கத்திற்குப் பிறகு முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியின் மதவாத அச்சுறுத்தல்; இரண்டாவதாக, உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தைக் கோரிய ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் வளர்ந்து வரும் அணிதிரட்டலால் ஏற்பட்ட சாதி அச்சுறுத்தல். ஹெட்கேவரின் புதுமை (இங்கு புதுமை என்பதை மிகவும் பிற்போக்கான முயற்சி என்று சொல்லலாம்)  இந்த இரண்டு பதற்றங்களையும் ஒற்றைச் சித்தாந்தக் கட்டமைப்பிற்குள் இணைப்பதில் இருந்தது. இந்து தேசியவாதம் கீழ் சாதியினரை முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரட்ட வடிவமைக்கப்பட்டது, அதே நேரத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான அணிதிரட்டலையும் திசைதிருப்பியது. இந்த இரட்டை செயல்பாடு ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரம்பகாலப் பயணத்தின் மற்ற குழப்பமான அம்சங்களையும் விளக்குகிறது. அவை: சமூக முரண்பாடுகள் நிறைந்திருந்த போதிலும் சுதந்திர இயக்கத்திலிருந்து விலகி நின்றது; சாதிப் படிநிலைக்கு எந்த சவாலும் இல்லாமல் இந்து ஒற்றுமையில் மட்டுமே அதன் கவனம் இருந்தது; வெளியில் ஒற்றுமை பேசிக்கொண்டே உள்ளுக்குள் சாதியை இறுக்கமான நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக பாதுகாத்தது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய பிராமண மேட்டுக்குடியினரைப் பொறுத்தவரை, வளர்ந்து வரும் சாதி எதிர்ப்பு இயக்கங்கள் முஸ்லிம்களின் அரசியல் அணிதிரட்டலை விட மிகவும் சிக்கலான சவாலைக் குறிக்கின்றன. முஸ்லிம் “அச்சுறுத்தலை” பழக்கமான மதவாத உத்திகள் மூலம் கையாள முடிந்தது – மத அடையாளத்தைக் கோருவது, அந்நிய ஆதிக்க அச்சங்களைத் தூண்டுவது, நம்பிக்கையையும் தேசத்தையும் பாதுகாக்கும் சாக்கில் இந்துக்களை அணிதிரட்டுவது. இருப்பினும், சாதிப் பிரச்சினையை இந்த வழியில் நிர்வகிக்க முடியவில்லை. யாருடைய உழைப்பும் விலக்கிவைப்பும் பிராமணிய சலுகையைத் தக்கவைத்துக் கொண்டதோ அந்த மக்களே எதிரிகள். நவீன, ஜனநாயக சமத்துவக் கருத்துகள் பரவிய காலகட்டத்தில் சாதிப் படிநிலையை வெளிப்படையாகப் பாதுகாப்பத்து நிலைநிறுத்துவது இயலாததாகிவிட்டது. விலக்கிவைப்பதன் மூலம் மட்டும் ஆதிக்கத்தை நிலைநிறுத்த உயர் சாதியினரும் போதுமான எண்ணிக்கையில் இல்லை; அவர்களுக்கு கீழ் சாதியினரின் பங்கேற்பு – அல்லது குறைந்தபட்சம் அவர்களின் சம்மதம் – தேவைப்பட்டது. எனவே, மோதலில் இருந்து உள்ளிழுக்கும் உத்திக்கு மாறியது.

உள்ளடக்கியதாகத் தோன்றும் அதே வேளையில் பிராமணியத் தலைமைத்துவத்தைப் பாதுகாக்க, “இந்து ஒற்றுமை” என்ற கருத்து மறுவரையறை செய்யப்பட்டது. சாதிப் படிநிலைகள் தொடரும், ஆனால் ஒடுக்கப்பட்டவர்களிடையே உள்ள சாதி விழிப்புணர்வு அடக்கப்பட வேண்டும். மத அடையாளவாதம், தார்மீக ஒழுக்கம், தேசபக்தி, மொழி ஆகியவை சமூக ஒருமைப்பாட்டிற்கான கருவிகளாக மாறின. முஸ்லிம்களுக்கு எதிரான மதவாத முன்னணியைப் போல, இது அரசியல் போர் அல்ல, ஆனால் இது கலாச்சார மற்றும் உளவியல் போர். இதற்கு பொது விவாதம் தேவையில்லை, சமூக புகட்டுதலும், அறிவுறுத்துதலுக்குப் பதிலாக தார்மீகப் பழக்கப்படுத்துதலும், அன்றாட வாழ்வில் ஊடுருவக் கூடிய அமைப்பு வடிவமும் தேவைப்பட்டது.

இந்தத் தேவையைக் கருதியே – அதாவது, சாதி மோதல் இல்லாத, இன்னும் பிராமணிய தலைமைக்குக் கீழ்ப்படிந்த, ஒழுக்கமான, படிநிலைப்படி அமைக்கப்பட்ட இந்து சமூகக் குழுவை உருவாக்கவே - ஆர்.எஸ்.எஸ் துல்லியமாக வடிவமைக்கப்பட்டது. சாதிச் சலுகையைப் பாதுகாப்பதை தேசிய மறுமலர்ச்சியாக பேசுவதில்தான் அதன் புத்திசாலித்தனம் இருந்தது. தினசரி பயிற்சிகள், சீருடை ஒழுக்கம், இந்துமதவாத கட்டுக்கதைகள் மூலம், அது சாதி விடுதலை அரசியலை “இந்து தேசத்தின்” உணர்ச்சிபூர்வமான ஒற்றுமை எனும் போர்வையில்  முடக்க முயன்றது. சமூகக் கட்டுப்பாட்டை வற்புறுத்துவதன் மூலம் மட்டுமல்லாமல், சித்தாந்த சம்மதத்தின் மூலமும் பிராமணியத்தின் உள் நெருக்கடிக்கு இது தீர்வாக அமைந்தது.

முடிவுரை: சாதி, மதவாதம் மற்றும் எதிர்-புரட்சி

மரபான மதவாதக் கூற்றை விட, ஆர்.எஸ்.எஸ்ஸின் உருவாக்கத்திற்கு இரட்டை அச்சுறுத்தல் கோட்பாடு முழுமையான விளக்கத்தை வழங்குகிறது. முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கான எதிர்வினையாக மட்டுமல்லாமல், அதற்குச் இணையாக, அதைவிட அதிகமாக, சாதி எதிர்ப்பு எழுச்சி அலைகளை முடக்கவும் இந்த அமைப்பு உருவானது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. அதன் இராணுவமயமாக்கப்பட்ட குழு இரண்டையும் நிர்வகிப்பதற்கான வழியை வழங்கியது: வெளிப்புறமாக “முஸ்லிம் அச்சுறுத்தலை” எதிர்கொள்வது, அதே நேரத்தில் உள்ளுக்குள் சாதிப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது. இதனால் இந்து மதவாதம் சாதிய வாதத்திற்கான முகமூடியாக செயல்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் தோன்றிய காலம்  இடம் மற்றும் அதன் தலைமைத்துவம் – 1920களில் பிராமண ஆதிக்கம் செலுத்திய நாக்பூரில் வேரூன்றியது – இந்த விளக்கத்துடன் துல்லியமாக ஒத்துப்போகிறது. இந்த அமைப்பு, சாராம்சத்தில், பிராமணியத்தின் எதிர்புரட்சிகரத் திட்டமாக இருந்தது: முஸ்லிம்களின் அச்சுறுத்தல் - கீழ் சாதியினரின் விடுதலை என்ற இரட்டை அபாயங்களை, இந்து தேசியவாத கற்பனை மூலம் ஈடு செய்வதற்கான முயற்சி ஆகும். அதன் சித்தாந்த சாமர்த்தியம் ஒடுக்கப்பட்டவர்களை அந்நியருக்கு எதிராக அணிதிரட்டுவதில் இருந்தபோதிலும், உள்ளுக்குள் படிநிலைகளைத் தொடாமல் வைத்திருந்தது.

இந்தத் தோற்றத்தைப் புரிந்துகொள்வதானது, ஆர்.எஸ்.எஸ் இந்து ஒற்றுமை பேசினாலும் சாதி ஒடுக்குமுறையை ஒருபோதும் ஏன் எதிர்த்ததில்லை என்பதையும், அதன் தேசிய ஒருமைப்பாட்டின் பார்வை தொடர்ந்து புதிய புதிய எதிரிகளைக் (முதலில் முஸ்லிம்கள், பின்னர் கிறிஸ்தவர்கள், இப்போது “நகர்ப்புற நக்சலைட்டுகள்”) காட்டுவதில் ஏன் தங்கியுள்ளது என்பதையும் காண உதவுகிறது. சாதிய விடுதலையை மறுப்பது அதன் அரசியலின் மறைக்கப்பட்ட அடித்தளமாக உள்ளது. எனவே, மறைக்கப்பட்ட இந்த வரலாற்றை வெளிகொணர்வது வெறும் வரலாற்றுத் திருத்தம் மட்டுமல்ல, ஒரு அரசியல் தேவையாகும்: இந்திய சமூக ஒழுங்கிற்கு உண்மையான புரட்சிகர சவால் எப்போதும் உள்ளிருந்துதான் வந்துள்ளது – அதாவது, தீண்டத்தகாதவர்களாகவே நீடிக்க மறுத்தவர்களிடமிருந்து – என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

(ஆனந்த் டெல்டும்டே)

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/caste/the-rss-was-also-a-reaction-to-early-dalit-mobilisation

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு